5.8.2018 அன்று பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் மதுரை முனைவர் வா. நேரு அவர்கள், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய 240 பக்கங்கள் கொண்ட 'காக்கைச் சோறு' என்ற தலைப்பிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றை - எனக்கு வழங்கினார்.
படித்தேன் - சுவைத்தேன் - கவிக்கோவின் இலக்கியச் செறிவும், தமிழ்அறிவும் காலத்தால் அழியாத கருத்துப் பெட்டகங்கள். காலம் அவரை 'இயற்கையின் கோணல்' புத்தி காரணமாக பறித்துக் கொண்டது என்பது கொடுமையோ கொடுமை!
நல்ல பேராசிரியராக அவர் இருந்து அவரால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் இன்றும் புகழ் பெற்ற பேச்சாளர்கள் - கவிஞர்கள் - எழுத்தாளர்கள் ஒளி வீசுகிறார்கள்.
கவிக்கோவின் முதல் கட்டுரையே இன்றைய தமிழ்ப் பாட புத்தகங்களில் உள்ள குறைபாட்டினைச் சுட்டி 'கடிதோச்சி மெல் எறிதலை'ச் செய்வதாக உள்ளது!
பள்ளிகளில் நம்மில் பெரும்பாலோருக்குப் பாடமாக அமைந்ததையே ஆசிரியர் அப்துல் ரகுமான் அக்கட்டுரையில் சுட்டி, நெற்றியடிக் கேள்வியை நேர்மையுடன் கேட்கிறார்.
புத்தாக்கச் சிந்தனைகள் இளைய தலைமுறைக்கு வர, பாட புத்தகங்கள் அறிவை, விரிவு செய்து, தூண்டத் துணை நிற்க வேண்டும்.
இன்று...? அப்படி இல்லையே! இதோ சில எடுத்துக்காட்டுகள்.
எடுத்துக்காட்டு ஒன்று (பக்கம் 12)
'பூதகியின் பால்' என்ற முதல் கட்டுரையின் முதல் பகுதி இன்று (நாளை மறுபகுதியைப் பார்க்கலாம்).
"கஸபியான்கா கதையை ஒரு நாள் வகுப்பில் சொன்னேன்.
கஸபியான்கா ஒரு மாலுமியின் மகன். அவனுக்குக் கப்பலைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. அவன் தந்தை ஒருநாள் அவனை அழைத்துச் சென்று கப்பலைச் சுற்றிக் காட்டினார்.
அப்போது திடீரென்று கீழ்த் தட்டிலிருந்து "தீ... தீ..." என்று கூக்குரல் எழுந்தது. கஸபியான்கா வின் தந்தை அவனை மேல் தட்டில் ஓரிடத்தில் நிற்க வைத்து, "ஏதோ தீ விபத்துப் போலிருக்கிறது. நான் கீழே சென்று பார்த்து வரும் வரை இங்கேயே நில். இங்கிருந்து அசையாதே" என்று சொல்லி விட்டுக் கீழே போனார்.
போனவர் திரும்பி வரவில்லை. தீ விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார். தீ மேலே பரவி கஸபியான்காவைச் சூழ்ந்தது. கப்பலில் இருந்தவர்கள் "சீக்கிரம் நீரில் குதி. அப்போதுதான் தப்பிக்க முடியும்" என்று அவனைப் பார்த்துக் கத்தினர். அவனோ "உயிர் போனாலும் பரவாயில்லை. தந்தை சொல்லைத் தட்டக் கூடாது" என்று அங்கேயே நின்றான். அதனால் அவனும் தீயில் சிக்கி உயிரிழந்தான். 'தந்தை சொல்லைத் தட்டாத தனயன்' என்று எல்லோரும் அவனைப் பாராட் டினார்கள்.
நான் இந்தக் கதையைக் கூறிவிட்டு "இந்தக் கதையின் மூலம் நீங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்?" என்று மாணவர்களைக் கேட்டேன்.
ஒரு மாணவன் சொன்னான்: "தந்தை சொல் கேட்டால் ஆபத்துத்தான்" மற்ற மாணவர்கள் சிரித்தனர்.
அந்த மாணவன் சொன்னதில் தவறேதுமில்லை. ஒரு பரிசோதனையாகத்தான் நான் இந்தக் கேள்வியைக் கேட்டேன். நான் எதிர்பார்த்த பதிலைத்தான் மாணவன் சொன்னான்.
இது கதை கூட அல்ல. உண்மையில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவம். உயிருக்கு ஆபத்தான நிலையில் கூட தந்தை வாக்கை மீறக் கூடாது என்று தன் உயிரையும் தியாகம் செய்த கஸபியான்காவின் உறுதி பலரை மனம் உருகச் செய்திருக்கிறது. அதனால்தான் இந்தச் சம்பவம் பல நாடுகளுக்கும் பரவி நம் நாட்டிலும் பாடப் புத்தகங்களில் இது தவறாமல் இடம் பெறுகிறது. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் ஓர் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் சாத்தியம் இதில் இருப்பதை உணரலாம்.
மனிதன் எதையும் அதன் பலனைக் கொண்டுதான் மதிப்பான்.
இந்தச் சம்பவம் எதை உணர்த்துகிறது?
தந்தை சொல் தட்டாத தனயனின் தியாகத்தை மட்டுமா? தந்தை சொல் கேட்டதால் அல்லவா அவன் அநியாயமாக உயிரிழக்க நேர்ந்தது? இப்படியும் எண்ண இடம் இருக்கிறதல்லவா?
ஏற்கெனவே தந்தை சொல் கேட்காத தனயர்கள் பெருகி வரும் இக்காலத்தில் இத்தகைய கதைகள் நிலைமையை இன்னும் மோசமாக ஆக்கி விடாதா?
தந்தை சொல் கேட்டதால் ஒருவன் ஆபத்திலிருந்து தப்பினான் என்பதாகக் கதை அமைந்திருந்தால் அல்லவா படிப்பவனுக்கும் தந்தை சொல் கேட்பது நல்லது என்ற எண்ணம் ஏற்படும்? எதிர்மறையான அல்லது தவறான கருத்துக்களை ஏற்படுத்தும் பல கதைகளைப் பாடங்கள் என்ற பேரில் நாம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கெ()டுத்துக் கொண்டிருக்கிறோம்".
நமது பாடத் திட்டங்கள் விழிப்புணர்வு பெறும் வகையில், சமயோசிதமாக நடந்து கொள்ளும் முறையில் இன்று பெரிதும் சொல்லிக் கொடுக்கப்படு கின்றனவா? இல்லையே; அவர் கேட்கும் கேள்விப்படி அறிவை, தன்னம்பிக்கையுடன் சரியான முடிவுகளை எடுக்க விடாமல் கெடுத்துக் கொண்டும் - தடுத்துக் கொண்டும் தானே உள்ளது!
பழைய காக்கை - நரிக் கதையை....
(நாளை பார்ப்போம்)
- விடுதலை நாளேடு, 19.10.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக