பக்கங்கள்

வெள்ளி, 12 மே, 2017

நட்பின் வலிமையும், ‘‘வலி’’யும்! (2)

நட்பின் வலிமை சிறப்பானதுதான்; ஆனால், அதே நட்பு கூட நமக்குப் பல நேரங்களில் வலியை - தீராத வலியை உருவாக்கி, மன உளைச்சலைத் தந்து விடுகிறதே!

நாம் அந்த நண்பரை - நட்புறவைப் புரிந்து கொண்ட அளவு அவர் நம்மைப் புரிந்துகொள்ளாமல் பிழைபட உணர்ந்து, பெருத்த பள்ளத்தை நட்பில் உருவாக்கி அவரும் தனிமைப்படுத்தப்பட்டு பிரிந்து வாழும் அல்லது துறந்த அல்லது இறந்த நட்பாக மாறி விடுகிறதே என்று எண்ணுகிற போதுதான் வள்ளுவரின் ‘நட்பு ஆராய்தல்’ அதிகாரம் நமக்குத் தக்க விடையைத் தருகிறது!

‘‘நாடாது நட்டலின் கேடுஇல்லை நட்பின்
வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு (குறள் 791)

‘‘நட்பு உடையவர்களிடம் நட்பு செய்துகொண்ட பின், அதனை விட்டு விடுதல் என்பது ஒருவருக்கு இயலாது; ஆதலால் முன்கூட்டியே ஆராயாது நட்புச் செய்தல் என்பது கூடாது. அப்படி செய்தால், அதைவிடக் கேடு பயப்பது வேறொன்றுமில்லை.’’

இந்த அதிகாரம் நட்புக்கான ‘எச்சரிக்கை ஒன்று’ என்று நம்மை ஆயத்தப்படுத்தும் அறிவுரை பொதிந்த பாடம் என்றால் மிகையல்ல.
மற்றொரு குறளும் சுட்டிக்காட்டப்படல் வேண்டும்.

‘‘குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு (குறள் 793)

‘‘ஒருவர், பிறருடைய சிறந்த பண்பையும், உயர்ந்த குடிப்பிறப்பையும் (பண்பால், பிறப்பால் அல்ல), குற்றங்குறைகளின் தன்மையையும், தரங்குறையாத சுற்றத்தாரின் பாங்கினையும் நன்கு ஆராய்ந்து அறிந்த பிறகே, அவரோடு தக்க முறையில் நட்பு கொள்ளவேண்டும்.’’

இதில் இன்னொரு கடும் எச்சரிக்கையாக இதற்கு முதலில் உள்ள குறளில் அதாவது (792 இல்) கூறப் பட்டுள்ளது.

தவறான நட்புத் தேர்வு எந்த அளவுக்குச் செல்லும் தெரியுமா?

சாவிற்கும்கூட காரணமாக அமைந்துவிடுமாம்! எத்தகைய அனுபவப் பிழிவுள்ள அறிவுரை! அன் றாடச் செய்திகள் இதற்கு எடுத்துக்காட்டு அல்லவா?

ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான்கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும் (குறள் 792)

‘‘பலகாலும், பல முறைகளிலும் ஆராய்ந்து மீண்டும் ஆராய்ந்தும் (சலித்தும், புடைத்தும், வடிகட் டியும்) பார்த்து நட்பு கொள்ளாதவனின் நட்பு, முடிவில், அவன்தானே சாவதற்குக் காரணமான துன்பத்தினையும் உண்டாக்கி விடும்.’’

- சரி எப்படி சலித்து, புடைத்து, வடிகட்டி நல்ல நட்புறவைத் தேடுவது? அதற்கும் குறள் ஆசான் வழிமுறை - விடை கூறத் தயங்கவில்லையே!

‘‘அழச் சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல் (குறள் 795)

‘‘முறையல்லாத செயல்களை ஒருவர் செய்ய முற்படும்போது, அவர் அழும்படியாக அவருக்கு அறிவுரை கூறியும் (தன் தவறுக்குத் தானே வருந்தி அழும் அளவுக்கு நயம்பட உரைத்தும்), மீறிச் செய்தால், அவர் மீண்டும் செய்யாதபடி அவரைக் கண்டித்துரைத்தும், உயர்ந்தோர் கொள்ளும் வழக்கு இன்னதென்று உணர்ந்து, அதனை அறிவிக்க வல்லாருடைய நட்பை ஆராய்ந்து அறிந்த பிறகு, ஒருவன் பெற்றுக் கொள்ளவேண்டும்.’’

இதனைப் பின்பற்றாமல் பல்வேறு துன்பம், தொல்லை,  இழப்பு, அவதூறு, அவமானம் - இவை களைப் பெற்ற அனுபவம் என் வாழ்விலும் உண்டு; உங்கள் வாழ்விலும் உண்டு. ஏன்? அனைவரது வாழ்வில் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டே இருக்கும் - இல்லையா?

-விடுதலை,12.5.17

வியாழன், 11 மே, 2017

நட்பின் வலிமையும், ‘‘வலி’’யும்!



வாழ்க்கையில் நமக்கு மிகவும் கைகொடுப்பது, துயருற்ற காலத்தே மனந்திறந்து கொட்டி மனதை லகுவாக - லேசாக- ஆக்கிக் கொள்ளுதல், தனி மையை வெல்லும் இனிமையைத் தருவதற்கு, நட்புதான் நமது வாழ்வின் ‘பலச் சத்து’ (டானிக்) ஆகும்!

முதுமையை நோக்கிய வாழ்க்கைப் பயணத்தை சற்று இளமையைத் தேக்கி இன்பம் காணவும் ‘நல்ல நண்பர்கள் வட்டம்‘ மிகவும் அருமையான மருந்தும் கூட!

மனித குலம் சமூகத்தில் ஒருங்கிணைந்து, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலுக்கும், ‘யாதும் ஊரே, யாவரும் நம் கேளிர்’ என்ற உணர்வு மேலோங்கி நிற்பதற்கும் இந்த நட்பு என்ற பழக்கம் எத்தகைய புத்தாக்கச் சக்தி தெரியுமா?

நல்ல நண்பர்களின் - கைம்மாறு கருதாத அகநக நட்பாளர்கள் வட்டம்தான் முக்கியம், முக்கியம்!

தந்தை பெரியார் சுயமரியாதைத் திருமண வாழ்விணையர்களுக்கு ஒப்பந்த - உறுதிமொழி கூறுகையில், ‘‘உற்ற நண்பர்களாக வாழ்வோம்‘’ என்று அவர்களைக் கூறச் செய்வார்கள்! காரணம், நட்புக்கு - அதிலும் உற்ற நட்புக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்பதால்தான்!

‘‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு (குறள் 788)

இந்த உவமையின் உண்மை நயம் எதில் பொதிந் துள்ளது தெரியுமா?

வேட்டி அவிழ்கிறது என்று மூளைக்குத் தகவல் போனவுடன், எதைப்பற்றியும் சிறிது நொடி கூட தாமதியாமல், அனிச்சமாகத் தானே அந்த கைகள் விரைந்து அந்த வேட்டியைத் தூக்கிப் பிடிக்கும் (கிutஷீனீணீtஷீஸீ) செயல் போன்றது என்பதால்!
அது யோசித்து,  விவாதித்து, முடிவுக்கு வந்து செயற்படும் வினை அல்ல!

அது போன்ற நட்பே நல்லிணக்கமான நட்பு ஆகும் என்கிறார் வள்ளுவர்! எனனே அறிவியல் பூர்வ உண்மை! அதுவும் 2500 ஆண்டுகளுக்குமுன்  -விஞ்ஞானத்திற்கு முன்பே கூறப்பட்ட மெய்ஞான உண்மை இது! வியப்பாக இருக்கிறதல்லவா!

எதையும் ஆழமாக விளக்கும் வள்ளுவம், நட்பு என்பதை எத்தனை எத்தனைக் கோணங்களில் விளக்குகிறது, எச்சரிக்கிறது, அறிவுறுத்துகிறது என்று பார்த்தால், அவை வியத்தகு விந்தையாகவே நிற்கின்றன.
நட்பு (அதிகாரம் 79)

நட்பு ஆராய்தல் (அதிகாரம் 80)
பழைமை (அதிகாரம் 81)
தீ நட்பு (அதிகாரம் 82)
கூடா நட்பு (அதிகாரம் 83)

இதற்கென 5 அதிகாரங்கள், 50 குறள்பாக்கள் அத்தனையும் செறிவுள்ள கருத்து முத்துக்களைக் கோர்த்த முத்துமாலை!
வள்ளுவர் குறள் எழுதினார் என்பது வெறும் பதவுரை, பொழிப்புரை, கூறிடுவதற்கா?

அல்லது பல லட்சம் புத்தகங்களைப் போட்டு பெரும் பணக்கார முதலாளிகளாக ஆவதற்கா?

அல்லது தம் அறிவின் புலமை எத்தனை தனக்கு என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி, அழியும் புகழை, அந்த அழியாப் புகழ் அறிஞனின் குறளைப் பெறவா?

இல்லை நண்பர்களே! இல்லை!!

பின் எதற்காக - அவரே கூறுகிறார் விடையை!

‘கற்க - கசடற
கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக!’

- இப்படி சரியாக ஒழுகினால் வாழ்க்கையில் எதிரிகளால் வஞ்சிக்கப்பட்டதைவிட, நண்பர்களால் ஏமாற்றப் பட்ட ‘கணக்குப் போட்டுப் பழகிய பிறகு ஓடிவிட்ட’ நண்பர்களையும் புரிந்திருப்போமே!

இல்லையா!
-விடுதலை,11.5.17

செவ்வாய், 9 மே, 2017

புத்தம் என்ற பேரொளி - பாரொளி!



புத்தர் இந்தியாவில் தோன்றிய முழுப் பகுத்தறிவுவாதி. ஜாதி, மூட நம்பிக்கை, பெண்ணடிமை, கடவுள் நம்பிக்கை, ஆத்மா நம்பிக்கை - இவைகளை முழுமையாக எதிர்த்த மானுடப் பற்றாளர்.

இப்படிப்பட்டவரையே ‘‘மகாவிஷ் ணுவின் ஒன்பதாவது அவதாரமாக’’ - ஆக்கி வைத்துவிட்டனர்-
- ஏமாந்த காலத்தில் ஏற்றங்கொண் டோர்!

பலரும் புத்தர் படத்தை மாட்டி வைத்துள்ளனரே, புத்தரின் அறிவு ரைகள் - அறவுரைகள் தமது உள்ளத் தில் புதிய வைத்து, அதன்படி ஒழுகி, சீரிய பயன் அடைபவர்கள் அல்லர். இது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்!

இவ்வுலக வாழ்வில் மனிதர்கள் ஒழுக்கமான, நாணயமான, மற்றவர் களுக்குத் தொல்லை தராத வாழ்க் கையை வாழவேண்டும் என்ற அவரது வாழ்வியல் சிந்தனை சிறந்த வழிகாட்டி நெறியாகும்.

புத்தர் என்றால், ஏதோ காவி கட்டியவர், துறவறம் பூண்டவர்; நம் மால் கடைப்பிடிக்காதவைகளை அருள் உபதேசமாகச் சொன்னவர் என்று நம்மில் பலரும் - நுனிப்புல் மேய்பவர்களாகவே - அவரைப்பற்றிய மதிப்பீடு உடையவர்களாக உள்ளது - எவ்வளவு பெரிய தவறு என்பதை அவரது அனுபவம் கனிந்த வாழ்விய லுக்கான அவர் கூறிய அறிவுரைகளை அசை போட்டுச் சிந்தியுங்கள்.

‘‘உடலை ஆரோக்கியமாக வைத் துக் கொள்வது  ஒரு கடமை; இல்லையென்றால் நமது மனதை வலிமையாகவும், தெளிவாகவும் வைக்க முடியாது!’’ என்கிறார் புத்தர்.

உண்மைதானே! உடல்நலம் நோய் களால் பாதிக்கப்பட்டவரால், மன வலிமையுடன் பணிபுரியவோ, பழக்கு வதற்கோ முடியுமா?

எரிச்சலும், கோபமும் பல்வகைப் பட்ட மனவருத்தங்களும் குடி கொண் டதால், வலிமைமிக்க உள்ளத்தை எப்படி நிலை நிறுத்தி, உறுதியான செயற்பாடுகளில் ஈடுபட முடியும்? முடியாதே!

மேலும் புத்தர் கூறுகிறார்:

‘‘உடல்நலம் என்பது உயரிய பரிசு.

மனநிறைவு என்பது உயரிய செல்வம்.

விசுவாசம் என்பது சிறந்த உறவு’’

இந்தப் பரிசுகளும், செல்வமும், விசுவாசமும் நம் வாழ்க்கையில் வற்றாத ஜீவ நதிபோல கிடைத்துக் கொண்டே இருக்க, உடல்நலத்தில் மிக்க கவனஞ் செலுத்தி - வருமுன் காக்கும் வழியோடு வாழப் பழக வேண்டாமா?

‘‘ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்தி களுக்கு ஒளியூட்ட முடியும். அதன் வாழ்க்கை குறைக்கப்படாது பகிர்ந்து கொள்வதன்மூலமாக, மகிழ்ச்சி ஒருபோதும் குறைவ தில்லை’’ என்கிறார். குறையாத மகிழ்ச்சியின் திறவுகோல் எங்கே, எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? மற்றவர்களுக்கு உதவுங்கள் - தொடரும் தொண்டறம் மகிழ்ச்சியின் மங்காத, மடியாத, மளமளவென்று ஓடிவரும் ஊற்று என்கிறாரே! என்னே அருமையான விளக்கம்!

வாழ்க்கையில் வளர்ந்து நாளும் முன்னேறவும், புத்தரின் புத்தாக்க உரை பொலிவு எப்படிப் பெறுகிறது தெரியுமா?
இதைப் படிப்பதோடு, அன்றாடம் கடைப்பிடித்து ஒழுகுவதில் போட்டிப் போடுங்கள்!

‘‘என்ன செய்து முடிக்கப்பட்டது என்பதை நான் ஒருபோதும் பார்ப்ப தில்லை; இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே பார்க்கிறேன்!’’

எவ்வளவு ஆழமான  புத்தரின் அறிவுரை!

எத்தகைய சிறந்த நிர்வாகவியல் - மேலாண்மைத் தத்துவ வகுப்புப் பாடம்!

இதைத்தான் நாளும் செய்திட நாம் அனைவரும் பழகினால், மனித வாழ்வின் முழுப் பயனும் அர்த்தமும் நமக்குக் கிட்டுமே!

‘ஆசையை விடச் சொன்னார் ‘புத்தர்’ என்ற ஒரே வரியில் புத்தத்தை சிறை வைத்துவிட வேண்டாம்!
புத்தம் என்பது

வாழ்வின் பேரொளி!

பகுத்தறிவுச் சுடரின் பாரொளி!
-விடுதலை,9.5.17

திங்கள், 8 மே, 2017

நமது உடல்பற்றிய இரண்டு முக்கிய தகவல்கள்

நேற்றைய(7.5.2017)‘தீக்கதிர்’ நாளேட்டின் இணைப்பான ‘வண் ணக்கதிர்’பகுதியில்-தஞ்சை இரைப்பை குடல்நோய் நிபுணர், பிரபல டாக்டர் சு.நரேந்திரன் அவர்கள் (வாரம்தோறும் நலவாழ்வு குறிப்புகள் எழுதுகிறார்) ஏப்பம் என்ற தலைப்பில் உடல்நலம் பேணுவதற்கும், ஏப்பத்திற்கும் உள்ள தொடர்பு - அதிலிருந்து பாதுகாத்தல் - வாயுத் தொல்லைபற்றி எவரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் பல அரிய தகவல்களை எழுதியுள்ளார்.

அவர் கூறும் சில முக்கிய குறிப்பு கள்:

இரைப்பை மற்றும் குடலில் குறைந்த அளவே வாயு (காற்று) உள்ளது. சுமார் 100-150 சி.சி. வயிறு காலியாகவே இருக்கும்.

உணவு உண்ணும்போதும், நீர் அருந்தும்போதும் அதிகமான காற்று குடலின் உள்ளே செல்கிறது.

இவ்வாறு உட்கொள்ளப்படும் காற்று, வயிற்றின் கொள்ளளவைவிட அதிகமாகும்போது ‘ஏப்பமாக’ வெளி யேறுகிறது!

அடுத்து, உட்கொண்ட உணவு வயிற்றினுள் புளிப்படைந்தாலும், ஏப்பம் உண்டாகும். இதைப் ‘புளித்த ஏப்பம்‘ என்று கூறுவார்கள். இது வயிற்றில் அதிக அமில சேர்க்கையால் உண்டாவதாகும்.

இதேபோல, குடலில் புண் உள்ள வர்களுக்கு செரிமானமின்மை ஏற் படும். இதன் காரணமாகவும் அடிக்கடி ஏப்பம் வெளிவரும்.

நுரை அதிகமாக உள்ள பானங்கள், சோடா, பீர் மற்றும் புகை பிடித்தல் ஆகியவை காரணமாகவும் ஏப்பம் வெளிவரும்.

நேரம் தவறி உணவு உட்கொள் வதாலும் ஏப்பம் ஏற்படும்.

மனநோய் உள்ளவர்கள் அடிக்கடி காற்றைக் குடிப்பார்கள்! இவர்கள் மற்றவர்களுக்குக் கேட்கும் அளவுக்கு சத்தமாக ஏப்பம் விடுவார்கள். இவர் களுக்கு மருந்து தேவையில்லை. மனநோய் மருத்துவரே தேவை.

தடுப்பு முறை என்ன? - விவரிக் கிறார் டாக்டர்:

1. உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிக தடவை உண்ணவேண் டும்.

2. உணவு உண்ணும்போது நீர் அருந்தக் கூடாது. நீர் அருந்தினால், வயிறு பெருத்துச் செரிமானக் கோளா றுகள் ஏற்படும்.

3. உணவை சரியான இடைவெளி களில் உண்ணவேண்டும்!

4. இந்த உணவுகள் குடலில் அழுக நேரிட்டால் வேண்டாத காற்றை உண்டு பண்ணும்.

5. உணவு அருந்தும்போது உடை கள் தளர்ந்து இருக்கவேண்டும்; உணவு அருந்தியபின் காலாற சிறிது நேரம் நடக்கவேண்டும்.

இப்படி பலப்பல நல்ல அறிவுரை களை மருத்துவ ரீதியாக வெளியிட்டுள்ளார். அக்கட்டுரைக்குப் பக் கத்தில் உள்ள மற்றொரு குறிப்பும் இக்கால இளைஞர்களுக்கு, தொலைக் காட்சியை நள்ளிரவு முழுவதும் உட்கார்ந்துப் பார்த்து தூக்கமின்மை அல்லது குறைந்த தூக்கத்திற்கு ஆளாகி அதன் காரணமாக நோயுற் றவர்களாகும் பலருக்கும்  பயன்படும் குறிப்புகள் அவையாகும்.

மெலடோனின் (Melatonin). சுரப் பதுபற்றியும் அருமையான தகவலும், இருட்டும் தேவை - தூக்கத்திற்கு என்ற பயனுள்ள தகவலும் வந்துள்ளதை அப்படியே தருகிறோம்.

கற்க அதன்பின் நிற்க அதற்குத்தக!

‘‘நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன. அதில் ஒன்று நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்குபடுத்தும் உயிரியல் நேர முறைமை(Biological Clock System). இதனை வழிநடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள் ளது. அதுதான் பினியல் சுரப்பி (Pineal Gland). கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த சுரப்பி பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பினியல் சுரப்பி ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது. அதுதான் மெலடோனின்(Melatonin). இந்த அரிய பொருளின் பலன் மகத்தானது. புற்றுநோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது. மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும். இரவின் இருளில்தான் பினியல்  சுரப்பி மெலடோனினை  சுரக்கும். அதனுடன் இணைக்கப்பட் டுள்ள பார்வை நரம்பு மூலமாக அது இரவின் இருளை அறிந்துகொள்ளும். ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்குப் பிறகு இருளில் சுரக்கும் மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந் தோடும். நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால், பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது. பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆரம்பித்து காலை 5 மணிக்கு நிறுத்திவிடும். இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்றுநோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்.

எனவே, இரவு முன்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்றுநோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது.

அதேபோன்று அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓசோன் நிறைந்திருக்கும். ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால் இந்த ஓசோன் காற்றை அவன் சுவாசிப்பான். நமது உடலி லுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத் துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இரவு முன்கூட்டியே உறங்குவதால், மெலடோனின் கிடைக்கிறது. அதி காலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால், ஓசோன் கிடைக்கிறது. நமது உடலின் ஆரோக்கியம் இவற்றில் அடங்கியிருக்கிறது'' என்கிறார் டாக்டர் நரேந்திரன்

- கி.வீரமணி
-விடுதலை,8.5.17

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

புத்தகத்தால் பெற்ற புதுவாழ்வு - பாரீர்!

தனது 17 ஆவது வயதில் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல்,

25 வயதில் தாயார் காலமானார்,

இவரே,  26 வயதில் கருச்சிதைவுக்கு ஆளா னார்,

27 வயதில் திருமணம் செய்து கொண்டு - அது ஒரு வெற்றிகரமான திருமண வாழ்வாக அமையாமல், ஒருவருக்கொருவர் வசைபாடும் வாடிக்கை நிறைந்த வாழ்க்கையாகவே இருந்தது!

இந்தச் சூழ்நிலையில், ஒரு மகள் - (பெண் குழந்தை) பிறந்தது!

28 ஆவதுவயதில் அதன் பின் மணவிலக்கு (Divorce)   ஏற்பட்டது! - மன அழுத்தம்.

வயது 29 இல் குழந்தையுடன் உள்ள தனி ஒரு தாயாகவே வாழும் அவலம் அந்தப் பெண்ணுக்கு ஏற் பட்டது! - மன அழுத்தம்.

தனது 30 ஆவது வயதில் வேறு சோகத்தில் சிக்கித் தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்தார்!

பிறகு தனக்குள்ள திறமைபற்றி சற்றே எண்ணினார். மற்றவர்களைவிட தனக்கு எழுத்துத் திறமை அதிகம் உண்டு என்று தன்னைப்பற்றி சுய மதிப்பீட்டை அறிந்து - புத்தகம் - புதினம் - எழுதத் தொடங்கினார்!

முதலில் அவரால் பதிப்பகங் களுக்கு அனுப்பப்பட்டுப் புத்தக எழுத்தாகிட அச்சுக்குத் தகுதியில்லை என்று அவர்களால் திருப்பி அனுப் பப்பட்டன - பல பதிப்புகள்.

அசரவில்லை; முயற்சியைத் தளர விடவில்லை. பிறகு அவரது முதல் புத்தகம் 31 ஆவது வயதில் வெளி வந்தது. 35 ஆவது வயதில் 4 புத் தகங்கள் அபார விற்பனையில் உச் சத்தைத் தொட்டன! அவ்வாண்டின் தலைசிறந்த நூலாசிரியர் என்ற சிறப்புத் தகுதி - இவருக்கு அறிவிக் கப்பட்டது!

இவர் எழுதிய நூல்கள் அடுத்து எப்படி உலகம் முழுவதும் பல லட்சக் கணக்கில் விற்பனையாகியது?

42 ஆவது வயதில் 11 மில்லியன் காப்பிகள் விற்றன; அதாவது ஒரு கோடியே பத்து லட்சம் புத்தகங்கள் விற்பனை!

அந்த ஜே.கே.ரவுலிங் (J.K.Rowling) எழுதிய ஹாரிபாட்டர் (Harry Potter) இப்போது 15 மில்லியன் - ஒன்றரை கோடி புத்தகங்கள் விற்பனையின் உச்சத்திற்குச் சென்று சாதனை சரித்திரம் படைத்துள்ளது.

நான் அமெரிக்காவிற்கு சில ஆண்டுகளுக்குமுன் சென்றபோது, புத்தகக் கடை (Barnes & Noble) அது பிரபல புத்தகக் கடை - அங்கே புத்த கங்கள் வாங்கச் சென்றேன். பாஸ்டன் நகருக்குப் பக்கத்து ஊரில் உள்ள கடை அது!

ஏராளமான மக்கள் ‘க்யூ’ வரிசை யில் நின்று புத்தகங்களைப் பெற்றுச் செல்லும் காட்சி கண்டு திகைத்தேன் - வியந்தேன்.

Harry Potter    - அது பெரிதும் பேய்க் கதைகள் - கற்பனை அதன் பல பாகங்கள் தொடர் புதினங்களாக இந்த எழுத்தாளரால் எழுதி வெளி வருமுன்னரே பதிவு செய்து முதலில் வாங்கவும், பதிவு செய்யாது வாங்கு வோர் இரவே சென்று புத்தகக் கடையின்முன் ‘முற்றுகை’ இட்டு நிற்கும் நிலையும் மிகவும் அதிசயத்தக்கதாக இருந்தது!

ஒவ்வொருவரின் திறமையும் புதைந்துள்ளது; வெறும் தோல்விகள் தொடர் சோகங்களால் மனமுடைந்து மூலையில் முடங்கிவிடக் கூடாது.

விழுவதைவிட உடனே எழு வதும், நிற்பதும், ஓடுவதும்தானே முக்கியம்?

அதைத்தான் ‘ஹாரிபாட்டர்’ தொடர் நூல் ஆசிரியை ஜே.கே.ரவுலிங் அம்மையார் வாழ்க்கைச் சாதனை உலகுக்குப் பறைசாற்றி யுள்ளது!

எனவே, தோல்வி, துன்பம், துயரம் உங்களை சல்லடைக் கண்களாகத் துளைத்தாலும் அஞ்சாதீர்; தயங்காதீர்! உங்கள் திறமையை நம்பி புது வாழ்வு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்!

அம்மையாரின் வாழ்க்கையே நமக்கு ஒளி - ஒலி பாடம் அல்லவா?

- கி.வீரமணி

-விடுதலை,24.4.17

புதன், 26 ஏப்ரல், 2017

உலக நல வாழ்வு நாளில் ஓர் நினைவூட்டல்!

இன்றைக்கு (ஏப்ரல் 7) உலக நலவாழ்வு நாளாகும்.

நோய் வருமுன்னர் காத்து, உடற்பரிசோதனை களை ஆண்டுக்கு ஒருமுறையோ, இருமுறையோ - மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, முப்பாலரும் (திருநங்கையர் உள்பட) செய்து கொண்டு, நோயாளி என்ற மனப்போக்கிலிருந்து நம்மை நாம் விடுதலை செய்துகொள்ள முயற் சிக்கவேண்டும்.

நோய் வந்து அவதிக்குள்ளானால் அது நம்மை மட்டுமா பாதிக்கிறது? நமக்கு மட்டும்தான் தொல் லையா? கூடுதல் தொல்லை - துன்பச் சுமையாக நமது நலவிரும்பிகளான நமது உற்றார், உறவினர், நண்பர்கள் இத்தனை பேர்களையும் மிக அதி களவில் பாதிக்கிறதே! அது வேதனையல்லவா?

1. குறைந்தபட்சம் 30 மணித்துளிகள் முதல் 40, 45 மணித்துளிகள் நாள்தோறும் நடைபயிற்சிகளை மேற்கொள்வது இன்றியமையாதது!

2. உணவில் எச்சரிக்கை - ருசியுள்ளது என் பதைவிட - நலவாழ்வுக்கு (ஆரோக்கிய உணவு) உகந்ததாக அமைத்துக் கொள்ளல் அவசியமாகும்!

3. பசிக்காமல் உண்ணாதீர்கள்.

4. தூக்கம் வரவில்லை என்று படுக்கையில் புரளாதீர்கள் - உடனே எழுந்து விளக்கைப் போட்டு தூக்கம் வரும்வரை ஏதாவது நல்ல புத்தகங்களைப் படித்துக்கொண்டே - தூக்கம் வந்தவுடன் தூங் குங்கள்!

நீண்ட நேரம் வேலை மேசையின் முன்னேயே அமர்ந்து மணிக்கணக்கில் செலவிடுவது, இதய நோய்க்கு மெல்ல மெல்ல அடியோடு அச்சாரம் கொடுப்பதாகும். எனவே, ஒவ்வொரு அரை மணிநேரமும் எழுந்து சிறுசிறு பணிகளில் ஈடுபட்டு, மறுபடியும் உட்கார்ந்து பணி தொடருங்கள் என்கிறார் பிரபல இதய சிகிச்சை மருத்துவர் டாக்டர் ரமாகாந்த் பாண்டா (இவர்தான் ‘ஏசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட்’ என்ற பிரபல இதய நோய் சிகிச்சை மருத்துவமனையில் நெம்பர் ஒன் டாக்டர் ஆவார்!) இவர் முன்பு ‘எய்ம்ஸ்’ என்ற பிரபல டில்லி மருத்துவ மனையிலும், அமெரிக்காவின் பிரபல இதய நோய் மருத்துவப் பிரிவான ‘கிளவ் லாண்ட் கிளினிக்‘  (Cleveland Clinic)  
அமெரிக்காவின் பிரபல இதய நோய் நிபுணர் Dr. Floyd D. Loop   (டாக்டர் ப்ளையட் டி லூப்) அவர்களிடம் பயிற்சி பெற்று திரும்பிய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.

இவரது சில அறிவுரைகள் இதோ:

1. நம் தாத்தா, பாட்டிகளைப் பாருங்கள் - அவர் களைப் பின்பற்றுக.

2. உணவு, தூக்கம், நடை இவைகளை அவர் களைப் போல் பின்பற்றுங்கள்!

3. தூக்கம் ஒரு முக்கிய அம்சம் - மறவாதீர்!

4. உடற்பயிற்சிக்கே நேரமில்லீங்க டாக்டர் என்பது காலாவதியான சமாதானம் - அதை எப்போதும், எவரிடமும் சொல்லாதீர்கள். 40 நிமிடம் நடைபயிற்சி நல்லது. இன்றியமையாதது.

5. மன அழுத்தம்தான் நோய்க்கு முக்கிய கார ணம். அதை பல உடற்பயிற்சிகள், யோகப் பயிற்சி யின்மூலம் தவிர்த்துவிடுங்கள்.

6. உங்கள் உடல்நிலைபற்றி நீங்களே அவ்வப் போது தவறாமல் ஆராய்ந்து, தவிர்க்கவேண்டிய வைகளைத் தவிர்க்க முயலுங்கள் - என்கிறார்.

இந்த டாக்டரின் உணவுத் தட்டினைப் பார்ப் போமா - வாருங்கள்!

1. பெரும்பாலும் காய்கறி உணவுதான் வாரத்தில் 6 நாள்களுக்கு.

2. ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன் உணவு.

காலை:

நார்ச்சத்துள்ள உணவு - 2, 3 முட்டைகளின் வெள்ளைக்கரு. பல தானியங்களால் ஆன ரொட்டி, காய்கறிகள், பழங்கள்.

மதியம்:

கார்போஹைட்ரேட் மாவுச் சத்து உணவைத் தவிர்ப்பது நல்லது. சில மீன் துண்டுகள், காய்கறிகள், பருப்பு, பழ வகைகள்.

இரவு:

சூப், சாலட் (ஷிணீறீணீபீ) என்ற காய்கறி கூட்டணி உலர்ந்த அல்லது பருவப் பழங்கள்.

கவனிக்க:

அது அவரது முறை - நாம் நமக்கேற்ப இதனை எப்படி செய்துகொள்ள முடியுமோ அப்படி மாற்றிக் கொள்ளுங்கள்.

நமது மருத்துவ உணவு ஆலோசனை, அறி வுரையே நமக்குத் தக்க வழிகாட்டி.

சீக்கிரம் தூங்கி, அதிகாலை எழுதலை நல்ல பழக்கமாக்கிக் கொள்ளுதல் மிகவும் எடுத்துக் காட்டானது.

உங்களுக்கு இவைகள் எல்லாம் தெரிந்தது - புரிந்ததுதான். இது நினைவூட்டலே!

அவ்வாறு கடைபிடித்து ஒழுகுங்கள் - அதுதான் முக்கியம்! முக்கியம்!! முக்கியம்!!!

- கி.வீரமணி

-விடுதலை,7.4.17