பக்கங்கள்

செவ்வாய், 24 நவம்பர், 2020

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் - எப்படி இதோ!

 

May 29, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

எங்கள் அப்பா, அம்மா மறைவு-நினைவுகள், நன்றிகள்!

எங்கள் அப்பா கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் மறைந்தார்கள். எங்கள் அம்மா  2020ஆம் ஆண்டு, மே மாதம் 27இல் மறைந்தார்கள்.

எங்கள் அப்பா, திராவிட மாணவர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட காலத்தில் இருந்து, முரட்டு சுயமரியாதைக்காரராக வாழ்ந்தவர்.

அம்மா அவர்கள், அப்பாவை திருமணம் புரிந்து கொண்டதால், தானும் அப்பாவிற்கு ஏற்ற மாதிரி தன்னு டைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டார்கள்.

அப்பாவின் நட்பு வட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்வார்.  அப்பா அவர்கள், பெரியார் அய்யா அவர் களை அறிந்ததனால்,  அம்மா மற்றும் நாங்கள் நால் வரும் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு பெற்றவர்கள். அதே போன்று பல்கலைக்கழக துணை வேந்தர் சிட்டிபாபு அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற வர்கள் நாங்கள்.

எங்கள் அக்கா மீனாம்பாள் மருத்துவ கல்லூரியில் சேருவதற்கு தந்தை பெரியார் அவர்களும், ஆசிரியர்    அய்யா அவர்களும்தான் முக்கிய காரணம்.

எங்கள் அம்மா ஏறத்தாழ 60 ஆண்டுகள் உடல் உபாதையால் அவதிப்பட்டவர். இருப்பினும் தன்னு டைய மனதிடத்தினால் அதை வெற்றி கொண்டவர்.

அம்மா அவர்கள் 86 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தார்கள் என்றால் மூவர் முக்கியமானவர்கள்.

1958-59 ஆண்டுகளில், எங்கள் தாத்தா (எங்கள் அப்பாவின் அப்பா), 1968-69 ஆண்டுகளில் எங்கள் அப்பா, 1979-80 ஆண்டுகளில் இருந்து எங்கள் அம்மா இன்றுவரை உயிர் வாழ்ந்தார்கள் என்றால் எங்கள் அக்கா மருத்துவர் பாலி (மீனாம்பாள்) மற்றும் எங்கள் அத்தான் திரு. சந்திரகுமார் அவர்களையே சாரும். அவர்கள் இருவருக்கும் நன்றிகள் பல.

எங்கள் அப்பா அனைவரிடத்திலும் மிகவும் கண்டிப்பானவர்,

என்னிடத்தில் மட்டும் செல்லம்.

எங்கள் அம்மா அப்படி இல்லை, அனைவரிடத் திலும் கண்டிப்பு.

எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பத்தை சார்ந்தது. நாங்கள் நால்வரும் படித்து, வாழ்க்கையில் ஒரு நிலையை அடைவதற்கு அவர்கள் இருவரின் தியாக மும் பெரிது.

நான் பள்ளிப்படிப்பில், வகுப்பில் பின் தங்கிய மாணவனாக இருந்த பொழுதிலும் என் மீது நம்பிக்கை வைத்து ஆடிட்டர் படிப்பு படிக்க ஊக்கம் அளித்தவர் எங்கள் அம்மா. ஆடிட்டர் படிப்புக்கு, பி.பி.நாயுடு அலுவலகத்தில், சேர்த்து விட்டது ஆசிரியர் அய்யா அவர்கள். ஆசிரியர் அய்யா அவர்களை நன்றி உணர்வோடு எண்ணிப் பார்க்கிறேன். அம்மா அவர் கள் என் மீது வைத்த நம்பிக்கை பொய்க்கவில்லை.

எங்களது அப்பா, தன்னுடைய கல்விப்பணித் துறையில் மிகவும் மன உறுதியுடன் இருந்து பணியாற்றியவர். ஆனால், உடல்நலத்தில் ஏதாவது சிறிய உபாதையானாலும் பயந்து விடுவார். அப்பா அவர்களையும் 93 ஆண்டுகள் வரை வாழ வைத்தவர் எங்கள் அக்கா, அத்தான் அவர்கள் இருவரும்தான்.

நாங்கள் நால்வரும் ஒவ்வொரு துறையில் இயங்கு வதற்கு எங்களுக்கு கல்வியை தந்த எங்கள் அம்மா, அப்பா இருவருக்கும் நன்றி. அவர்கள் இருவரும் நீண்ட காலம் வாழ வழி வகுத்த எங்கள் அக்காவின் மருத்துவ பணிக்கு நன்றி.

மேலே எழுதியிருப்பது ஆடிட்டர் இராமச்சந் திரன் அவரது குடும்பத்தைப்பற்றிய - உழைப்பால் - பண்பால் - நேர்மையால் - விருந்தோம்பலால் எல்லாவற்றிற்கும் மேலான கொள்கை லட்சிய ஈடுபாட்டால் உயர்ந்த  - நாட்டில் உள்ள தந்தை பெரியாரின் பெருங்குடும்பங்களில் ஒன்று (ஆடிட் டர்) கல்வியாளர் அரங்கசாமி - ராஜம் குடும்பத் தினர் என்பதற்கான பல செய்திகள் - அவை குருதிக் குடும்ப (ரத்த உறவுகள்) உணர்வுகள்.

நாம் அடிக்கடி கூறுவதுபோல, ‘‘ரத்தம் தண்ணீரைவிட கெட்டியானது என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி; ஆனால், அதைவிட மிகவும் கெட்டியானது நமது (பெரியார்) கொள்கை உறவு!''

அவ்வகையில் குருதி உறவைவிட கெட்டியான எங்கள் குடும்பத்து உறவாடலை இங்கே பதிவு செய்வது பலருக்கும் பயன்படும்.

‘‘நன்றி என்பது பயனடைந்தவர் காட்டவேண் டிய பண்பே தவிர (குணநலன்) - உதவி செய்த வர்கள் எதிர்பார்த்தால், அது சிறுமைக் குணமே யாகும்'' என்று 1935 ‘குடிஅரசு' ஏட்டில் எழுதினார் தந்தை பெரியார். அதன்படியே தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டி, நன்றியை எதிர்பாராத தொண்டறத்து மாமழையானார் தந்தை பெரியார்!

இராஜம் - அரங்கசாமி குடும்பம் என்ற பெரியாரின் சுயமரியாதைக் குடும்பம் - தனது  உன்னத உண்மை உழைப்பினால் உயர்ந்த எடுத்துக்காட்டான ஒரு சிறந்த நடுத்தர குடும்பம்.

‘‘எங்கள் உடன்பிறவா சகோதரி'' என்று நான் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டது அது வெறும் ஒரு ‘சம்பிரதாயச் சொல்' அல்ல; ஒப்பனை இல்லா உண்மையாகும்!

டாக்டர் மீனாம்பாள் - சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தபோது, பேராசிரியர்கள் வட்டாரத்தில் அவரை - ‘ஆசிரியரின் சகோதரி மகள்' என்றே கூறி, அழைப்பர்;  அவர்மூலம் அறி முகமும் என்னிடம் சிலர் ஆகியும் இருக்கிறார்கள்.

திராவிட மாணவர் கழகத்தவராக திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ‘கணக்குப் புலியாக' படித்துப் பாய்ந்து, தமிழகக் கல்வித் துறையுனுள்  அதிகாரியாகப் புகுந்தவர் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கோ.அரங்கசாமி!

கல்வி இயக்குநர்கள் நெ.து.சு. முதல் எஸ்.வி. சிட்டிபாபு, கோபாலன், வெங்கட சுப்பிரமணியன் வரை அத்துணை பேராலும் மிகவும் மதிக்கப் பட்டவர் - அவர் கொள்கையை அங்கும் மறைக்க விரும்பாதவர். தந்தை பெரியார் - அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் பேரன்பைப் பெற்ற குடும்பம் இது. நம் இயக்கத்தில் அன்பு என்பதும், பாசம் என்பதும், இரு வழிப்பாதைதான், எப் போதும்!

நம்மைப் பொருத்தவரையில், நமது சகோதரி யார் இராஜம் அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு ஒரு வேதனையான சோதனை ஏற்பட்ட நிலை யில்,  என் வாழ்விணையர் திருமதி. மோகனா  அவர்கள் ஒரு விபத்தினால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரு மாதத்திற்குமேல் தங்கி இருந்தாகவேண்டிய சூழ்நிலை!

வீட்டில் (அடையாறு) எங்கள் பிள்ளைகள் அசோக், அன்பு, அருள் போன்றவர்கள் (இது 48 ஆண்டுகளுக்கு முன்பு) சிறு பிள்ளைகள். பள்ளி சென்று திரும்பும் குழந்தைப் பருவத்தினர். நானோ அன்றாடம் ‘விடுதலை' அலுவலகத்திற்குச் சென்று பணியாற்றி வருபவன்.

திரு.அரங்கசாமி - இராஜம் குடும்பத்திலும் ஒரு பெண் பிள்ளை, மூன்று ஆண் பிள்ளைகள்.

எங்கள் குடும்ப  சூழ்நிலையை உணர்ந்து, அவ்விருவருமே தங்களது வீட்டினைப் பூட்டி வைத்துவிட்டு, ஒரு மாதம் எங்களுடனேயே தங்கி, குடும்பத்தினர் அனைவருக்கும் உணவு சமைத்து, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப, ஏழு பிள்ளைகளையும் ஒவ்வொரு நாளும் கவனித்து, உணவளிப்பு, பள்ளிக்கு அனுப்பும் பணிச் சுமை உண்டு.

இப்படி ஓய்வற்ற குடும்பப் பணிகளை சிறிதும் சலிப்பின்றி, முகம் கோணாது - எப்போதும் சிரித்து, புன்முறுவலோடு  சகோதரி மானமிகு இராஜம் அவர்கள் ஆற்றிய கடமையையும், வடித்துக் கொட்டிய வற்றாத அன்பினையும் எழுதிட வார்த் தைகளே இல்லை - மையால் நிரப்பி இதை எழுத வில்லை நாங்கள் - நன்றிக் கண்ணீரால் துவைத்து எழுதி, அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்.

நன்றி என்பது போதுமான சொல் அல்ல.

பிள்ளைகள் அத்துணை பேரும் வேறுபாடின்றி  ஒரே குடும்பத்து உறவுகளாகவே இன்றும் பழ கிடும் அன்பும், பண்பும், கொள்கை உறவு, ரத்த உறவினைவிட கெட்டியானது என்பதை உலகுக் குக் காட்டுகின்றனர் அல்லவா!

எல்லாவற்றிற்கும் மேலாக, அக்குடும்பத்திற்குக் கிடைத்த மூத்த மருமகன் சந்திரகுமார் (பிரபல பேஸ்கட் பால் விளையாட்டு வீரர்) பண்பும், பாசமும், கடமை உணர்வும் அவ்விருவர்களையும்  கடைசிவரை மகிழ்ச்சியுடன் வாழ வைத்தது மிகப் பெரிய அரிய வாய்ப்பு அல்லவா!

அவர்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை, எங்களை கலக்காது எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கமாட்டார்கள்!

இப்படி சந்திரகுமார் அவர்களைப் பாராட்டுகிற பொழுது, மற்ற குடும்பத்து உறுப்பினர்கள், இணைந்தவர்கள் எவரும் அன்பில், பாசத்தில்  குறைந்தவர்கள் அல்லர்; என்றாலும், தனித்தனியே அவர்களைப்பற்றி எழுதிட இடமில்லை - மனம் உண்டு என்றாலும்.

அத்தனை மருமகள்களும், பேரப் பிள்ளை களும், கொள்ளுப் பேரப் பிள்ளைகளும் (அரங்க சாமி தந்தையாரையும் அறிவேன்!) என அய்ந்து தலைமுறைகளைக் காணுகிறோம். அத்தனை பேரும் புடம்போட்ட தங்கங்கள் - கொள்கை விழுதுகள். நன்றி மறவா, பாசப் பறவைகள் - தனித்தனி கல்வித் தகுதியுடன் கொள்கை வானில் பறக்கும் குடும்பப்  பறவைகள் - இதற்குக் காரணம் சகோதரி இராஜம் - அரங்கசாமி ஆகியோருடைய கடும் உழைப்பு! உழைப்பு!! உழைப்பு!!!

அதனால்தான், இறக்கை முளைத்தப் பறவை கள் விரிந்த வானில் இன்று சுதந்திரமாக  பறந்து கொண்டே உள்ளன!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக