பக்கங்கள்

செவ்வாய், 28 மார்ச், 2017

மருத்துவர்களின் சரியான எச்சரிக்கை - "நா (சுவை) காக்க!"




நமது உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் - இருதயம், மூளை போன்றே மிகவும் இன்றியமையாதவை. எப்போதும் நலமுடன் இயங்க வேண்டியவை.

நாம் எந்த உறுப்பின் நலத்தையும் குறைத்து மதிப்பிடவோ, சற்று அலட் சியமாகக் கருதி மருத்துவ ஆலோசனை பெறாமலிருப்பதோ விரும்பத்தக்கதல்ல.

விழிப்புணர்வை அத்தனை பேரிட மும் உருவாக்க வேண்டியது, சமூக நல விரும்பிகளின் தவிர்க்க இயலாத கடமையாகும்.

கடந்த சில நாள்களுக்குமுன் அமெரிக்காவின் பிரபல மருத்துவ மனையான 'மவுண்ட் சினாய்' என்பதும், சென்னை 'அப்போலோ மருத்துவமனை'யும் இணைந்து கல்லீரல் பற்றிய விழிப்புணர்வுபற்றி விரிவாக விவாதித்து பல பயனுள்ள அறிவுரைகளை மக்களுக்கு வழங்கி யுள்ளனர்!

கல்லீரல் நோய் சம்பந்தப்பட்ட அந்த இரு மருத்துவமனைகளின் பிரபல மருத்துவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்ததோடு, நோயாளிகளுக்கு தக்க விழிப்புணர்வு  மற்றும் தடுப்பு நடவடிக்கைக்கான கருத்துரைகளையும் சிறப்பாகத் தந்துள்ளனர்.கல்லீரல் (Liver)  - நமது உடலில் மிகவும் சிறியதுதான் என்றாலும் அதனைக் காப்பது மிகவும் தேவையான ஒன்று.

மிக அதிகமான குடிப் பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் வீக்கம் நோய்  (Cirrhosis)தாக்கி, கல்லீரல் சிதைந்து வயிறு பெருக்கம் அதிகம் என்பது "பீர் தொப்பையாளர்" ஆவது சர்வ சாதாரணம்!

அண்மையில் இந்த கல்லீரல் நோய்  - அழற்சி வீக்கம் - பாழ்படுதல் கடந்த 10 ஆண்டுகளில் 40 விழுக்காடு கூடியுள்ளதாம்!

குடிப் பழக்கம் இல்லாதவர்களுக்குக் கூட இந்த கல்லீரல் நோய் (சிரோசிஸ்) ஏன் வருகிறது? புரியவில்லையே! அவர் குடிப் பழக்கம் இல்லாதவராயிற்றே என்று நம்மில் பலர் இந்நோயினால் தாக்குண்டவர்களைப்பற்றி பேசி ஆயாசப்படுவதுண்டு.

வயிறு மற்றும் கல்லீரல் அழற்சி மருத்துவத்தில் சிறந்தவரான நமது பிரபல டாக்டர் கே. பழனிச்சாமி மற்றும் கல்லீரல் அழற்சி (Hepatologist)

மருத்துவரான டாக்டர் என். முருகன்  NAFLD (Non - alchoholic tally liver disease)

பற்றிய அரிய எச்சரிக்கை களைத் தந்துள்ளனர்.

உணவு முறையில் நாம் அனைவரும் விழிப்புடன் இல்லாததே, மதுப் பழக்கம் இல்லாமல் இருப்பவர்களும் கல்லீரல் நோயினால் தாக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளனர்.

2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்தக் கல்லீரல் நோயினால் மரணத்தைத் தழுவும் பரிதாபம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறதாம்!  மது குடிப்பதால் இந்த நிலை என்பது ஒரு தகவல். ஹெபடிட்டிஸ்  B,C மற்றும் தொற்று (Viral infection)

போன்றவை இதற்கு மற்ற முக்கிய காரணிகள் ஆகும்.

இருதயம், சிறுநீரகம் மாற்றுச் சிகிச்சைப் போலவே  கல்லீரல் மாற்று பொருத்திடும் சிகிச்சையும் (Transplantation of Liver

நடைபெறு கின்றது என்றாலும் வருமுன்னர் காப்பது தானே அறிவுடமை?

ஆரோக்கிய உணவைத் தேர்ந்து அதனைச் சாப்பிடுங்கள்; அத்துடன் அவ்வப்போது உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று மருத் துவர்கள் கூறுகின்றனர்.

கொழுப்பு, நிறைய மாவுச் சத்துடன் பல சுவை தரும் உணவுப் பண்டங்களை கண்டபடி நாக்குக்கு அடிமையாகி சாப்பிடுவதால் இப்படி கல்லீரல் பாதிப்புக்கு ஆளாகக்கூடும்; எனவே எச்சரிக்கை தேவை என்று அறிவுறுத்துகின்றனர். புரதக் குறைவான உணவைச் சாப்பிடுவதும் கல்லீரல் நோய்க்கு ஒரு முக்கிய காரணம் - அதிலும் கவனஞ் செலுத்துங்கள்.

சர்க்கரை நோய், பெருத்த எடை இவைகளும் இந்நோயைத் துரிதப் படுத்தும் கருவிகளாகி விடுகின்றனவாம்!

எனவே வெறும் நாக்குக்கு அடிமையாகி அப்போதைய சுவைக்காக, எதிர்கால வாழ்வை இழக்காதீர்கள்!

"நா காக்க" என்று வள்ளுவர் சொன்ன நாவை அடக்குதல் என்பதற்கு விரிவான பொருள் காண்க. சுவைக்கு மட்டும் அடிமை ஆகாதீர்! இதனையும் புதுப் பொருளாகக் கொண்டு வாழுங்கள். நோயற்ற வாழ்வு தானே குறைவற்ற செல்வம் - இல்லையா?
-விடுதலை,27.3.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக