பக்கங்கள்

செவ்வாய், 9 மே, 2017

புத்தம் என்ற பேரொளி - பாரொளி!



புத்தர் இந்தியாவில் தோன்றிய முழுப் பகுத்தறிவுவாதி. ஜாதி, மூட நம்பிக்கை, பெண்ணடிமை, கடவுள் நம்பிக்கை, ஆத்மா நம்பிக்கை - இவைகளை முழுமையாக எதிர்த்த மானுடப் பற்றாளர்.

இப்படிப்பட்டவரையே ‘‘மகாவிஷ் ணுவின் ஒன்பதாவது அவதாரமாக’’ - ஆக்கி வைத்துவிட்டனர்-
- ஏமாந்த காலத்தில் ஏற்றங்கொண் டோர்!

பலரும் புத்தர் படத்தை மாட்டி வைத்துள்ளனரே, புத்தரின் அறிவு ரைகள் - அறவுரைகள் தமது உள்ளத் தில் புதிய வைத்து, அதன்படி ஒழுகி, சீரிய பயன் அடைபவர்கள் அல்லர். இது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்!

இவ்வுலக வாழ்வில் மனிதர்கள் ஒழுக்கமான, நாணயமான, மற்றவர் களுக்குத் தொல்லை தராத வாழ்க் கையை வாழவேண்டும் என்ற அவரது வாழ்வியல் சிந்தனை சிறந்த வழிகாட்டி நெறியாகும்.

புத்தர் என்றால், ஏதோ காவி கட்டியவர், துறவறம் பூண்டவர்; நம் மால் கடைப்பிடிக்காதவைகளை அருள் உபதேசமாகச் சொன்னவர் என்று நம்மில் பலரும் - நுனிப்புல் மேய்பவர்களாகவே - அவரைப்பற்றிய மதிப்பீடு உடையவர்களாக உள்ளது - எவ்வளவு பெரிய தவறு என்பதை அவரது அனுபவம் கனிந்த வாழ்விய லுக்கான அவர் கூறிய அறிவுரைகளை அசை போட்டுச் சிந்தியுங்கள்.

‘‘உடலை ஆரோக்கியமாக வைத் துக் கொள்வது  ஒரு கடமை; இல்லையென்றால் நமது மனதை வலிமையாகவும், தெளிவாகவும் வைக்க முடியாது!’’ என்கிறார் புத்தர்.

உண்மைதானே! உடல்நலம் நோய் களால் பாதிக்கப்பட்டவரால், மன வலிமையுடன் பணிபுரியவோ, பழக்கு வதற்கோ முடியுமா?

எரிச்சலும், கோபமும் பல்வகைப் பட்ட மனவருத்தங்களும் குடி கொண் டதால், வலிமைமிக்க உள்ளத்தை எப்படி நிலை நிறுத்தி, உறுதியான செயற்பாடுகளில் ஈடுபட முடியும்? முடியாதே!

மேலும் புத்தர் கூறுகிறார்:

‘‘உடல்நலம் என்பது உயரிய பரிசு.

மனநிறைவு என்பது உயரிய செல்வம்.

விசுவாசம் என்பது சிறந்த உறவு’’

இந்தப் பரிசுகளும், செல்வமும், விசுவாசமும் நம் வாழ்க்கையில் வற்றாத ஜீவ நதிபோல கிடைத்துக் கொண்டே இருக்க, உடல்நலத்தில் மிக்க கவனஞ் செலுத்தி - வருமுன் காக்கும் வழியோடு வாழப் பழக வேண்டாமா?

‘‘ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்தி களுக்கு ஒளியூட்ட முடியும். அதன் வாழ்க்கை குறைக்கப்படாது பகிர்ந்து கொள்வதன்மூலமாக, மகிழ்ச்சி ஒருபோதும் குறைவ தில்லை’’ என்கிறார். குறையாத மகிழ்ச்சியின் திறவுகோல் எங்கே, எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? மற்றவர்களுக்கு உதவுங்கள் - தொடரும் தொண்டறம் மகிழ்ச்சியின் மங்காத, மடியாத, மளமளவென்று ஓடிவரும் ஊற்று என்கிறாரே! என்னே அருமையான விளக்கம்!

வாழ்க்கையில் வளர்ந்து நாளும் முன்னேறவும், புத்தரின் புத்தாக்க உரை பொலிவு எப்படிப் பெறுகிறது தெரியுமா?
இதைப் படிப்பதோடு, அன்றாடம் கடைப்பிடித்து ஒழுகுவதில் போட்டிப் போடுங்கள்!

‘‘என்ன செய்து முடிக்கப்பட்டது என்பதை நான் ஒருபோதும் பார்ப்ப தில்லை; இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே பார்க்கிறேன்!’’

எவ்வளவு ஆழமான  புத்தரின் அறிவுரை!

எத்தகைய சிறந்த நிர்வாகவியல் - மேலாண்மைத் தத்துவ வகுப்புப் பாடம்!

இதைத்தான் நாளும் செய்திட நாம் அனைவரும் பழகினால், மனித வாழ்வின் முழுப் பயனும் அர்த்தமும் நமக்குக் கிட்டுமே!

‘ஆசையை விடச் சொன்னார் ‘புத்தர்’ என்ற ஒரே வரியில் புத்தத்தை சிறை வைத்துவிட வேண்டாம்!
புத்தம் என்பது

வாழ்வின் பேரொளி!

பகுத்தறிவுச் சுடரின் பாரொளி!
-விடுதலை,9.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக