'ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு' என்பது பழமொழி.
எதையும் அளவிட்டு, அளவறிந்து, திட்டமிட்டு வாழ்வில் செய்தால் நமது வாழ்க்கை பயனுள்ள தாகவும், பிறகு வருந்தத்தகாததாகவும் கூட அமையக்கூடும்!
செலவழிப்பதில்கூட திட்டமிட்டு, கணக்குப் பார்த்துச் செலவழிப்பது, செலவழித்ததை மறந்து விடாமல் செலவு கணக்கில் ஒரு சிறு குறிப்பில் எழுதி வைப்பதும் நம்மை மேலும் செம்மையுறச் செய்யும்!
நம்மில் பலரும் செலவழித்துப் பழக்கப்பட்ட வர்களே! திட்டமிட்டு செலவழித்தோ அல்லது முன்னுரிமை எதற்கு - எந்த அளவு இதற்கு நம்மிடம் உள்ள நிதியை ஒதுக்கிட முடியும் என்று ஆழ்ந்து யோசித்துச் செலவழிப்பதில்லை. அப்படிப்பட்ட வர்கள் வாழ்க்கை கடனாளி வாழ்க்கையாகவும், வாங்கிய கடனை முறையாகத் திருப்பிச் செலுத்த இயலாமல், சாக்குப் போக்கு கூறி ஓடி ஒளியும் தலைமறைவுக்காரராக ஆக்கி, தமது நாணயத்தை இழந்தவர்களாகிவிடும் மிகப் பெரிய சமூக அவலத் திற்கு ஆளாகி விடும் விரும்பத்தகாத நிலையும்கூட உள்ளது!
பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் படித்த ஷேக்ஸ்பியரின் ஒரு வரி அறிவுரை வசனத்தை, அவர் படைத்த ஒரு பாத்திரம் கூறுவதாக நமக்குக் கற்பித்தார் நமது பேராசிரியர்!
'Neither a lender nor a borrower be'
கடனும் கொடுக்காதே, கடனும் வாங்காதே'
- இந்த அறிவுரையை பெரிதும் - நான் அறிந்த வகையில் - வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகிய தலைவர் தந்தை பெரியார் அவர்களாவார்கள்!
'மண்டிக்கடை ஈ.வெ.ராமசாமி நாயக்கராக' இருந்த காலத்திலேயே அவர் இதனைக் கற்றவர் என்றாலும் தொழில் வாழ்க்கைக்குப் பொருந்தாது; தனி வாழ்க்கைக்கு மட்டும்தான் என்பதையும் நன்கு புரிந்தவர்!
அய்யா தந்தை பெரியார் அவர்களிடம் யாராவது கடன் கேட்டால் - கூடுமானவரை மறுத்து விடுவார் - முகதாட்சண்யம் பார்க்காமலேயே கூட. இப்படி தன்னிடம் வந்து கேட்பவர்களிடம் முகத்திற்கு நேரே சொல்வார்.
"என்னிடம் கடனாக நீங்கள் பெற்று, உறுதி யளித்தபடி திருப்பிக் கொடுக்க இயலாது போகும் போது உங்களுக்கும் தர்மசங்கடம்; எனக்கும் மன வேதனை - இரண்டும் வேண்டாம்! இதோ ஒரு சிறு தொகை - இதை நான் தங்களுக்கு நன்கொடை யாகவே தந்துவிடுகிறேன்; பெற்றுக் கொள்ளுங்கள். இதை எனக்குத் திருப்பித் தர வேண்டாம்" என்றே கூறுவார்கள்!
தனது நண்பர்களின் வேண்டுகோள் காரணமாக, சில மில்களில் முதலீடு செய்து அந்த வட்டித் தொகையைப் பெருக்கி, இயக்கப் பணத்தில் சேர்த்துப் பெருக்கியே மகிழ்ந்திருக்கிறார்!
அந்த மில் நிர்வாகத்திடமிருந்து, குறிப்பிட்ட (3 மாத வட்டித்தொகை) தேதியில் டி.டி.யாக வரவில்லை என்றால் ஓரிரு நாள் பொறுப்பார்; உடனே கடிதம் எழுதி உடன் தொகையை அனுப்ப நினைவூட்டுவார்; அதன் மேலும் தாமதமானால், சிக்கனத்திற்கே பேர்போன தந்தை பெரியார் அந்த 'பாக்கியாளருக்கு' தந்தியே அனுப்புவார். (இதில் தந்தி செலவு பார்க்க மாட்டார்) அவர் வியாபாரப் பாரம்பரியத்தில் வந்ததால், வந்த வட்டித் தொகையை உடனே வங்கியில் போட்டு வைத்து, அதன்மீது வட்டி இழப்பு ஏற்படாமல் பெருக்க வேண்டுமென்றே விரும்புவார்!
பலருக்கு உதவும் போது கூட, சிறுதொகை ரூ.50, ரூ.100 போன்றவைகளுக்குக்கூட, 'செக்' காசோலை யாகவே கொடுப்பார். செலவு கணக்குப் பார்ப்பதற்கு அது வசதியாக இருக்கும். என்றாலும் அதையும் மறக்காமல் தனது டைரியில் குறித்து வைப்பார்.
வழிச்செலவுக்குப் பணத்தை (50 ரூபாய்தான் அப்போது) வாங்கி - சுருக்கெழுத்தில் கொடுத்தவர் முன் எழுத்தைப் போட்டு - வீ(ரமணி) க(டலூர்) கூட்டத்திற்கு அழைத்து அய்யாவிடம் 25 ரூபா தந்து 25 ரூபாய் பாக்கி என்பதையும் மற்றொரு பக்கத்தில் (கடைசிப் பக்கத்தில்) குறித்து வைத்து, நினைவாக அவ்வூரில் கூட்டம் முடித்தோ, முன்போ கேட்பார் - இப்படிச் சிக்கனமாகச் சேர்த்துத்தான் மக்களுக்கே விட்டுச் சென்றார்.
Time Management என்பது எவ்வளவு முக் கியமோ அவ்வளவு முக்கியம் பணத்தை சேமிப் பதும், செலவழிப்பதும் Money Management ஆகும்!
ஒரே ஒரு வேறுபாடு இரண்டிற்கும் எது என்றால் பணத்தைச் செலவழித்தால் மீண்டும் சம்பாதிக்க முடியும்; நேரத்தைச் செலவழித்து விட்டால் செல வழிக்கப்பட்ட நேரத்தை - காலத்தை - மீண்டும் வாழ்நாளில் திரும்பப் பெறவே முடியாது!
தந்தை பெரியாரின் பொது வாழ்க்கையிலிருந்து கற்க வேண்டிய பாடங்கள் அநேகம்; அதைவிட அய்யாவின் தனி வாழ்விலிருந்தும் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு. அவர்களைப் பொறுத்த வரை தனிவாழ்வு - பொது வாழ்வு என்ற இரண்டும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை; இரண்டறக் கலந்தவையாகும்!
என்றாலும் இப்படி எதையும் கணக்கிட்டுச் செலவழிப்பது, வரவு-செலவுகளைப் பதிய வைத்து அசைபோட்டுப் பார்ப்பது ஒவ்வொருவரின் வாழ்க் கையிலும் உயர்வைத் தரும்!
அய்யா தந்தை பெரியாரின் 'டைரிக் குறிப்பு' எப்படி வருமான வரித்துறை கீழமை அமைப்பு அவர்மீது சாட்டிய ஆதாரமற்ற குற்றம் - "வரு மானத்தை மறைத்தார்" என்பது! (அவரால் ஆளாக் கப்பட்டவர்கள் ஆதாரமற்ற புகார்களை எழுதிப் போட்டதன் விளைவு) அழிக்கப்பட வொன்னாத சரியான மருந்தாகி, வழக்கை வென்றது எப்படி என்பதை நாளை பார்ப்போம்!
- நாளையும் வரும்
- விடுதலை நாளேடு, 25.10.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக