நம் நாட்டில் பட்டிமன்றங்களுக்குப் பஞ்சமே இல்லை. பல பட்டிமன்றங்கள் - கலைஞர் அவர் கள் ஒருமுறை குறிப்பிட்டதுபோல, அவை வெறும் 'பாட்டி மன்றங்களாகவே' நடைபெறுவதும் வாடிக்கை!
இன்னும் சில பட்டிமன்றங்கள் ஏதோ பொழுதுபோக்குக்கும், சிரிப்பாய்ச் சிரிப்பதற்குமே தயாரிக்கப்படும் ஜோக்குகள் - கற்பனை வளம் நிறைந்த ஜோடனைக் கதைகள் இவற்றை வைத்து கைதட்டல்களை மட்டுமே கணக்கிட்டுத் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தும் ஆஸ்தான நாயகர் களும் பலர் உண்டு.
சிரிப்பும், கைதட்டலும் மிஞ்சும் இவை முடிந்த பிறகு, என்ன சொன்னார்கள் பேசியவர்கள் - தலைமை வகித்தவர் எப்படி அவர்களின் உரையை, கழுவிய மீனிலும் நழுவிய மீனாகவோ அல்லது வெண்டைக்காய். விளக்கெண்ணெய். கற்றாழை எல்லாவற்றையும் கலந்த கலவை போல, 'வழவழா, கொழ கொழாவென்று' அளித்த ''தீர்ப்பையும்'' எதையும் திரும்ப நினைத்துப் பார்த் தால், எதுவுமே யாருக்குமே நினைவுக்கே வராது!
நேரம் சென்றதுதான் ஒரே விந்தை! அப்படி அல்ல இப்போது. கரோனா காலத்தில் மக்களுக்கு சம்பந்தப்பட்ட நிலையில், அவர்களைக் கரோனா நோயின் அச்சத்திலிருந்து வெளியேற்றவும், அவர்கள் பாதிக்கப்படாமல் நோய்த் தொற்றி லிருந்து பாதுகாப்பதும் மத்திய - மாநில அரசுகளின் கடமை - சமூகத்தின் பொறுப்பு. இது ஒரு நாட்டு, ஒரு சமூகத்திற்குரிய பிரச்சினை அல்ல. உலகமே இதன் பிடியில் சிக்கி அலறித் தவித்துக் கொண் டுள்ள உண்மை நிலை!
இதில் நோய்த் தொற்று பரவாமல் இருக்கவும், பாதிக்காமல் இருக்கவும், மருந்தில்லாது - மருத்து வர்களும், செவிலியர்களும், ஆட்சியாளர்களும் இந்த 'கண்ணுக்குத் தெரியாத எதிரி'யுடன் நடத்தும் கரோனா ஒழிப்புப் போரில், ஒரு கட்டத்தில் (அது மூன்றாவது, நான்காவது கட்டமாகவும் இருக்கலாம்!) ''கரோனாவோடு வாழவும் கற்றுக் கொண்டு, அதையே வாழ்க்கை முறையாகவும் ஆக்கிக் கொள்வதைத் தவிர, வேறு வழியே இல்லை'' என்று கைபிசைந்து, வாய் அசைந்து கூறுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில்,
- தனி நபர் இடைவெளியுடன் பழகுதல்
- முகக் கவசம் தவறாது அணிதல்
- தேவையற்று, கூட்டத்தில் கலப்பதைத் தவிர்த்து, தனிமையை இனிமையாக்குதல்
- அடிக்கொரு தரம் சோப்பு போட்டு நன்றாகக் கைகளைக் கழுவுதல்.
- சத்துணவு, உடற்பயிற்சிமூலமும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நாளும் வளர்த்து, அந்நோயை நம் எதிர்ப்புச் சக்தியால் விரட்டி அடித்து, மீளுதல் தவிர வேறு எந்த வழியும் புலப்படவில்லை என்பது உலகம் தழுவிய உபதேசமாக - உபயோகமாக உள்ளது.
கரோனாவில் ஏற்பட்ட விளைவுகள், ஏழை, எளிய நடுத்தர மக்களின் நோய்த் தடுப்புக்காக என்று - ஊரடங்கில் பல மாதங்களாக முடங்கும் போது, அவர்களுக்குரிய வாழ்வாதாரம் குடும்ப உறுப்பினர்களின் பசி போக்கும் வாய்ப்பு - குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்த் தோழர்கள், அன்றாட வேலைகள், தொழில்கள்மூலம் தங்கள் ஜீவனத்தை ஓரளவு கவுரவத்துடன் நடத்தும் தொழிற்கலைஞர்கள், பலரும் பசியிலிருந்து காப்பாற்றப்பட வேண்டியவர்கள் ஆவர்.
பசிதான் மனித குலத்தின் மிகப்பெரிய தேவை!
பசி தீர்ப்பதுதான் மனித குலத்துக்கான மிகப் பெரிய சேவை.
வறுமையும், பசியும் இரட்டைக் குழந்தைகள்!
இதில் ஜாதி, மதம், இனம், மொழி, நாடு என்ற பேதம் - பிரிவினையே மனித குலத்திற்கு - ஏன் உயிரினங்களுக்குக்கூட - அனைத்துக்குமே கிடையாது!
தந்தை பெரியார் அவர்களது மனிதநேயம் வியக்கத்தக்கது.
1925 ஆம் ஆண்டு (2.5.1925) முதல் பச்சை அட்டைக் 'குடிஅரசு' ஏட்டில் உள்ள ஒரு கவிதை இதோ:
''அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி யெவற்கும் ஆற்றி
மனத்துளே பேதாபேதம்
வஞ்சம், பொய், களவு, சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேறொன்று ண்டோ
உனக்கிது உறுதியான
உபதேசம் ஆகும் தானே!''
என்ற பாடல் தலையங்கத்திற்குமேல் இடம் பெற்றுள்ளது.
பசி போக்கலா? பிணி தடுத்தலா? இரண்டில் எதற்கு முன்னுரிமை?
இதைத்தான் இன்றைய அரசுகள் - உலகம் முழுவதும் உள்ளவர்கள் உணர வேண்டியது அவசியம்!
திருக்குறள் தந்த பகுத்தறிவுப் புலவர் திரு வள்ளுவர்கூட,
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு (குறள் 734).
உறுபசிக்கே முன்னிடம் தந்துள்ளார் வள்ளுவர் - ஓவாப் பணி அதன் பின்னே - இரண்டும் முக்கியமாகத் தீர்க்கப்பட வேண்டியவைதான் என்றாலும்கூட.
எனவேதான் தந்தை பெரியார் 95 ஆண்டு களுக்கு முன்பே இதனை முக்கியமாய் நோக் கினார் என்பது அறிய அறிய உவப்பும், வியப்புமே மிஞ்சுகிறது!
ஒரு நிகழ்ச்சிக்கு சென்னை பெரியார் திடலுக்கு வந்து, பெரியார் பகுத்தறிவு நூலகத்தில் உள்ள பழைய பச்சை அட்டை 'குடிஅரசின்' இந்தக் கவிதை வரிகளைப் படித்துவிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஜஸ்டிஸ் எம்.எம்.இஸ்மாயில் அவர்கள் மிகவும் ஆச்சரியத்துடன், இந்தக் கவிதையை எழுதியவர் யார் என்ற விவரம் உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்துக் கேட்டார்!
எனக்கு அவர் சட்டக் கல்லூரியில் ஆசிரியர். நான் அவர் விரும்பும் மாணவன். மிகுந்த கடவுள் - மத நம்பிக்கையாளராகவும், தேசிய உணர் வாளராகவும் நடுநிலை தவறாத நீதிமானாகவும் வாழ்ந்தவர் அவர்! அவர் உள்ளத்தில் இக்கவிதை ஏற்படுத்திய தாக்கம் தந்தை பெரியாரின் சுயமரி யாதை மனிதநேயம் எவ்வளவு ஆழமானது என்பதை விளக்கி, அன்று நடந்த பொழிவிலேகூட பேசினார்!
எனவே, பசி தீர்ப்பதே முன்னுரிமை. நோயோடு கூட வாழலாம்; வாழ்ந்துவிட முடியும். ஆனால், பசியோடு வாழ முடியாது என்பதை நாம் அனை வரும் உணர்ந்து, மக்களின் பசி தீர்க்க நம்மாலா னதைச் செய்து, மனிதாபிமானம் காப்போம்! வாரீர்! வாரீர்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக