பக்கங்கள்

செவ்வாய், 23 அக்டோபர், 2018

'கவிக்கோவின் காக்கை சோறு' எழுப்பும் கேள்விகள் (2)

தாய்ப்பறவையின் கரிசனம்!




'கவிக்கோ' அப்துல் ரகுமான் அவர்கள் கஸபியான்கா பாடம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத் தும் தாக்கம் எப்படிப்பட்டது என்பதை சுட்டிக் காட்டியதை (19.10.2018) 'வாழ்வியல் சிந்தனை'க் கட்டுரையில் 'காக்கைச் சோறு' என்ற அவரது கட்டுரைகள் தொகுப் பிலிருந்து எடுத்துக் காட்டியிருந் தோம். அதே கட்டுரையின் மற் றொரு பகுதி! (அந்த கட்டுரையின் தலைப்பு 'பூதகியின் பால்' என்ப தாகும்).

"காக்கை நரிக் கதை"யை எடுத்துக் கொள்வோம்.

"பாட்டி வடை சுட்டுக் கொண்டி ருந்தாள். அவள் அசந்திருந்த நேரம் பார்த்தது ஒரு காக்கை ஒரு வடையைத் திருடிக் கொண்டு பறந்தது. அது மரக் கிளையில் உட்கார்ந்து வடையைத் தின்னப் போகும்போது நரி ஒன்று அதைப் பார்த்தது. உடனே "காக்கையே! நீ மிக இனிமையாகப் பாடுவாயாமே? எங்கே ஒரு பாட்டுப் பாடேன்" என்று கேட்டது. முகஸ்துதியில் மயங்கிய காக்கை பாடுவதற்கு வாயைத் திறந்தது. வடை கீழே விழுந்தது. நரி அதை எடுத்துக் கொண்டு ஓடி விட்டது" என்று கதை முடிகிறது.

"நீ ஒருவனை ஏமாற்றினால் இன்னொருவன் உன்னை ஏமாற்றுவான்" என்ற நீதி இந்தக் கதையில் இருப்பது உண்மைதான். ஆனால் ஏமாற்றிய நரிக்கு வடை கிடைத்து விட்டதே! அதனிடமிருந்து வடையை யாரும் பறிக்கவில்லையே?

'வடை வேண்டுமென்றால் கஷ்டப்பட்டுச் சுட வேண்டிய தில்லை. வடை சுடுகிறவர் அசந் திருக்கும் நேரம் பார்த்துத் திருடி னால் வடை சுலபமாகக் கிடைத்து விடும். அதைவிட ஏமாறும் சோண கிரியாகப் பார்த்து முகஸ்துதி செய்து மயக்கினால் வடை மிகச் சுலபமாகக் கிடைத்து விடும்' என்று ஒருவன் நினைப்பதற்கும் இந்தக் கதையில் இடமிருக்கிறதா? இல்லையா?

அப்படி நினைத்ததால் தானே 'வடை' வேண்டு மென்றால் கஷ்டப்பட்டுச் சுட வேண்டியதில்லை என்ற எண்ணம் பரவி வருகிறது.

அப்படி நினைத்ததால் தானே நாட்டில் 'காக்கை' களும், 'நரி'களும் பெருகி வருகின்றன.

கள்ளமில்லாத பிள்ளைகளின் உள்ளங்களில் இத்தகைய கதைகளின் மூலம் நச்சு விதைகளை நாம் தூவுகிறோமா? இல்லையா?

திருடுதல், ஏமாற்றுதல் என்ற 'பெரிய மனிதக் கலைகளை' அவற்றை அறியாத தூய உள்ளங்களுக்கு இதன் மூலம் நாம் கற்றுத் தருகிறோமா? இல்லையா? பாடப் புத்தகங்களைத் தயாரிப்போர், பிள்ளை களைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தயாரிக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை.

இன்றைய பிள்ளைகளே இந்நாட்டின் நாளைய குடிமக்கள். வருங்காலத்தில் இந்த நாட்டின் விதியை எழுதப் போகிறவர்கள் அவர்களே. கல்விப் பருவத்தில் அவர்களுக்கு ஊட்டப்படும் கருத்துக்களால் தான் அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு ஊட்டப்படும் கருத்துகள் பற்றி நாம் எச்சரிக்கையாகச் செயல்படுகிறோமா? பொறுப்புணர் வோடு தீவிரமாகச் சிந்திக்கிறோமா? என்பதுதான் கேள்வி.

பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு இரையூட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். தாய்ப் பறவை குஞ்சுகளுக்கு ஊட்ட வேண்டிய இரையை முதலில் தானே தின்னும். பிறகு அதைக் கக்கிக் குஞ்சுகளுக்கு ஊட்டும்.

ஏன் தெரியுமா? இரையில் ஏதேனும் நஞ்சு இருக்கலாம். அதனால் தான் செத்தாலும் பரவாயில்லை. தன் குஞ்சுகள் செத்துவிடக் கூடாது என்பதற்காகவே அவை அப்படிச் செய்கின்றன.

அய்ந்தறிவுப் பிராணிகளுக்கு இருக்கும் உணர்வு கூட ஆறறிவு படைத்த நமக்கு இல்லையென்றால் என்ன அர்த்தம்?"

- சரியான புதிய சிந்தனை இது! புத்துலகம் - கல்வி உலகம் படைக்க இத்தகைய ஆக்கபூர்வ புதுமைகள் பாட திட்டங்களில் இடம் பெற வேண்டாமா?

(நாளையும் ரகுமான் வருவார்)

- விடுதலை நாளேடு, 22.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக