புரட்சிக் கவிஞரிடம் மற்றவர் வியக்கும் ஒரு தனிப் பண்பு - எளிதில் எவரது அய்யத்தையும் தீர்க்கும், விளக்கம் தரும் வியத்தகு கொள்கை விளக்க முறை!
'கேட்டலும் கிளத்தலும்' என்ற 'கேள்வி பதில்' என்று ஏடுகளில் வருவதைப்போல அவர் நடத்திய "குயில்" வார ஏட்டில் வாராவாரம் கேள்விகளுக்கு அருமையான விடையளித்து கொள்கை பரப்பியதோடு, செம்மொழி தமிழில் இதற்கு முன் இருந்த புதையல் போன்ற புதுமையும் புத்தாக்கமும் நிறைந்த கருத்தியல்களை எளிமை யாக எவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கவும் தவறவில்லை.
அவர் எத்தனை ஆண்டுகள் புதுவையில் அந்த பிரெஞ்சு அரசாங்கத்தில் இலக்கணம் - இலக்கியப் புலியாகத் திகழ்ந்து நல்லாசிரியராக உயர்ந்து தனது அறிவு வளத்தை ஒப்பற்ற கடல் போல் பெருக்கியதோடு அதனைப் பலருக்கும் கற்பித்தும் மகிழ்ந்தார்!
புதுவையில் மாநில திராவிடர் கழகத் தலைவராக, கண்ணாடிக் கடை உரிமையாளர் தோழர் ப.கனகலிங்கம் அவர்கள் இருந்தார்; குடும்பம் முழுவதையும் சுயமரியாதைக் குடும்ப மாக வைத்திருந்த கொள்கையாளர் - பெரு வணிகரும்கூட! கடலூர் எஸ்.எஸ். சுப்பராயன் - ராஜேஸ்வரி ஆகியோருக்கு நெருக்கமான உறவு என்பதைவிட நெருக்கமான கொள்கை உறவும் கொண்டவர்! பல நிகழ்ச்சிகளில் இரு குடும்பத்தினரும் இணைந்தே வந்து அய்யாவை, அம்மாவை அவர்கள் வந்து சந்திப்பர். கனகலிங்கம் அவர்களது தந்தையார் - பட்டை போட்டிருக்கும் பசவலிங்கனார் என்ற பெரியவர் அய்யாவை அவர்கள் இல்லத்தில் கண்டுபேசி அய்யாவின் பகுத்தறிவு உரை கேட்டு முதுமையில் பட்டையை கழித்து - கொள்கை மாறி கருஞ்சட்டைக்காரரானார்!
புதுவை செஞ்சாலைத் திடல் அன்று ஒரு பகுதியில் உண்டு. அதன் பக்கத்தில்தான் கழகத் தலைவர் கனகலிங்கம் அவர்களது வீடு - அங்கே தங்கியிருந்தபோது, செஞ்சாலைத் திடலில் ஒரு பொதுக் கூட்டம். அதில் தந்தை பெரியாரும், புரட்சிக் கவிஞரும் என்னையும் அழைத்திருந்தனர். கலந்துகொள்ளச் சென்றேன்.
புரட்சிக் கவிஞரும், தந்தை பெரியாரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்துள்ள படம் (தந்தை பெரியார் தலையில் -பனி காரணமாக ஒரு 'ஸ்கார்ப்!" மூலம் தலையில் கழுத்தைச் சுற்றிப் போட்டிருக்கும் படம் அந்த மேடையில்தான் எடுக்கப்பட்ட படம்!
மேடையில் - 'இராமாயணப் புரட்டு' என்பது தான் கூட்டத்தில் பேசப்படும் தலைப்பு -
நான், பண்டித ஜவகர்லால் நேரு சிறையில் இருந்தபோது தனது மகள் இந்திரா (10,12 வயது குழந்தை)வுக்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு ஆங்கில நூலைக் கையில் வைத்து, "இராமாயணம் உண்மையில் நடந்தது அல்ல; அக்கால ஆரிய - திராவிடப் போராட்டத்தை மய்யப்படுத்தி எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை. திராவிடர்கள் என்பவர்கள் இன்று சென்னையிலும், அதன் பகுதி முழுவதிலும் வாழுபவர்களேயாவர்" என்று நேரு எழுதியதைப் பேசியவுடன் (ஆதாரம் காட்டி) பிறகு புரட்சிக் கவிஞர், "சாங்கியம் என்ற தத்துவ நூல்' - 'எண்ணூல்' என்று தமிழில் கூறுவர். அதுபோல சிவஞானபோதம், சுபக்கம், பரபக்கம் என்று இரண்டு தத்துவங்கள் மதங்களையொட்டி நிறைய பாடல்கள் இருக்கின்றன. எடுத்துக்காட் டாக, 'மாயமான்' தன்னை உண்மை மான் என்று நினைத்து போனவன் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று அக்காலத்திலேயே செய்யுள் மூலம் அப்பகுதிகளில் உள்ள பாட்டுக்களை மேடையில் பாடிக்காட்டினார். சிவஞான போதம் என்று கூறினார் என்று நினைவு. கவிஞர் பேசி முடித்தவுடன் அக்கவிதை பற்றி அப்போதுதான் முதன் முறையாக அறிந்ததால் கேட்டேன். அந்த "இந்திரா காந்திக்கு கடிதங்கள்" நூலின் மேல் சாணிக் கலரில் நான் அட்டை போட்டு வைத் திருந்த அந்தப் புத்தகத்தினை வாங்கி அதிலேயே அப்பாட்டினை தனது முத்து முத்தான, அழகான கையெழுத்தில் பொறுமையாக எழுதி எனக்கு மேடையிலே தந்தார் அந்த பெருங்கவிஞர் ஏறு!
பல காலம் பாதுகாத்து வைத்தேன். பிறகு எப்படியோ காணாமற் போனது!
என்னே அறிவுப் பரப்புதலில் ஆர்வம்! இளைய தலைமுறைக்குப் போதிக்கும் 'வாத் தியாராக' எப்படி கவிஞர் இறுதி வரையில் இருந்தார் பார்த்தீர்களா?
அதனால்தான் "பாரதிதாசன் பரம்பரை" என்று ஒன்று இத்தலைப்பில் உருவாகி அவர்கள் அடையாத புகழ் நாளில்லை என்றாக அமைந்து உயர்ந்துள்ளனர் போலும்!
பிரபலமான கவிஞர்கள் உவமைக் கவிஞர் சுரதா, முடியரசன், தமிழ்ஒளி, பட்டுக்கோட்டையார் போன்ற கவிஞர்கள் - பெரும் புலவர் நா. இராமநாதன், ஈரோடு தமிழன்பன் போன்ற ஆய்வறிஞர்களுக்கும் பஞ்சமில்லை. அந்த 'ஊருணி' இன்றும் என்றும் பயன்படுவதும், அறிவுத் தாகம் தீர்க்கும் என்பதிலும் எவ்வித மறுப்பும் கிடையாதே!