பக்கங்கள்

செவ்வாய், 7 ஜூன், 2016

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்


Empathy  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான ஒரே தமிழ்ச் சொல்லைக் கண்டறிய பல மாதங்களாக முயலுகிறேன். காரணம்:  Sympathy என்றால் ‘இரங்குதல்’ பச்சாதாப உணர்வைக் காட்டுதல் என்று தெளிவாகிறது எளிதில்.
நம்மவர்கள் பலருக்கு இச்சொல் Empathy அதிக  புழக்கத்தில் - அச்சொல் போல் இல்லாததால்தான் இத்தொல்லை. மற்றபடி செம்மொழித் தமிழில் கூற முடியாதவை உண்டா? இல்லையே!
பாதிக்கப்பட்டவர் நெஞ்ச உணர்வை நமதாக்கிக் கொண்டு அதை உணர்ந்து ஆறுதல் தரும் அணுகுமுறைதான் Empathy
திருவள்ளுவரின் திருக்குறளில் உள்ள
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் - மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்              (குறள் 214)
என்பதை பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்கள் நமக்குச் சுட்டிக்காட்டியுள்ளார். அது மிகவும் பயனுறும் கருத்தாகும்.
மற்றவர் நோக்கில் நாம் அவரது துன்பத்தை உணர்தல்; வெறுமனே அனுதாபப்படுவது இரங்கல் உணர்வை வெளிப்படுத்துவது அல்ல.
துன்பம், துயரம் அனுபவிக்கும் ஒருவரது உணர்வு நிலையை நாம் அவர் நிலையில் நம்மை நிறுத்தி உணர்தலேயாகும்.
இதற்கொரு ஆங்கிலப் பழமொழி.
‘Before you criticize a man, Walk a mile in his shoes’.

“மற்றவரை நீங்கள் குறை சொல்லு முன்பு அவரது காலணியை நீங்கள் மாட்டிக் கொண்டு ஒரு மைல் தூரம் நடந்தால் தான் அவரது துன்பம் கஷ்டம் எப்படி என்று “உங்களால் உணர முடியும்’’  இதுதான் ‘பிறர்நிலை நின்று உணர்தல்’ (Empathy)
மகிழ்ச்சி, துன்பம், இரண்டு நிலைகளுக்குமே இது பொருந்தும்!
‘பயனுறு வாழ்க்கையாளர்களின் ஏழு பழக்கங்கள்’ Seven habits of the highly effective people என்பதை  ‘ஸ்டீபன் கோவி’ என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர் மேலாண்மை நெறியாளர் வரிசைப்படுத்தினார்; எதையும் Proactive  ஆக்கபூர்வ பார்வையோடு அணுக வேண்டுமே தவிர, Reaction    எரிச்சல், அவசரம் - ஆத்திரம் கலந்ததோடு பார்க்கக்கூடாது.
மற்றவர்கள் சூழ்நிலை எப்படியோ நாம் அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, நம் சுயகவுரவத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்துப் பேசுதல் முற்றிலும் முதிர்ச்சி இல்லா பகுத்தறிவுக்கு எதிரான தன்மை - தானே இழந்து கொள்ளும் பரிதாபம் ஆகும்!
ஸ்டீபன்கோவி ஒரு உவமை கூறுகிறார்:
அமெரிக்காவில் ஒரு விமான நிலையத்தில் விமான வருகைக்காக பல பயணிகளும் காத்திருக்கின்றனர்.
ஒருவர் தனது மூன்று சிறு குழந்தை களுடன் வந்துஅமர்கிறார்; அந்தப் பிள்ளைகள் ஒரே (காச்மூச்) என்ற சப்தம் போட்டு பேசுவது, ஓடுவது, ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளுதல் இப்படி இருப்பதை தந்தையார்  சற்றும் கண்டிக்காமல் அப்படியே சிலை போல் அமர்ந்துள்ளார் என்ற எரிச்சல் அங்கிருந்த பலருக்கு! ஒருவர், அடக்க முடியாமல் இருக்கிறீர்களே என ஆத்திரம் பொங்க அந்த பெற்றவரிடம் சப்தம் போட்டு கத்தி விட்டார்!
அதைக் கேட்ட அந்த பிள்ளைகளைப் பெற்றவர் ‘அய்யா, என் மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் கஷ்டப்பட்டு நேற்று இறந்து விட்டார். அவளை அடக்கம் செய்து விட்டு ஊர் திரும்புகிறேன். பிள்ளைகள் இப்படியிருக்கும் நிலையை என்னால் கண்டிக்க முடியவில்லை, மன்னிக்கவும் என்று கூறினார்;  அத்தனைப் பேரும் இவரது நிலையை எண்ணி ஆறுதல்கூறி, தங்களது அவசரம் அநியாயமானது என்று எண்ணி வருந்தினர்  - திருந்தினர்.
ஏன், நமது திருமண வீடுகளில்கூட நமக்கு முக்கியமானவருக்கு - கடைசி யாகவே திருமண அழைப்புக் கொடுப் பதுண்டு - உரிமை, உறவு அவருக்கும் நமக்கு அதிகம் உண்டு என்று நினைத்து!
அதை வாங்கிக் கொண்ட  அந்த உறவுக்காரர் - “இப்போதுதான் நான் இருப்பது கண்ணுக்குத் தெரிந்ததா?” என்று பேசி, எனது  சுயமரியாதையை நான் நிலை நிறுத்தியே தீருவேன் என்று அழைப்பிதழ் கொணர்ந்தவரிடம் - தபால்காரர்  போன்றவர்களிடம் பொரிந்து தள்ளினால், அவரைப் பற்றி ‘தபால்காரர்’ என்ன நினைப்பார்? திருமண விட்டார்  நினைப்பது அப்புறமிருக்கட்டும்!
ஒரு திருமணம் நடத்துவது என்பது எளிதா? -
திருமண வீடுகளுக்கு இது பொருந்தக் கூடும்;
இவ்வுதாரணம் பொது நிகழ்ச்சிக்குப் பொருந்தாது! காரணம் அது ‘தன்மானம்‘ சுயமரியாதை பார்க்க வேண்டிய இட மில்லை, இனமானம் தெறித்து விழ வேண் டியதல்லவா என்கிறார் என் அருகில் இதை  அச்சிடுவதற்கு முன் படித்த ஒரு பெரியார் மாணாக்கர்.
அவர் கூறியதையும் இணைத்து விட்டு, பிறன் நிலை உணர்ந்தது (Empathy) பற்றிக் கவலைப்படுவோம்.
-விடுதலை,24.3.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக