வாழ்வியல் சிந்தனைகள்-கி.வீரமணி
சென்ற 24.3.2017 அன்று தஞ்சை பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகமும், குப்பத்தில் (ஆந்திர மாநிலம்) உள்ள திராவிடப் பல்கலைக் கழகமும் இணைந்து வல்லத்தில் நடத்திய மொழிப் பெயர்ப் பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.
அப்போது, அங்கு பயிற்சியாளர்களுக்குப் பாடம் எடுத்த, பெரியார் உயராய்வு மய்யத்தின் வருகைப் பேராசிரியராக உள்ள முனைவர் திருமதி மு.வளர்மதி அவர்கள், எனக்கொரு நூலை பரிசளித் தார்கள்!
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரி யராகப் பணியாற்றிய முனைவர் மு.வளர்மதி அவர்கள் எழுதி, அந்நிறுவனம் வெளியிட்ட ஓர் நூல். அற்புதமான - ஆழமான - செறிவான கருத்துக் கருவூலமான அந்நூல் முதற்பதிப்பு 1994 ஆம் ஆண்டு வெளிவந்ததாகும்!
‘‘காண்டேகரும் கா.ஸ்ரீ.ஸ்ரீயும்‘’ என்ற தலைப்பு மிகவும் சிறப்பான வகையில், மொழி பெயர்ப்பு கலை பயிலும் அத்துணை பேருக்கும் பாடம் புகட்டும் இலக்கணம் அமைந்துள்ள, அதேநேரத்தில், சிறந்த உழைப்பினால் உருவானதொரு நூல்!
காண்டேகர் மராத்திய மண்ணுக்குரியவர். தமிழ் நாட்டுக்குத் தத்துப்பிள்ளை - இலக்கிய உலகில்!
அவரை தமிழ் கூறும் நல்லுலக நேயர்களுக்கு அறிமுகப்படுத்தியவர், மொழி பெயர்ப்பு நூலைப் படிக்கிறோம் என்ற உணர்வே கொஞ்சமும் எழாமல், மூலத்திற்கே மெருகு ஊட்டித் தந்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்கள்.
அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார் ஆகியோர் நானறிந்த காண்டேகர் பிரியர்கள் ஆவர். நானும் பள்ளி பருவம், கல்லூரி, பல்கலைக் கழக மாணவப் பருவத்தில் காண்டேகர் வாசித்தேன். பிறகு நேசித்தேன். எனது தோழர் புலவர் கோ.இமயவரம்பனும், நானும் இவரது புதினங்களின் புரட்சிபற்றி படித்துவிட்டு விவாதிப்போம்!
காண்டேகரை கோல்காப்பூர் சென்று பார்க்க வேண்டும் என்று கூட நாங்கள் பேசிக்கொண் டிருப்போம்!
வடநாட்டுச் சுற்றுப்பயணம் (உ.பி.) சென்றபோது, தந்தை பெரியார் அவர்கள், எங்களது வாகன ஓட்டுநரிடம், கோல்காப்பூர் வழி (திரும்பிடும் நிலை யில்) செல்லும்படி - அம்மாவின் விருப்பப்படி - ‘காண்டேகர் பூமி’யைக் காண்பதற்காக கூறினார்கள். நாங்கள் உறங்கிய நிலையில், ஓட்டுநர் கோல்காப்பூர் வழியை விட்டு, ஷோலாப்பூர் வழி சென்றார். அவர் உள்வாங்கிக் கொண்ட விதம் அப்படி!
எங்களுக்கு பொழுது புலர்ந்த நிலையில், மிஞ்சியது ஏமாற்றமே!
அவ்வளவு ஈர்ப்பு காண்டேகரின் கருத்தாளுமை கொண்ட கலங்கரை வெளிச்ச எழுத்துகளுக்கு!
அந்நூலை பல கோணங்களில் ஆய்ந்து எழுதியுள்ள பேராசிரியர் முனைவர் மு.வளர்மதி அவர்கள், அதில் காண்டேகர்பற்றி அறிஞர் அண்ணா அவர்கள், தனது ‘திராவிட நாடு’ ஏட்டில் எழுதிய ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி யுள்ளார்.
