பக்கங்கள்

வியாழன், 11 மே, 2017

நட்பின் வலிமையும், ‘‘வலி’’யும்!



வாழ்க்கையில் நமக்கு மிகவும் கைகொடுப்பது, துயருற்ற காலத்தே மனந்திறந்து கொட்டி மனதை லகுவாக - லேசாக- ஆக்கிக் கொள்ளுதல், தனி மையை வெல்லும் இனிமையைத் தருவதற்கு, நட்புதான் நமது வாழ்வின் ‘பலச் சத்து’ (டானிக்) ஆகும்!

முதுமையை நோக்கிய வாழ்க்கைப் பயணத்தை சற்று இளமையைத் தேக்கி இன்பம் காணவும் ‘நல்ல நண்பர்கள் வட்டம்‘ மிகவும் அருமையான மருந்தும் கூட!

மனித குலம் சமூகத்தில் ஒருங்கிணைந்து, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலுக்கும், ‘யாதும் ஊரே, யாவரும் நம் கேளிர்’ என்ற உணர்வு மேலோங்கி நிற்பதற்கும் இந்த நட்பு என்ற பழக்கம் எத்தகைய புத்தாக்கச் சக்தி தெரியுமா?

நல்ல நண்பர்களின் - கைம்மாறு கருதாத அகநக நட்பாளர்கள் வட்டம்தான் முக்கியம், முக்கியம்!

தந்தை பெரியார் சுயமரியாதைத் திருமண வாழ்விணையர்களுக்கு ஒப்பந்த - உறுதிமொழி கூறுகையில், ‘‘உற்ற நண்பர்களாக வாழ்வோம்‘’ என்று அவர்களைக் கூறச் செய்வார்கள்! காரணம், நட்புக்கு - அதிலும் உற்ற நட்புக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்பதால்தான்!

‘‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு (குறள் 788)

இந்த உவமையின் உண்மை நயம் எதில் பொதிந் துள்ளது தெரியுமா?

வேட்டி அவிழ்கிறது என்று மூளைக்குத் தகவல் போனவுடன், எதைப்பற்றியும் சிறிது நொடி கூட தாமதியாமல், அனிச்சமாகத் தானே அந்த கைகள் விரைந்து அந்த வேட்டியைத் தூக்கிப் பிடிக்கும் (கிutஷீனீணீtஷீஸீ) செயல் போன்றது என்பதால்!
அது யோசித்து,  விவாதித்து, முடிவுக்கு வந்து செயற்படும் வினை அல்ல!

அது போன்ற நட்பே நல்லிணக்கமான நட்பு ஆகும் என்கிறார் வள்ளுவர்! எனனே அறிவியல் பூர்வ உண்மை! அதுவும் 2500 ஆண்டுகளுக்குமுன்  -விஞ்ஞானத்திற்கு முன்பே கூறப்பட்ட மெய்ஞான உண்மை இது! வியப்பாக இருக்கிறதல்லவா!

எதையும் ஆழமாக விளக்கும் வள்ளுவம், நட்பு என்பதை எத்தனை எத்தனைக் கோணங்களில் விளக்குகிறது, எச்சரிக்கிறது, அறிவுறுத்துகிறது என்று பார்த்தால், அவை வியத்தகு விந்தையாகவே நிற்கின்றன.
நட்பு (அதிகாரம் 79)

நட்பு ஆராய்தல் (அதிகாரம் 80)
பழைமை (அதிகாரம் 81)
தீ நட்பு (அதிகாரம் 82)
கூடா நட்பு (அதிகாரம் 83)

இதற்கென 5 அதிகாரங்கள், 50 குறள்பாக்கள் அத்தனையும் செறிவுள்ள கருத்து முத்துக்களைக் கோர்த்த முத்துமாலை!
வள்ளுவர் குறள் எழுதினார் என்பது வெறும் பதவுரை, பொழிப்புரை, கூறிடுவதற்கா?

அல்லது பல லட்சம் புத்தகங்களைப் போட்டு பெரும் பணக்கார முதலாளிகளாக ஆவதற்கா?

அல்லது தம் அறிவின் புலமை எத்தனை தனக்கு என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி, அழியும் புகழை, அந்த அழியாப் புகழ் அறிஞனின் குறளைப் பெறவா?

இல்லை நண்பர்களே! இல்லை!!

பின் எதற்காக - அவரே கூறுகிறார் விடையை!

‘கற்க - கசடற
கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக!’

- இப்படி சரியாக ஒழுகினால் வாழ்க்கையில் எதிரிகளால் வஞ்சிக்கப்பட்டதைவிட, நண்பர்களால் ஏமாற்றப் பட்ட ‘கணக்குப் போட்டுப் பழகிய பிறகு ஓடிவிட்ட’ நண்பர்களையும் புரிந்திருப்போமே!

இல்லையா!
-விடுதலை,11.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக