பக்கங்கள்

செவ்வாய், 20 மார்ச், 2018

தஞ்சை சரஸ்வதி மகால் ஏற்பட்டது எப்படி?



நேற்று (18.3.2018) தமிழ்ப் புலிகள் நடத்திய பெண்கள் விடுதலை மாநாட்டில் கலந்து கொண்டு மதுரையி லிருந்து இரவு 11 மணியளவில் புறப்பட்ட 'துராந்தோ வேக ரயிலில்' பயணம் செய்து சென்னைக்குத் திரும்பினேன்.

தொடர் வண்டி 3 மணி நேர கால தாமதத்துடன் தான் வந்தது.

காலையில் சென்னைக்கு வந்து சேர வேண்டிய நேரத்தில், காட்பாடிக்கு முன்னே ரயில் நின்று கொண்டிருந்தது.

நல்வாய்ப்பாக மதுரையில் நேற்று என்னைச் சந்தித்த பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் பொறியாளர் டாக்டர் வா. நேரு அவர்கள் தென்கச்சி கோ. சாமிநாதன் (அகில இந்திய வானொலியில், 'இன்று ஒரு தகவல்' மூலம் பிரபலமான மறைந்தும் மறையாத இனிய நண்பர்) எழுதிய சிந்தனை விருந்து தொகுப்பு நூல் -  அவரது வானொலித் தகவல் தொகுப்பு தந்தார்; படித்து முடித்தேன் ரயில் பயணத்தில்.

பல சுவையான செய்திகளில் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் ஏற்பட்ட கதை பற்றிய தகவல் இதோ!

படித்துச் சுவையுங்கள் - தெரிந்து கொள்ளுங்கள்.

"தஞ்சாவூரை சரபோஜி மன்னர் ஆட்சி பண்ணிக் கிட்டிருந்த காலம்.

அப்போ ஒரு தடவை அந்த மன்னர் காசி யாத்திரை போனார்.

அந்தச் சமயத்துலே கல்கத்தாவுலே இருந்த ஆங்கிலேய ராஜப்பிரதிநிதியையும் அவர் சந்திக்கறதுக் காகப் போயிருந்தார்.

அந்த ராஜப் பிரதிநிதி, தமிழ்நாட்டுலேயிருந்து ஒரு ராஜா தம்மைப் பார்க்கறதுக்காக வர்றார்ன்னதும், தமிழ் நாட்டோட அருமை பெருமையையெல்லாம் விசாரிச்சு வச்சிக்கிட்டார்.

அவரு ஏற்கெனவே திருக்குறளோட ஆங்கில மொழி பெயர்ப்பைப் படிச்சவர். அதோட பெருமையை எல்லாம் புரிஞ்சிக்கிட்டவர். அதனாலே அதோட தமிழ் மூல நூலைப் பத்தி தமிழ்நாட்டுலேயிருந்து வர்ற ராஜாகிட்டே கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்னு நினைச்சிக் கிட்டிருந்தார்.

சரபோஜி ராஜா வந்து சேர்ந்தார். ஆங்கிலேய ராஜப்பிரதிநிதி அவரை அன்போட வரவேற்றார்!

ரெண்டு பேரும் உக்கார்ந்து பேசிக்கிட்டிருந்தாங்க.

அப்போ அந்த இங்கிலீஷ்காரர் தஞ்சாவூர் ராஜாவைப் பார்த்துக் கேட்டார்:

"தமிழ் நாட்டுலே உண்டான திருக்குறளோட ஆங்கில மொழி பெயர்ப்பை நான் படிச்சு அனுபவிச்சி ருக்கேன். மொழிபெயர்ப்பே அப்படி இருந்தா மூலநூல் எந்த அளவுக்கு இருக்கும்ங்கறதை நான் யோசிச்சுப் பார்க்கிறேன். அதை யாராவது சொல்லிக் கேட்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு! அதனாலே திருக் குறள்லே சிலதை எனக்கு நீங்க சொல்லுங்களேன்!"ன்னு கேட்டுக் கிட்டார்.

சரபோஜி மன்னருடைய தாய் மொழி - மராட்டி (மகாராஷ்டிரம்)

அதனாலே தமிழ்லே திருக்குறளை எடுத்துச் சொல்ற நிலைமையிலே அவரு இல்லே!

ராஜப் பிரதிநிதி இப்படி கேட்டுட்டாரே என்ன பண்றதுன்னு முதல்லே கொஞ்சம் யோசிச்சார் - ராஜா! இருந்தாலும் அறிவுக்கூர்மை உள்ளவர் சரபோஜி மன்னர்.

