பக்கங்கள்

செவ்வாய், 24 நவம்பர், 2020

இணைய வழியும் - சமூக உறவுப் பாலமும்!

 

May 25, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

உலக அளவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே  வெளிவந்த, ஏராளமாக விற்பனையான நூல்களில் ஒன்று பிரபல வரலாற்று சமூகப் பிரச்சினைகளை எழுதிடும் யுவல் நோவா ஹாராரி என்ற எழுத்தாளருடையது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்று, தற்போது  இஸ்ரேல் நாட்டின் ஜெருசெலத்தில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தில், உலக வரலாறுபற்றி ஆய்வுரையாளராக உள்ளார்.

இவர் எழுதி உலக அளவில் முதலிடம் பிடித்த பல நூல்கள் - "சேப்பியன்ஸ் - மனித குலத்தின் ஒரு சுருக்க வரலாறு" A Brief History of Humankind and Homo Deus: "A Brief History of Tommorrow" ஆகியவை. இந்த நூல்கள் சுமார் 12 லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

அதைவிட தனிச்சிறப்பு என்ன தெரியுமா? 45 மொழிகளில் இவரது நூல்கள் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டு உலகின் பல மொழி வாசகர்களையும் வென்றுள்ளன!

யுவல் நோவா ஹாராரியின் "21 Lessons for the 21st Century -  21 ஆம் நூற்றாண்டின், 21 பாடங்கள்" என்ற நூலில் மனித குலத்தின் பல்வேறு பிரச்சினை களை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து 21 அரிய கருத்தோவியத்தை இவர் தீட்டியுள்ளார்!

2 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு இதனை அமெரிக்காவிலிருந்து அப்போது வந்த அசோக் ராஜ் தந்தார். நானும் படித்து எனது படிப்பு வட்ட முக்கிய நண்பர்கள் பலருக்கும் கொடுத்து, அது ஒரு சுற்று வந்து மீண்டும் புத்தக அலமாரிக்குச் சென்றது!

கரோனா கால புத்தகப் படிப்பிற்காக  அதனை மீண்டும் எடுத்து மறு வாசிப்பு செய்து, அறிவுப் பசி தீர்த்துக் கொள்ள முடிந்தது! ‘சமூகம்' Community என்ற தலைப்பில் அவரது 5 ஆவது பாடத்தில்,

ஒரு குட்டித் தலைப்பும் தந்துள்ளார்!

"Humans have bodies"

"மனித இனத்திற்கு உடல்களும் உண்டு" என்று வேடிக்கையாக நினைவூட்டும் வகையில், அண்மைக் கால மின்னணு கணினி யுகத்தில், அந்த அலைகளின் வேகமான வீச்சுக் காரணமாக எங்கும், எதிலும் இயந்திரம், இணையம், மின்னஞ்சல், மின்-புத்தகங்கள், இணையதள தகவல் தொடர்புகள் மூலமே, கடை களுக்கு நேரில் சென்று பொருள்களை பல வகையில் நோட்டம் விட்டு, எங்கே எது குறைந்த விலை, எது முடுக்கான சரக்கு, தரம் குறையாத பொருள் எது என்றெல்லாம் ஆராய்வதற்குப் பதிலாக, இப்போது எல்லாம் - விவரங்களை மின்னஞ்சல் அறிவிப்புகள் மூலமே அறிந்து கொண்டு online order என்று கொடுத்து மின் வியாபாரம் (E-commerce) நடந்து கொண்டுள்ளது பலரும் அறிந்ததே!

பெரும்பாலும் ஒருவருக்கொருவர் நேரில் பேசுவதுகூட இப்போது தவிர்க்கப்பட்டு வருகிறது.

கைத்தொலைப்பேசி (செல்போன்) மூலம் texting அடித்தோ - சுருக்கமாக - ஆங்கிலத்திலோ - தமி ழிலோ அனுப்பி வேகமாக அதுபோய்ச் சேர்ந்ததைக் கூட, குறியீடுகள்மூலமே பார்த்துவிட்டார் சம்பந்தப் பட்டவர் என்பதும் வந்து விடுகிறது!

என்றாலும், இதனால் பலவித நன்மைகள், வேக மான விளைவுகள் ஏற்படினும்கூட, இது மனிதர்களின் தனித்தன்மையான, வாழ்க்கையின் பல இன்றியமை யாத அனுபவிக்கவேண்டிய சுவைகளையும், வாசனை களையும் அறிந்து அனுபவித்து, உண்ணும் ரசனையை வியப்பையும் கூட அது (online மோகம் - பழக்கம் காரணமாக) கணினியிலும், ஸ்மார்ட் ஃபோன்களிலும் மிக ஈடுபாடு கொண்டு, உண்ணும்போதே பலதை எண்ணிக்கொண்டு, ஏதோ அவசர அவசரமாக சாப்பாட்டை முடிக்கிறார் கள். உண்ணுவதை அனுபவித்தோ, சமையலைச் சுவைத்தோ அனுபவிக்க முடிக்க முடியாத நிலை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் மிக அழகாக முகநூல் அதிபர் சக்கர்பெர்க் (Zuckerberg).

இதை அவரது 2017 பிப்ரவரியில் online சமூகத்தவர் offline என்ற ஆட்களுடன் உறவுள்ள ஒரு சமூக உறவையும் இணைத்து எப்படி ஏற்படுத் துவது என்பதற்கான ஒரு அறிக்கை யைத் (Manifesto) தந்தார் என்றும் குறிப்பிடுகிறார் இந்த நூலாசிரியர்!

இரண்டுக்கும் அடிப்படையில் சில நடைமுறை வேறுபாடுகள் உள்ளன. அதை எளிதில் தீர்க்கிறது. நேரில் உள்ள சமூகங்களையும், அதன் தொடர்பான இணையவழியில் தொலைபேசி, மின்னஞ்சல் போன்றவை மூலமும் ஏற்படுத்துவதற்கும் இடையில் ஒரு பெரும் பள்ளமே உள்ளது!

இதை அவ்வளவு எளிதில் அடைத்துவிட முடி யாதுதான்.

"நான் இஸ்ரேலில் உள்ள எனது வீட்டில் உடல் நலம் குன்றி படுத்திருந்தேன் என்றால், எனது online (இணையவழி) நண்பர்கள் அமெரிக்காவிலிருந்து (கலிபோர்னியா) என்னை அழைத்து, உடல் நலம் விசாரிக்கின்றனர் - ஆனால் அவர்கள் எனக்கு ஒரு கப் டீயோ, சூப்போ போட்டுத் தர முடியாது." (இது offline-ல்தான் சாத்தியம்!).

இதன் பாரதூர விளைவுகள் எவ்வளவு தூரம் சமூக உறவுகளை வெகுவாகப் பாதிக்கிறது என்பதை மிக அழகாக விளக்குகிறார்.

‘சைபர் உலகில்' எங்கோ தொலைதூரத்தில் - என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள நாம் காட்டும் ஆர்வம், நமது தெருவில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் காண முடிவதில் லையே!

ஒரு அம்மையார் கூறுகிறாராம் (எழுதுகிறார் இந்நூலாசிரியர்), "நான் சுவிட்சர்லாந்திலுள்ள எனது ஒன்றுவிட்ட சகோதரனுடன் பேசுவது உடனே முடி கிறது; ஆனால், அதே நேரத்தை, காலைச் சிற்றுண்டி பரிமாறிக் கொண்டே எனது வாழ்விணையருடன் பேசிக் கொண்டு மகிழ்ச்சியடைய முடியவில்லை. காரணம் அவர் எப் போதும் அந்த வேகமான தொலை பேசியிலேயே நேரத்தை செலவழித் துக் கொண்டே இருப்பவராயிற்றே!"

சமூக உறவு  இப்படி சிதையும் நிலை. இதனால் ஏற்படுவது மற்றொரு புறம். வீடுகளில் நாம் பார்க்கிறோமே, ஒரு சாப்பாட்டு மேஜையில் நான்கு பேர் குடும்ப உறுப்பினர்களை அமர்த்தி ஹெட் போன் கயிறு உள்ள கைத்தொலைபேசியில் நால்வரையும் நான்கு திசைக்குப் பறக்க விடுகிறோம்.

இதற்கொரு தீர்வு - இணைப்பு - சமூக உறவுப் பாலமும் உருவாக்கிட வேண்டும் என்பதை உணர்ந்து அதற் கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் கள். முகநூல் அதிபர் போன்றவர்களே என்பது மிக நல்ல செய்தி?

காணாமற்போன அல்லது களவு போன நம் சமூக உறவுகள் - குடும்ப உறவுகள் - இந்தக் கரோனா காலத்திலாவது, ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது என்ற உண்மை, ‘‘கெட்டதிலும் சில நல்லது; தீமையிலும் சில நன்மைகள்'' என்பது போன்று உள்ளன. இதனை நன்கு பயன்படுத்தி எதற்கு எவ்வளவு இடம் - நேரம் என்பதைப் பகுத்துத் திட்டமிடுவோமா?

யோசியுங்கள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக