பக்கங்கள்

புதன், 19 ஜூன், 2019

புத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (3)



புத்தியைப் பயன்படுத்து பவன் எவனோ அவனே 'புத்தன்'என்று எளிமையாக விளக்கினார் தந்தை பெரியார் - பல ஆண்டுகளுக்கு முன் - அதுவும் எழும்பூர் மகா போதி சொசைட்டியின் சார்பில் கொண் டாடப்பட்ட புத்தர் 2500 ஆண்டு - விழாவின்போது!

இதை நான் நாக்பூர் பல்கலைக் கழகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பவுத்தம் தழுவிய பூமியில் ('தீட்சா பூமி' - என்று அழைக்கின்றனர், அவர் பவுத்த மார்க்கத்தில் சேர்ந்த இடத்தை) மூன்று நாள் அறக்கட்டளை சொற்பொழிவு  "University Endowment Lecture கொடுத்தபோது, பாலிமொழி துறைப் பேராசிரியர் (முனைவர் பட்டம் பெற்ற துறைத் தலைவர்) எழுந்து நின்று கைதட்டி அந்த விளக்கத்தைக் கேட்டு வியந்து பாராட்டினார்.

பாலி மொழி 'புத்தி' என்ற சொல் புத்தியைப் பயன்படுத்தி சிறப்பு நிலையை அடைந்ததன் அடையாளமே கவுதம சித்தார்த்தன் 'புத்தன்' ஆனது என்பதை வழிமொழிந்து  உரையாற்று கையில் -  தந்தை பெரியார் கூறிய விளக்கத் தினை ஏற்றுக் கொண்டு  "இவ்வளவு நாள் பவுத்தம், பாலிமொழியில் போதிக்கும் எனக்கு - இதைக் கேட்ட பிறகே பொறி தட்டியது" என்று வியந்து வியந்து தந்தை பெரியாரைப் பாராட்டினார்.

Wise - Wisdom -   என்பது -  'புத்தி' என்று நம்மால் இக்கட்டுரைத் தொடரில் புத்தி  புத்தன் என்ற அடிப்படையில் பயன் படுத்தப்படுகிறது என்று வாசக நேயர்கள் அறிய வேண்டுகிறோம். அறிவு - Knowledge  என்பதிலிருந்து - To Know  என்பதிலிருந்து - அறிதல் என்பதிலிருந்து அய்ம்புலன்களால் அறிவது அய்ந்தறிவு. இவைகளை நம் மூளையில் பகுத்தறிவது பகுத்தறிவு, படிப்பறிவு, பட்டறிவு, பொது அறிவு, ஒத்தறிவு என்று அறிவுகள் பலப்பல.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை அறிவு. ஆனால் புத்தி என்பது பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்த பின் அடையும் ஓர் உயர்நிலை Wise - Wisdom - புத்தி அது அறிதலோடு அடுத்து எப்படி நடந்தால் உறு பயன் விளையும்; ஆபத்திலிருந்தோ, தீமையிலிருந்தோ தப்பிப்பது எப்படி என்று எளிமையாகக் கூற வேண்டு மானால் அறிவின் விளைச்சல் - புத்தி என்று கூறலாம். எனது சிற்றறிவுக்குப் பட்ட விளக்கம். (ஏற்போர் ஏற்கலாம்; தள்ளுவோர் தள்ளலாம்).

புத்தரின் உள்ளத்தின் புத்தியை நாம் தூய்மைப்படுத்தப்பட்ட நீரினை மொண்டு குடிப்பதுபோல, ஆரோக்கியமான முறையில் சமைத்து வைக்கப்பட்ட அறிவுப் பசிக்கான சத்துணவினை மென்று அசை போட்டு விழுங்குவதுபோல இந்தக் கட்டுரைத் தொடரை, வாழ்வில்  செல்வம் பெற வாய்ப்புக்குரிய படிக்கட்டு களாகப் பயன்படுத்தி புத்தனின் புத்திக் கூர்மையை அறிந்து, உணர்ந்து, உள் வாங்குங்கள்!

விளக்கவுரை நீண்டு விட்டதல்லவா?

செய்திக்கு வருவோம் -

புத்தர் காத்திருக்கிறார்! இதோ புத்தர் பேசுகிறார்:

"புத்திக் கூர்மையோடு நடந்து கொள்ளும் எவரையும் எந்தத் தொல்லை துன்பமும் எளிதில் நெருங்கி விடாது. எது போல தெரியுமா? எந்த வெள்ளமும் நெருங்க முடியாத தனித் தீவு போல!"

"புத்தறிவுடன் (புத்தி கூர்மை) உள்ள எவரையும் எந்த சோதனையும் கலங்க விடாது. எந்த விலங்குகள் மாட்டப்பட்டாலும் அந்தத் தீயில் அவைகள் தானே நொறுங்கி விடும். புத்தி தீயிக்கு அதனை நொறுக்கும் ஆற்றல் உண்டு. அந்த நிலைதான் நான் கூறும் முழுமை அடைந்த நிலை - 'நிர்வணா!' சிலர் கூறுவது போன்று தவறான விளக்கங்களைப் புறந் தள்ளி விடுங்கள்.

பல்வேறு துன்ப அனுபவங்களை அந்த புத்தியால் - சகிப்புத் தன்மையால் - உள்ள உறுதியால் தாண்டியவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? பல தடைகளைத் தாண்டி மலை உச்சிக்குச் சென்ற பிறகு கடந்து வந்த துன்ப சோதனைகளை - மகிழ்ச்சி பொங்க உற்று நோக்கி - அந்த ஆனந்தத்தை அனுபவிப்பவன் போன்றவன் ஆவான்!"

எதிலும் கட்டுப்பாடான வாழ்க்கைதான் வெற்றியின் பாதை. மறவாதீர்!

(புத்தர் மீண்டும் வருவார்)

- விடுதலை நாளேடு, 8. 6. 19

வெள்ளி, 7 ஜூன், 2019

புத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (2)

எதிர்வினை எண்ணங்களை மனதிலிருந்து அப்புறப்படுத்தி, ஆக்கப் பூர்வ சிந்தனைகளே ஆளும் மனங்களாக, நமது மனங்களை மாற்றிக் கொள்ளப் பழகிவிட்டால் மகிழ்ச்சியும், மனநிறைவும் எப்போதும் ஊற்றாகப்  பீறிட்டுக் கிளம்பும் - "ஆர்ட்டீஷியன் கிணறுகள்" போல!
அடுத்து, வாழ்க்கை நெறியில் வெற்றி விளைந்திடச் செய்ய ஓர் எளிய வழி என்ன தெரியுமா?
எது மிகவும் தேவையானது? (Essential)
எது வெகு அற்பமானது? (Trivial)
என்று பகுத்துணர்ந்து, அணைத்துப் பெருக்க வேண்டிய தேவைக்கு முன்னுரிமை தருவதும், அலட்சியப்படுத்தி அப்புறப்படுத்தப் பட வேண்டிய அற்பச் செயல்களை விலக்குவது என்றும் பகுத்துப் பார்த்து வாழ்வதுதான் முக்கியம்.
எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்புதான் மனித வாழ்க்கை! எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும் வாழ்வில் ஒரு சில தவறவும் கூடும். அது இயற்கை.
அதில் எது வெகுச் சாதாரணமோ - அற்பமோ - அதனை இழப்பதுபற்றியோ, அதை அடையவில்லையே என்றோ கவலைப்பட்டு, மகிழ்ச்சிக்குரியதைப்பற்றிக் கொண்டு, அதை அனுபவிக்க முடியாத நிலையில் சோகத்தோடு எப்போதும் உள்ளனர் பலர் - அவர்களே மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள்.
சுயநலச் சிந்தனையும், வேட்கையும், தவறானவையும் அதனை அடையச் செய்ய குறுக்கு வழி, கோணல் புத்தியைக் கொடுத்து 'வெறி' கொள்ளச் செய்யும்.
'வெறி'த்தனமான நியாயமற்றவைகளை எப்படியும் அடைந்தே தீருவது என்ற சுயநல முடிவுகள் மீள முடியாத பள்ளத்தில் மனிதர் களைத் தள்ளி விடுவதை நாம் பலரது வாழ்க்கையை, அவதிகளைக் கண்டு பாடம் படிக்க கற்றுக் கொள்ள வேண்டாமா?
பல்லாயிரம் கோடிகளைக் குறுக்கு வழியில் - ஊழலை உரிமைப் பொருளாக்கிக்  கொள்ளையடித்தவர்கள் ஆறடி மண்ணுக் குள்ளோ அல்லது நவீன உலக மின்மயானத்தில் சில மணித்துளிகளில் சாம்பல் துகள்களாகவோ மாறி விட்ட நிலையில், பரந்த பங்களாக்கள், திறந்த பாதுகாப்புப் பெட்டகம், விலை உயர்ந்த 'நகை நட்டுகள்', ஆடம்பரப் பொருள்கள் அவர்களை எவ்வளவு ஏளனத் தோடு பார்த்துத் தலை குனியாமலா இருக்கும்? சற்று ஆற அமர்ந்து சிந்தித்து விடை காணுங்கள்.
இறுதியில் அவர்களைச் சுமந்த 'பாடை'கூட அவர்களோடு புதைவதோ, எரிவதோ இல் லையே, அவைகளும்கூட அவர்களை இறுதி யில் கைவிட்டு வழியனுப்பி விட்டுப் பிரிந்தே செல்கின்றன - இல்லையா? பின் ஏன் இப்படி ஆலாய்ப் பறந்து - ஆலகால செல்வத்தை அமுதமாகக் கருதிச் சேர்த்துக் கடைசியில்  "பாடம்" கற்றுக் கொள்ள வேண்டுமா? அதே செல்வத்தை அவர்கள் பொதுக் காரியங்களுக்குப் பயன்படுத்திட ஏற்பாடு செய்து விட்டால் கெட்ட பெயராவது குறைந்தபட்சம் நீங்கும்! அவலம் விலகும்! ஊருணியானால் ஊருக்குப் பயன்படுமே!
புத்தர் இப்படி இடித்துரைக்கிறார்: "பலரும் வேதங்களைப் படித்து - மனப்பாடம் செய்வது மட்டுமே இவர்கள் புத்தியைத் தீட்டி, மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்த்து விடாது!
பசு மாடுகளை மேய்ப்பவர்கள் தங்கள் மாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்த வர்களின் மாடுகளையே பற்றி சர்வ காலமும் எண்ணிக் கொண்டே இருந்து தங்கள் வசம் காணாமற்போன மாடுகளைக் கணக்கெடுக்க மறந்து போனவர்களாகி விடுகிறார்களே" என்றார்.
எனவே, வேதங்கள் புனித நூல்களைப் படிப்பதனால்மட்டுமே புத்தியை (Wisdom) அவர்கள் பெற்றுவிட முடியாது! தங்களது சுயநலத்தைத் துறந்து, பொது நலத்தொண்டர் களாகி - தனக்கெனவாழ பிறர்க்குரியவர் களாகும்போது அனுபவம் - பெரிய புத்திக் கொள்முதலை எது நமக்குத் தரும் என்றால் நமது சுயநலத் துறப்புதான்! மறவாதீர்.
அடுத்து, "உங்கள் மனம் எப்போது சுறுசுறுப்புடனும், புத்திக் கூர்மையுடன் - எப்படி ஒரு பந்தயக் குதிரை மற்ற சோம்பல் உள்ள, சுறுசுறுப்பற்ற சோணகிரி குதிரைகளை என்றும் முந்திக் கொண்டு 'பறக்கிறதோ' அதுபோல பாய்ச்சலுக்குத் தயாராகும் பக்குவத்தோடு மனதை வைத்திருந்து வாழப் பழகிக் கொள் ளுங்கள் தோழர்களே!" என்று கூறுகிறார் புத்தர்.
மனிதனுக்குரிய முதல் எதிரி - வெளியிலிருந்து வருவதில்லை; அவனது சோம்பல் மூலமே அவனை அழிக்க, பின்னுக்குத் தள்ளி, "தண்டனை" பெற ஏற்பாடு - தானே ஒருபுறம் நடைபெற்றே வரும்.
எனவே, சோம்பேறியாக, செயல்களைத் தள்ளிப் போடுவது, எப்போதும் தூங்கி வழிவது, எதிலும் ஒரு தெளிவு, ஈடுபாடு, தன்னம்பிக்கை, பிடிப்பு இன்றி "ஏனோதானோ" வாழ்வு நடத்துவது நம்மை துன்ப நுகத்தடியில் கட்டி விட்டு, துயரத்தை அறுவடை விளைச்சலாகத் தரும் என்பது உறுதி.
(மீண்டும் விழித்திருப்போம் புத்தரைக் காண)
- விடுதலை நாளேடு, 7.6.19

வியாழன், 6 ஜூன், 2019

*புத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (1)*

அண்மையில் புத்தரின் 'மனம்' பற்றிய படங்களுடன் அமைந்த ஒரு ஆங்கில நூலைப் படித்தேன் - சுவைத்தேன். யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டுமல்லவா?

அதனால்தான் இத்தொடர்!

வாழ்க்கையில் கவலை, துன்பம் - இவை நம்மிடமிருந்துதானே உருவாகி நம்மைப் பாடாய்ப்படுத்துகின்றன.

அவைகளைத் தவிர்க்க என்ன வழி? இக் கேள்வி முதலில் சிக்கலாகத் தெரியும்; சிந்தித் தால், அது அவ்வளவு சிக்கலானது அல்ல; எளி மையானதுதான் என்பதும் புரியும்.

நம் பக்குவத்தைப் பொறுத்த - நமது உள்ளத்தின் பயிற்சியைப் பொறுத்த ஒன்றே அது என்பதை எளிய முறையில் புத்தர் விளக்கு கிறார்!

எப்படி? இதோ படியுங்கள்:

புத்தர் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, இந்தப் பூமியில், புத்தியின் - பகுத்தறிவின் முக்கியத்துவத்தையும், பெரும் பயனையும், ஜாதி, பெண்ணடிமை என்ற பிறவி பேதத்தால் பிளவுப்பட்டுக் கிடந்த மனித குலத்திற்கு 'ஒன்றே மனித குலம்' என்று சமத்துவம், சகோதரத்து வத்தையும் (அறிவு), சுதந்திரத்தையும் போதித்த ஒரு புரட்சியாளர்!

அவர் கண்டது பகுத்தறிவு வாழ்க்கை நெறி - ஒரு மார்க்கம் - பிற்காலத்தில் அதை ஒரு மதமாகவே ஆக்கிவிட்டனர்!

அவரது அறிவுரைகளின் தொகுப்புதான் 'தம்மபதம்' என்ற அறவுரைக் கொத்து.

"முன்னோர்கள் எழுதினார்கள் என்பதற் காகவே ஏற்காதே!

முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற் காக எதையும் சிந்திக்காமல் ஏற்காதே!

முன்னோர்கள் நடந்தார்கள் என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதீர்!"

என்று கூறிய புத்திமார்க்கத்தைப் பரப்பி சித்தார்த்தனாகப் பிறந்தவர், புத்தராக ஆனார்.

தந்தை பெரியார் விளக்கினார், "புத்தியைப் பயன்படுத்துபவன் எவனோ அவனே புத்தன். சித்தார்த்தன் அப்படித்தான் புத்தனாக ஆகியிருக்க முடியும்" என்றார்!

புத்தரின் போதனைகளில் மிக முக்கியமானது மனத்தை ஆளுதல் - ஒழுங்குபடுத்துதல் (Mind Management) ஆகும்.

தம்மபதம் ஒன்று: அதில் கூறுகிறார்.

நமது இயல்பு என்பதன் வழிதான் நமது சிந்தனைகள் - எண்ணங்கள்.

எப்படி நாம் எண்ணுகிறோம் - அப்படியே ஆகிறோம்?"

இதைக்கூறிய புத்தர், இரண்டு விஷயங்கள் இதில் நம்முடைய தேர்வுக்குரியதாக நம்முன் உள்ளன.

1. எதிர்மறையான சிந்தனையால் (Negative thoughts) நமது மனதை நிரப்பினால் அதன் விளைவு துன்பமே மிஞ்சும்.

2. ஆக்கப்பூர்வ சிந்தனையால் (Positive thoughts) நம்மனம் நிரம்பினால் அது இன்பத்தைத் தரும்.

வெறுப்பு, உணர்ச்சித் தூண்டுதல் (Temptations) சுயநலம் - போன்றவை எதிர்மறைக் கான எடுத்துக்காட்டுகள்.

மற்றவர்களுடன் நாம் உறவு கொண்டுள்ளது, அவை எப்போதும் இணக்கமாக அமைவ தில்லை. அப்படி முரண்பட்ட நிலை தோன்றும் போது, எதிர்வினை எண்ணங்கள் நம்மை அறியாமலேயே நம்மை ஆட்கொண்டு விடு கின்றன.

'அவன் என்னிடத்தல் கோபப்பட ஏது மில்லை

'என்னை காயப்படுத்தினான்'

'என்னை ஏமாற்றிவிட்டான்'

இப்பிரச்சினை ஏன் பெரிதாகிறது - உங்கள் மனதை வாட்டுகிறது? அதையே சதா நினைத் துக் கொண்டு மனதில் தேக்கி வைப்பதுதான் முக்கிய காரணம்!

அதை அப்படியே - அப்போதே அலட்சியப் படுத்தி - மனதைவிட்டு அகற்றிவிட்டு - மறந்து விட்ட சம்பவமாக்கி, அடுத்த பணியைச் செய் யத் துவங்கினீர்களானால் உங்கள் மனம் என் றும் துன்பத்தில் திணறாது!

சாதா சர்வ காலமும் அதையே நினைத்துக் கொண்டு வாழ்வதனால், நமது வாழ்க்கை ஒரு துன்பச் சுமையாய் - "வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களாக்கி விடுகிறது!"

மன்னிக்கவும், மறக்கவும் தெரிந்த மனிதர்கள் - அதை வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டு வாழுபவர்களைத் துன்பம், துயரம் ஒருபோதும் துளைக்கவே முடியாது!

அது வெறுப்பை விளைத்தவனுக்கு ஏற்படும் நன்மையை விட நமக்கே அதிக பயனைத் தரும்.

இதை விளக்க ஒரு உவமையைச் சுட்டுகிறார். "உடம்பில் சேரும் அழுக்கை அப்புறப்படுத்திக் குளித்து - மனமகிழ்ச்சி பெற்றவுடன் அழுக்கும் அகலுகிறது - மனமும் தூய்மையாகி விட்ட உடலால் ஒரு புத்துணர்வுக்கு ஆளாகிறது அல்லவா - அதுபோல!

நோயின் வலி எப்படி நமது சிகிச்சை முடிந்தபிறகு தொடராதோ அதுபோல, எனது மனம் போல் அமைவதே வாழ்வு. அது நம்மிடத்தில் உண்டு. பிறர் தருவதில்லை!"

(தொடரும்)
*வாழ்வியல் சிந்தனைகள்*
*-கி.வீரமணி*
-  விடுதலை நாளேடு, 6.6.19

புதன், 29 மே, 2019

தூக்கம் - ஒரு அறிவியல் பார்வை! 1&2



நமது முக்கிய தேவைகளில் ஒன்று - உடல் நலத்திற்கும் நோயற்ற வாழ்வின் தேவைக் குமாக - தூக்கம்.

தூக்கத்தை அலட்சியப்படுத் தாதீர்கள்; கோழி கூவும் வரை விழித்து, பிறகு முற்பகல் வரை தூங்கி எழுவதுதான் தனது வாடிக்கை என்பதாக பழகியுள்ள நம் நண்பர்கள் இந்த அறிவியல் உண்மைபற்றிய ஆராய்ச்சியா ளரின் கருத்துக்கள் நமக்குப் போதிக்கப்பட்ட பின்பு வழக் கத்தை எப்படி மாற்றிட முடியும் என்று கேட்காதீர்கள்.

வழக்கம்  என்பதில் ஒழுக்கம் இன்றேல், அவ்வழக்கத்திற்கு அடித்தளமாகிய பழக்கத்தைக் கைவிடுதல் அவசியம் என்பார் நம் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன்!

கைலெஸ்ஸினர் (Guy Leschziner) என்ற நரம்பியல் ஆலோசகர் ஆன மருத்துவ நிபுணர் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள "The Nocturnal Brain; Tales of Nightmares  and Neuroscience" என்ற புத்தகத்தில் மிக அருமையான ஆய்வு முடிவுகள் - தகவல்கள் வெளி வந்துள்ளன.

இங்கிலாந்து பகுத்தறிவாளர் அமைப்புச் சார்பாக லண்டனிலிருந்து வெளிவரும் (காலாண்டு ஆங்கில இதழ்)  'New Humanist' என்ற ஏட்டில் இந்நூல் பற்றிய சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியாகி யுள்ளது. அதிலிருந்து திரட்டப்பட்ட தகவல் களின் தொகுப்புதான் இந்த வாழ்வியல்!

தூக்கம் என்பது நமது மூளை - உடல் - இரண்டின் புத்தாக்கத்திற்கு - மீள் பணிக்கு ஆயத்தமாகும் ஒரு அரிய வாய்ப்பு ஆகும்!

நமது மூளையும், வீடுகளில் எப்படி ஒவ்வொரு அறையில் ஒவ்வொரு வேலைகளும், நட வடிக்கைகளும், துப்புரவும் நடைபெறுகிறதோ அப்படித்தான் நம் மூளைக்குள்ளும் பல்வேறு தனித் தனிப் பணிகளும் முறையாக நடைபெற்று வருகின்றன.

நமது நினைவுக்கானது, கற்றல், உடலின் மற்ற உறுப்புகளுக்கு உத்தரவு போட்டு பணிகளை ஒருங்கிணைப்பது போன்ற தொடர் பணிகள் தொய்வின்றி நடந்துகொண்டே உள்ளன!

விஞ்ஞான ஆய்வுக்கூட முடிவுகளும் மனி தர்களின் உலக யதார்த்த நடவடிக்கைகளுக்குமே சிற் சில நேரங்களில் முரண்படும் நிலையும் உண்டு.

தூக்கத்தைப் பொறுத்தவரை இது பலருக்கு அளவிலும், தன்மையிலும் (Quantity and Quality)  மாறுபடவே செய்கிறது - பல நேரங்களில்

மருத்துவரைப் பார்த்துப் பலரும் கேட்கும் வழமையான கேள்வி. "டாக்டர் எனக்கு எத்தனை மணி நேர தூக்கம் தேவை?" என்பதேயாகும்.

இதற்கு சரியான பதில் என்ன தெரியுமா? "நீங்கள் விழத்தெழும்போது, சோர்வு நீங்கி புத்துணர்வுடன் எழுந்து - அயர்வின்றி உழைக்கும் நேரம் -  எத்தனை மணி நேரம் என்பதையே அளவுகோலாகக் கொள்ளுங்கள்; அதன் மூலம்தான் நீங்கள் மேலும் விழித்திருந்து, பல பணிகளை ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் செய்ய வாய்ப்பு ஏற்படும் என்பதே!

பணியாற்றிக் கொண்டே இருந்து எப்போது நீங்கள் களைப்பு அடைந்து உறங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது தான் உங்கள் தூக்கத்தின் அளவும், தன்மையும் ஆகும்!

தூக்கம் வராமலிருப்பது வேறு; தூக்கமின்மை என்ற நோய் Deprivation Sleep வேறு;  Insomnia - தூக்கமின்மை வேறு.

(நாளையும் விழித்திருக்க!)

- விடுதலை நாளேடு 27. 5. 2019

தூக்கம் என்பது தேவையான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் நலம் உறுதிப் படுத்தப்படும்.

தூக்கம்பற்றி பலரும் அடிக்கடி கூறுவது 'நான் நேற்று இரவு 2 மணி முதல் விடியற் காலை 5.30 மணி வரை விழித்துக் கொண்டே இருந்தேன் - தூக்கமே வரவில்லை' என்பது.

இதுபற்றி , தூக்கம் பற்றிய ஆய்வு நிபுணர்கள் கூறுகையில், இது சரியான கருத்து  அல்ல; அவர்கள் பலரும் 30 வினாடிகளோ, 2 மணித்  துளிகள் என்கிற விகிதத்திலோ  தூங்கித்தான் இருப்பார்கள். 5.30  மணி வரை இடையே இது நிகழாமல் இருக்காது. தொடர் விழிப்பு என்பது சரியான உண்மை அல்ல.

இத்தகைய விழிப்புக்குரிய காரணங்கள் கண்டறியப்படல் வேண்டும்; இது  மனம் சம்பந்தப் பட்டது - மன அழுத்தம், துக்கம், துயரம், வருத்தம், ஏமாற்றம் ஆகியவை இதற்கு  அடிப்படையாக இருக்கக் கூடும்.

அல்லது உடல் உபாதைகள், வலிகள் இம்மாதிரி தூக்கமின்மைக்குக் காரணமாக இருக்கலாம்.

மருந்து எடுத்துக் கொள்ளாமலேயே  உரிய அளவுக்கு தூக்கத்தை வர வழைக்கும் வழிமுறை களையும் ஆராயலாம்!

இவர் படுத்தவுடன் தூங்கி விடுவார்; என்னே அரிய "வரம்" பெற்றவர் என்று சொல்வார்கள்!

மனச் சுமை இல்லாது, ஆக்கப்பூர்வமாக சிந்தித்து, எதிர்மறை எண்ணங்களுக்கும்  (Negative thoughts பொறாமை போன்ற, மன நோய்க்கும்) இடம் தராதவர்களுக்கு படுத்தவுடன் தூக்கம் தானே வந்து விடும்.

சராசரி மனிதர்களின் இயல்பு  பயத்தாலும், கவலையாலும் அலைக் கழிக்கப்படுவதே!

கவலைப்படுவதனால், எந்த பிரச்சினையும் தீர்ந்து விடப் போவதில்லை. அதற்குப் பதில் மூளையை மேலும் "உலைக்களமாக்கி", என்ன செய்தால் இந்த இக்கட்டிலிருந்து விடுபடலாம் என்று ஆக்கப்பூர்வ பகுத்தறிவுக்கு வேலை கொடுத்தால் பிரச்சினைகளும் தீரும் - மூளையும் சாணை தீட்டப்பட்ட கத்திபோல சரியான பயன்பாட்டுக்குரிய கருவியாகி,  மனிதர்களைக் காப்பாற்ற எந்நாளும் பயன்படும்.

வரலாற்றுப் பூர்வமாகவே ஆழ்ந்த தூக்கத் திற்கு மனிதகுலம் போதிய முக்கியத்துவம் தருவதே இல்லை; முன்னுரிமை கொடுப்பது மில்லை!

தூக்கத்தினைப் பற்றி ஆராய்ந்து,  'குறட்டை'  முதற் கொண்டு ஆய்வு செய்வதற்கு என ஏராளமான மருத்துவ நிலையங்கள் அண்மைக் காலத்தில் - கருத்தரிப்பு உருவாக்க மய்யங்கள் புற்றீசல் போல் உருவாகும் அளவுக்கு, தூக்க ஆய்வு மய்யங்கள் வராவிட்டாலும்கூட முக்கிய பெரு நகரங்களில் வந்துள்ளன.  அரசின் பெரு மருத்துவமனை களில் இதற்கென தனித் துறை உருவாக்கப்படுதல் நல்லது.

தூக்கம் பற்றிய ஆய்வுகள் செய்யப்படுகின்றன  - அத்தகைய  மருத்துவ ஆய்வுக் கூடங்களில் என்றாலும்கூட, மனித மூளையின் மேற்பரப்புப் பற்றி மட்டும் ஆய்வுகள் நடைபெறும் நிலை உள்ளது. உள்பகுதிபற்றி இன்னமும் இந்த ஆய்வுகள் நடைபெறவில்லை என்கிறார் இந்த நூலாசிரியர்.

TED உரைகள் பல்வேறு பிரச்சினைகள் பற்றி 13 நிமிடங்களில் நிகழ்த்தும் இணையத்தில் அனைவரும் எந்த பொருள் பற்றியும் தெரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு.

அதில் 'அல்ஷைமர்ஸ்' என்ற 'நினைவு இழத்தல்' நோய் பற்றிய உரை  ஒன்றைக் கேட்டேன்.

அதில் தூக்கமிழப்பு ஒரு முக்கிய காரணம் - அந்த நோய்க்கு; அதிலும் 12 மணி முதல் இரவு 2  அல்லது  3 மணி வரை உள்ள  நேரத்தில்தான்  அந்த நோய்க்கான சுரப்பி உச்சக் கட்டத்தில் இருந்து, பாசி குளங்களில் படிவது போல அது மூளையை அக்கறை    அடைவதோடு  - அடைப்பதாகவும் அமைந்து விடுகின்றது. எனவே, இரவு கண் விழிப்போர் அருள்கூர்ந்து 12 மணிக்கு மேல்  - 2 மணி தாண்டியும் விழிக்காமல்,  12 மணிக்குள்ளாவது உங்கள் படிப்பு, பணி முதலியவற்றை முடித்து, நோய்க்கு இடந்தர மாட்டோம் என்று  கூறலாமே!

தூக்கம், உணவு, நடைப்பயிற்சி, இளைஞர் களின் விளையாட்டு, மருந்துகளை முதியோர் தவறாமல் எடுத்தல் எல்லாம் வரிசைப்படுத்தப்பட வேண்டிய வாழ்க்கைக் காப்புறுதிகள் - மறவாதீர்!

- விடுதலை நாளேடு 28. 5. 2019


ஞாயிறு, 19 மே, 2019

எங்கள் அன்னை! எங்கள் அன்னை!! (1)& (2)

நேற்று 'அன்னையர் நாள்' என்று அறிவிக்கப்பட்ட நாள்!
நம்மைப் பொறுத்தவரை எல்லா நாளும் அன்னையர்களுடன்தான் இருந்து, அவர்களது அரவணைப்பில் நாமும், நம்முடைய மரியாதை கலந்த பாச மழையில் அவர்களும் என்றே வாழும் ஒரு வகை குடும்ப உறவுகளைக் கொண்டவர்கள்தான்!
தாயின் தியாகமும், தன்னலம் பாராத மன்னிக்கும் குணமும் வேறு எவருக்கும் எளிதில் வராது.
தாயைப் புறக்கணித்து, சிற்சில நேரங்களில் பிள்ளைகள் வரம்பு மீறி தகாத சுடு சொற்களை வீசினால்கூட, அன்னையர்கள் அதனைப் பொருட் படுத்தாமல் மீண்டும் மீண்டும் கவலையும், கருணை யும் கொண்ட பழகிடும் பான்மைக்கு, மன்னித்து மறத்தல் பண்புக்கு ஈடு இணை வேறு எங்கு தேடினாலும் கிட்டாதே!
பெற்ற தாய்தான் அன்பு சொரிவார் என்பதில்லை. வளர்த்து ஆளாக்கும் தாய்களும் அதற்கிணை யாகவோ அல்லது அதைமீறும் அளவிலோ, பாசப் பிணைப்புகள் வற்றாத உறவுப் பாசத்தை பொழியத் தவறுவதே இல்லை.
குறிப்பாக வளர்த்து ஆளாக்கிடும் பல பிள்ளைகளுக்கு வளர்ப்பவர் வேறு; பெற்றவர் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு குடும்பப் பாசத்துடன் இருப்பார்கள் - இருக்கிறார்கள்!
என்னைப் பெற்றவர் பற்றி  நான் அறியுமுன்பே (சுமார் 1 ஆண்டு, ஒன்றரை ஆண்டுக்குள்ளேயே) அவர் இறந்து விட்டார்.
அதற்குப் பிறகு என்னை வளர்த்து ஆளாக் கிடுவதில் பெரும் பங்கு அளித்த அம்மா - நான் விவரம் தெரிந்து, மற்றவர்கள் சொல்லும் வரை நானே இவர் நம்மைப் பெறவில்லை என்பது அறியாத ஒன்று!
பெற்றவரைவிட, வளர்ப்பவர்களின் பாசமும், கவலையும், பொறுப்பும் பல மடங்கு அதிகம் என்பதே நடைமுறை உண்மையாகும்!
நான் பெறாது பெற்ற அன்னைகள் பலர் உண்டு. அதில் பெருமையுடன் குறிப்பிடும் வாய்ப்பு - அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் எனும் உலகறிந்த எனதுஅம்மாவே ஆவார்!
சட்டக் கல்லூரியில் நான் படிக்கும் போது (1956- 57இல்), தந்தை பெரியாருக்கு ஒன்றரை ஆண்டு - மூன்று ஆறு மாதங்கள் தண்டனை - செய்யாத குற்றத் திற்குத் தரப்பட்டு சிறை செல்லுமுன், "அம்மாவுக்குத் துணையாக இருந்து, இயக்கப் பணிகளைப் பார்த்துக் கொள்" என்று கூறி என்னை இயக்கப் பணிப் பயிற்சியில் ஈடுபட  வாய்ப்பளித்தார் நம் தலைவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள்.
அப்போதுதான் அம்மாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னைப் பற்றிய பற்பல வாழ்க்கை உண்மைகளை என்னிடம்  கேட்டுத் தெரிந்துகொண்டபிறகு என்னை அவர்களது முதற்பிள்ளையாகவே கருதி பாசத்தை, வற்றாத அன்பைப் பொழிய ஆரம்பித்தார்!
அவர் நினைப்பதை அறிந்து செய்யும் பணி என்னைப் பற்றிக் கொண்டது.
அவரது தன்னலமற்ற, பொறுப்பு மிகுந்த, அய்யாவின் அருந்தொண்டர்களில் அணியமாகிய முதல் பெருந் தொண்டராகவே அவர் இறுதி வரை தன்னை நினைத்துப் பணிகளைத் தொடர்ந்த பாங்கு என்னுடைய உள்ளத்தில் அவரை மேலும் மேலும் பெருமைப்படுத்தி உயர்த்திய பதிவாகவே அமைந்தது!
எவரிடத்திலும் 'ஒத்தறிவுடன்' (Empathy) எதையும் கேட்டு உதவிடும் அவரது உயரிய மாண்புக்கு அன்றாட நிகழ்வில் பல உண்டு.
சிலரிடம் வறுமை, இல்லாமை அறிந்து அவர் அதற்காக இவர் கண்ணீர் விட்டு அழுது, பாதிக்கப்பட்டவர் கண்ணீரைத் துடைக்க இவர் தனது உதவிகளை - விளம்பரமில்லாமல் அய்யாவைப் போலவே செய்வார்; செய்தார்!
உபசரித்த கழகக் குடும்ப உறவுகளைக் கூட; கடன் பெற்றதுபோல் உள்ளுக்குள் நினைத்து, அதனைப் பல வழிகளில், பல தடவைகளில் திரும்பச் செய்வதில் அய்யா - அம்மா கொண்ட மன நிறைவுக்கு எத்தனையோ சம்பவங்கள் உண்டு. அய்யாவின் வாழ்விணையராக ஒரு போதும் அம்மா நடந்து கொள்ளவே இல்லை; ஒரு வேலைக்கார நிபந்தனையற்ற பணித் தாயாராகவே (செவிலித்தாயைவிட மேலான பதம் இது) நடந்து கொண்டார் என்பதை நாங்கள் அருகில் இருந்து அறிந்து, அறிந்து - வியந்து, வியந்து மகிழ்ந் திருக்கிறோம்.
அம்மா பெயரில் தான் பல வங்கிக் கணக்குகள்; காசோலைப் புத்தகங்கள் (Cheque Books). ஆனால் அவை அத்தனையும் அய்யாவின் கைப்பெட்டியில்  - ஒரு துணிப்பையில்!
அய்யா அவர்களே காசோலை எழுதி "அம்மாவிடம் கையொப்பம் வாங்கி வாருங்கள்" என்று எங்களிடம் கொடுப்பதும்; நாங்கள் கையொப்பம் வாங்கி அய்யாவிடம் தருவோம். இவை ஏன், எதற்கு, எவ்வளவு தொகை என்றுகூட பார்க்கவோ, கேட்கவோ மாட்டார்! பணியாட்களாக இருந்தால் கூட  ஒரு தெரிந்து கொள்ளும் ஆவலும்,  ஆசையும் தலை தூக்கும். அன்னையாருக்கு ஒரு நாளும் அது வந்ததே இல்லை.
அய்யா ஏன் அம்மாவைத் தேர்ந்து வைத்த நம்பிக்கை அவரது வாழ் நாளுக்குப் பின்பும் வாழ்ந்து வளர்ந்து தொடருகிறது என்பதன் ரகசியம் புரிகிற தல்லவா? மேலும்  பல நாளை.
(நாளை)
-விடுதலை நாளேடு, 14.5.19   எங்கள் அன்னை! எங்கள் அன்னை!! (2)
அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் பற்றற்ற உள்ளம் பற்றி அறிந்தால், எவரும் வியக்கவே செய்வர்! அவருக்கென ஒதுக்கப்பட்ட பூர்வீக சொத்துக்களையும், தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தந்தை பெரியார் அவர்கள் அவருக்கென  - தனக்குப் பிறகு அவரது வாழ்க்கைக்கு வசதிகள் தேவை என்பதால் அவரது கடமையாகக் கருதி ஒரு ஏற்பாடு செய்தார்.
இது அன்னையாருக்கு பல ஆண்டுகள் தெரியவே தெரியாமல் செய்யப்பட்ட ஏற்பாடு!
சென்னை 1, மீரான் சாயபுத் தெரு, மவுண்ட்ரோடு, இல்லத்தை அய்யா அவர்கள் வாங்கிய நாள் முதல் தன் பெயரில் வைத்திருந்தார் - முன் யோசனையுடன். மற்ற அவரது சொத்துக்களையெல்லாம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கே எழுதி வைத்திருந்தார்!
முன்பெல்லாம் சென்னை மீரான் சாயபுத் தெரு இல்லப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி, நெரிசல் அதிகமாகி விட்டதால், வேன் நிறுத்தவும், கூச்சல் சத்தம் இவைகளின்று சற்று ஒதுங்கியும் இருக்க வசதியாக, எங்கள் அடையாறு இல்லத்திற்கு வந்து தங்கி, திருச்சி செல்லுவார்கள். நாங்கள் பெற்ற பேறு அது!
ஒரு முறை அய்யா, புலவர் கோ. இமயவரம்பன் அவர்களோடு மட்டும் - அம்மா இல்லாமல், தனியாக வந்தார். என் வீட்டில் தங்கி காலைச் சிற்றுண்டி முடித்த பின்பு, என்னையும் 'விடுதலை' நிர்வாகி என்.எஸ். சம்பந்தத்தையும் அழைத்து, 'மீரான் சாயபு வீட்டை அம்மாவிற்கு அளித்து - அவர்களுக்கு எதிர்கால சுதந்திர வாழ்வுக்கென ஒரு ஏற்பாடு செய்ய நினைக்கிறேன். அம்மா இதைத் தெரிந்தால் ஒப்புக் கொள்ள மாட்டார்; எப்படிச் செய்தால் சரியாக - சட்டப் படியான பாதுகாப்புடன் இருக்கும் என்பதை நமது மூத்த சிவில் வழக்குரைஞர் (மைலாப்பூரில் உள்ள) திரு. சுப்ரமணிய முதலியாரிடம் நான் அனுப்பியதாக நீங்கள் சென்று கேட்டு வாருங்கள்' என்றார்.
அதுபோலவே அவரிடம் (அவர் நமது ஜஸ்டீஸ் எஸ். மோகன் அவர்களுக்கே சீனியர் - மூத்தவர்) செல்ல, அவரும் சரியான சட்ட அறிவுரை கூறினார். 'செட்டில்மெண்ட்' எழுதச் சொல்லுங்கள். தானம் என்றால் பத்திரம் குறைவு; செட்டில்மெண்டுக்குகூட. தானம் என்றால் மாற்றலாம்; செட்டில்மென்ட் எழுதி விட்டால் அது மாற்ற முடியாது (Irrevocable) என்றும், பாதுகாப்பும் இருக்கும் என்றும் கூறினார். அய்யா விருப்பப்படி செய்யட்டும் என்றார்.
அய்யா என்னிடம் பணம் தந்து பத்திரம் வாங்கி எழுதச் சொல்லி, ராயப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில், நேரில் சென்று பதிவு செய்தார்; நாங்கள் இருவரும் சாட்சிகள் ஆவோம்.
நாங்கள் "100 ரூபாய் கட்டினால் பதிவாளரை, நம் வீட்டிற்கே வரவழைக்க லாம்" என்றோம். ஆனால் அய்யா, எதற்கு 100 ரூபாய் செலவு, நானே நேரில் பதிவாளர் அலுவலகம் வந்தால், அது மிச்சம்தானே என்று கூறி, நேரில்  சென்று பதிவு செய்தபின், பத்திரத்தை என்னிடம் கொடுக்கும்படியும் கையொப்பம் இட்டுத் திரும்பினார்.
இது "ரகசியமாக" அதாவது, அம்மா அறியாமல் நடந்தது. அய்யாவிடம் பத்திரம் பத்திரமாகச் சேர்க்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து, அய்யா மறையுமுன்  - ஒரு ஆண்டுக்கு முன்னர், பத்திரப் பெட்டியில் வேறு ஏதோ பத்திரம் தேடும் போது, அம்மாவின் கண்களுக்கு இது பட்டு விட்டது!
உடனே திருச்சியில் அன்னையார் அய்யாவிடம் ஏகத்திற்கு 'ரகளை' செய்து அழுது விட்டார்!  'எனக்கென்ன தனி ஏற்பாடு. என் செலவு, அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்ய என்னால் முடியுமே' என்றார்!
பிறகு அய்யா எவ்வளவோ சமாதானம் செய்தும்கூட, அவர் அமைதியாகவில்லை.
இது ஏதோ ஒப்புக்கு என்று யாரும் அவசரப்பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்!
அய்யா மறைந்த பிறகு, ஓராண்டுக்குள் அம்மா ஒரு தனி அறக் கட்டளையையே உருவாக்கி, அதன் முதல் சொத்தாக இந்த மீரான் சாயபு இல்லத்தைத்தான் - சொத்துப் பட்டியலில் இணைத்தார். சென்னை பொது மருத்துவமனையில் இருந்தபோது- உயிருக்குப் போராடியபோதுகூட, இந்த ஏற்பாட்டை மூன்று பெரிய மனிதர்கள் முன்னால் செய்தார்கள்!
என்னை அழைத்து 'நீ கூட என்னிடம் மறைத்து விட்டாயே' என்று கோபித்துக் கொண்டார்!  "அய்யாவின் கட்டுப்பாடு காக்கும் தொண்டன் நான் என்பது உங்களுக்குத் தெரியும்; அப்படி இருக்கையில் அய்யா அவர்கள் "ரகசியம்" என்று சொன்ன செய்தியைக் காப்பாற்ற வேண்டாமா?" என்று சொன்னேன். "சரியான தலைவர், சரியான தொண்டர்கள்" என்று தலையில் தட்டி விட்டுச் சொன்னார்!
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
(குறள் - 350)
"எனக்கு எந்தப் பற்றும் கிடையாது; மனிதப் பற்று - அறிவுப் பற்று மட்டுமே உண்டு என்ற தந்தை பெரியாரைப் பற்றினார்; போற்றிப் பாதுகாத்தவரின்  "பற்றுக்கோடு" எப்படிப் பட்டது பார்த்தீர்களா? எப்படி எங்கள் அன்னை! எங்கள் அன்னை!!
-விடுதலை நாளேடு, 14.5.19

புதன், 1 மே, 2019

இதோ ஒரு பயனுறு நல வாழ்வு அறிவுரை!

உலகப் புத்தக நாளில் உங்களுக்கு ஒரு அரிய புத்தகத்தை  - வாழ்வைப் பாதுகாக்கும் பயனுள்ள மருத்துவ அறிஞர் தரும் நூல் ஒன்றை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மறைந்தும் மறையாத மாபெரும் மனிதநேய மருத்துவ மாமணி பேராசிரியர்  டாக்டர் செ.நெ. தெய்வ நாயகம் அவர்கள் எழுதிய "ஊட்ட மளிக்கும் உன்னத உணவுகள்" என்ற ஒரு குறுகத்தரித்த குறள் போன்ற நவில்தரும் நூலைப் பற்றிய சில செய்திகள்.
122 பக்கங்கள் கொண்ட நூலை "பாவைப் பப்ளிகேஷன்ஸ்" வெளியிட்டுள்ளனர். 15 பகுதிகள்:
1). உன்னத உணவு, 2). உணவின் அடிப்படை மற்றும் அடித்தளம், 3) சித்த மருத்துவ உணவியல் கொள்கை, 4) ஏழு உடற்கட்டுக்களுக்கான உணவுகள், 5) உடலுக்கேற்ற உணவுகள், 6) காலத்திற்கேற்ற உணவு 7) நோய்க்கேற்ற உணவு, 8) நலவாழ்வும் உணவும், 9) ஊட்டச்சத்து மருத்துவம் நவீன மருத்துவப் பார்வை, 10) கோடைக்கேற்ற சிறப்புடைய குளிர்ச்சியூட்டும் பருகு உணவுகள் (பானங்கள்), 11) தேன், 12) சமையல் கலன்களின் பயன்பாடுகள், 13) வீட்டுக்குள் கல்பாக்கமா?, 14) அரிசி என்னும் அவிழ்தரு, 15) சில உன்னத  உணவுகள்.
இந்நூலுக்கு அணிந்துரை தந்த தமிழ்ப் பேரறிஞரும், முன்னாள் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தருமான தமிழ்த்திரு. அவ்வை நட ராசனார் அவர்கள் சுட்டிக் காட்டியதைப்போல,
"ஊதியத்தைப் பெரிதாகக் கருதாமல், உழைப் பையும், ஒழுக்கத்தையும்  அணிகலனாகக் கொண்டு வாழும் உயரிய மருத்துவ மாமணி என்று மருத்துவப் பேரறிஞர் பேராசிரியர் செ.ந. தெய்வநாயகம் அவர்களை மருத்துவ உலகமே கொண்டாடுகிறது" என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
டாக்டர் தெய்வநாயகம் அவர் களின் தொண்டறம் வியந்து போற்றத்தக்கது. அவர் லண்டனில் படித்துப் பட்டம் பெற்று, தந்தை பெரியாரைக் கண்டு (சென்னை பொது மருத்துவமனையில் அய்யா  அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்ற காலை) வணக்கம் செலுத்தி, இன உணர்வாளர் சுயமரியாதை வீரர் செ.தே. நாயகம் அவர்கள் வழிவந்த பேரன் என்பதை  தந்தை பெரியார்அறிந்து எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இளைஞர் - மருத்துவரை அன்று பாராட்டி வாழ்த்தினார். அருகில் இருந்து அக்காட்சியை - இன்பத்தை நேரில் அனுப வித்தவர்கள் நாங்கள்.
தாம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தேய்வு நோயால் (எயிட்ஸ்) அவதிப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து மட்டு மின்றி உணவில் கூடுதல் இட்லி, பருப்பு, பால் முதலிய சத்துணவு களையும் அளிக்கும் நடைமுறை இவரது தலைமைக் காலத்தில் செயலுக்கு வர, தமிழக அரசினை வற்புறுத்தி வெற்றி கண்ட மனிதநேயரின் நூல் - இந்த கருத்துக் கருவூலம்.
நாள் ஒன்றுக்கு ஒருவருக்குத் தேவைப்படும் உணவுகள் பற்றியும், சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றியும் விளக்குவதோடு, நீரிழிவு நோய், காசநோய், புற்று நோய் மற்றும் கடுமையான நோய்களால் (இரத்தக் கொதிப்பு, மூல நோய் முதலியன) பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகளை எடுத்துக் கொள்வதோடு, எத்தகைய உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பதையும் பட்டியலிடுகிறது! குழந்தைகள் பெற்ற தாய்மார் களுக்கும், குழந்தைகளுக்கும் தேவைப்படும் சிறப்பு  உணவுகள் பற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது!
ஆங்கில மருத்துவ நுணுக்கத்தோடு, சித்த மருத்துவத்தின் சிறப்புக்களையும் உடன் இணைத்து, ஆராயும் நெறியில் தலைப்பட்டு, சில முடிவுகளைக் கண்டறிந்தவர் மருத்துவர் தெய்வநாயகம் அவர்கள்!
"அரிசி எனும் அவிழ்தரு" என்ற தலைப்பில்... ஒரு செய்தி! நூலாசிரியர் மருத்துவர் கூறுகிறார்.
"கலாச்சாரக் கலப்படம், வியர்வை இல்லா உடலுழைப்பு, பெருகி வரும் மனப்பளு, இவற்றால் பெருகி விட்ட நீரிழிவு போன்ற நோய்களால், அதி சர்க்கரை உணவு என அரிசி கருதப்படுவதால் மருத்து வர்களும் அதைக் கொஞ்சம் உணவில் குறைக்கச் சொல்ல, சிலர் அரிசி உடல் நலத்திற்காகதென்றே விலக்கிட ஆரம்பித்தனர். உண்மையில் அரிசி தமிழனுக்கேற்ற தலை சிறந்த உணவு. வெயில் காலம் அதிகமுடைய, உடற் சூட்டை தரக்கூடிய இத்தென் னாட்டிற்கு அரிசியே ஏற்புடைய உணவு!
இப்படிப்பல புதிய, புதுமை விளக்கங்கள் படித்துப் பயன் பெறுக! நூலைப் படியுங்கள்! காலை, மாலை கடும் பகல் எல்லா நேரத்திலும் படிக்கா விட்டாலும் இரவிலாவது படுக்குமுன் நல்ல நூல்களைப் படியுங்கள் - சிந்தியுங்கள் - செயலாற்றுங்கள்!
- விடுதலை நாளேடு, 23.4.19

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

"படி படி பெரியார் படி" - ஒரு புத்தாக்க நூல்!



திருவாரூர் மாவட்டத்தில் காவாலகுடி, கண்கொடுத்த வனிதம், விடயபுரம் - எருக்காட்டூர் போன்ற கிராமங்கள் திராவிட விவசாயக் குடும்பங்கள் நிறைந்த பகுதிகளாகும்.

விடயபுரம் கிராமத்தில் தந்தை பெரியார் நடத்திய திராவிட மாணவர் பயிற்சி வகுப்பில்தான் தந்தை பெரியார் - பிரபலமானதும், விவாதத்தை தோற்றுவித்ததுமான "கடவுள் மறுப்பு வாசகங்களை" அறிவித்த இடமாகும்.

பெரியார் பற்றாளர், ஒரு ஆதரவாளர் பயிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்தார்!

அவ்வூரில் உள்ள எளிமையான கருஞ்சட்டைத் தோழர்மானமிகு சு. ஒளிச்செங்கோ. ஆழ்ந்த பகுத்தறிவுத் தமிழ்ப் புலமை பெற்ற பெரியார் பெருந்தொண்டர். தந்தை பெரியார் கருத்துக்கள், எழுத்துக்கள், பேச்சுகள் பற்றி ஆழமாக விரித்துரைக்கும் 'நுண்மா நுழைபுலம்' உடைய வியக்கத்தக்க விவசாயி!

அவர் சில அரிய நூல்கள் எழுதியுள்ளார். அவரது மகன் சுந்தரபுத்தன் ஒரு சிறந்த எழுத்தாளர். சென்னையில் பணிபுரிகிறார்!

அவர் கடந்த 7.4.2019 அன்று அவரது புதிய நூலான "பெரியார் அடுக்குச்சொல்; மற்றும் சில கட்டுரைகள்"என்ற தலைப்பில் வெளி வந்துள்ளதை எனக்குக் கொடுத்தார். உடனே சுற்றுப் பயணத்திலேயே படித்தேன்.

அது  மிக மிக அருமையான நூல்! படித்து விழுங்க வேண்டிய அறிவுப் பெரு உலா அந்நூல்!!

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந. இராமநாதனுக்கு அடுத்து, வரிக்கு வரி பெரியாரை திறனாய்வுத் தேனில் குழைத்துத் தருபவர் இவரே! அந்நூல் ஒரு சிறு 'கேப்சூல்' ('Capsule') போல பல அருமையான தொகுப்பு - விளக்கம், கட்டாயம் வாசித்து பெரியாரை சுவாசிக்கும் நூல் இது!

இதோ, ஒரு அரிய பகுதி.

"பெரியார் படி" என்ற அத்தியாயத்தில் அவரது விளக்கம் - பெரியார்படி என்பதில், "பெரியார் என்னும் கருத்தாவின் பெயர் அவரால் செய்யப்பட்ட நூலுக்கு ஆயிற்று."

என்னே நேர்த்தி!

இதோ அக்கட்டுரை.

பெரியார் படி


"பெரியார் எனும் சொல் இணைப்பரும் பெருமையையும், ஒப்புச் சொல்வதற்கு அரிய பெருமையுடையவர் என்பதை உணர்த்தும் சொல்லாகும். அச்சொல் சுட்டும் பொருளுக்கு ஏற்பவே பெரியார் திகழ்ந்தார்; இன்றும் ஒளிர்ந்துவருகிறார். பொருள் புலப்பட பொருள் தோன்ற கூறுதலை புலன்வனப்பு என்பர். அந்த அரிய புலன்வனப்பைப் பெரியாரின் எழுத்திலும், பேச்சிலும் காணலாம்.

பெரியாரின் உரைநடை என்பது தனி வகைப்பட்ட உரை நடை வண்ணமாகும். எந்த தமிழ்ப் புலமையாளர்களுக்கும் வாய்க்கப் பெறாத - பெரியாருக்கு மட்டும் இயல்பாக வாய்க்கப்பெற்ற பெரும்பேறாகும். கழுத்துப் பிடி கொடுத்தாலும், எழுத்துப்பிடி கொடுக்கக்கூடாது என்பது கொங்கு நாட்டு சொலவமாகும்.

பெரியார் பேசும்போதும், எழுதும்போதும் சொற்களின் புலப்பாட்டைத் தெரிந்துகொண்டு எழுத்துப் பிடி கொடுக்காமல் எழுதவும் பேசவும் வல்லவர். அவரது எழுத்திலும் பேச்சிலும் எண்ணற்ற பழமொழிகளைக் காணலாம். அவை சுவைமிக்கதாகவும், சுட்டுரைப்பாகவும் இருக் கின்றன. தாம் கூறும் கருத்துக்களுக்கு வலுசேர்க்க சிறு சிறு குட்டிக் கதைகளையும் கூறியிருக்கிறார். அது நகைச்சுவையும், அறிவுச் சுவையும் தருவனவாகும்.

மேலும், அவர்தம் கருத்துக்கு அழுத்தமும் தெளிவும் கொடுக்க உயிர் எழுத்து அடுக்குத் தொடர்களையும், மெய் எழுத்து அடுக்குத் தொடர்களையும் பயன்படுத்தியுள்ளமை சுவை பயப்பனவாகவுள்ளன. அவரது பேச்சும் எழுத்தும் கேள்விகளாகவே இருக்கும் என்பதை ஆய்வு செய்த அண்ணாமலைப் பல்கலைக்கழத் தமிழ்ப் பேராசிரியர் சேகர், முற்றுச் சொல் இல்லாத வாக்கியத்தை வினைச் சொல்லும் இல்லாமல் கேள்விக்குறியினால் மட்டுமே கேள்வியாக்கும் முறையில் தம் இதழ்களில் பின்பற்றியுள்ளார் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

விமர்சன அறிஞர் க.நா.சுப்ரமணியம், "ஈ.வெ.ராவின் நடையிலும் ஓர் இலக்கியத்தரமான வார்த்தைச் செட்டைக் காணலாம். அவர் பேச்சிலும், அவரது உள்ளத்தைத் துல்லிய மாகக் காணமுடிந்தது. ஈ.வெ.ராவின் இலக்கியச் சேவை மிகவும் தரமானது. இத்தனைக்கும் அவர் இலக்கியச் சேவை செய்ய முன்வந்தததாகச் சொல்லிக் கொள்ளவில்லை. மற்றவர்கள் தான் சொல்லிக் கொண்டார்கள்" என்று சொல்கிறார்.

உவமைக் கவிஞர் சுரதா இப்படிச் சொல்கிறார்... "கவிதையால் ஒன்றும் செய்ய முடியாது. அது ஒரு மயக்கம். உரைநடைதான் மாற்றங்களைக் கொண்டு வரும். பெரியாரின் உரை நடைதான் சமூக சீர்திருத் தங்களை ஏற்படுத்தியது, என்னால் மறக்கமுடியாத தலைவர் பெரியார்தான். பெரியாரால்தான் இங்கே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதுவரை இங்குள்ள மக்கள் நம்புவர்களாகத்தான் இருந்திருக் கிறார்கள். எம்புவர்களாக மாற்றியது பெரியார்தான்,

பெரியார் யாரையும் மேற்கோள் காட்டிப் பேசுவதில்லை. நான் சொல்றேன்னுதான் சொல் வார். அதுக்கு அசாத்திய தன்மை, தன்னம் பிக்கையும், தனக்கு சரி என்று பட்டதை வெளிப்படுத்தும் பழக்கம் வேணும். பெரியார் என்ற ஒரு வார்த்தை சொன்னால், இவரை மட்டும்தான் குறிக்கும். உலக வரலாற்றில் இந்தப் பெருமை எந்தத் தலைவருக்கும் கிடையாது" என்கிறார்,

தமிழ்த்தென்றல் திரு.வி.க. சொல்வதைப் பார்க்கலாம்.. "இயற்கைப் பெரியார். என் வாழ்நாளில் இதுகாறும் செய்த ஆராய்ச்சிகளுள் அகப்படாத பல கருத்துக்களும், அரிய யோசனைகளும் இப்பெரியாரின் இயற்கை அறிவில் உதித்திடக் காண்கின்றேன். எவருக்கும் எளிதில் கிடைக்காத இயற்கை அறிவை ஏராளமாகப் பெற்றிருக்கிறார்." மேலும், "அவர் பெரியாருடைய இயக்கம் அறிவியக்கம். அது எல்லா எல்லைகளையும் கடந்து இது உலகப் பொது இயக்கமாகும்" என்று குறிப்பிட்டு வியந்திருக்கிறார்.

பெரியார் தாமே தொடங்கி நடத்திய குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை மற்ற பிற இதழ்களிலும் தம் சுயசிந்தனை பகுத்தறிவுக் கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டார். அவ் விதழ்களில் பகுத்தறிவு கருத்துச் செல்வங்கள் செறிந்தும் பொதிந்தும் கிடக்கும்.

பெரியாரியல் என்பது மெய் வைத்த சொல் இயலாகும். அவற்றை ஊன்றிப் படித்தால் நம் அறியாமையின் அளவைத் தெரிந்து தெளிவு பெறலாம். பெரியாரின் சுயசிந்தனைக் கருத்துத் துளிகள் சிலவற்றை உங்கள் உள்ளங்களில் நுழையவிட்டுப் பாருங்கள். அது துளிர்விட்டு வளர்ந்து ஒளிர்வதைக் காணலாம். அதனால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பயமற்றவர் களாகவும், வளமும் பொலிவும் பெற்றுத் திகழலாம். பெரியார் மறைந்தாலும் அவரது பெரியாரியல் என்ற பகுத்தறிவு விடிவெள்ளிக்கு மறைவில்லை. அது திராவிடர்களின் விடியலைச் சுட்டிக்காட்டியும் தட்டி எழுப்பிக்கொண்டேதான் இருக்கும்."

-  விடுதலை நாளேடு, 19.4.10