அதனாலே அவரு அந்த ராஜப்பிரதிநிதியைப் பார்த்து, "என்னுடைய புத்தக சாலையிலே இதுமாதிரி ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள் உண்டு. அதனாலே எல்லாத்தையும் நான் தெரிஞ்சு வச்சிருக்கறது முடியாத காரியம். நீங்க அனுமதி கொடுத்தா நான் ஊருக்குப் போனதும் அந்தப் புத்தகத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்!"னார்.

"இதுமாதிரி இன்னும் எவ்வளவு தமிழ் புத்தகம் இருக்கு?" ன்னு கேட்டார் அவர்.

"எவ்வளவோ இருக்குது! ஊருக்குப் போனதும் அதோட பட்டியலையும் அனுப்பி வைக்கிறேன்!"னார் இவர்.

"சரி! அப்படியே செய்யிங்க!" சொல்லிப்புட்டார் அவர்.

ராஜா திரும்பி வந்தார். யோசிச்சிப் பார்த்தார்.

தமிழ்நாட்டுக்கு ராஜாவா இருந்துகிட்டு - தமிழ் மொழியிலே கவனம் செலுத்தாமே இருந்தது எவ்வளவு பெரிய தவறு-ன்னு அவருக்குப் புரிஞ்சுது!

இனிமே அப்படி இருக்கப்புடாது-ன்னு முடிவு பண்ணினார். தமிழ்ச் சுவடிகளையெல்லாம் தேடிக் கண்டு பிடிக்கணும் - தமிழ்ப் புலவர்களையெல்லாம் ஆதரிக்கணும்-ன்னு தீர்மானிச்சுட்டார்.

அதோட விளைவுதான் இன்றைக்கு இருக்கிற தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூல் நிலையம்.

ராஜா, சொன்னது மாதிரியே திருக்குறள் பிரதியையும், தமிழ் நூல் பட்டியலையும் கல்கத்தாவுக்கு அனுப்பி வச்சார்.

சரபோஜி மன்னர் புத்தகங்களை தேடிக் கண்டு பிடிச்சு பாதுகாக்கறதுலே அக்கறையா இருந்தார்.

"நாமெல்லாம் புத்தகங்களை தேடிக் கண்டுபிடிச்சுக் கடையிலே போடறதுலே அக்கறையா இருக்கிறோம்!" என்று கூறினேன் என் நண்பர் ஒருத்தர்கிட்டே!

இதுக்கு அவரு பெர்னாட்ஷாவுக்கு ஏற்பட்ட அனுபவம் ஒண்ணைச் சொன்னார்.

ஒரு தடவை பெர்னாட்ஷா ஒரு பழைய புத்தகக் கடைக்குப் போயி சிலதை எடுத்துப் புரட்டிப் பார்த்துக்கிட்டிருந்தாராம்.

அவரே எழுதின நாடக நூல் ஒண்ணு இருந்தது. அதை எடுத்துப் பிரிச்சுப் பார்த்தார். அது ஒரு நண்பருக்கு பெர்னாட்ஷா ஏற்கெனவே அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகம்.

அந்த ஆளு கடையிலே போட்டுட்டார் போல இருக்கு.

பெர்னாட்ஷா மறுபடியும் அதை விலை கொடுத்து வாங்கினார். அதுலே ஏற்கெனவே 'அன்பளிப்பு'ன்னு எழுதியிருந்ததுலே அதுக்குக் கீழே புதுப்பித்த அன்பளிப்பு என்று எழுதி கையெழுத்து போட்டார். மறுபடியும் அதே நண்பருக்கு அனுப்பி வச்சுட்டார். அதாவது அன்பளிப்பை Renew பண்ணிட்டார் - 'லைசென்ஸ்'லாம் Renew பண்றாங்கள்லே, அது மாதிரி!

இந்தச் சம்பவத்தை என்கிட்டே சொன்ன நண்பர் கிட்டே நான் ஒரு கேள்வி கேட்டேன்.

"ஏன் சார்! நான் எழுதிய புஸ்தகம் ஒண்ணை  'அன்பளிப்பு'ன்னு எழுதி  உங்ககிட்டே கொடுத்தா நீங்க அந்த ஆளு செஞ்சது மாதிரியாச் செய்வீங்க?"ன்னேன்.

"நிச்சயமா அப்படிச் செய்ய மாட்டேன்! வேறே மாதிரி பண்ணுவே!"ன்னார்.

"என்ன பண்ணுவீங்க?ன்னேன்.

"நீங்க எழுதிக் கையெழுத்துப் போட்ட பக்கத்தைக் கிழிச்சுட்டு அதுக்கப்புறமா கடையிலே போடு வேன்!ன்னார்".

- புத்தகம் எத்தகைய தனிமையைப் போக்கும் மகத்தான பயனுறு நண்பன் பார்த்தீர்களா?
- விடுதலை நாளேடு, 19.3.18

ஞாயிறு, 18 மார்ச், 2018

சிங்கப்பூரில் தமிழுக்கு சிறந்த ஆக்கம் இதோ!


சிங்கப்பூரில் தமிழ் மொழி வளர்ச்சி, தமிழர்களுக்கான தமிழ் கற்கும் வாய்ப்பு எல்லாம் எடுத்துக்காட்டானவை ஆகும்.

பெரும்பான்மை, சிறுபான்மை என்பதைப் பற்றி கணக்குப் பார்க்காமல், மொழி என்பது அந்த மக்களின் உணர்வு பூர்வமான பண்பாட்டு தளம் என்பதால் அதனை மதித்து, அங்கே நான்கு மொழிகளான (மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம்) ஆகியவற்றிற்கு சம வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்தந்த மக்களும் தத்தம் தாய் மொழிகளைக் கற்றுக் கொள்கின்றனர். அவர்தம் வழி வழி சந்ததியரான இளையவர்களும் தமிழ் மொழியைக் கற்கவும், பேசவும், எழுதவும், ஏடுகள், செய்தி நிறுவ னங்களும், தொலைக்காட்சி, ஊடகங்களும் மிகச் சிறப் பான வகையில், தமிழைப் பயன்படுத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில்கூட, மொழி ஒலியிலும், கருத்திலும் தமிழுக்கு இத்தனைக் கவலை பொறுப்புணர்ச்சியுடன் அதன் வளர்ச்சிக்கு வித்திடுவார்களா என்பது அய்யமாக உள்ள நிலையில், செம்மொழியான எம் மொழி தமிழுக்கு சிங்கப்பூர் நாட்டின் அரசு தரும் ஆக்கமும், ஊக்கமும் மிகுந்த பாராட்டிற்குரியவை ஆகும்.

நேற்று (28.2.2018) என்னைச் சந்தித்த, தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளர் எம். இலியாஸ் அவர்கள், அண்மையில் சிங்கப்பூரில் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில், தமிழ் மொழி பெயர்ப்புக் குழுவும், அதன் சொல்வளக் குழுவும் இணைந்து உருவாக்கிய கையேடு, அரசு அதிகாரிகள், மொழி பெயர்ப்பாளர்கள், தமிழ் ஊடகங்கள், ஆசிரியர்கள்,  மாணவர்கள் எனப் பலருக்கும் பயன்படும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழ் "சொல்வளக் கையேடு" - - (Glossary of English to Tamil Terms) என்ற நூலை என்னிடம் தந்தார்.

அந்நூல் பற்றிய செய்தி வந்தவுடன், அதனைப் படிக்க வேண்டும் என்ற எனது பேரவா நிறைவேறிற்று. அது கிடைத்து படித்ததில் எனக்குத் தனி மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஆங்கில அகர வரிசைச் சொற்கள், அரசாங்க அமைப்புகள், சார்ந்த சொற்கள், சட்டப் பெயர் தொகுப்பு ஆகிய நான்கு பகுதிகள் இந்தக் கையேட்டில்  அடக்கமாகி உள்ளன.

மிகுந்த பயனுடன் சிறந்த சொல் லாக்கத்தை கொண்டதாக இந்நூல் உள்ளது.

படித்தேன் - சுவைத்தேன்!

ஏடு நடத்துவோர், வகுப்புகளை எடுப்போர், எழுத் தாளர்கள், சொற்பொழிவாளர்கள் எல்லோருக்குமே இந்த அரிய கருத்துக் கருவூலம் பயன்படும் என்பது உறுதி!

இந்தக் கையேட்டில் சுமார் 4000 சொற்கள் இடம் பெற்றுள்ளன.

இதனை   நண்பர் இலியாஸ் எனக்கு அளித்தவுடன் படிக்கத் துவங்கினேன். சொல்லாக்கங்கள் எப்படி எளிமையும், தமிழ் வலிமையும் பதியும் வண்ணமும் இந்நூலில் உள்ளன என்பதைப் பார்க்கையில் சிங்கப்பூர் அரசையும், வளர் தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி பெயர்ப்புத் துறையினரையும் வெகுவாகப் பாராட்ட வேண்டும்.

ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லை இணையத்தில் தேடுவதில் உள்ள இடர்ப்பாடு இதன் மூலம் வெகுவாகக் குறையும். சிறப்பான சொல்லாட்சிகள் புழக்கத்திற்கு வரும் வாய்ப்புகளும், அதன் மூலம் தமிழ் வளர் தமிழாகவே உண்மையில் வளர்ந்து பெருகிப் பெரிய பயன் விளைவிக்கவும் கூடும்.

எடுத்துக்காட்டாக இதோ ஒரு சில மொழிபெயர்ப்பு - சொல்வளங்கள்.

Assassination  - அரசியல்வாதி படுகொலை, பிரமுகர் படுகொலை

Asteroid  - சிறுகோள் (செவ்வாய், வியாழன்ஆகிய கோள்களுக்கிடையே செல்லும் சுற்றுப்பாதையில் உள்ள சிறுகோள்).

Budget airlines- மலிவுக்கட்டணச் சேவை/ சிக்கன விமானச் சேவை

Business cartel  - வர்த்தகக் கூட்டு ஆதிக்கம்/இலாப நோக்கு வர்த்தகக் கூட்டணி

Calamity  - பேரிடர் - பெருந்துயரம்

Pre emptive strike  - முன்னெச்சரிக்கைத் தாக்குதல்/முந்து நிலைத் தாக்குதல்.

Wrestling  - மற்போர்

WWW( World Wide Web) - உலக விரிவலை

Xenophobia - வெளிநாட்டவர்மீதான கடும் வெறுப்பு

இந்த 200 பக்கங்கள் கொண்ட கையேடு போன்று ஒன்று தமிழ்நாட்டிலும் நமது தமிழ் அறிஞர்கள், ஏட்டின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள்கூடி தயாரித்து, உடனடி உதவி பயன்பாட்டுக்குச் செய்ய முன் வர வேண்டும்.

தமிழ் வாழ்க என்று ஆயிரம் முறை முழங்குவதை விட, இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வ சாதனைகள் அளவற்றப் பயன்பாட்டைத் தருவது உறுதி! சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கத்தினர், தமிழ்மொழி பெயர்ப்புத் துறையினர் இணைந்த இப்பணிகள் அனைத்திற்கும், தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பில் நெஞ்சம் வழியும் வாழ்த்துகள் உரித்தாகுக!

இத்தகைய ஆக்கங்கள் வருக! வளர்க! வாழ்க!

-விடுதலை நாளேடு, 1.3.18

செவ்வாய், 6 மார்ச், 2018

சிறுநீரகப் பாதுகாப்பான 6 கட்டளைகள்!



நமது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தக்க முறையில் பாதுகாக்கப் பட வேண்டியதே.  என்றாலும் அடிப் படையானது இருதயம்; (Heart) தான் ஓய்வெடுக்காமல், உறங்காமல் சலிப் பின்றி தனது கடமையைச் செய்யும் முக்கிய உடல் உறுப்பு அது!

அதுபோலவே மூளையும் முக்கியம். அதன் செயலாக்கம்தான் நமது வாழ்வை பொருள் உள்ள (பணமல்ல - அர்த்த முள்ள வாழ்வு) வாழ்வாக ஆக்கிட உதவும். அது செத்துப்போனால் நாம் வாழ்வது பயனற்ற வாழ்க்கை அல்லவா? அதனால் மூளைச் சாவு ஏற்பட்ட வர்களின் உடல் உறுப்புக் கொடைமூலம், பலரையும் வாழ வைக்கும் அருமையான தொண்டறம் நடை பெறுகிறது. வாழு, வாழ விடு என்பதை சற்று மாற்றி, 'வாழு, முடியாவிட்டால் பிறர் வாழ வகை செய்ய நீ உதவிடு' என்பதற்காகவே இந்த உடல் உறுப்புக் கொடை. என்பது பரந்து விரிந்த மனிதநேயம்! இல்லையா?

கல்லீரல், கணையம் என்பதுடன் சிறுநீரகம் (Kidney) என்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்தால் தான் நமது உடல் நலம், கவலைகள் அற்றதாக இருக்க முடியும்.

நமது சிறுநீரகம் (Kidney)) அதுவும் சலிப்பின்றி பணி செய்து நம்மை வாழ வைக்கிறது. இரண்டில் ஒன்று பழுதானால்கூட மற்றொன்று அதன் கடமையைத் தவறாமல் செய்து நமது ஆயுளை வளர்க்க உதவுகிறது.

ஆனால் நம்மில் பலர் அதனை சரிவர கடமையாற்ற விடாமல் நமது தவறான பழக்க வழக்கங்களால் செய்து விடுகிறோம். எப்படிப்பட்ட கவலையும், கவனமும் சிறுநீரகத் நோய்த் தொல்லையிலிருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்ள முடியும் என்பதுபற்றி, நமது மருத்துவ நண்பர் அனுப்பிய ஒரு செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நமக்கு ஒரு தனி மகிழ்ச்சியே!

1. அதிகமாக மது அருந்துவோர் தங்களது சிறுநீரகம் கெடுவதற்கு விதை தூவி, உரம் போட்டு வருகிறார்கள். அது சிறுநீரகத்தை பாதிக்கிறது. குடிகாரர்கள்கூட (ஒரு தடவை) அளவுடன் குடித்தால் அது பெரிய அளவில் பாதிப்பதில்லை! மொடாக் குடியர்கள் என்றால் கல்லீரல் முதல் சிறுநீரகம் வரை நிச்சயம் பாதிக்கவே செய்யும் என்பது ஓர் எச்சரிக்கையாகும்.

2. நமது நாட்டில் வழங்கப்படும் எளிய பழமொழி ஒன்று உண்டு.

'ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம் மூத்திரத்தை அடக்கக் கூடாது' என்பதே சரியான அறி வுரை. அவ்வப்போது மூத்திரப் பையை (Bladder) 
காலி செய்யத் தயங்கக் கூடாது. இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியவர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள்.

சிறுநீர் வெளியேற்றப்படாமல் அடக்கி அடக்கி வைத்தால் அதனால் மூத்திரப் பையில் கற்கள் உருவாகி, பிறகு அது பெரும் வலியைத் தந்து உயிர்க் கொல்லி யாகவும்கூட சிற்சில நேரங்களில் ஆகும் ஆபத்தை உண்டாக்கி விடக் கூடும். எனவே சிறுநீரை அடக்கா தீர்கள்!

வயது முதிர்ந்தவர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  இளைஞர்கள் கூச்சப்பட்டோ, சோம்பல் காரணமாக சிறுநீர் கழிப்பதைத் தள்ளி போட்டால், சிறுநீரகக் கற்களை அவர்களே உற்பத்திக் கான ஆயத்தம் செய்கிறார்கள் என்று பொருள்.

3. தேவைப்படும் அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் ஆகும்.

போதிய தண்ணீர் குடிக்காவிட்டால் அதன் விளைவு நமது உறுப்புகள் செயலற்றுப் போக இந்தத் தண்ணீர் இன்மை (Dehydrate) காரணமாகிவிடும்!

நீரின்றி அமையாது உடம்பு என்று கவனமாக இருந்து அவ்வப்போது நீர் அருந்தினால் தான் நமது உடலின் கழிவுப் பொருள்கள் வெளியேற அது உதவி செய்யக் கடமை ஆற்றிடும், அதற்குப் போதுமான நீர் இல்லா விட்டால், அந்த சிறுநீரகம், - எண்ணெய் போடாத என்ஜின்  துருப்பிடிப்பதைபோல, இதுவும் கெட்டுப் போய் தட்டுத் தடுமாறிடும் நிலை ஏற்பட்டு டாக்சின் (Toxin)  என்ற விஷப் பொருள் உடம்பில் உற்பத்தியாகும். எனவே, போதிய  நீர் குடிப்பது மிகவும் தேவையாகும்.

4. உணவில் அதிக உப்பு ரொம்பவும் தப்பு - புரிந்து செயல்படுங்கள். சிறுநீரக பரிசோதனையில் உப்பு (Sodium) எவ்வளவு என்பதுபற்றியும் கிரியாட்டின் (Creatinine) 
அளவு சோதனை போலவே கவனிப்பார்கள். அதிக உப்பு, சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்ய முக்கிய காரணியாகச் செயல்படும். எனவே உடலில் உப்புச்சத்து குறைந்து விடவும் கூடாது; கூடியும் விடக் கூடாது என்பதில் விழிப்புடன் இருங்கள்.

உப்புச் சத்து அதிகம் உள்ள ஊறுகாய், கருவாடு இவைகளை அதிகம் எடுப்பவர்கள் கவனமாக இருங்கள்.

(ஊறுகாய்ப் பிரியனான நான் அதை குறைத்து வருகிறேன் - பிறகு நிறுத்தியும் விடுவேன்)

5. அளவுக்கு அதிகமாக ஒரு நாளில் பல முறை காப்பி (Coffee) 
) குடித்துக் கொண்டே இருந்தால் அது சிறு நீரகத்தை பாதிப்பது நிச்சயம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே!

எனவே அளவோடு, ஒன்று, இரண்டு முறையோடு காப்பியை நிறுத்திக் கொள்க.

6. தூக்கமின்மை: உணவு, விளையாட்டு, உடற்பயிற்சி இவையெல்லாம் நமது உடல் நலம் பேண எவ்வளவு முக்கியமோ அதுபோல தூக்கம் என்பதும் முக்கியமாகும்! குறிப்பிட்டநேரம் தூங்குவது எழுவது உடல் கடிகாரத் தினை ஒழுங்குபடுத்துவதோடு, நமது உடல்  நலத்தையும் பாதுகாக்கப் பயன்படும்!

தூக்கமின்மை என்பது பல நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது!

அண்மையில் படித்த ஒரு வாக்கியம் - பிடித்த சொற்களும்கூட!

"பகலில் தூங்கினால் அது உடல் சோர்வைக் குறிக்கிறது. இரவில் தூக்கம் வராமல் இருந்தால் அது மனச் சோர்வை - மன உளைச்சலைக் குறிக்கிறது என்று அது எவ்வளவு சரியான உண்மை!

வயது முதிந்தவர்களுக்குக்கூட குறைந்தது 8 மணி நேரம் அல்லது 7 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கிறார்கள் தூக்கம் பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள்.

எனவே, தூங்குவது அவசியம். குறிப்பாக இரவு 12 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை உள்ள நேரத்தில் கண் விழித்திருப்பதை தவிர்த்து தூங்கினால் அது உடல் நலப் பாதுகாப்புக்கு பொதுவாக நல்லது என்பது மருத்துவ ஆய்வியல் கூற்றாகும்.

எனவே இந்த ஆறு கட்டளைகளை தவறாது ஏற்று வாழக் கற்றுக் கொண்டு, சிறுநீரகம் சீராக இயங்க உதவி, நோயற்ற வாழ்வைப் பெறுவோமாக.

- விடுதலை நாளேடு, 6.3.18

வியாழன், 1 மார்ச், 2018

முதுமையும் - முதிர்ச்சியும்: ஒரு விளக்கம் (2)

24.2.2018 அன்று வெளிவந்த ‘‘வாழ்வியல் சிந்தனையின்  தொடர்ச்சி வருமாறு:




4. எதை விட வேண்டுமோ அதைவிடுவதற்குப் பழகிக் கொள்ளுங்கள். பல பழக்க வழக்கங்கள் நம்மை அடிமையாக்கி வைத்திருப்பதை, உறுதியுடன் விரட்டி விடுதலை பெறுங்கள். விளைவு முதிர்ச்சி தானே வந்து உங்கள் முன் நிற்கும்!

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுங் கள்.

நாம் வாழ்வில் எப்போது ஏமாற்றத்திற்கு ஆளா கிறோம் தெரியுமா? அதிகமான பேராசை, எதிர் பார்ப்புகள்! இயல்புக்கு முரணான பகற்கனவுகளில் உந்தப்பட்டு, கணக்குப் போட்டு பிறரிடம் பழகி, அவரே உங்களைப் புரிந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டு விலகும் நிலையெல்லாம் ஏற்படும் முன்னரே, எதிர்பார்ப்புகளை ஏராளம் பெருக்கிக் கொண்டு ஏமாற்றத்திற்கு ஆளாகாமல், உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள். நம் முதிர்ச்சிக்கு இதுதான் சரியான அடையாளமாகும்!

6. செய்வதை மன அமைதியுடன் செய்யுங்கள். பதற்றமின்றி, பரபரப்புக்கு இடம் தராமல் அமைதியுடன் செயல்படப் பழகுங்கள்!

ஒரு தீ விபத்தோ அல்லது மற்ற விபத்தோ ஏற்படும்போது ‘ஆம்புலன்சை' அழைப்பது, மருத்துவமனையில் சேர்ப்பது, குறிக்கவேண்டியன வற்றை குறித்துத் தகவல் கொடுப்பது போன்ற வையை மன அமைதி குலையாமல் செய்தால் முழுப் பயனை அடைய, அறுவடை செய்ய முடியுமே!

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுங்கள்.

இது தன்முனைப்பின் புது உருவாக்கம். ‘நானே அறிவாளி' என்ற கர்வத்தின் வாந்தியாகும்! இந்த வாந்தியை எடுப்பதை விட்டு விடுங்கள். வள்ளுவர் சொன்னார் ‘‘அரிதொரும் அறியாமை'' என்று! அறிந்ததை மறைத்து, அப்பாவி போல அவர் அளத்தலைக் கேட்டுப் பழகுங்கள் - ஏன் பொறுத்துப் பழகி அலட்சியம் காட்டுங்கள் - உங்களை முதன்மைப்படுத்தும் வியாதியை விட்டொழியுங்கள்!

8. நம் செயல்களை மற்றவர்கள் ஏற்கவேண்டும் - ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் என்ற திணிப்பு மனப்பான்மையை நம் மனதிலிருந்து விரட்டி யடியுங்கள். அவர் அதைக் கொள்ளவோ, தள்ளவோ முழு உரிமை பெற்றவர் என்று எண்ணுங்கள். உங்களிடம் அவர் என்ன அடிமை முறிச்சீட்டா எழுதிக் கொடுத்துள்ளார்? உங்களுக்கு அப்படி என்னென்ன உரிமை உள்ளது என்று சிந்தித்துப் பாருங்கள்; பிறகு, தானே உங்களின் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள முயலுவீர்கள்.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் காட்டிப் பேசுவது முதிர்ச்சியாகாது! அடக்கத்தோடு நம்மை நாம் பெரிதாக நினைக்காமல், எளிமை, இனிமை என்ற போர்வையை மனதுக்குப் போர்த்தி விடுங்கள்!

10. எதற்குமே கலங்காது, மனதை அமைதியாக வைத்துக்கொள்ளப் பழகுங்கள். ஒரே நாளில் அது வந்துவிடாது. மனப் பயிற்சி, ‘திடசித்தம்'மூலம் உறுதியாக வரும் அது!

எதற்கெடுத்தாலும் கவலை, கவலை, கவலை என்று மனதை நோயாளியாக்கி விடாதீர்கள். பிரச்சினைகளை வரவேற்று தீர்வுகளைக் காண நம்மால் முடியும் என்ற துணிவுடனும், தெளிவுடனும் வாழப் பழகுங்கள்!

11. நமது அடிப்படை தேவை (கீணீஸீts) என்ப தையும், நாம் விரும்புவன (கீவீsலீமீs) ஆசைகளையும், இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

அடிப்படைத் தேவை உணவு, உடை, கல்வி போன்றவை - அதை அடையலாம்.

தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் பொருள் கள் எல்லாம் தேவையா? ஏன் கடன் வாங்கித் தவணையில் வட்டிக் கட்டவேண்டும்? நாட்டில் வணிகமும், விளம்பரமும் நாளும் பெருகிக் கொண்டேதான் இருக்கும். அதையெல்லாம் உடனே வாங்கிவிடவேண்டும் என்று நினைக்கக் கூடாது.

அட்சய திரிதியில் பவுன் வாங்கினால், பெருகும் என்று நம்பி, கடன் வாங்கி, தேவையின்றி பவுன் வாங்கலாமா? உதாரணத்திற்கு இதைக் கூறுகிறோம். இப்படி வடிகட்ட வேண்டிய வாடிக்கை வழமைகள் பல உள்ளனவே!

மகிழ்ச்சி என்பது பொருள் - பணம், செல்வக் குவிப்பு, ஆடம்பரம்  இவைகளால் ஏற்படுவது  அல்ல; அவைகளை செய்ய குறுக்கு வழிகள், தவறான முறைகளில் ஈடுபட்டு வாழ்நாள் முழுவதும் வருந்தும் நிலை - இன்று வாடிடும் பலரைக் கண்டு நாம் பாடம் பெறவேண்டாமா?

நம் தேவைக்கேற்ப எளிமை, அடக்கம், சிக்கனம், துணிவு, தெளிவு எல்லாம் நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியுமே!

அவைகளின் மீதுதான் நாம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்.

பசித்தவுடன் சாப்பிடுவதே நலம்!

பசியில்லாமல் பகட்டுக்காகவும் அல்லது ஆசைக்காகவும் சாப்பிட்டு, செரிமானக் கோளாறால் நாம் அவதியுறலாமா?

‘எதுவும் நம் கைகளில்தான்' என்பதை மறவாதீர்!

‘எதுவும் நம் முடிவில்தான்' என்று உறுதியுடன் முதிர்ச்சி வழியும் வாழ்க்கையை அமைத்துக் கொள் ளுங்கள்!

வாழ்வில் வெற்றி பெறுங்கள்!!
- விடுதலை நாளேடு, 26.2.18

சனி, 24 பிப்ரவரி, 2018

முதுமையும் - முதிர்ச்சியும்: ஒரு விளக்கம் (1)



முதுமை என்பது நம்மால் தவிர்க்க முடியாதது. எதைத் தவிர்க்க முடியாதோ, அதை ஏற்கப் பழகவேண்டும் - இன்முகத்துடன்!

உலகின் அழகுப் போட்டியில் முதற்பரிசு பெற்று உலகம் முழுவதும் விளம்பர வெளிச்சம் - ஏராளமான பண வரவு, அடுத்து பணக்கார வாழ்க்கைத் துணையேற்றல் எல்லாம் கிடைக்கும்; கிடைத்திருக்கிறது. ஆனால், அந்தப் பெண்ணும், அதைப் பெரிதும் மதித்துப் போற்றிப் பெருமிதத்தால் விம்மிய ஆணும்கூட, வயது ஏற ஏற முதுமையைத் தானே ஏற்கவேண்டும்.

முதுமையை தள்ளிப் போ(ட)க எவ்வளவு ‘லஞ்சம்' கொடுத்தாலும், கொடுக்கப் பேரம் பேசினா லும்கூட, அது போகுமா? போடவும் முடியாதே!

எனவே, காலம் நமக்கு அளித்துள்ள பரிணாம வளர்ச்சியில் முதுமையும், மரணமும் (இன்று வரையில் - நாளை அறிவியல் இதை மாற்றும் வாய்ப்பு இருக்கலாம்) தவிர்க்க இயலாதவை அல்லவா! எனவே, கவலைப்படாமல் ஏற்று, அந்த முதுமையைப் பயன் உள்ளதாக்க, அதையே மகிழ்ச்சியுடன் அனுபவிக்க, மனித குலத்தவராகிய நாம் ஆயத்தமாகிடுவதே அறிவுடைமை - இல்லையா?

முதுமை நாம் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அது இயற்கை நம்மீது திணிக்கும் கட்டாயக் காதல்தானே! வேறு வழி இல்லையே!

ஆனால், முதிர்ச்சி என்பது அப்படி அல்ல. அது முதுமையடைந்தாலே தானே கதவைத் திறந்துகொண்டு வருவதல்ல. முதிர்ச்சி என்பது, நமது பண்புகள், பழக்கங்கள்மூலம் செதுக்கிப் பொலிவும், வலிவும் பெறவேண்டிய ஒரு அருங் குணம்! முதிர்ச்சி உடையோர் என்றும் இகழ்ச்சிக்கு ஆளாகார்!

அம்முதிர்ச்சி என்பது எப்படி வரும் - எது முதிர்ச்சியின் அடையாளம் என்று கேட்கிறீர்களா?

கீழ்வரும் 11 குணங்களை குறளில் உள்ள குறட் பாக்களைப் போல் படித்து, செரித்து, நடைமுறைப் படுத்துங்கள். மகிழ்ச்சியின் உச்சத்திற்கே உலகம் உங்களைக் கொண்டு சென்று நிறுத்தும்.

1. மற்றவர்களைத் திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே முதலில் திருத்திக் கொள்வது. மற்றவருக்கு அறிவுரை வழங்காதீர்; உங்களுக்கு நீங்களே அறிவுரை, அறவுரை வழங்கி, நடைமுறை யில் செயலுருவில் மாற்றத்திற்கு ஆளாகுங்கள்.

2. எவரிடமும் முழுமையான குணாதிசியங்களை (பூரணத்துவம் - Perfection அய்) எதிர்பார்க்காதீர்கள். குறைகளுடன் அவர்களை ஏற்றுக்கொள்வது அவசியம். ஊனமுற்ற நம் குழந்தைகளை நாம் நேசிக்கவில்லையா? கொன்றா போட்டு விடுகி றோம்? இல்லையே! இன்னுங்கேட்டால் அவர் களிடம்தானே அதிகப் பரிவும், பாசமும் காட்டு கிறோம்.

3. மற்றவர்களின் கருத்துகளை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ள முயலுங்கள். நீங்கள் உங்கள் கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வைக்கும், அவர்களது பார்வைக்கும், நடத் தைக்கும் மிகப்பெரிய வேறுபாடுகளும், காரண காரியங்களும் இருக்கும்; அந்த மறுபக்கத்தை ஆழமாக அலசி - மனிதநேயத்துடன் இதைப் பார்த்தால், நமது நோக்கும் - போக்கும் அவர்பற்றிய (அவசர) முடிவும் தவறு என்று தெரியும்.

ஜப்பானில் ஒரு ஏழைப் பெண் குழந்தை தவ றாமல் வகுப்புக்கு வந்தவர்; திடீரென காலதாமதமாக சில நாள் தொடர்ந்து வந்தார்; பிறகு விடுமுறை போட்டு, பள்ளிக்கு விட்டு விட்டு வந்து அபராதம் - தண்டனை பெற்றார்.

பிறகு ஒரு நாள் திடீரென பள்ளிக்கு வழமை போல் முன்கூட்டியே நேரத்திற்கு வந்தார். ஆசிரி யர்கள் மீண்டும் இவரைச் சேர்த்துக் கொள்ள மறுத்தனர்.

அப்போது அவர் சொன்னார்,

‘‘எனது ஊனமுற்ற தாயும், பாட்டியும் இருந்து என்னை பள்ளிக்கு அனுப்பினர். பிறகு தாய் நோயினால் இறந்துவிட்டார். பாட்டியைக் கவனிக்க மருந்து, உணவு தர எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு வருவதற்குத் தாமதமாகியது. பிறகு பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரை மருத்துவமனையில் சேர்த்து, நானும் உடனிருந்தேன். பாட்டி இறந்ததால், ஈமச்சடங்குகள் நேற்றுதான் முடிந்தன. இப்போது பள்ளிக்கு வந்துள்ளேன். நான் கவனிக்க, உதவிட யாரும் இனி எனக்கு இல்லை. எனவே, காலந்தவறமாட்டேன்'' என்று கண்ணீர் மல்க சொன்னார் அந்த மாணவி. ஆசிரியர்கள் அழுதார்கள்; பள்ளியில் அவரைச் சேர்த்துப் படிக்க வைத்தார்கள்.

இதுபோல நாம் நமது கோணத்தில் மட்டுமே பார்த்தால் உண்மை புரியாது. அவர்கள் நிலையில் இருந்து பாருங்கள். ‘‘ஒத்தறிவு'' (Empathy) என்பது மிகவும் தேவை. அது வந்தால் முதிர்ச்சி வந்துவிட்டது என்று பொருள்.

(தொடரும்)
- விடுதலை நாளேடு, 24.2.18