பக்கங்கள்

வெள்ளி, 26 அக்டோபர், 2018

தந்தை பெரியாரும், வரவு-செலவு கணக்கும் (2)


மத்திய அரசின் வருமானவரித் துறையினர் - அவர்களுக்கு, கழகத்தை விட்டுவெளியேறிய தி.பொ. வேதாசலம் அவர்களும், குத்தூசி க. குருசாமி அவர்களும் எழுதியனுப்பிய கடிதம், பெரியாரிடம் உள்ள பணம் பற்றியும், அதற்கு உரிய கணக்கு வரி முதலியன போடவும் தூண்டி எழுதப்பட்டதை வைத்தே 1956-57 முதல் 1963-64; 1965-66, 1966-1967, 1967-68 இப்படி பல ஆண்டுகளுக்கான வருமான வரி செலுத்தவில்லை - வருமானத்தை மறைத்தார் என்று குற்றஞ் சுமத்தி பெரியார் அறக்கட்டளையான, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்பதற்கும், அதே தொகை ஈ.வெ. ராமசாமி நாய்க்கர் என்று தனிப்பட்ட நபர்  ஹோதாவிலும் என்று வரி, அபராத வட்டி இப்படி அய்யா காலத்தில் 15 லட்சம் ரூபாய்; அம்மா பொறுப் பேற்ற பிறகு 60 லட்சம் ரூபாய்;  எனது பொறுப்பில் வந்த வழக்கு I.T. Tribunal என்ற மேல் முறையீட்டு டிரிபியூனல் நடுவத்தில் 80 லட்சம்  ரூபாய் என்றும் வந்தது. இவ்வழக்கு விசாரணையில் நிறுவனம் சார்பில் வாதாடிய பிரபல வழக்குரைஞர் உத்தம்ரெட்டி (ஏற்கெனவே வருமான வரித்துறை பெரிய அதிகாரியாக இருந்து பிறகு வழக்குரைஞர் தொழிலை மேற்கொண் டவர்) "பெரியார் எந்தத் தொழிலையும் 1919க்குப் பின்  செய்யவே இல்லை; பொது வாழ்வில் தான் இருந்தார். அவருக்குத் தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்ட அன் பளிப்புகள், நன்கொடைகளைக்கூட, அவர் சொத்துக்கள்  மூலம் வந்த வருமானம் உட்பட வங்கியில் தான் போட்டு நிறுவனத்திற்குத்தான் அளித்து வந்துள்ளார்!

அவர் வருமானத்தை மறைத்தார் என்பது சரியல்ல.

வழிச் செலவிற்குக் கொடுக்கப்பட்ட - ஒரு கூட்டத்திற்கு 50 ரூபாய் என்றால் அதைத் தோழர்கள் கொடுத்தபோதுகூட பெயருடன், தேதியுடன் வங்கிக் கணக்கில் போட்டு, டைரியில் குறித்து வைத்துள்ளார். இதோ அந்த சில டைரிகள்" என்று இரண்டு நடுவர்களுக்கும் காட்டினார்.

அய்யாவின் எழுத்துக் குறிப்புகளை சரியாக விளங்கிக் கொண்டு படித்துக் காட்ட, நடுவர்கள், நீதிபதிகள் என்னையே படித்துக் காட்டச் சொன்னார்கள். நான் படித்து முன் எழுத்து -சுருக்கியுள்ளதையும் அவர்களுக்கு விளக்கியபோது தந்தை பெரியாரின் பொறுப்பு மிகுந்த நிதி மேலாண்மையைக் கண்டு வியந்து, இதில் வருமானத்தை மறைத்தார் என்ற குற்றச்சாற்றுக்கு ஏது இடம் என்றே கேட்டார்கள். பிறகு தீர்ப்பு ஆணையும், எழுதி, அந்த வரி விதிப்பு முழுவதையும் தள்ளுபடி செய்து, அறக்கட்டளைத் தகுதியை வழங்கினார்கள்!

அய்யா பெரியார் அவர்களுக்கு லெட்ஜர், குறிப்பு, பேரேடு எல்லாம் அவரது பையில் உள்ள டைரியும், 'செக்  புத்தகங்களின் அடிக்கட்டையும்' (Counterfoil) தான். அதில் யாருக்கு இந்த காசோலை கொடுக்கப்பட்டது - என்பதற்கான குறிப்பை அவரது கையிலேயே எழுதி வைத்திருப்பார்கள். அந்த பழைய 'செக்' புத்தகங்களை, அடிக்கட்டைகளையும்கூட அந்த நீதிபதிகளான நடுவர்கள் பார்த்து வியந்தனர்.

சில நேரங்களில் அவருக்கு அவரது டைரிக் குறிப்பின் முன் எழுத்துள்ள நபர் யார் என்பது நினைவுக்கு வராவிட்டால் வலிந்து அதை நினைவூட்டிக் கொள்வார்; முடியாதபோது அன்னை மணியம்மை யாரையோ, தனிச் செயலாளர் புலவர் இமயவரம் பனையோ, எங்களைப் போன்றவர்களையோ கேட்பார். நாங்கள் "அய்யா, இன்னார் இந்த ஊருக்கு தேதி கேட்டு முன் பணமாக பாதி 25 ரூபாய் தந்தார். மற்ற 25 ரூபாய் தங்களைப் பார்க்க வந்த இந்த ஊர் கழகப் பொறுப்பாளர் இன்னார் கொடுத்தார்" என்றவுடன் திருப்தி அடைவார்!

சில்லறை நோட்டுகள் ரூபாய் 90, 95 சேர்ந்தவுடன் அதை 100 ரூபாய் நோட்டாக மாற்றிடவே விரும்புவார். சிக்கனம் சேமிப்புக்காக அவர் கடைப்பிடித்த வழி அது! பக்கத்தில் அம்மாவிடம் கேட்பார். "ரூ.5 இருந்தால் கொடு" என்று! 95+5 = ரூ.100 நோட்டு வாங்கி வா என்பார். மற்றவர் எவரும் வந்து புதிதாக பணம் கொடுத்தால் நினைவு தப்பிய - வாங்கிய 5 ரூபாய், 10 ரூபாய் கடனை அம்மாவிடம்கூட பைசல் செய்து விடுவார்!

100 ரூபாய் நோட்டை சேமிப்பாக்கி வங்கிக் கணக்கில் போடுவார்.

இப்படித்தான் நண்பர்களே, தந்தை பெரியாரின் சிக்கனம் தமிழ் நாட்டின் பொக்கிஷம் ஆகியது. இன்று குழந்தைகள் விடுதி,  ஏராளமான கல்வி நிலையங்கள், நூலகம், படிப்பகம், பகுத்தறிவுப் பிரச்சாரப் பணி, ஏடுகள் என்றெல்லாம் மக்களுக்கே திருப்பி (அவை மூலம்) தரப்படுகின்றன!

எளிமை, சிக்கனம், ஆடம்பரத்தை இயல்பாகவே ஏற்காத மனம் - அவருடைய வாழ்வியல்!

திருச்சியில் மாளிகையில் தங்கியிருந்து  சாப்பிடும் உணவுகூட மிகவும் எளிமை,  ஏராளம் பல காய்கறி வகைகள் சமைக்காது - ஒன்று இருந்தாலே போதும் என்ற நோக்கு!

இப்படிப்பட்ட எளிய, மக்கள் தலைவரை எங்கே காண முடியும்?

விளம்பரப்படுத்திக் கொள்ளாத எளிமை, விரும்பி வாழ்ந்த சிக்கனம், வெறுக்கப்பட்ட ஆடம்பரம் - இவைதாம் பெரியார்! நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும்கூட! இல்லையா?

- விடுதலை நாளேடு, 26.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக