பக்கங்கள்

வெள்ளி, 17 ஜூன், 2016

தலைமைத்துவம் என்பதன் தத்துவம் இதோ

மக்களை, கட்சிகளை, இயக்கங்களை, (குடும்பம் உட்பட) பல்வேறு அமைப்பு களை, தலைமை தாங்கி நடத்துவது ஆற்றல் மிகுந்த ஒரு சிறந்த கலை என்றே சொல்ல வேண்டும்.

பிறவித் தலைவர்கள் என்று எவரும் கிடையாது; காரணம் தலைமைத்துவம் பிறப்பினால் ஏற்படுவது அல்ல; உழைப் பினால் பழகும் பண்பு நலன்கள், மற்றவர் ஏற்க, பொறுப்புக்கு உயர்தல்.

பதவித் தலைமைகள் வேறு; புரட்சிக்குத் தலைமை தாங்கி வழிகாட்டும் தலைமை வேறு.

நடிகவேள்  M.R. ராதா அவர்கள் மேடையில் பேசும்போது, அவருக்கே உரிய நகைச்சுவை நளினத்தோடு ஒரு கூட்டத்தில் பேசினார். “நாட்டில் இப்போது எவனெவனோ தலைவர் என்று கூறிக் கொள்கிறான்; இந்த கூட்டத்திலேகூட தலைவர் அவர்களே’ன்னு கூப்பிட்டோம். அதனால் அவர் உண்மையாகவே தலைவர் ஆகிடுவாரா? இவர் (கூட்டம் முடியும்வரை) 3 hours  தலைவர்; இன்னும் சிலர் 2 hours அரைமணி (Half hour) தலைவர் எல்லாம் உண்டு! மக்களுக்கு எவர் உண்மையாகவே எந்தபிரதி பலனும் கருதாது தொண்டு செய்கிறார்களோ, அவர்கள்தான்யா சரியான தலைவர்; தந்தைபெரியார், பச்சைத் தமிழர் காமராசர்  இவர்களுக்கெல்லாம் என்ன புள்ளையா? குட்டியா? மக்கள்தான் அவங்க பிள்ளைங்க! நாட்டிலே இப்பவெல்லாம், ஆளுக்கொரு கட்சி, எவனவனோ தலைவர்னா என்ன செய்வது? ஏமாறதுக்கு மக்கள் இருக்கிறீர்கள்! நீங்க  இருக்கிறீர்கள். என்ற தைரியம்தான். நான் எச்சரிக்கை செய்றேன் கண்டவனை  தலைவன் தலைவன் சொல்லி நம்பி போனீங்கள்னா ஏமாந்திடுவீர்கள் தெரிஞ்சிக்கோ!”

இப்படி தடாலடியா கசப்பான உண்மையை தோலுரித்துக் காட்டினார் யதார்த்தவாதியான நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்கள்!

இன்று இதைப் பன் மடங்கு பெருக்க வேண்டும்போல் இருக்கிறது!

அண்மையில் திண்டுக்கல் பிரபல புத்தக விற்பனையாளர் அய்யனார் புத்தக நிலைய உரிமையாளர்கள் மதிப்பிற்குரிய அய்யா பூவலிங்கம் (ஓய்வு பெற்ற B.D.O. இவர்) அவரது அன்புச்செல்வன் பூ.முத்துமாணிக்கம் அவர்களும்  ஒரு நூலினை எனக்கு அன்பளிப்பாக அளித்தனர். அமெரிக்கா வாழ் எழுத்தாளர் ராபின் ஷர்மாவர் உச்சகட்ட சாதனைக் காண வழிகாட்டி (The Mastery Manual) என்ற நூலின் தமிழாக்கப் பதிப்பு அது.

மும்பையில் வாழும் முத்தமிழ் கலாவித்துவரத்தினங்களான டி.கே.எஸ். பிரதர்ஸ் ஆகியவர்களின் உறவினரான நாகலட்சுமி சண்முகம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் மிக நேர்த்தியாக)

சுவைமிகுந்த பயனுறும் அந்த நூலில் உள்ள பல பகுதிகளும் நம் அனைவரின் சிந்தனைக்கும் செயலாக்கத்திற்கும் உரியவை. இதோ தலைமைத்துவம்பற்றி (31ஆவது அத்தியாயம்) எழுதப்பட்டுள்ள முக்கிய கருத்துக்கள் சில இதோ!

“என்னைப் பொறுத்தவரை, தலை மைத்துவம் என்பது விளைவுகளுக்கு தனிப்பட்ட பொறுப்பு ஏற்றுக் கொள்வது என்று நான் பொருள் கொள்கிறேன். தலைமைத்துவம் என்பது விஷயங்களை நீங்கள் செய்து முடிக்க வேண்டும் என்று பொருள்படும். தலைமைத்துவம் என்பது நீங்கள் கொடுத்த வாக்கை நீங்கள் காப்பாற்றியாக வேண்டும் என்று பொருள்படும்.

தலைமைத்துவம் என்பது மக்களிடமிருக்கும் சிறந்த விஷயங்களைக் கண்டு கொண்டு அவர்கள் வெற்றி பெறுவதற்கு அவர்களைப் பயிற்றுவிப்பது என்று பொருள்படும். தலைமைத்துவம் என்பது உறவுகளை வளர்த்தெடுப்பதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மிக நேர்மையான மனிதராக இருப்பது என்று பொருள்படும்.தலைமைத்துவம் என்பது நீங்கள் உங்கள் நிறுவனத்தை உலகத்தரம் வாய்ந்த ஒரு நிறுவனமாக உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், ஒரு புதிய உலகை உருவாக்குவதற்கு உங்களால் இயன்ற பங்கை ஆற்றுவதன் மூலம் ஒரு சமூகப் பொறுப்புணர்வைக் கொண்டிருப்பது என்று அர்த்தப்படும். இறுதியாக, தலைமைத்துவம் என்பது இருளைத் தூற்றுவதற்கு பதிலாக ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது என்று பொருள்படும்.

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இயல்பான தலைமைத்துவத் திறன்களை வெளிப்படுத்தினால் இவ்வுலகம் எவ்வாறு இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். மக்கள் தங்களைப் பலிகடாவாகப் பார்ப்பதை நிறுத்திவிடுவர்.”

எனவே தலைமைப் பதவிக்கு ஆசைப் பட  எல்லோருக்கும் உரிமை உண்டு; ஆனால் அதற்குரிய தலையாய பண்பு நலன்களை, பக்குவங்களை பயிற்சிகளைப் பெற வேண்டாமா? இல்லையேல் நடிகவேள் சொன்னதைப்போல் காலத்தால் கரைந்து விடும் செயற்கைத் தலைமைகள் - எச்சரிக்கை!
-viduthalai,16.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக