பக்கங்கள்

செவ்வாய், 23 அக்டோபர், 2018

'கவிக்கோவின் காக்கை சோறு' எழுப்பும் கேள்விகள் (3)

கவிக்கோ அப்துல்ரகுமான் எழுதுகிறார்:




"நான் கல்லூரி ஆசிரியனாகப் பணியாற்றிய போது ஓர் ஆண்டு இளங்கலை முதலாண்டு மாணவர் களுக்கு வைக்கப்பட்டிருந்த செய்யுள் பாடப் புத்தகத்தில் தொடர்ந்து இடம் பெற்ற முதல் மூன்று பாடங்கள் 'வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம்' என்ற கருத்தைப் போதிக்கிற சாமியார்ப் பாடல்கள்.

வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டிய வயதில் வாழ்க்கையை வெறுக்கக் கற்றுக் கொடுப்பதா?

பூக்கின்ற பருவத்தில் மலர்ச் செடிகளுக்கு வெந்நீர் ஊற்றும் வேலையல்லவா இது?

உயர்ந்த சிகரங்களைத் தொட வேண்டும் என்ற ஆசையில் சிறகுகளை விரிக்கும் பறவைகளை உற்சா கப்படுத்துவது கல்வியா? இல்லை, ஊனப்படுத்துவது கல்வியா?

'பித்தன்' என்ற என் கவிதைத் தொகுப்பில் நான் எழுதியிருந்தேன்:

பித்தன் வெயிலுக்காகப் பள்ளிக் கூடத்தில் ஒதுங் கினான். குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து அவன் சொன்னான்:

புத்தகங்களே! சமர்த்தாயிருங்கள். குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்.

ஆனால் நடப்பதென்ன?

குழந்தைகளைப் புத்தகங்கள் கிழித்துக் கொண் டிருக்கின்றன அல்லவா?

விஞ்ஞான வெளிச்சத்தைப் போதிக்க வேண்டிய புத்தகங்களில் அஞ்ஞான இருட்டுகளைப் போதிக்கும் பாடங்கள் உண்டா? இல்லையா?

மனித நேயத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய புத்தகங்களில் பேத உணர்வுகளை உண்டாக்கும் நச்சு விதைகள் உண்டா? இல்லையா?

சில கதைகள் நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. அதனாலேயே அந்தக் கதை களுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்பட்டு விடுகின்றன. இந்த மதிப்பு அக்கதைகளை விமர்சனப் பார் வையோடு பார்க்க விடாமல் தடுத்து விடுகிறது.

புகழ் பெற்ற கதைகள் என்றா லும் அவற்றால் தவறான விளை வுகள் ஏற்படும் என்றால் சமூக நலன் கருதி ஒன்று அவற்றை நிரா கரிக்க வேண்டும் அல்லது மாற்ற வேண்டும்.

சீன நாட்டில் தவறான கருத்துக் களை உண்டாக்கும் பழங் கதை களை மாற்றும் முயற்சி நடக்கிறது.

அப்பத்திற்காகச் சண்டையிட்டுக் கொண்ட பூனைகளிடம் மத்தியஸ்தம் செய்வதாக வந்த குரங்கு, பூனைகளை ஏமாற்றி அப்பம் முழுவதையும் தானே உண்ட கதையை அவர்கள் மாற்றியிருக்கிறார்கள்.

மத்தியஸ்தம் செய்வதாக வந்த குரங்கு தங்களை ஏமாற்றி அப்பத்தைத் தானே உண்டு கொண்டிருப்பதைப் பார்த்த பூனைகள் குரங்கின் வஞ்சகத்தை அறிந்து கொண்டன. உடனே இரண்டும் கோபத்தோடு குரங்கின் மீது பாய்ந்து பிறாண்ட ஆரம்பித்தன. குரங்கு பயந்து போய் அப்பத்தைப் போட்டு விட்டு ஓடி விட்டது. நமக்குள் சண்டையிட்டுக் கொண்டதால்தானே அந்நியன் இடையில் புகுந்து நம் அப்பத்தை உண்ண நினைத்தது? இனிமேல் நாம் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டு இரண்டு பூனைகளும் அப்பத்தைத் தாமே பகிர்ந்து உண்டன என்று கதையை மாற்றி விட்டார்கள்.

காக்கை நரிக் கதையையும் இப்படி மாற்றலாம் என்று நினைக்கிறேன்.

நரி வடையை எடுத்துக் கொண்டு ஓடுவதோடு கதை முடியக் கூடாது. மேலும் கொஞ்சம் சேர்க்க வேண்டும்.

அப்போது அந்தப் பக்கம் பாட்டியின் பேரன் வந்தான். காக்கை பாட்டியின் வடையைத் திருடிக் கொண்டு பறந்ததையும், அதை ஏமாற்றி நரி வடையை அபகரித்துக் கொண்டு ஓடுவதையும் பார்த்தான்.

அவனுக்குக் கோபம் வந்தது. அவன் கையில் உண்டிவில் இருந்தது. அவன் ஒரு கல்லை எடுத்து உண்டிவில்லில் வைத்து நரியின் முகத்தைப் பார்த்து அடித்தான். நரி வலி பொறுக்க முடியாமல் அலறியபடி வடையைப் போட்டு விட்டு ஓடியது. அவன் காக்கை யையும் கல்லால் அடித்தான். அதுவும் கத்திக்கொண்டு பறந்து போய்விட்டது. அதற்குப் பிறகு திருட்டுக் காக்கைகளும், வஞ்சக நரிகளும் அந்தப் பக்கம் வருவதில்லை, என்பதாகக் கதை இருக்க வேண்டும்.

அப்போதுதான் பிள்ளைகளுக்கு அக்கிரமத்தை எதிர்க்கும் துணிவு வரும். 'காக்கை'களும் 'நரி'களும் பயப்படும். 'வடை 'கள் பத்திரமாக இருக்கும்.

பாடப் புத்தகங்கள் பாலூட்டும் தாய்கள். ஆனால் சில நேரங்களில் பூதகிகளும் பாலூட்ட வரலாம்.

கண்ணன் சிறு பிள்ளையாக இருந்த போது அவனைக் கொல்வதற்காக மார்பகங்களில் நச்சுப் பாலோடு வந்தாளே பூதகி, அதைப் போல.

கண்ணன் "தெய்வத்தின் அவதாரம்". எனவே பூதகியைப் பற்றி அறிந்து கொண்டான். பாலோடு சேர்த்துப் பூதகியின் உயிரையும் உறிஞ்சிக் கொண்டான் என்பது கதை.

நம்முடைய பிள்ளைகள் "தெய்வ அவதாரங்கள்" அல்ல. எனவே நச்சுப் பாலோடு வரும் "பூதகிகளிட மிருந்து" அவர்களை நாம்தான் காப்பாற்ற வேண்டும்."

- நெற்றியடி - பொறி தட்டும் கேள்விகள், புத்தாக்கச் சிந்தனைகள். பாட திட்டக் குழுவினர்களே, புத்தகங் களிடமிருந்து - குழந்தைகள் கிழிபடாமல் இருக்க அவர்களைக் காப்பாற்றுங்கள்.

(முடிந்தது)

-  விடுதலை நாளேடு, 23.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக