பக்கங்கள்

செவ்வாய், 24 நவம்பர், 2020

சேவையே, உன் பெயர்தான் செவிலியமா

 

May 12, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

மனித குலம் பெருமைப்படும் பணிகளில் தலையாயது மருத்துவப் பணி; அப்பணிக்கு மேலும் அடிக்கட்டுமானத்தை வழங்கி, வலிவும் பொலிவும் சேர்ப்பது செவிலியர் சகோதரிகளின் ஒப்பற்ற சேவையாகும்.

மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ மனைகளும் இல்லாத ஓர் உலகத்தை - கண்ணை மூடிக்கொண்டு - ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்!

அதிர்ச்சியால் நீங்கள் உறைந்து போவீர்கள்!

அதிலும் செவிலியர்களின் தன்னலமற்ற மருத் துவப் பணிக்கு மானுடம் என்றென்றும் தலை வணங்கக் கடமைப்பட்டுள்ளது.

செவிலியர்களுக்கெல்லாம் ஒரு தனிப்பெரும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் புளோரன்ஸ் நைட்டிங்கேல். இன்று (மே 12) அவரது 200 ஆவது ஆண்டு பிறந்த நாளே - செவிலியர் சேவை நாளாகக் கொண்டாடும் நாளாகும்.

இங்கிலாந்து நாட்டில் 1820 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி பிறந்த ஒரு பெண் மகவு, உலகுக்கே தொண்டற வெளிச்சத்தை ஈகையுடன் வழங்கி, பெருமையாக வரலாற்றில் அன்றும் இன்றும் என்றும் வாழுபவர் புளோரன்ஸ் நைட்டிங்கேல்.

மிகப்பெரிய பணக்கார வசதிகள்  அதிகம் படைத்த ஒரு பெரிய குடும்பத்தின் 'பிஞ்சாகப்' பிறந்து வளர்ந்தாலும் - தனது குடும்பத்தினரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் நோயாளியின் நோய் தீர்க்க உதவும் செவிலியர் படிப்பைப் பிடிவாதமாகப் படித்து,  முடித்து, அவர்களுக்குச் சேவையாற்றுவதே தன் வாழ்க்கையின் இலக்காக அமைய வேண்டும் என்ற திட சித்தத்துடன் உழைத்து, செவிலியர் உலகத்தின் சிறப்புச் சேவைச் செம்மலாக உயர்ந்தார்; ஆபத்துகள் நிறைந்த போர்க் களங்களில் குறிப்பாக, 1853 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும் - ரஷ்யாவுக்கும் நடந்த கிரிமியன் போரில் காயமடைந்த போர் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க - தன் உயிரைத் துச்சமென மதித்துச் சென்றார்; அங்கே ஒருபுறம் காலரா தொற்று; மறுபுறம் டைபாய்ட் விஷ ஜூரம்  பரவியிருந்த நேரத்தில் இணையற்ற ஈகத்தோடு இறங்கினார் சிகிச்சை அளிக்க - எங்கும் இருள்! வெளிச்சம் இல்லை - சிகிச்சை கொடுக்க! ஆனால், அவரோ - அதுபற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், ஒரு கையில் விளக்கொன்றை ஏந்தி, போர்க்களத் தில் காயம் பெற்ற வீரர்களுக்குச் சிகிச்சை அளித் தும், தொற்று கொடுமையாகி இருந்த நிலையில் அதனை எதிர்த்தும் தொடர்ந்து அலுப்பு சலிப் பின்றி தொண்டறத்தினைச் சுழன்றடிக்கும் சூறா வளிபோல், சுற்றிச் சுற்றி வந்து செய்தார். இதனால் அவர் வரலாற்றில் 'Lady  with the Lamp' - 'விளக்கேந்திய வீரப் பெண்மணி' என்று வர்ணிக் கப்பட்டார்!

உலகம் முழுவதும் ''கரோனா கரோனா'' என்று கொடும் தொற்றால் அவதியும் அல்லலும்படும் இந்த நேரத்தில் ஒரு - புளோரன்ஸ் நைட்டிங்கேல் போல தங்கள் உயிர் முக்கியமல்ல என்று பல்லாயிரக்கணக்கில் பணியாற்றும் அந்த செவிலியர் சேவையாளர்களுக்கும் நமது நன்றி யைக் காணிக்கையாக்குகிறோம்!

உற்றார் உறவினர் செய்யத் தயங்கும், நோயால் ஏற்படும் அருவருப்பு நிறைந்த சிறுநீர், மலம், எச்சில், சளி, வாந்தி எல்லாவற்றையும்கூட முகம் சுளிக்காமல் சிறிதும் சங்கடப்படாமல், சிகிச்சை அளிப்பதோடு, அந்த நோயாளிகளுக்கு மருந்து களைவிட மனிதநேயமும், இதமான இனிய சொற் களும் மிகவும் ஆறுதலளித்து, நோய் தீர்க்கும் மாமருந்தைவிட அரும்பெரும் மருந்தாகவே அமைபவர்கள் மானுடத்தின் ஒப்பற்ற உயர் அங்கமான நம் செவிலியர்கள்.

பல நாடுகளில் சிங்கப்பூர் உள்பட, கேரளத்தில் எத்தனையோ 'புளோரன்ஸ் நைட்டிங்கேல்கள்' செவிலியச் சகோதரிகள் சேவையின் சின்னங்களா கவே என்றும் வாழும் வகையில், நோயாளிகளைக் காப்பாற்றிட கடைசி வரை தமது கடமைகளை - உயிரினும் மேலானதாக உண்மையிலேயே கருதி உழைத்து, தியாகம் செய்து, மறைந்தும் மறையாமல் இன்னும் மக்கள் உள்ளத்தில், வரலாற்றில் வாழுப வர்களாக  பலர் இருக்கிறார்கள்!

கரோனா அச்சம் மனித குலத்தை உலுக்கி குலுக்கி அதிர வைத்துக் கொண்டிருக்கும் இந்த சோகக் காலகட்டத்தில்கூட, நம்பிக்கை ஒளியூட் டக் கூடியவர்கள் மருத்துவர்களும், செவிலியர் களும்; அவர்களுக்கெல்லாம் ஈடாக  எங்கும் உள்ள துப்புரவுப் பணித் தோழர்களும், தாய்மார் களும்தான்!

இன்றைய புளோரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் சேவை நாளில் - இவர்களுக்கு நன்றி காட்டும் நன்னாளாகக் கருதி அவர்கள் தொண்ட றத்துக்குத் தலைவணங்குவோம்.

வயதை ஒரு பொருட்டாக்காமல், இளம் பெண்கள்கூட, முதிர்ச்சியுடன் சேவை தரும் பான்மையும், கருணையும் காலத்தின் அணி கலன்கள் - விளக்கேந்திய வீரப் பெண்மணி தந்த வெளிச்சத்தின் கதிர்கள் -

இவர்களது தொண்டறம் வெல்க! வெல்கவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக