பக்கங்கள்

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

புத்தகத்தால் பெற்ற புதுவாழ்வு - பாரீர்!

தனது 17 ஆவது வயதில் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல்,

25 வயதில் தாயார் காலமானார்,

இவரே,  26 வயதில் கருச்சிதைவுக்கு ஆளா னார்,

27 வயதில் திருமணம் செய்து கொண்டு - அது ஒரு வெற்றிகரமான திருமண வாழ்வாக அமையாமல், ஒருவருக்கொருவர் வசைபாடும் வாடிக்கை நிறைந்த வாழ்க்கையாகவே இருந்தது!

இந்தச் சூழ்நிலையில், ஒரு மகள் - (பெண் குழந்தை) பிறந்தது!

28 ஆவதுவயதில் அதன் பின் மணவிலக்கு (Divorce)   ஏற்பட்டது! - மன அழுத்தம்.

வயது 29 இல் குழந்தையுடன் உள்ள தனி ஒரு தாயாகவே வாழும் அவலம் அந்தப் பெண்ணுக்கு ஏற் பட்டது! - மன அழுத்தம்.

தனது 30 ஆவது வயதில் வேறு சோகத்தில் சிக்கித் தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்தார்!

பிறகு தனக்குள்ள திறமைபற்றி சற்றே எண்ணினார். மற்றவர்களைவிட தனக்கு எழுத்துத் திறமை அதிகம் உண்டு என்று தன்னைப்பற்றி சுய மதிப்பீட்டை அறிந்து - புத்தகம் - புதினம் - எழுதத் தொடங்கினார்!

முதலில் அவரால் பதிப்பகங் களுக்கு அனுப்பப்பட்டுப் புத்தக எழுத்தாகிட அச்சுக்குத் தகுதியில்லை என்று அவர்களால் திருப்பி அனுப் பப்பட்டன - பல பதிப்புகள்.

அசரவில்லை; முயற்சியைத் தளர விடவில்லை. பிறகு அவரது முதல் புத்தகம் 31 ஆவது வயதில் வெளி வந்தது. 35 ஆவது வயதில் 4 புத் தகங்கள் அபார விற்பனையில் உச் சத்தைத் தொட்டன! அவ்வாண்டின் தலைசிறந்த நூலாசிரியர் என்ற சிறப்புத் தகுதி - இவருக்கு அறிவிக் கப்பட்டது!

இவர் எழுதிய நூல்கள் அடுத்து எப்படி உலகம் முழுவதும் பல லட்சக் கணக்கில் விற்பனையாகியது?

42 ஆவது வயதில் 11 மில்லியன் காப்பிகள் விற்றன; அதாவது ஒரு கோடியே பத்து லட்சம் புத்தகங்கள் விற்பனை!

அந்த ஜே.கே.ரவுலிங் (J.K.Rowling) எழுதிய ஹாரிபாட்டர் (Harry Potter) இப்போது 15 மில்லியன் - ஒன்றரை கோடி புத்தகங்கள் விற்பனையின் உச்சத்திற்குச் சென்று சாதனை சரித்திரம் படைத்துள்ளது.

நான் அமெரிக்காவிற்கு சில ஆண்டுகளுக்குமுன் சென்றபோது, புத்தகக் கடை (Barnes & Noble) அது பிரபல புத்தகக் கடை - அங்கே புத்த கங்கள் வாங்கச் சென்றேன். பாஸ்டன் நகருக்குப் பக்கத்து ஊரில் உள்ள கடை அது!

ஏராளமான மக்கள் ‘க்யூ’ வரிசை யில் நின்று புத்தகங்களைப் பெற்றுச் செல்லும் காட்சி கண்டு திகைத்தேன் - வியந்தேன்.

Harry Potter    - அது பெரிதும் பேய்க் கதைகள் - கற்பனை அதன் பல பாகங்கள் தொடர் புதினங்களாக இந்த எழுத்தாளரால் எழுதி வெளி வருமுன்னரே பதிவு செய்து முதலில் வாங்கவும், பதிவு செய்யாது வாங்கு வோர் இரவே சென்று புத்தகக் கடையின்முன் ‘முற்றுகை’ இட்டு நிற்கும் நிலையும் மிகவும் அதிசயத்தக்கதாக இருந்தது!

ஒவ்வொருவரின் திறமையும் புதைந்துள்ளது; வெறும் தோல்விகள் தொடர் சோகங்களால் மனமுடைந்து மூலையில் முடங்கிவிடக் கூடாது.

விழுவதைவிட உடனே எழு வதும், நிற்பதும், ஓடுவதும்தானே முக்கியம்?

அதைத்தான் ‘ஹாரிபாட்டர்’ தொடர் நூல் ஆசிரியை ஜே.கே.ரவுலிங் அம்மையார் வாழ்க்கைச் சாதனை உலகுக்குப் பறைசாற்றி யுள்ளது!

எனவே, தோல்வி, துன்பம், துயரம் உங்களை சல்லடைக் கண்களாகத் துளைத்தாலும் அஞ்சாதீர்; தயங்காதீர்! உங்கள் திறமையை நம்பி புது வாழ்வு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்!

அம்மையாரின் வாழ்க்கையே நமக்கு ஒளி - ஒலி பாடம் அல்லவா?

- கி.வீரமணி

-விடுதலை,24.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக