பக்கங்கள்

செவ்வாய், 24 நவம்பர், 2020

சூழ்நிலைக் கைதியாகாதவரே சுயமரியாதை வீரர்!

 

May 8, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

கரோனா கொடூரம் காரணமாக நாளும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஊரடங்கு, வீட்டுக் குள் முடங்கும் பலருக்கு மன இறுக்கத்தை அளிக் கக் கூடும். ஆனால், பகுத்தறிவாளர்களுக்கு அதைத் தவிர்த்துவிட்டு, வழமையான உற்சாகத் தையே வாழ்க்கைப் பாதையாக ஆக்கிக் கொள் ளும் பக்குவம் - நிச்சயம் உண்டு!

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் வாழ்க்கை நமக்கு எல்லா நிலைகளிலும், வழிக ளிலும், வேளைகளிலும்கூட நல்ல கலங்கரை வெளிச்சம்தானே! அட்டியென்ன அதில்?

தனது சுற்றுச்சார்பு, சூழ்நிலை ஒருபோதும் தன்னைப் பாதித்தது கிடையாது என்பதைத் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள்.

‘‘எனது நண்பர்கள் பலருக்கும் நான் அளித்த  விருந்தில், மதுகூட தந்துள்ளேன் - அவர்களுக்கு அதில் அதிக விருப்பமுண்டு என்பதால்; ஆனால், நான் அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும், ஏன் என்னை வலுக்கட்டாயமாகப் பிடித்து, என் முகத்தில் - போதை அளவுக்கு மிஞ்சி அவர்க ளுக்கு ஏறிய காரணத்தால் - ஊற்றியதுகூட உண்டு; நான் முகம் கழுவிக்கொண்டு வெளியேறு வேன். சிகரெட் - ‘Chain Smoker’ என்று கூறும்படி - தொடர்ச்சியாகப் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு - நினைத்தேன், ஒரே நாளில் நிறுத்தி விட்டேன்." இப்படி அய்யா எழுதினார்.

மனதின் உறுதிதான் வைராக்கியம் எனப்படு வது. நாம் எந்த சூழ்நிலை ஏற்பட்ட போதும், நாம் அதற்கு அடிமையாக வேண்டிய அவசியமே கிடையாது - நம் மனதில் தெளிவும், உறுதியும் இருந்தால் - சபலங்களின் சலனங்கள் நம்மை ஒருபோதும் தீண்டாத அளவுக்கு நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ளலாம்.

எனது நண்பர்கள் பலரும் பொழுதுபோக்குக் காக மாணவப் பருவத்தில்  ‘சீட்‘ (Playing Cards)டாடுவார்கள் - என்னைப் பழக்கவும் கூட சிலர் முயற்சித்தனர். நான் ஒருபோதும் அதற்கு இரையாகவில்லை; காரணம், அய்யா வழியில் எனது மாணவப் பருவம் - இளமை அமைந்ததே யாகும்!

தந்தை பெரியாரின் மன உறுதி எப்படிப்பட் டது என்பதை அவர்தம் நெருக்கமான பொது வாழ்வு நண்பரான தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் எழுதிய அவரது ‘வாழ்க்கைக் குறிப்பு கள்’ பக்கம் 356 முதல் 357 வரை எழுதியுள்ள ஒரு பகுதி இதோ:

‘‘வைக்கம் வீரர்க்குப் பலதிற அணிக ளுண்டு. அவைகளுள் ஒன்று வைராக்கியம். 1920ஆம் ஆண்டில் சென்னையிலே கூடிய மகாநாடொன்றுக்கு டாக்டர் வரதராஜூலு நாயுடுவும், இராமசாமி நாயக்கரும் போந்த னர். இருவரும் இராயப்பேட்டை பவானி பாலிகா பாடசாலையில் தங்கினர். இரவில் டாக்டர் சுருட்டுப் பிடித்தனர்; நாயக்கர் சிகரெட் பிடித்தனர். இரண்டு புகையும் என்னை எரித்தன. சிகரெட்டை விட வேண் டுமென்ற உறுதி நாயக்கருக்கு எப்படியோ உண்டாயிற்று. சிகரெட் பயிற்சி நாயக்கரை விட்டு ஓடியது. வைராக்கியம் என்ன செய்யாது?

இராமசாமி நாயக்கர் புலால் உண்பவர். அவ்வுணவை அவர் அவசியமாகவுங் கொள்ளவில்லை; அநாவசியமாகவுங் கொள்ளவில்லை. நாயக்கரும் யானும் பலப்பல நாள் பலப்பல இடங்கள் சுற்றியுள் ளோம். வீரர் மனம் புலால்மீது சென்றதே இல்லை. அவர் புலால் உண்பதை என் கண் இன்னும் கண்டதில்லை.

நாயக்கர் ஜாதி வேற்றுமையை ஒழித் தவர்; அதை நாட்டினின்றுங் களைந்தெறிய முயல்பவர். ஜாதி வைதிகர் எவரேனும் நாயக்கர் வீட்டுக்குப் போதருவரேல், அவர் கருத்து வழியே நடந்து அவருக்கு வேண்டுவ செய்வர். இதை யான் கண்ணாரக் கண்டி ருக்கிறேன்.

இளமையில் யான் பொறுமை காப்பது அரிதாகவேயிருந்தது. பின்னே நூலாராய்ச்சி யும், நல்லோர் கூட்டுறவும் இல்வாழ்க்கையும், இன்ன பிறவும் எனது இயற்கையைப் படிப் படியே மாற்றி வந்தன. காஞ்சி மகாநாட்டிலே நாயக்கருக்கும், எனக்கும் உற்ற கருத்து வேற்றுமை காரணமாக அவர் ‘குடிஅரசு’ எய்த சொல்லம்புகள் பொறுமையை என் பால் நிலைபெறுத்தின. சொல்லம்புகளை யான் தாங்கப் பெருந்துணை செய்தவர் நண்பர் நாயக்கர்.

மயிலை மந்தைவெளியிலே நாயக்கரால் (8.3.1924) நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவிலே இராஜ நிந்தனை இயங்கியதென்று அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்தது. இராயப்பேட்டையிலே தங்கினார். ஓர் இரவு ‘குகான நிலைய’த்திலே நாயக்கர் ஒரு திண்ணையில் உறங்கினார்; யான் மற்றொரு திண்ணையில் உறங்கினேன். பதினொரு மணிக்கு மழை தொடங்கியது. நண்பரை எழுப்பினேன். அவர் கண் விழிக்கவில்லை. மழை பெருகியது. மீண்டும் நேயரை எழுப்பினேன், கண்கள் மூடியபடியே இருந்தன. நாயக்கரைப் பலமுறை எழுப்பி எழுப்பிப் பார்த்தேன். பயன் விளைய வில்லை. நாலு மணிக்கு மழை நின்றது. ஆறு மணிக்கு வைக்கம் வீரர் எழுந்தார். எனக்குச் சொல்லொணச் சிரிப்பு. ‘மழை பெய்தது தெரியுமா?’ என்று நண்பரைக் கேட்டேன். ‘மழையா?’ என்றார். நாயக்கரைத் தீண்டியுள்ள பாம்பு 124-ஏ! வழக்கு நடப்புக் காலம்! அந்நிலையில் நண்பருக்குக் கவலை யற்ற உறக்கம்! என் எண்ணம் நாயக்கர் மனத்தின்மீது சென்றது. ‘அவர் மனம் பொன்னா? சஞ்சலமுடையதா?’ என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன்.

1942 ஆம் ஆண்டு இராமசாமிப் பெரி யார் ஜெனரல் ஆஸ்பிடலில் படுக்கையில் கிடந்தபோது அவரைக் காணச் சக்கரைச் செட்டியாரும், சண்முகானந்த சாமியும், ஜானகிராம் பிள்ளையும், யானும் சென்றோம். யான் அவர் கட்டிலிலே நெருங்கி அமர்ந் தேன். நாயக்கர் என் கையைப் பற்றிக் கதறினார். என் குட்டை நனைந்தது. இரு வருங் கருத்து வேற்றுமையுடையவர்; போரிட்டவர். நாயக்கர் கண்கள் ஏன் முத்துக் களை உகுத்தன? அக்காட்சி கண்டவர், ‘இங்கே பலர் வருகிறார்; போகிறார். எவரைக் கண்டும் நாயக்கர் அழுதாரில்லை. இவரைக் கண்டதும் அவருக்கு அழுகை ஏன் பெருகியது?’ என்று ஒருவரோடொருவர் பேசியது என் காதுக்கு எட்டியது. அழு கைக்குக் காரணம் என்ன?’’

எத்தகைய அகநக நட்பு பார்த்தீர்களா?

தம் கொள்கை உறுதி ஒருபுறம் என்றாலும், மற்றவர்கள் மனம் - குறிப்பாக தமது விருந்தி னர்கள், நண்பர்கள் எவராயினும் அவர்களது மன உணர்வுகளை மதிக்கும் நயத்தக்க நாகரிகம்தான் தந்தை பெரியாரிடம் கற்கவேண்டிய தலையாய பாடம்!

சூழ்நிலைகள் நம்மை அடிமையாக்க நாம் ஒருபோதும் இடந்தராமல், எதையும் ஒரு வாய்ப் பாக மாற்றிக் கொள்ளும் பயனுறு அனுபவமே நம்மை உயர்த்தும். கரோனாவினால் நாம் சுயக் கட்டுப்பாடு விதித்தாலும், நாம் மனந்தளராமல் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதையே கடமை யாகக் கொள்ளுங்கள் - கவலைகள் பறந்தோடி விடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக