பக்கங்கள்

புதன், 8 ஜூன், 2016

வள்ளுவர் கூறும் நல வாழ்வியல் - உணவு


மக்களின் நல வாழ்க்கைக்கான வழிமுறைகளைத் தேடி, மாமருத்துவர்களையும், ஆய்வாளர்களையும், அதனை விளக்கும் அறிஞர்தம் அறிவுப் பொழிவுகளையும், கருத்துக் கோவைகளையும் நாமும் நாளும் நாடுகிறோம்.
என்றாலும், திருக்குறளை எடுத்து ‘மருந்து’ என்ற தலைப்பில் (அதிகாரம் 95) உள்ள 10 குறள்களைப் படித்து அசை போட்டுச் சிந்தித்தால், நம் வாழ்வின் நலம் மிகவும் மேம்படும்.
வள்ளுவர் தம் மருத்துவ அறிவு மிகவும் வியக்கத்தக்க தாகும்.
இதுபோன்ற பகுதிகளை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் குறுகத் தரித்த குறளின் கருந்தாழம் எவ்வளவு என்று அவர்கள் உணர முடியும்.
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது டம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு   (குறள் - 943)
இதன் பொருள்: “ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, செரிக்கக் கூடிய அளவினை அறிந்துகொண்டு, உண்ண வேண்டும். நல்ல உடம்பினைக் காப்பாற்றி வாழ வைக்கக் கூடிய வழியும் அதுவேயாகும்.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து           (குறள் - 944)
பொருள்: ஒருவன் தான் உண்ட உணவு செரித்துள்ளதை அறிந்து கொண்டு, உடம்பிற்கு மாறுபாட்டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு, மிக நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்!
‘ஒவ்வாமை’ என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பொருளை உண்ணுவதால் ஒவ்வாமை ஏற்பட்டு அதுவே உயிர்க் கொல்லியாகவும் சில நேரங்களில் மாறிவிடக் கூடும்.
இதை Allergy என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவரின் அறிவு கண்டறிந்து அதைப் பரப்ப வேண்டும் என்று எண்ணியுள்ளதால் எழுதப்பட்டதே இக்குறள்.
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு     (குறள்-945)
பொருள்: “உடம்பிற்கு மாறுபாடு ஏற்படுத்தாமல், ஒத்துப் போகக் கூடிய உணவாக இருந்த போதிலும் அது அளவுக்கு மீறிப் போகாமல் தடுத்து நிறுத்திச் செரிக்கும் அளவிற்கு மட்டுமே ஒருவன் உண்டால், அவனுடைய உயிர் வாழ்க்கைக்கு நோய்களினால் துன்பம் ஏற்படுவது என்பது இல்லை.
‘ஒவ்வாத உணவு வகைகளைக் கண்டறிந்தேன்; ஒதுக்கி விட்டேன். எனவே ஒவ்வும் உணவை ஒரு ‘பிடி’ பிடித்தேன்’ என்று ஏராளம் சாப்பிடலாமா? கூடாது கூடவே கூடாது.
அந்த உணவைக்கூட அளவு மீறாமல் சாப்பிடுக என்கிறார். அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டு வந்தால் அதுவே பல்வேறு நோய்களுக்கு அழைப்பு விடுத்ததாகி விடும் என்று நல்ல எச்சரிக்கையை விடுக்கிறார் வள்ளுவர்!
உண்ணுவதில் இன்பம் எது? அனுபவ அறிவை அப்படியே கொட்டி நம்மை ‘குட்டுகிறார்’ வள்ளுவர் என்ற மாமருத்துவர் நாளை பார்ப்போமா!
- கி.வீரமணி
-விடுதலை,31.3.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக