பக்கங்கள்

புதன், 8 ஜூன், 2016

பல நேரங்களில் பல மனிதர்கள்!


மனிதர் தம் பகுத்தறிவு, அவர்களைப் பக்குவப்படுத்தும் அனுபவப் பட்டறை யாகும்!
அந்த அனுபவப் பாடங்கள், வயதாலும் வரும்; பல்வேறு காலச் சூழ்நிலையாலும் வரும், நட்பாலும் வரும்.
செல்வமும், செல்வாக்கும் பதவியும், பதவியின்மையும்கூட பல்வேறு கசப்பான அனுபவப் பாடங்களுக்கு ஆசான்களாகத் திகழுவனவாகும்!
உலக வாழ்வில், செல்வம் சேர்த்தோர் பின் ஒரு ‘காக்காய் கூட்டம்‘ சுற்றுக் கோள்களாக வளைத்தே நிற்கும்! மற்றவர் களுக்கு எளிதில் புரியும் முகமன்கூட, தகுதியில்லாமல் வெறும் புகழுரை கேட்கும் புதுப் பணக்காரர்களுக்குப் புரிவதில்லை!
அதுபோலவே திடீர்ப் பதவிகள், ஏதோ லாட்டரிப் பரிசுகள் போல் சிலருக்கு வந்த நிலையில், அவர்கள் அதை நிரந்தரம் என்று எண்ணி ஆடும் ஆட்டமும், போடும் கூத்தும் பல காட்சிகள் நாட்டில் நடைபெறும் போது, உள்ளுக்குள் சிரிப்பதைத் தவிர வேறு வழிதான் என்ன?
பரிந்துரைக்காக வரும் பலரில், சிறந்தவர் யார் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று கேட்டார் எனது நெருங்கிய நண்பர் ஒருவர்.
நான் அவரிடத்தில் சொன்னேன். (எனக்குள்ள பெரியார் தந்த புத்தியைப் பயன்படுத்தி) அவர் விரும்பியது பரிந்துரையினால் கிடைத்த போது, அவர் வந்து உடனே நன்றி கூறினாரா இல்லையா என்று அளப்பதின் மூலம் அவர் சிறந்த மனிதர்தானா என்று கண்டு கொள்வதைவிட, மற்றொரு அளவுகோலே அதனினும் சரியான அளவுகோல்; அது என்னவெனில், அப்பதவி அவருக்கு - அவர் வேண்டி விரும்பியிருந்தும் கூட, தனக்குக் கிடைக்கவில்லை என்கிற போதும். முன்பு எப்படி சிபாரிசுக்கு வந்து காத்திருந்து வலியுறுத்தினாரோ அதே போன்று கிடைக்காத நிலையை அறிந்த பின்பும்கூட, வந்து நம்மைச் சந்தித்து, அய்யா அப்பதவி எனக்குக் கிடைக்கவில்லை; அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்; என்றாலும் தாங்கள் எனக்குச் செய்த உதவிக்காக எனது ஆழ்ந்த நன்றியை தங்களுக்குத் தெரிவித்துச் செல்லவே வந்துள்ளேன் என்று கூறுபவர்களே! என்றேன்.
மூவகை மனிதர்களை நடைமுறையில் காண்கிறோம்.
1)     கிடைத்தாலும் திரும்பி வந்து நன்றி கூறாத ‘நல்லவர்கள்!’
2)     கிடைத்தவுடன் வந்து நன்றி சொல் லும் சிறந்த நண்பர்கள்!
3)     கிடைக்காதபோதும், வந்து நம்மைச் சந்தித்து, நன்றி கூறும் பண் பாளர்கள்.
எனக்கொரு அனுபவப் பாடம், அய்யா தந்தை பெரியார் அவர்களிடம் கற்றது.
தந்தை பெரியார்  குறிப்பிட்டு பரிந்துரை எழுதி, உரியோருக்கு சொல்லி முயற்சிக்க, கடிதம் கொடுத்து என்னை அனுப்புவார்கள்; நானும் அதை செயல் படுத்தி, அது குறிப்பிட்டவருக்குக் கிடைக்கும்படியான முயற்சிகளைச் செய்வேன்; அய்யாவிடம் உள்ள மிகுந்த நன்மதிப்பு காரணமாக அந்த பெருமகனார், கேட்டுக் கொண்டபடி உதவி  செய்து விட்டு, (சிலர்) என்னை அழைத்து, நீங்கள் வந்து சொன்னதால் தேர்வு செய்து விட்டோம்; அய்யா சொன்னால் மறுக்க முடியுமா? அய்யாவினால் தானே நானே இப்பெரிய பொறுப்பில் உள்ளேன். எனவே, தகுதி இருந்த பலரில் இவரும் ஒருவர் என்பதால் இவரையே தேர்வு செய்து விட்டோம். அய்யாவிடம் சொல்லி விடுங்கள் என்று மகிழ்ச்சியுடன் என்னை அழைத்துக் கூப்பிட்டுச் சொல்வர்.
பிறகு அய்யா சென்னை வரும்போது இதைச் சொல்வோம்; உடனே அய்யா அவர்கள் “மகிழ்ச்சி. ஆனால் வேலை பெற்ற அவர் அதுபற்றி என்னைவந்து சந்தித்து கிடைத்ததாகக் கூறவே இல்லை; பரவாயில்லை அதுதான் நம்ம மனிதர்களின் அதுவும் நம்மவர்களின் ஜீவசுபாவம் என்று கூறி விட்டு ஒன்று ‘நறுக்கென்று’ சொல்வார்கள்; கிடைத்திருக்காவிட்டால் உடனே என்னிடம் மீண்டும் வந்து, எப்படியும் இன்னொரு தடவையாவது சொல்லுங்கள் அய்யா என்று அழுத்தம் கொடுத்திருப்பாரே; அப்படி அவர் வராதிருந்தவுடனே நானே யூகித்துக் கொண்டேன் - அவருக்குப் பதவி கிடைத்து இருக்கும்; அதனால்தான் அவர் நம்மிடம் மீண்டும் வரவில்லை” என்று கூறுவார்.
உலகம் பலவிதம். அதில் ஒவ்வொரு வரும் ஒருவிதம் என்பது புரிந்தது!
பகுத்தறிவுள்ள மனிதர்களில்தான் எத்தனை வகை பார்த்தீர்களா?
- கி.வீரமணி
-விடுதலை,29.3.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக