பக்கங்கள்

புதன், 17 அக்டோபர், 2018

அறிவோமா? - குடற்புண் பற்றி! (1,2&3)


உடலில் ஏற்படும் குடல்புண் - அல்சர் (Ulcer) பற்றிய வயிறும் -வாழ்வும் - குடற்புண் சிகிச்சைகள் என்பதைப்பற்றி தஞ்சையில் உள்ள பிரபல குடல் அறுவை சிகிச்சை நிபுணர் - மருத்துவர் - டாக்டர் நரேந்திரன் (Ph.D) அவர்கள் நமது 'பெரியார் மெடிக்கல் மிஷன்', பெரியார் நூலக வாசகர் வட்டம், திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் (10.10.2018, சென்னை பெரியார் திடலில்) மிகச் சிறந்ததோர் விரிவுரை - விளக்கவுரை நிகழ்த்தியும், கேள்விகளுக்குப் பதில் அளித்தும் (இரண்டும் இணைந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குமேல்) உரையாற்றினார்.
'வகுப்பெடுத்தார்' என்பதே பொருத்தமான சொற்றொடர் ஆகும்.
தலைமை தாங்கிய பிரபல பொது மருத்துவர் பேராசிரியர் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்களும் அவருக்கே உரித்தான முறையில் அருமையாக - வந்திருந்தோருக்குப் 'பாடம்' நடத்தினார்.
அவர் கூறியவற்றில் அன்றாட வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பல மனச் சிக்கல்களை எளிமைப் படுத்திப் பேசினார்.
தினம் தினம் காலையில் எழுந்தவுடன் கழிப் பறைக்குச் சென்று மலம் கழித்தலை ஒரு பழக்கமாக்கிக் கொள்வது உடல் நலத்திற்கு மிகப் பெரிய உதவிடும் செயல்.
அமர்ந்து சில நிமிடங்கள் இருந்து பழக்கப்படுத்திக் கொண்டால் நமது உடலின் மணி (Body Clock) அதற்குப் பெரிதும் ஒத்துழைக்கும்; தவறி ஒரு நாள் மலம் கழிக்கா விட்டாலும்கூட சிலர் அதனையே பெரிதாக நினைத்து பதற்றம் அடைந்து, ஏதோ கிடைக்க வேண்டிய  ஒன்று கிடைக்காமல் இழந்து விட்டதுபோல மனசஞ்சலம் (Obsession) கவலை அடைவார்கள். அது தேவை யில்லை,  வேண்டியதில்லை.
மலச்சிக்கலால் எவரும் செத்ததாக வரலாறு கிடையாது. இயல்பாக அந்த உடல் உறுப்புகளே அதனை வெளியே தள்ளி விடும்.
பெருத்த உடல்  (Obesity) பருமன் இருப்பவர் களுக்குக் குடல் புண் வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு. மதுப் பழக்கம், காரத்தை அதிகம் எடுத்து உண்ணல், சில தொற்றுக் கிருமிகள் (வைரஸ்) - இவற்றால் ஏற்படலாம்!
அதிக மது குடிப்பவர்களுக்குத்தான் இந்த 'அல்சர்' குடற்புண் ஏற்படும் என்பதில்லை.
'Non - alcoholic cirrhosis of liver' என்ற நோய் - மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட ஏற்படக் கூடும். வயிறுபெருத்தல் ("மகோதரம்" - என்று கூட கிராமங் களில் கூறுவதுண்டு) இதில் ஒரு சிறு பகுதியை வெட்டி எடுத்து Biopsy ஆய்வுக்கு அனுப்பி, இதில் புற்று நோய் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து அதற்கேற்ப தக்க சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது!
புகைபிடித்தல் (Smoking) இதற்கு மற்றொரு முக்கிய காரணமாகும். புகை பிடிப்பதால் நுரையீரல்கூட பாழாகி புற்று நோய்க்கு வரவேற்புக் கொடுக்கும்
சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் இதனை எதிர்பார்க்கத்தான் வேண்டும் - எச்சரிக்கையாக (பரிசோதனை மூலம்) இருப்பது எப்போதும் நல்லது!
தவறிப் போய் இந்த அல்சர் புண் நோய் முற்றுமே யானால், அந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக பட்சம்  5 ஆண்டுகள் வாழக் கூடும்; இடையிலும் மரணம் வரக்கூடும்!
உணவில் அதி-காரம் தவிர்ப்பீர்களாக! உடல் பருமனுக்கும் இடந்தராதீர்!
இப்படி பலப் பல பயனுள்ள அறிவுரைகளை வழங்கி, பிறகு குடற்புண் நோய் மருத்துவர்தம் விளக்கத்திற்குச் சரியான நுழைவு வாயிலை அமைத்துக் கொடுத்தார் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன்.
டாக்டர் நரேந்திரன் விளக்கங்களை அடுத்து பார்ப்போம்!
(தொடரும்)
-விடுதலை நாளேடு, 12.10.18
சென்னை,  'பெரியார் மெடிக்கல் மிஷன்', பெரியார் நூலக வாசகர் வட்டம், திராவிடர் கழகம் - இணைந்து நடத்திய நலவாழ்வு பரப்புரைக்கான சிறப்புக் கூட்டத்தில் ஆய்வு சொற்பொழிவு போன்றதொரு அருமையான மருத்துவ அறிவுரை - தெளிவுரையை - நிகழ்த்தினார் தஞ்சையில் உள்ள பிரபல, உணவு செரிமான பேராசிரியர் டாக்டர் நரேந்திரன் அவர்கள்!
இவர் மருத்துவக் கருத்துக்களை எளிய தமிழில், கரடு முரடாக இல்லாமல் - மக்கள் விரும்பும் வண்ணம் இதுவரை சுமார் 35 புத்தகங்களுக்கு மேல் எழுதி, பல நூல்களுக்கு அரசாங்கம் முதலிய பல்வேறு அமைப்பு களின் சார்பில் சிறப்பான முறையில் பரிசுகளையும் பெற்ற, கலைமாமணி முதலிய விருதுகளைப் பெற்ற புகழ் வாய்ந்த பெருமகன் ஆவார்.
கணினியின் உதவியோடு தொடுதிரை விளக்கமாக அரியதோர் விளக்கத்தினை தந்தார்.
1. மருந்து முறை - மருந்து மாத்திரை, பரிசோதனை இவை எல்லாம் அவ்வப்போது புதிய புதிய கண்டுபிடிப்புகளின் காரணமாகவே மாறி வருகின்றன.
எடுத்துக்காட்டாக, 1972 வரை ஒரு கட்டம், அடுத்து 1982 - 10 ஆண்டுகள் மற்றொரு  கட்டம்.
2. காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. நமது பிள்ளைகள், குழந்தைகள் குறிப்பாக மாணவிகள் காலை உணவு சாப்பிடாமல், இரவெல்லாம் தொலைக்காட்சி அல்லது கைத் தொலைபேசி, 'செல்' வாழ்வுடன் காலத்தைக் கழித்துவிட்டு, காலையில் அவசர அவசரமாக எழுந்து - காலைக் கடன்களைக்கூட சரியாகக் கழிக்காமல் 'அரக்க பறக்க' ஓடுவது - வீடுகளில் 'சாப்பிட்டுப் போ' என்ற பெற்றோர்கள், பாட்டி, தாத்தாக்களிடம் சண்டை பிடித்து ஓடோடி பள்ளி, கல்லூரிக்கோ, வேலைக்கோ, செல்வது அநேகமாக எல்லா வீடுகளிலும் நிகழும் அன்றாட நடவடிக்கை தானே!
3. குடல் புண் ஏற்படுவதற்கு அரைகுறையாக சாப்பிட்டு - அவசர கதியில் ஓடுவதால் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் பித்தப்பையில் கற்கள்கூட உண்டாகும் அளவில் உடல் நோயை - வலியைத் தருவதாகவும்கூட அமையும்.
4. Curry, Worry, Hurry!- கறி, கவலை, வேக வேகம்!  (உணவு)இம்மூன்றும் குடல் புண்களை ஏற்படுத்தக் கூடியவை என்று அழகாக குறுகத்தரித்த குறள் போல விளக்கம் அளித்தார் டாக்டர் நரேந்திரன்!
5. காபி, தேநீர், மது இவைகளால் குடல்புண் - அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது. (ஒரு நாளைக்கு 6,7 தடவை குடிப்பது, மது அளவின்றி குடிப்பது இவைகள் நோய்க்கு 'சிவப்புக் கம்பள' விரிப்பு வரவேற்புத் தருவதாகும்.
6. சாலை ஓரம் உள்ள பாணிபூரிகள் வாங்கி கண்டபடி சாப்பிட்டு பசியைப் போக்க வயிற்றை நிரப்புதல்
(தவறான பாலின உறவின் காரணமாக ஏற்படும் கருவைக் கண்டு வெட்கமும், வேதனையும் படும் மனித இனம், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி, உண்ணல், உறிஞ்சல், மது குடித்தல் போன்றவை களுக்காக ஏனோ வெட்கப்பட மறுக்கிறது! ஒழுக்கச் சிதைவு உண்ணுதலில்கூட உண்டே! இதை ஏனோ வளரும் மனிதர்களாகிய நாம் எண்ண - ஏற்க மறுக்கிறோம்)
"ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா (தம்பி) வளர்ச்சி"
என்றார் பாட்டுக்கோட்டை அரசர் தோழர் பட்டுக் கோட்டை  கலியாண சுந்தரம் கவிஞர்!
7. மன அழுத்தமும் (Stress) குடல் புண்ணுக்கு முக்கிய காரணம் ஆகும்.
(தொடரும்)
-விடுதலை நாளேடு, 13.10.18
13.10.2018 அன்று வந்த வாழ்வியல் சிந்தனையின் தொடர்ச்சி...
சாப்பிட்ட பிறகு நாம் உண்ட உணவு கீழே செல்லாமல், எதிரெடுத்துவிடும். அதாவது உண்ட உணவு மேலே வருகிறது. திரவமான கார உணவாக அது இருந்தால், அந்த எரிச்சல் சில நேரங்களில் மூக்கு, காதுவரைகூட எகிறி உறுத்தும் நிலை ஏற்படுவது உண்டு.
எச்.பைலோரி என்ற கிருமி நோய்கள் காரண மாக அதிகமான வலி போக்கி மருந்துகளை அவ்வப்போது எடுத்துக் கொள்வதாலோ, புகை பிடித்தல் காரணமோ - அல்சர் (Ulcer) குடற்புண் ஏற்படக் கூடும்.
Acid Reflux என்ற எதிரெடுத்தலைத் தடுக்க இப்படி ஆங்கில மருந்துகள் ரானிடிடின் (Ranitidine), பாண்டோ பிரசோல், பான்-டி போன்றவை களை - வயிற்றில் இப்படி செரிமாணமின்மை நீர் அதிகமாக மேலே வருவதை தடுக்க மருத்துவர்கள் கொடுப்பதுண்டு. ஆஸ்பிரின் 75 வரை தொடர்ந்த வலி போக்கி மருந்துகளைக்கூட -  அவ்வப்பொழுது டாக்டரைக் கேட்காமல், மருந்து கடைக்காரரிடம் கேட்டு - பாதிக்கப்பட்டவர்களே - அவரவர் பழக்கம் - அனுமானப்படி சாப்பிட்டு இதை அதிகப் படுத்திக் கொள்வதும் நடைமுறையில் உள்ள பழக்கமாகி விடுகிறது.
மேலை நாடுகளில் டாக்டர் மருந்து எழுதிக் கொடுத்தால் ஒழிய - இப்படிப்பட்ட மருந்து களையோ மற்றும் Antibiotic என்ற தொற்றுநோய் நிவாரண - கடும் மருந்துகளையோ மருந்து கடை களில் வாங்க முடியாது. நம் நாட்டில் அந்தப்படி கட்டுப்பாடு சட்டத்தில் உள்ளது. பட்டியலில் உள்ள மருந்துகள்'' என்ற மருந்துகளை (Scheduled Drugs) டாக்டரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால்தான் விற்கவே முடியும் என்பது.
ஆனால், நடைமுறையில் - வியாபாரத்தில் அப்படி ஒரு கட்டுப்பாடான நடைமுறை கடை பிடிக்கப்படாததால், நோயாளிகளும், மருந்துக் கடைக்காரர்களின் பழக்கத்தினாலும், இதற்கு மருந்து கொடுங்கள் என்று நோயாளி கேட்டவுடன், இவர்களே பாதி மருத்துவர்போல, இந்த மாத்திரை, மருந்தை வாங்கி 3 நாள்கள் சாப்பிடுங்கள்; எல்லாம் சரியாகப் போய்விடும்'' என்று அறிவுரை' கூறி, தமது விற்பனையைப் பெருக்கிக் கொள்வது நம் நாட்டில் சர்வ சாதாரணம் - இது ஒரு தவறான பழக்கம்.
டாக்டர்கள் மருந்து எழுதிக் கொடுப்பதில்கூட - நம் அனுபவத்தில் கண்ட ஒரு நடைமுறை உண்மை என்னவென்றால், பெரிய ஸ்பெஷலிஸ்டு டாக்டர்கள் நோயாளியை பரிசோதித்துவிட்டு ஒரு 3, 4 மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்து விடுவார்கள்.
ஆனால், வழக்கமாக நோயாளியை கண்டு, நோய் - அவரது உடல் நிலைபற்றிய வரலாறு அறிந்த குடும்ப மருத்துவர் (Family Physician) எந்த மருந்து குறிப்பிட்ட இவருக்கு உதவ முடியும், எதைக் கொடுத்தால் சில நேரங்களில் குறிப்பிட்ட நோயாளியின் உடல் ஒத்துழைப்பு தராது என்பதை உணர்ந்தவர்கள் - ஸ்பெஷலிஸ்டு டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துகளைக்கூட எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறிவிடுவார்கள்! அதுதான் சரியான முறை. எனவே, எடுத்த எடுப்பிலேயே ஸ்பெஷலிஸ்டு, சூப்பர் ஸ்பெஷலிஸ்டு (Specialist & Super Specialists) டாக்டர்களிடம் செல்லாமல் இருப்பது நல்லது!
எச்.பைலோரி கிருமியை அழிக்கவேண்டும்,
குடிநீர்மூலம் இக்கிருமிகள் பரவிட வாய்ப்பு உண்டு.
எண்டோஸ்கோப்பி (Endoscopy) மூலம் அறிந்துகொண்டு மேற்கொண்டு மருத்துவ சிகிச் சையை செய்துகொள்ளலாம்.
மன அழுத்தம் - கவலை (Worry - Stress) காரணமாகவும் இது ஏற்படக்கூடும்.
தலைக்காயம் - தீக்காயம் ஏற்பட்டாலும், வயிற்றில் குடல் புண், வலி ஏற்படக்கூடும்.
இதற்கான அறிகுறிகளில் முக்கியமானது நெஞ்சுக் குழி எரிச்சல், மேல் வயிறுப் பருத்தல், வலி, குமட்டல், நடுநிசியில் - அதிவிடியற்காலை வேளையில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டிய உணர்வு - வலி குறைந்தவுடன்கூட - வயிறு நிரம்பி விட்டதைப் போன்ற உணர்வு - இந்தப் பிரச்சி னைக்கு ஆங்கிலத்தில் ‘GERD' (Gastroesophageal reflux disease) (அமில எதிர்க்களிப்பு) என்று கூறுகிறார்.
(அ) திடீரென எடை :அதிக அளவு குறைதல்
(ஆ) அமிலம் எதிர்த்து மேலே வருதல்
(இ) பசியே இல்லாமல் இருத்தல்
மாரடைப்புகூட சில நேரங்கள் ஏற்பட இது ஒரு அடிப்படைக் காரணமாக அமையக்கூடும்.
எல்லா மேல் பகுதி வயிற்று வலியும் அல்சர் - குடல்புண் அறிகுறி என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது; வேறு நோய்களுக்கான அறிகுறியாக - தொடக்கமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு.
(1) பித்தப்பைக் கல்
(2) நாட்பட்ட கணைய அழற்சி
(3) இரப்பைப் புற்றுநோய்
கேன்சர் (Cancer) என்ற புற்றுநோய் பற்றிய பரிசோதனைக்கான தேவை  - கீழ்க்காணும் அறிகுறிகள் காணப்படும்.
பசியே இல்லாது இருக்கும்; ரத்தச் சோகை போன்ற அறிகுறிகள்.
உணவில் கவனம் தேவை. மிதக்கும் உணவு' என்ற நல்ல சொற்றொடரை கூறினார் டாக்டர் சு.நரேந்திரன்! எண்ணெய், நெய் இவற்றில் மிதக்கும் உணவை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. அவித்த உணவு - இட்லி, இடியாப்பம் போன்ற வையும், காய்கறி - வறுவலைத் தவிர்த்து அவித்து'' உண்ணுதல் நல்லது என்றார்!
கழைக்கூத்தாடிகளுக்கு - குடற்புண் அதிகமாக வர வாய்ப்பில்லை. தலைகீழாக நிற்பது பயன் படுகிறது அவர்களுக்கு வெகுவாக.
எச்.பைலோரி பற்றிய கிருமிகள் CLD Test என் றெல்லாம் பல வளர்ந்த முறைகள் இப்பொழுது வந்துவிட்டன.
இந்நோயை தொடக்கத்தில் கண்டறிந்து விட்டால், பயப்படவேண்டிய அவசியமே இல்லை.
ஒரு சில அறிகுறிகளை நீங்களே யூகத்தின்மூலம் நினைத்துப் ஒரே அடியாய் பயந்துவிடாதீர்கள். மருத்துவர்களின் ஆலோசனைகளை நாடுங்கள். உணவில் கட்டுப்பாடு - வேளைக்குச் சாப்பிடும் பழக்கம் இவைகளைக் கைக்கொள்ளுங்கள்.
- இவ்வாறு விளக்கி கேள்விகளுக்கு சிறப்பான வகையில் பதில் அளித்தார் டாக்டர் நரேந்திரன். கேட்ட அனைவருக்கும் மன நிறைவும், தெளிவும் ஏற்பட்டது என்பதுதான் இப்பொழிவுகளின் வெற்றியாகும்!                                                                                                                                                                                  
-விடுதலை நாளேடு, 14.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக