சனி, 31 ஆகஸ்ட், 2019
மிக ஆபத்தான போதை மருந்து - புகழ்!
சனி, 24 ஆகஸ்ட், 2019
'கோபம் - அளவோடு' நியாயமே!
கி.வீரமணி
கோபங்கள் பலவகை.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி வகை, தனி ரகம்!
அய்ந்தறிவு படைத்த மிருகங்களுக்குக்கூட கோபம் வராமலா இருக்கிறது?
பிறகு எப்படி ஆறறிவு படைத்த, மானம் உள்ள மனிதர்களுக்குக் கோபம் வராமலிருக்க முடியும்?
யாரையாவது பார்த்து 'இவருக்குக் கோபமே வராதுங்க' என்றால் அது மனித சுபாவத்திற்கு மாறானவர் என்று அறிமுகப்படுத்துவது போன்றது.
மனித இயல்பு கோபப்படுவதுதான். எப்படி நகைச்சுவை வரும்போது சிரிக்கின்றோமோ, துக்கம் துயரம் துளைக்கும்போது அழுகி றோமோ, அதுபோன்றது தான் கோபம் கொள் ளும் உணர்ச்சியும்கூட!
கோபப்படாதவர்கள்போல் சிலர் காட்டிக் கொண்டால் அது நடிப்பு, அல்லது நயவஞ்சகம்; எதையோ மற்றவர்களிடம் எதிர்பார்த்து பொறுத்துக் கொள்ளுகிறார் என்பதே அதன் புதை பொருள்.
Provoked Anger என்பது ஆத்திரமூட்ட பட்டதால் ஏற்படும் கோபம், பல நேரங்களில் நியாயப்படுத்தக்கூடிய கோபம் தான்!
ஆனால் காரணமின்றி எதற்கெடுத்தாலும் அற்ப விடயங்களுக்கெல்லாம் கூடத் தேவையற்றவைகளுக்காக கோபப்படுவது, மாற்றிக் கொள்ள வேண்டிய பண்பு - பழக்கம் ஆகும்!
ஆத்திரமூட்டப்பட்ட கோபத்தினைக் கட்டுப்படுத்துவதை விட வெடித்து வெளிப் படுத்தி விடுவதே - அது நாகரிகமான அளவில், ஓர் எல்லைக் கோட்டுடன் நிறுத்திக் கொள் வதற்குப் பழகவேண்டும்.
ஆத்திரமூட்டப்படும் கோபத்தைவிட ஆத்திரமூட்டப் படாமல் அவ்வப்போது வெடிக்கும் கோபம் நமது இதயத்தின் - இரத்த ஓட்டத்தின் - அதன் காரணமாக நமது உடல் நலத்தினை வெகுவாகப் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்!
உடல் நலம் பேணுவோர் கவனத்தில் கொள்ளவேண்டிய நல்ல அறிவுரை!
முற்றும் துறந்தவர்களுக்கே கோபம் "சாபம்" எல்லாம் புராணங்களில் வராமலிருக்கிறதா?
முனிவர் என்ற பெயரேகூட கோபம் கொள்பவர் - முனிவு என்பதன் அடிப்படையால் தானே? மொழி வல்லுநர்கள் தீர்ப்புக் கூறட்டும்!
தனி வாழ்க்கையில் கோபப்படுவோர் கூட பொது வாழ்க்கையில் ஈடுபடும்போது கட்டாயம் கோபத்தை அடக்கியே ஆகவேண்டும் - பொது நலம் கருதி.
எனக்கே கூட இந்த கெட்டப்பழக்கம் வரும்; ஆனால் மின்னல் போல் உடனே மறைந்து விடும்.
உடனடியாக நான் நடந்து கொண்டது சரிதானா? என்ற கேள்வியையும் உள்மனம் கேட்டு ஒரு 'குட்டும்' வைக்கும்!
எனது வாழ்விணையர் என்னை இவ்வகை யில் பற்பல நேரங்களில் கண்டித்து நெறிப் படுத்துவார்; அப்படி இடித்துரைக்கும் நட்பு அனைவருக்குமே தேவை!
நியாயமான கோபம் மற்ற சக தோழர் களையோ, ஊழியர் களையோ, தவறு செய்வதிலிருந்து திருந்தாதவர்களையோ திருத்த தேவையானதுதான் என்பதையும் முழுமையாக மறுத்துவிட முடியாது!
இளமையில், மாணவப் பருவத்தில் பெற் றோரின் குறிப்பாக தந்தையின் கண்டிப்பு, படிக் கும்போது ஆசிரியர்களின் அந்தக் காலத்துப் பிரம்படி (இக்காலத்தில்தான் அது முடியாத ஒன்றாயிற்றே) நம்மை மிகவும் நல்வழிப்படுத்தும் வழிமுறைகளாகவே அமைந்ததை, பிற்காலத் தில் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் எண்ணி எண்ணி மகிழத்தானே செய்கிறோம்!
ஆனால் எந்தக் கோபத்தையும் நீடிக்கவிடக் கூடாது; நிலைத்து விட்டால் அது வன்மமாகி விடும். பழிக்குப் பழி என்ற மிருக உணர்ச்சிக்கு மனிதர்கள் ஆளாகி, கூலிப்படையைத் தேடு கிறார்கள், தன் ரத்த உறவுகளை, கொள்கை உறவுகளையே கூட பலிகடாவாக்கி பிறகு தண்ட னைக்காளாகி அழுவதன் பலன்தான் என்ன?
எனவே கோபப்படுதலும் சிற்சில நேரங்களில் தேவைதான் - ஆனால் அது எல்லைதாண்டி விடாமல் - நயத்தக்க நாகரிகத்தில் நின்று விடுவது நல்லது - நம் இதயத்திற்கும் நட்பிற்கும்! இல்லையா?
- விடுதலை நாளேடு, 24. 8. 19
சனி, 17 ஆகஸ்ட், 2019
மெலின்டா கேட்ஸ் தரும் விருந்து!
மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள 'மஞ்சுள் வெளியீட்டகம்' (Manjul Publishing House Private Ltd.) மிக அருமையாக அண்மைக் காலத்தில் வெளி வந்து உலகம் முழுவதும் பரவலாகப் படிக்கப் படுகின்ற அரிய ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடும் அரிய 'அறிவுத் திருப்பணியை' மேற்கொண்டு வருகிறது.
வியாழன், 15 ஆகஸ்ட், 2019
என்றும் வாழும் புரட்சி இலக்கிய மேதை ராகுல் சாங்கிருத்யாயன்
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா!
செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019
நட்பின் கனிவு தரும் மகிழ்ச்சி
கி.வீரமணி
'நண்பர்கள்' என்பவர்கள் நாம் வாழும் சமுகத்தில் - குமுகாயத்தில் 'உண்ணும் உணவு போன்றவர்கள்' என்பதை நாம் அனைவரும் மனதில் இறுத்தி நட்புறவைத் தேர்வு செய்து வளர்த்துக் கொள்ளுதல் மிகவும் இன்றி யமையாதது.
நல்ல உணவு சரியாக செரிமானமாகி, உட லுக்குப் பலத்தை சேர்க்கிறது; நோய் எதிர்ப்புச் சக்தியினை வளர்த்து வாழ வைக்கிறது.
கெட்ட உணவு - அதாவது கெட்டுப் போன உணவு அல்லது உடம்புக்கு ஒத்து வராத உணவு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, உடலில் தொற்று நோய் - இவை ஏற்பட மூல காரணமாக ஆகி விடுகிறது!
பசி எடுப்பது நல்ல அறிகுறி - சீரிய உடல் நலனுக்கு; அதுபோல பண்புடைய - இடுக்கண் களைய, வேட்டி அவிழ்ந்தவன் கைகள் விரைந்து செயல்படுவதைப் போன்ற துடித்துப் பாய்ந்து உதவிடும் நண்பர்களைத் தேர்வு செய்வது மிகுந்த பயன் தரும்.
'பார்த்தால்' 'அந்தப் பசி' - நட்பு தேடல் - 'பசி தீரும்' என்பதை இப்படியும் பொருள் கொள்ளலாமே!
நீண்ட காலம் பழகி விட்ட நண்பர்களுக்குக் கூட தவிர்க்க முடியாத சில (தீய) பழக்க வழக்கங்கள் இருக்கலாம். என்றாலும் அவர் களுடைய வற்புறுத்தலுக்குக்கூட நாம் இணங்கி நமது தனித் தன்மையான ஒழுக்கத்தை இழந்து விடத் தேவையேயில்லை. உறுதி மிக்க உள்ளத்தவனை யாரும் எதுவும் ஒன்றும் செய்துவிட முடியாது என்பது திண்ணம்.
தந்தை பெரியார் அவர்கள் எழுதுகிறார்;
"நான் எனது (40 வயதில்) நெருங்கிய சகாக்களான நண்பர்களுடன் பழகும்போது, அவர்கள் மது குடிப்பார்கள்; நான் அதன் ஒரு சொட்டைக்கூட ருசி பார்த்ததே இல்லை! அவர் களுக்கு நான் ஊற்றிக் கொடுத்துக் கூட இருக்கிறேன். அதை அதிகமாக குடித்த கார ணத்தால் போதை தலைக்கேறி அவர்கள்கூட என்மீது துப்பி, என்னைக் குடிக்க வற்புறுத் தியதும் உண்டு.
சுற்றுச்சூழல் பல மனிதர்களைக் கெட்டு விடக் காரணமாகிறது என்று சொல்வதை என் விஷயத்தில் நான் பொய்யாக்கி இருக்கிறேன். நான் சிரித்துக் கொண்டே முகத்தைத் துடைத்துக் கொள்வேன். அவ்வளவுதான்!" மகத்தான மன உறுதி படைத்தவர்களை எந்த அழுத்தத்தாலும் மாற்றிவிட முடியாது என்பதற்கு இது ஓர் உதாரணம்!
ஒருமுறை தானே என்று முதலில் தவறு செய்பவர்கள் பலர் உண்டு; அதில் சறுக்கி விட்டால், அந்த சறுக்கலும், வழுக்கலும் வாழ்நாள் முழுவதும் கைவிடப்பட முடியாத பலவீனங்களில் ஒன்று ஆகி, நம்மை வாட்டி வாட்டி வதைக்கும் - மறவாதீர்கள்!!
வள்ளுவர் குறளில் 79ஆவது அதிகாரம் 'நட்பு', (நட்பின் சிறப்புக் கூறுதல்) 80ஆவது 'நட்பாராய்தல்' - 20 குறள்கள் நமக்கு நல்ல வழிகாட்டும் நெறிமுறைகள்.
அவற்றை கற்பதோடு, அதற்குத் தக நிற்கவும் - ஒழுகவும் - பழகிக் கொள்ளுங்கள். அதிகாரம் 79 - "நட்பின் சிறப்பு" பற்றி கூறுகையில்,
"செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு".
(குறள் - 781)
நட்பு செய்வதுபோல் அருமையான செயல் வேறில்லை. நட்பு போல செயலுக்குப் பாதுகாப்புத் தருவதும் வேறில்லை.
இன்பத்தைப் பகிர்ந்துகொள்ள உதவும் - ஓடோடி வரும் நட்பு முதன்மையானது அன்று. நண்பருக்குத் துன்பம் வரும்போது, ஓடோடி அதன் விளைவு எதுவாக இருப்பினும் அதுபற்றி அஞ்சாது - அதை ஏற்போன் நம்மை பாது காப்பது, நண்பருக்கு ஆறுதல் தர என்று ஓடோடி வந்து ஆறுதல் கூறும் நட்பு தரும் நயத்தக்கப் பண்பு, பிறருக்கு எப்படித் தோன் றிடினும் நம் உள்ளத்தில் மகிழ்ச்சியை மன நிறைவை அது ஊற்றெடுப்பாகப் பெருக்கும்.
எனது வாழ்வில் நிகழ்ந்த இரண்டு நிகழ்வுகளைக் கூறுவேன் - இதற்கு விளக்கமான பொழிப்புரை போன்று நிகழ்ந்தவை அவை.
(நாளையும் சந்திப்போம்)
- விடுதலை நாளேடு, 2.8.19
சனி, 3 ஆகஸ்ட், 2019
உரைத்துப் பார்க்க வேண்டிய உண்மை நட்பு!
அதிமுகவின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா ஆட்சியிலிருந்த முதல் தேர்தல் தோல்விக்குப் பிறகு வந்த தி.மு.க. ஆட்சியின் போது (கலைஞர் முதல் அமைச்சர்) சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டார்; அச்செய்தி வரும்போது நான் டில்லியில் - டில்லி பெரியார் மய்யப் பணிகள் காரணமாக இருந்தேன். அடுத்த நாள் சென்னை மத்திய சிறையில் அவர் ரிமாண்ட் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சென்னை திரும்பியதும் பெரியார்திடலுக்கு அடிக்கடி வந்து என்னுடன் உரையாடும் நண்பரும், மனித உரிமைப் போராளியுமான நண்பர் (மூத்த வழக்குரைஞர்) பாளை. சண்முகம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, "சிறையில் அடைக்கப்பட்ட செல்வி. ஜெய லலிதாவை நாம் இருவரும் சென்று சந்தித்து நலம் விசாரித்து வரலாம். 69 சதவிகித இட ஒதுக்கீடு செய்தவரைப் பாராட்டினோம். அவருக்கு அனுபவமில்லாத சிறை வாழ்க்கை மிகவும் துன்பத்தைத் தரக் கூடும். அவரைப் பொறுத்தவரை அது புது அனுபவம். மன இறுக்கம் ஏற்பட்டு உழலும் நிலை இருக்கும். எனவே நாம் சென்று பார்த்துத் திரும்புவது சற்று ஆறுதல் தரக்கூடும்" என்று பேசி முடிவு செய்தோம்.
அங்கே ஏகப்பட்ட கெடுபிடி! "யாரையும் எளிதில் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்பது மேலிடத்து உத்தரவு!" என்று சிறை அதிகாரிகள் முதலில் சொன்னார்கள்.
பாளை சண்முகமும், நானும் இருவருமே வழக்குரைஞர்கள். ஆதலால் அனுமதி மறுக்கக் கூடாது. மறுத்தால் சட்டப் பரிகாரம் தேட வேண்டிவரும் என்று சிறைக் கண்காணிப்பாள ரிடம் விவாதம் செய்தபிறகு சந்திக்க அனுமதி தந்தார்கள்.
மிகவும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் இருந்த அவரிடம் சற்று ஆறுதலான வார்த்தை களைக் கூறி, "சிறை விதிகளின்படி நீங்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்; வழக்குகளை உங்கள் ஜாமீன் - பிணைக்குப் பிறகு நடத்திக் கொள்ள வாய்ப்புண்டு" என்பதுபோன்று சில கருத்துரைகளைக்கூறி, சுமார் 20 நிமிடங்கள் பேசி விட்டு வெளியே வந்தோம்! அவரும் சற்று அமைதியானார்.
அது பெரிய பரபரப்புச் செய்தியாகி விட்டது. பலரும் அரசியல் மற்றும் கட்சிக் கண்ணோட்டத் திலேயே "இவர் எப்படி சந்திக்கலாம்?" என்பது போன்ற கேள்வி எழுப்பினார்கள் - விமர் சனங்கள் வெடித்துக் கிளம்பின. நாங்கள் பொருட்படுத்தவே இல்லை.
ஒரு செய்தியாளர் என்னிடம் வந்து "நீங்கள் சிறையில் அவரை (ஜெயலலிதாவை) சந்தித்த தால் உங்கள் இமேஜ் போயிற்று" என்று கூறினார்!
அதற்கு என்ன பதில் என்று கேட்டார்.
அதற்கு, நான் பதில் கூறினேன். "நம்மோடு பழகிய - சமுக நீதி சட்டத்தை எங்கள் அறிவுரை, வேண்டுகோளை ஏற்று செய்து முடித்தபோது பாராட்டினோம். அவர் ஒரு கஷ்டத்தில் சிக்கியுள்ளபோது ஆறுதலாக சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்தது அரசியல் ஏதுமற்ற முழுக்க முழுக்க மனிதாபிமானம் அவ்வளவுதான்.
மனிதாபிமானமா? எனது இமேஜா? என்றால் என்னைப் பொறுத்தவரை எனக்கு இமேஜ் முக்கியமல்ல; நான் ஒரு பகுத்தறிவுவாதி. துன்பத்தில் உள்ள ஒருவருக்கு ஆறுதல் தரும் மனிதாபிமான அடிப்படையில் பார்த்தது எனக்கு மனநிறைவைத் தந்தது, அதுபோதும். மற்றபடி எந்த விமர்சனமும் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்" என்றேன்.
அதுபோல 'மிசா' காலத்தில் பெரியார் திடலுக்கு யாரும் வர பயப்பட்ட போது, கவிஞர் கலி. பூங்குன்றன், போட்டோ கிராபர் குருசாமி ஆகிய இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தும் துணிந்து தினமும் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாருக்கு உதவியும், விடுதலை ஏடு வெளி வருவதற்கும் ஒத்துழைப்புக் கொடுக்கவும் அஞ்சவில்லை. அதுதான் கொள்கை உறவு, நட்புறவு, துணிவு!
அதுபோல எனது வீட்டில் எனது வாழ் விணையர் திருமதி. மோகனா தனியே, 'ஒரு ஈ, காகம், குருவிகூட' எட்டிப் பார்க்க முடியாத நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலை! காரணம் நெருக்கடி கால 'மிசா' சட்ட பயம். ஆனால் அரசு பாலிடெக்னிக் முதல்வராக இருந்த எங்கள் குடும்ப நண்பர் பொறியாளர் திருமதி. சுந்தரி வெள்ளைய்யன் அவர்கள் தவறாது வந்து எனது துணைவியாருக்கு உதவிட வழமை போல எந்த மாறுதலும் இல்லாது நட்புறவைத் தொடர்ந்தார்!
பலன் அனுபவித்தவர்கள் 'பறவைகளாகப் பறந்து' விட்டனர்; நட்பைத் துறந்து விட்டார்கள்; ஓடி ஒளிந்து கொண்டார்கள் என்றுகூட சொல்ல வேண்டும்.
அதற்காகக் கவலைப்படவில்லை. இது தான் உலகியல்! - வாழ்க்கையின் யதார்த்தம் என்று அவரும் துணிந்து குடும்பத்தை நடத்தி நல்ல பக்குவம் பெறவும், மனிதர்களை - நண்பர் பாத்திரங்களை ஏற்றவர்களைப் புரிந்து கொள் ளவும் அது உதவியது!
இதுபோல பலரது வாழ்விலும் சம்பவங்கள் நடைபெற்றிருக்கக் கூடும். எனவே நட்பை எடை போட்டுப் பார்க்க என்றும் தவறாதீர்கள்!
- விடுதலை நாளேடு, 3.8.19
வியாழன், 1 ஆகஸ்ட், 2019
பண்புடையாளர் தொடர்புதான் பெறர்க்கரிய பேறு!
சமுக வாழ்க்கையில் நாம் பல நண்பர்களைப் பார்க்கிறோம்; அவர்களோடு பழகுகிறோம். ஆனால் அனைவருமே நமது உள்ளத்தில் இடம் பெற்றவர்களாக - ஆகிவிட முடியாது!
"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்தம்
உறவு கலவாமை வேண்டும்" என்ற வள்ளலாரின் வாழ்க்கை எச்சரிக்கையை - பொது வாழ்வில் உள்ள நம்மைப் போன்ற பலரால் பின்பற்ற இயலாது என்றாலும், அவர்களை எந்த இடத்தில் நிறுத்தி விட வேண்டுமோ, அந்த இடத்தோடுதான் நிறுத்தி விட வேண்டும். காரணம் பழகும் பலரும் அப்படி நம்மிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வந்து பழகுபவர்கள். நம்மால் அதைச் செய்ய முடியாது என்று தெரிந்தால் அவர்களேகூட "அற்றகுளத்து அறு நீர்ப்பறவை போல்" பறந்து விடுவர்; நமக்கும் நிம்மதி!
மற்றும் சிலர், இன்றில்லாவிட்டாலும் இவரால் என்றாவது சிறுபயன் விளையுமே, அதற்காகவாவது அவருடன் உள்ள தொடர் பினை நைந்து போகாமலும், பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் பழகுபவர்களாக இருப்பார்கள்! அத்தகையவர்களை நாம் அடையாளம் கண்டு உள்ளத்தின் மூலையில் அதை நிறுத்திடப் பழகிக் கொள்ள வேண்டும்!
இன்னொருவகை - நமக்குப் புதிய அறிமுகம்தான் - ஆனால் ஏதோ பல ஆண்டு காலம் பழகிய பான்மையரைப் போல கலகலப்பு, சலசலப்புடன் நம்மைக் கட்டி அணைத்து 'உயிருக்கு உயிரானவர்' போன்று - சிறப்பாக நடித்து, காலை வாரி விட்டு, காட்டிக் கொடுக்க வேண்டிய வேளை வரும்போது அதைக் கச்சிதமாகச் செய்து தனக்கும், அதன் விளை வினால் ஏற்பட்ட கேட்டிற்கும் எவ்விதத் தொடர்போ, முகாந்திரமோ இல்லாத மாதிரி நம்மிடமே அனுதாபத்தோடு, ஆறுதலும்கூட கூற முன் வருவார்கள்! இவர்களைவிட நடிப்புக் கலை கற்றவர்கள் எவரை நாம் எளிதில் பார்க்க முடியும்?
நம்மோடு நீண்ட காலம் பழகிய ஒரு இயக்க நண்பர். அன்றாடம் சந்திக்கும் வாய்ப்பும் பெற்றவர். அவர் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துவிட்டு, "எனக்கு என்றென்றும் தலைவர் - நீங்கள்தான்" என்றெல்லாம் நாம் கேட்காத வாக்குறுதியை தந்துவிட்டு வழி யனுப்பி வைத்து - அடுத்தநாள் நமது இன எதிரி நாளேட்டில் ஒரு அறிக்கை, அபாண்ட ஆதார மற்ற பொறாமைப் புழு நெளிந்த அறிக்கை - 'நீயுமா புருட்டஸ்' என்ற ஷேக்ஸ்பியர் எழுதிய ஜுலியர் சீசரின் உலகறிந்த காவிய வரிகளால் என்னை தேற்றிக் கொண்டேன்.
ஏன் ரத்த உறவுகளில்கூட பயன் கருதி பாசம் காட்டும் பல்வேறு சொந்தங்களையும் மறக்காமல், மன்னித்தே பழகும் நிலை பெற் றுள்ளோம்!
அது அய்யா தந்தை பெரியாரிடம் யாம் பெற்ற - கற்ற - பாடங்களில் முக்கியமானது.
பொது வாழ்வில் பணியாற்றும் எவரும் "தடித்த தோலர்களாகவும்," கேளாக் காதர் களாகவும் மாறி, அவமானத்தை வழிந்த எச்சிலைத் துடைத்தெறிந்து அருவறுப்பற்று நடந்து கொள்ளுபவர்கள் போலத்தான் நடக்க வேண்டும் - லட்சிய வெற்றியைக் கருதி!
'மிசா' காலத்தில் கைதியாக உள்ளே இருந்தபோதுகூட, என்னை, அன்னையாரைத் தாறுமாறாகப் பேசிய ஒருவருக்கு உள்ளேயும் சில நெருக்கடி (அந்த வெளி நெருக்கடி காலத் தில்தான் உள்ளே வந்தவர்) அதைத் தீர்த்து வைக்க எனது முக்கிய அதிகாரி ஒருவருக்குப் பரிந்துரையை எனது வீட்டார் மூலம் அனுப்பச் செய்து, தீர்த்தேன் மற்றும் சில உதவிகளும்கூட உண்டு. சொல்லுதல் தேவையற்றது! வெளியே விடுதலை ஆகி வந்து அவர் தாக்கி - ஆதாரமற்றப் பேச்சுகளை சிலர் தூண்டுதலால் பேசியதும் உண்டு.
இவருக்குப் பால் வார்த்தீர்களே என்று இடித்துரைத்தனர் இல்லத்திலிருந்த சிலர். எனக்கு வருத்தமே இல்லை. அப்போது அவருக்கு உதவிய மகிழ்ச்சியான நினைவு மட்டும் இருந்தது!
காரணம் தந்தை பெரியாரிடம் கற்ற பண்பு. எவ்வளவு துரோகத்தையும் எளிதில் ஜீரணிக்கும் மாமனிதர் அவர்!
மான அவமானம், நன்றி, எதிர்பார்ப்பு என்பவையெல்லாம் பொது வாழ்வில் எதிர் பார்க்கக் கூடாத ஒன்று என்பதை விதியாக நாம் ஆக்கிக் கொள்வதுதான் பெரும் பண்பாகும். பண்பாளர்களைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
(பிறகும் சிந்திக்கலாம்)
- விடுதலை நாளேடு, 1.8.19