‘‘வாழ்க்கைக் கீதத்தை விளக்கி விட்டு, வெறும் இலட்சியவாதியாக இருந்துவிடவில்லை காண் டேகர்; இன்றையச் சமூகத்தின் நிலை அவருக்கு விளங்காமற் போகவில்லை; இன்று சுகம் அனு பவிப்பவர்கள் யார் என்பதையும் அவர் தெரிந்து கொள்ளாமல் இல்லை; நொந்த மனதுடன் - நீங்களும் நானும் - வாழ்க்கையின் ரசத்தைப் பருகும் வீணர்களைப் பற்றி என்ன கூறுவோமோ, அதனைக் காண்டேகர் அழகுபட ‘‘சுகம் என்பது ரசவாதிகளின் ரசக் குளிகையைப் போல் கிடைப்பதற்கு அரிய ஒரு பொருள். அது கேவலம் - கவியின் கற்பனையில்தான் கிடைக்கக்கூடியது. இவ்வுலகில், மனிதத் தன்மைக்கும் - சுகத்துக்கும் சம்பந்தமே இல்லை. இவ்வுலகில்: சுகமாக இருக்க வேண்டுபவன், புலியைப் போல் மற்றவர்களின் இரத்தத்தைக் குடிப்பதையே ஆனந்தமாகக் கருதவேண்டும். நியாயம் - தியாகம் - கடமை - மனிதத்தன்மை - நாணயம் - நம்பிக்கை ஆகிய சொற்களை மறக்க முடியாதவன், இந்த உலகத்தில் சுகம் அனுபவிக்கத் தகுந்தவனல்லன்!’’ என்று கூறுகிறார். ஆகா, எவ்வளவு சரியான சவுக்கடி... பிறர் உழைப்பிலே சுகம் தேடுபவர்களுக்கு! வாழ்க்கை ஏழை மக்களுக்கு, பாட்டாளி குடும் பங்களுக்கு! எப்படி இனிப்பாக இருக்க முடியும்? எனக் காண்டேகரின் கருத்து வீச்சை அனுபவித்துப் பாராட்டுகிறார் அறிஞர் அண்ணா.’’
நாளை காண்டேகரின் கற்பனை படைப்பாற்ற லையும் பார்ப்போம்!
-விடுதலை,14.4.17
காண்டேகரின்
உருவகக்கதை
சமூகநிலை குறித்த பல சிக்கல்களையும், விடுவிக்க வேண்டிய முறைகளையும் விளக்க, உருவகக்கதை என்ற சிறிய இலக்கியவடிவை மராட்டியில் முதன்முதலில் படைத்தவர் காண் டேகர். இதற்குரிய இயல்புகளை, தனித்தன்மையை காண்டேகர் ‘கலிகர்’ (அரும்பு) என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். “சின்னஞ்சிறு கதை என்று சொல்லப்படும் இலக்கிய உருவத் துக்கும், இதற்கும் இயல்பில் வேற்றுமை உண்டு. சின்னஞ்சிறு கதையில் மிகவும் முக்கியமான அம்சம் அதன் ஆச்சரியகரமான முடிவு. அநேகமாக அந்தச் சமத்காரம் வெறும் அறிவுப்பயிற்சியோடு சரி? ஆனால் வெறும் அறிவுப் பயிற்சியினாலோ கற்பனைக் குவியலினாலோ உருவகக்கதையை நிறம்பெறச் செய்ய முடியாது. வேடிக்கைக் கதைகளைப் போலவே சின்னஞ்சிறு கதையும் பொழுதுபோக்குக்கு ஏற்றதாக இருந்துவிட்டால் போதும். உருவகக்கதையிலோ பொழுதுபோக்கு மட்டும் அன்றி சிந்தனையையும், உணர்ச்சியையும் தூண்டும் தன்மை கட்டாயம் இருக்கவேண்டும். இழையும்படியான குறைந்த சொற்களைக் கொண்டு சூழ்நிலையை உண்டாக்கி தேர்ந்தெடுத்த அதிசய மான கற்பனைகளினால் அழகைத் தெளிவுப்படுத்தி, இவற்றோடு கூடவே சிந்தனையையும் உணர்ச்சி யையும் கலந்து உண்மையான வாழ்க்கையையும் வாழ்க்கை மதிப்புக்களையும் வாசகர்களுக்குத் தீவிரமாக உணர்த்தவல்ல இந்த உருவகக்கதை என்னும் இலக்கிய உருவம் காவியத்துக்கு சம மானது” என்று உருவகக் கதையைப் பற்றிய தனது உயர்வான கருத்தை வெளியிட்டுள்ளார்.
காண்டேகரின் உருவகக்கதை உத்தியை விளக் கும் வகையில் சான்றாக ஒரு கதை இங்கு இடம்பெறுகிறது.
ஆகாயமும் பூமியும்
“ஆகாயம் பூமியை எப்போதும் துச்சமாக மதிப்பது வழக்கம். அருணோதயத்தின் செம்மை யைக் காண்பித்து இது காதலின் நிறம். உன்னிடம் இது எங்கே இருக்கப் போகிறது? என்று அது பூமியைக் கேட்கும்.
விதவிதமான வண்ணங்கள் கலந்த சாயங்கால மேகத்தைக் காண்பித்து இதோபார், என் விளை யாட்டுப் பொம்மை, உன்னிடம் இப்படிப்பட்ட பொம்மை இருக்கிறதா? என்று கேட்கும்.
இரவில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைப் பற்றியோ அதற்கு மிகமிக கர்வம். உன் பூக்கள் இன்று மலர்ந்து நாளைக்கு வாடிப்போகின்றனவே! இதோ பார் என் பூக்களை! இவை யுகயுகமாக மலர்ந்தவாறே இருக்கின்றன என்று அது பூமியைப் பரிகாசம் செய்யும்.
பூமி சாது. ஆகாயம் என்பது வெறும் தோற்றம் என்று அதற்குத் தெரியாது. தென்படுவது போலத் தான் ஆகாயம் உண்மையில் இருக்கிறது என்பது அதன் நினைப்பு. தன்னிடமிருந்து நீரைக் கொள் ளையடித்து ஆகாயம் மேகங்களை உண்டாக்கு வதையும், அவற்றைக் கொண்டு விளையாட்டுப் பொம்மைகள் ஆக்குவதையும் இந்தக் கடன் வாங்கிய நீரைத் திருப்பிக் கொடுக்கும் போது அது நன்றிகெட்டு வசைமொழிகளைக் கடகடவென்று முழக்கி, மின்னலாகிய சாட்டையை வீசுவதையும் பூமி நினைத்துகூடப் பார்க்கவில்லை. ஆகாயம் தண்ணீர் கொடுத்துத் தனக்கு உபகாரம் செய்த தாகவே அது நினைத்தது.
சோம்பேறியும். சுகானுபவியும் நன்றி கெட்டது மான ஆகாயத்தைக் கண்டு நட்சத்திரங்களுக் கெல்லாம் கோபம் வந்தது. அவை கோபத்தோடு, ‘‘நிறநிறமான மேக உடைகளையும், அருணனாகிய கள்ளையும் தவிர்த்து இந்த ஆகாயத்துக்கு வேறு ஒன்றுமே தெரிவதில்லை. அந்தப் பூமியும் இருக் கிறது பாருங்கள்! வயிற்றில் நெருப்புப் பற்றிக் கொண்டு எரிந்தால்கூட ஆகாயத்துக்கு வேண்டிய மட்டும் தண்ணீர் கொடுக்கிறது. தன் இருதயத்தில் அடிபட்டால்கூடத் தன் முதுகிலுள்ள பிராணிகளை அன்னையைப்போல அன்போடு பராமரிக்கிறது. நீங்கள் அதனிடம் ஒர் இனிய பேச்சுப் பேசுங்கள். உடனே அது பதிலுக்கு நூறு இனிய சொற்களை உங்களிடம் பேசுகிறது. அப்படிப்பட்ட பூமியை விட்டு இந்த ஆகாயத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதால் பிரயோஜனம் என்ன? வாருங்கள் போவோம். இந்த ஆகாயத்தில் நட்சத்திரங்களாக இருப் பதை விட, பூமியில் போய்க் கற்களாக இருப்பது எவ்வளவு மேலானது” என்றன.
ஒரு நட்சத்திரம் அறுந்தது. ஒரு நட்சத்திரம் விழுந்தது. மற்றொரு நட்சத்திரம் அறுந்தது; மற்றொரு நட்சத்திரம் விழுந்தது.
பரபரவென்று நட்சத்திரங்கள் கீழே விழுந்தன. பொடி சூரணமாகும்போது கூட அவை சிரித்துக் கொண்டே இருந்தன. நட்சத்திரங்கள் யாவும் விழுந்துவிடவே, ஆகாயத்தின் சவுந்தரியம் அழிந்தது. அதற்குப் பைத்தியம் பிடித்தது, அந்தப் பைத்திய வேகத்தில் அதுவும் கீழே குதித்தது.
ஆகாயம் இடிந்து விழுந்தது.
அது இடிந்து விழுந்ததனால் யாருக்கும் ஒரு நஷ்டமும் உண்டாகவில்லை. அதற்கு மாறாக பூமிக்கும் சொர்க்கத்துக்கும் இடையே மறைத்துக் கொண்டு இருந்த திரை இல்லாது ஒழிந்தது!
அந்தப் புரட்சியைச் செய்தது எது?
அந்த முதல் எரிநட்சத்திரம்!”
இச்சின்னஞ்சிறு கதையை முதலாளி, தொழி லாளி அல்லது ஏழை, பணக்காரன் இந்த இரண்டு எதிரெதிர் நிலைகளை விளக்கும் வகையில் ஒரு கருத்தோவியமாக வழங்கியுள்ளார் காண்டேகர். இவ்வாறு புரட்சிக் கருத்துக்களைப் புதுமையான முறையில் கூறும்பொழுது, இரத்தத்தை நீராக்கும் தொழிலாளிகள் இல்லாமற் போனால் உயர் வர்க் கத்தினரின் சுகபோகங்கள் ஏது? என்று படிக்கும் வாசகர்களைச் சிந்திக்க வைத்து விடுகிறார் காண்டேகர்.
இப்படிப்பட்ட முற்போக்கு இலக்கியங்களை இளைய தலைமுறை படிக்கவேண்டும்.
டாக்டர் மு.வ. என்ற மு.வரதராசனார், காண் டேகர் பாணியில் எழுதினார். மு.வ.வைத் தெரியுமா என்பது கேள்விக்குறி!
-விடுதலை,15.4.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக