பக்கங்கள்

ஞாயிறு, 29 மே, 2016

சில நேரங்களில் சில மணமக்கள்!



திருமணங்களை வைதீகர்கள் நாள், நட்சத்திரம், ஜோஸ்யம் இவை களையெல்லாம் பார்த்துதான் நிச்சயிக்கின்றனர். இதில் வர்க்க பேதமின்றி, ஏழை, பணக்காரர் எல்லோருமே அடக்கம்!
ஒரு மதத்தவர் ‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்று கூறினார்கள். (ஆனால் நடை முறையில் அவை ரொக்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன; ‘இச்சயிக்’ கப்படுகின்றன என்பதே யதார்த்தமாகும்)
ஆனால் நேற்று நாளேடுகளில் வந்துள்ள ஒரு செய்தி, திருமணங்கள் ரசத்தாலும், சாம்பாராலும்கூட அவைகள் சுவை ரசனைக்கேற்ப இல்லாததால் ரத்து செய்யப்படும் அவலங்களும் நாட்டில் நடைபெறுகின்றன!
இதன் மூலம் மணமகன் வீட்டார் வாழ்க்கைக்குத் துணை தேடவில்லை; நல்ல சமையற்காரியைத் தான் தேடினர் போலும்!
என்னே கூத்து! எவ்வளவு ஜோக்கு!! நேற்றைய தமிழ் ‘இந்து’ நாளேட்டில் வெளி வந்துள்ள அச்செய்தியை அப்படியே தருகிறோம் படியுங்கள்:
கர்நாடகாவில் ரசம் ருசியாக இல்லாததால்
கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்
கர்நாடகாவில் ரசம் ருசி இல்லாததை காரணம் காட்டி மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அதே முகூர்த் தத்தில் வேறொரு மணமகனுடன், மணமகளுக்கு திருமணம் நடந்தது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள சுதந்திர பாளையாவை சேர்ந்த திம்மையாவின் மகன் ராஜூ (32). டீ விற்பனையாளரான இவருக்கும் துமக்கூரு மாவட்டத் தைச் சேர்ந்த, குனிகல் கிராமத்தை சேர்ந்த பிரகாசத்தின் மகள் சவுமியாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை மாலை மணமகளின் வீட்டார் சார்பில் திருமணத்துக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அப்போது சாம்பார் மற்றும் ரசம் ருசியாக இல்லாததை காரணம் காட்டி மணமகன் வீட்டார் தகராறு செய்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன மணமகள் வீட்டார் அவர்களை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தனர்.
அதிகாலையில் திருமணம் நடக்கும் சமயத்தில் நலங்கு வைப்பதற்கான சடங்குக்காக மணமகன் வீட்டாரை அழைக்கச் சென்றபோது அவர்கள் அனைவரும் மண்ட பத்தை விட்டு வெளியேறியது தெரியவந்தது.
இதனால் குழப்பமடைந்த மணமகளின் பெற்றோர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, ருசியான ரசம் வைக்கத் தெரியாத குடும்பத் தாருடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. திருமணத்தை நிறுத்தி விடுங்கள் என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் வீட்டார் செய்வதறியாது திகைத்தனர்.
அப்போது பெரியவர்கள் மேற் கொண்ட முயற்சியால் திருமணத் துக்கு வந்திருந்த கோவிந்த ராஜ் என்ற இளைஞர் மணமகள் சவுமியாவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்.
இதையடுத்து இருவருக்கும், ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட அதே முகூர்த்தத்தில் திருமணம் நடந்தது.
இது குறித்து மணமகளின் பெற்றோர் கூறும்போது, ரசம் ருசியில்லாததை கூட பொறுத்துக் கொள்ள முடியாத மணமகன் வீட்டாரிடம் இருந்து கடைசி நேரத்தில் எனது மகளை கடவுள் தான் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோம் என்றனர்.
அதே சமயம், மலிவான காரணத்துக்காக திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துமக்கூரு மகளிர் அமைப்பினர் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
‘கடவுள்தான் காப்பாற்றியிருக்கிறார்!’ என்ற பெருமூச்சு பாவம்! அந்தக் கடவுள், ரசம், சாம்பாரை நன்றாக சுவைக்கும்படி மணமகள் வீட்டாருக்கு ஏனோ உதவவில்லை என்பதுதான் தெரியவில்லை’.
சில நேரங்களில் சில மணமக்கள்! வேதனை - வேடிக்கை.
- மகா வெட்கக் கேடு!
- கி.வீரமணி
-விடுதலை,4.2.16

உணவெனும் உற்ற மருத்துவர்!



நல்ல உடல் நலம் காக்க, அடிப்படையாக கவனம் செலுத்த வேண்டியது, நமது உணவு முறைபற்றியே!
ரத்த அழுத்தம் (Blood Pressure)  பற்றி பலர் போதிய அக்கறை கொள்வதில்லை.

மாரடைப்பு, இதய வலி, சிறுநீரக பாதிப்பு போன்ற பலவற்றிற்கும் இந்த இரத்த அழுத்தம் கூடுதலாகி, ரத்தக் கொதிப்பாகி மாறிவிடுவதும் முக்கிய காரணம் அதோடு சர்க்கரை நோயும் இணைந்து கொண்டால் உடல் உபாதைகள் - வலிகள் - நோய்கள் அதிகமாகும்.

எனவே அவ்வப்போது, குறைந்தபட்சம் 50 வயதுக்குட்பட்டவர்களும்கூட - ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ, ஓராண்டிற்கு மூன்று முறையோ  கூட மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது வருமுன்னர் காக்கும் சரியான வழியாகும்!

‘மருந்துகளை எடுத்துக் கொள்வது ஒரு பக்கம் இருந்தாலும்  சரியான உணவு முறையை அமைத்துக் கொள்வதே’ சாலச் சிறந்ததாகும்.
சத்தான உணவியல் மருத்துவர் ஒருவரின் கூற்றுக்களை இங்கே சுருக்கித் தருகிறோம். பயன் பெறுக - நடைமுறைப்படுத்தி.

(I) உணவுக் குறிப்புகளை எழுதி வைத்துப் பார்க்க.

- உண்ணும் உணவை வகைகளை (வேளை தோறும்) எழுதி ஒரு டைரிக் குறிப்பாக வைத்து, என்ன உணவினால் என்ன மாறுதல் விளைவுகள் உடலில் ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்ய அது பெரிதும் உதவும்!

சில உணவுகள் ஒவ்வாதவைகளாகக் கூட (Allegery) இருக்கலாம்;  அவைகள்தான் என்று கண்டறிவது இதன் மூலம் (டைரிக் குறிப்பு மூலம்) எளிதாக்கலாம்.
1) நிறைய பழங்களை - உங்கள் உடல் நிலைக்கேற்ப, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். பழங்களிலும் இனிப்பு இருக்கும் அல்லவா? ஆகவே விழிப்பு தேவை, தேர்வு செய்து உண்ணுங்கள்.

2) காய்கறி வகையறாக்களைக்கூட, சிறு தீனிக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம்!

3) தவிர்க்கக் கூடிய கொழுப்பு உள்ள உணவுகளை, அறவே சேர்க்காதீர்கள்.

4) உப்பு அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள் (ஊறுகாய், சிப்ஸ்) போன்றவைகளை தவிர்ப்பது மிகவும் பாதுகாப்பானது!

5) தானிய வகைகள், (நார்ச்சத்துள்ள உணவு வகைகளை) கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகளும் இதில் அடக்கமே!

(II) எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். இயங்குங்கள் சோம்பலாகவே இருப்பது, சதா டி.வி. அல்லது சின்ன திரை, பெரிய திரை சீரியல்களில் மூழ்கி விடுவது சுறுசுறுப்பான அடையாளம் அல்ல!

எடையை அடிக்கடி சரி பார்த்து, கண்காணித்து அதைக் கட்டுக்குள் வைத்திருங்கள். (Body Mass Index (BMI) 
என்று குறிப்பிடுவதை எளிமையாக மருத்துவ நண்பர்களிடம் அறிந்து கொள்ளுங்கள்!

(III)  எக்காரணம் கொண்டும் புகை யிலை என்ற நச்சின் பக்கமே தலை வைத்துப் படுக்காதீர்.

பீடி, சிகரெட், பொடி- இத்தகைய புகையிலைப் பொருட்களை நேரிடை யாகவோ, மறைமுகமாகவோ பயன் படுத்தாதீர்கள்!

இதய ரத்தக் குழாய்களில் அவை பெரிதும் அடைப்புகளை ஏற்படுத்தும்; கூடுமான வரை வெளியில், உணவு விடுதிகளில், பொது ஆடம்பரத் திருமண பந்தி உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க முயலுங்கள்!

எளிய உணவானாலும், வீட்டில் சமைத்த உணவுக்கே முன்னுரிமை கொடுத்து, உண்ணப் பழகுங்கள்!

காசும் மிச்சம்; உடல் நலக் கேடும் தவிர்க்கப்படக் கூடும் - இந்த விதியைக் கடைப்பிடித்தால்!

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தினால் எத்தகைய வெற்றிகரமான வாழ்க்கையை நாம் அடைவோமோ, அதுபோல, ருசி - நாக்கு ருசிக்கு அடிமையாகி, உடல் நலத்தையும் “மணிபர்ஸ்” வளத்தையும் குறைத்துக் கொள்ளாதீர்கள்.

ருசித்த உணவா? ஆரோக்கிய உணவா? என்றால், ஆரோக்கிய உணவுக்கே உங்கள் முன்னுரிமை என்று அமையட்டும்!

அதுவே நம் வாழ்வை நீட்டும்; வளப்படுத்தும் - இல்லையா?

- கி.வீரமணி
-விடுதலை,30.4.16

அறிவன்கள் தொடுத்த வினாக்கள்!



மகாவீரரும் புத்தரும் தலை சிறந்த பகுத்தறிவாளர்கள். மூடநம்பிக்கை களை அவ்விரு பெரியார்களும் மிகவும் கண்டித்துள்ளனர்.

அறிவின்படி சிந்தித்து செயல்படுங்கள் என்பதே அவ்விரு பெரும் புரட்சியாளர் களின் கருத்துக்களாகும்!

வாழ்வின் யதார்த்த நிகழ்வுகள் மூலமே அவர்கள் மற்றவர்களுக்கு தக்க பாடம் எடுத்து, அறிவு புகட்டியுள்ளார்கள் என்பதற்கு, அவ்விரு பெரியார்களின் சில நிகழ்வுகளைக் கூறலாம்.

மகாவீரர் தன்னருகில் வாழ்ந்த மண் பாண்டத் தொழிலாளி ஒருவர், எல்லாம் தலைவிதிப்படிதான் நடைபெறும் என்று எப்போதும் எண்ணிச் செயல்பட்டவர் என்பதை அறிந்தார்.

ஒரு நாள் அத்தொழிலாளி வீட்டு வழியே செல்லும்போது, வெயிலில் அந்த மண்பாண்டத் தொழிலாளி அந்த மண் ஜாடிகளை காய வைத்துக் கொண்டே, “எப்படி வெயிலில் கிடந்து கஷ்டப்படுகிறேன் பாருங்கள் சுவாமி, எல்லாம் என் தலையெழுத்து, விதி” என்று சலித்துக் கொண்டே கூறினான்.

ஒரு புன்னகையுடன் அவனைப் பார்த்து “மகனே, இந்த ஜாடிகள் பார்க்க மிக அழகாக இருக்கின்றனவே, இவற்றை யாராவது உடைத்து விட்டால், அதை விதி, தலை யெழுத்து என்று எண்ணி சும்மா விட்டு விடுவாய் அல்லவா?” என்றார்!

“அதெப்படி முடியும்? பட்ட பாடு வீணாகும் போது, கோபம் வரத்தானே செய்யும்? தண்டித்து அனுப்புவேன்; தேவைப்பட்டால் அவனைக் கொல்லவும் தயங்க மாட்டேன்” என்றான் மிக ஆவேசமாக!

“எல்லாம் விதிப் பயன் என்று நீ தானே சற்று முன் கூறினாய். இப்போது நீயே அதை ஏற்க மறுக்கிறாயே. ஒன்றைப் புரிந்து கொள், வாழ்க்கை என்பது அவரவர் உழைப்பு, சிந்தனையால் அமைந்தது! அவரே அதை ஆக்கவும் அழிக்கவும் முடியும்!” என்றார்.

உடனே, பொறி தட்டியதுபோல அத்தோழனுக்குப் புரிந்து, “அய்யனே, என் அறிவுக்கண்ணை நீங்கள் திறந்து விட்டீர்கள்; இனி மேல், இந்த விதி, தலையெழுத்து என்ற மூடத்தனத்தில் உழலும் மூடநம்பிக்கைகளில் ஈடுபடாமல், அறிவு வழியே வாழ்க்கையை நடத் துவேன்” என்று கூறினார்.

தந்தை பெரியார் அவர்கள் 19ஆம் நூற்றாண்டில் பிறந்து 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்தவர். (தத்துவமாக அவர்கள் என்றும் வாழுபவர்கள்).

அவர் சிறுபிள்ளையாக இருந்த காலந்தொட்டு எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று துருவித் துருவி கேள்வி கேட்டு பாடம் படித்தவர்; பிறருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தவர் என்பது அவரது வரலாறு.

இதே போன்று ஒரு சம்பவம்.

தட்டிக் கடை ஒன்றை வைத்து கல்லிடைக்குறிச்சிக்காரரான ராமனாத அய்யர் என்பவர் வருவோர் போவோர்கள் எல்லோரிடத்திலும் ‘எல்லாம் அவரவர் தலை விதிப்படி தான் நடக்கும்? தலை யெழுத்தை -இன்னாருக்கு இப்படி நடக்க வேண்டும் என்று அன்று எழுதப்பட்ட தலையெழுத்தை எவரே மாற்ற முடியும்?’ என்று எதற்கெடுத்தாலும் கூறக் கூடியவர்!

சிறு மாணவப் பருவத்தில் இருந்த ஈ.வெ. ராமசாமி என்ற அந்த இளைஞன், தட்டிக் கடை முன் இருந்த குச்சியை (அதன் பிடிபுலத்தை)  தட்டி விட்டு விட்டு ஓடினார்.

அத்தட்டி திடீரென்று விழுந்து கடையைமூடி, கடை முதலாளி அய்யருக்கு தலையில் அடிபடும்படிச் செய்துவிட்டது.

‘பிடியுங்கள் பிடியுங்கள்! குறும்புக்கார பையனை’ என்றார். பிடித்து வந்து இவரிடம் நிறுத்தினர். அதற்கு அந்த மாணவர் (ஈ.வெ.ரா.) ‘சாமி நீங்கள்தானே எல்லோரிடத்திலும் தலைவிதிப்படிதான் எதுவும் நடக்கும் என்று சொல்லுவீங்க; நான் தட்டி விட வேண்டும் என்று என் தலையில் எழுதப்பட்ட விதி; அது உங்கள் தலையில் பட்டு வீக்கத்தை உண்டாக்க வேண்டும் என்பது உங்கள் தலைவிதி? கோபப்படலாமா!’ என்றவுடன் அவர் பிறகு அப்படிக் கூறுவதையே நிறுத்திக் கொண்டார்!

இந்த இரு நிகழ்வுகளும் மிகுந்த கால இடைவெளி நீடித்த நிகழ்வுகள் என்றாலும் சிந்தனையாளர்கள் - அறிவாளிகள் சிந்தித்தால் ஒரே மாதிரிதானே சிந்திப்பார்கள் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய அரிய உண்மையாகும்!

- கி.வீரமணி
-விடுதலை,28.4.16

பொது வாழ்வில் உள்ளோர் கற்க வேண்டிய பாடங்கள் இவை!



இன்று திராவிடப் பெருந்தகையாள ரும், தென்னிந்திய நல உரிமைச்சங்கம் ஷி.மி.லி.தி. என்ற நீதிக்கட்சியைத் தோற்று வித்தவர்களில் ஒருவருமான தியாகராயப் பெருமானின் 165ஆவது பிறந்த நாள் இன்று!

அவரது பண்பு நலன்களை மனித நேய மாண்பு, எளிமை, தூய தொண்டறம் பற்றிபலரும் அறிய வேண்டியவை ஏராளம் உண்டு!

மயிலாடுதுறை நண்பர் திராவிட இயக்க ஆய்வு எழுத்தாளரான (‘திராவிடப் பித்தன்’ என்ற புனை பெயரும் இவருக்குண்டு) கோ.குமாரசாமி அவர்கள் 1985ஆம் ஆண்டில் எழுதி, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள திராவிடப் பெருந்தகை தியாகராயர்  வாழ்க்கை வரலாற்று - நீதிகட்சி அந்நாளைய அரசியல் - வரலாறு என்ற இவைகளை உள்ளடக்கி எழுதியுள்ள நூலைப் படித்தேன்.

எவ்வளவு அரிய தகவல்கள்!

எத்தகைய கொள்கை உறுதி, வசதியுள்ள நிலையிலும் மிக எளிமை, எல்லோர்க்கும் உதவுதல், எக்காரணம் கொண்டும் சுயமரியாதையை இழக்கா திருத்தல் - இவைகளைப் போதிக்கும் கல்விக் களஞ்சியம் போன்றது. அப் பெருமானின் வாழ்வு!

இதோ அந்நூலில் உள்ள சில பகுதிகள் அவர்தம் பண்பு நலன்களைப் படம் பிடித்துக்காட்டுவன,

“தியாகராயரிடம் காணப்பட்ட குணங் களில் சிறப்பான குணம் ஒன்று உண்டு!

அவர் எவரையும் துச்சமாகவோ அல்லது குறைவாகவோ மதிக்கத் துணிவதில்லை!

வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி எவரையும் எப்போதும் இன்முகம் காட்டி வரவேற்று இருக்கை தந்து பேசுபவர். பேசுவதைக் கேட்பவர்.
அவரைப் பார்க்கச் செல்லு வோர் ஆண்டியேயாயினும் அவ்வாண்டி யையும் அவர் அலட்சியம் செய்ய மாட்டார். அன்னவரையும் உடன் அமரச் செய்து, வினாவி தக்கது சொல்லி, உதவி வேண்டின் அவ் வுதவியையும் அளித்து அனுப்பி வைப்பார்.

மேற்கண்டதற்கு இணை யான மற்றொரு சிறப்புக் குணமும் காணப்பட்டது தியாகராயரிடம். ஏதேனும் உதவியைக்கோரி, தம்மிடம் வருபவர்களை இன்றுவா, நாளைவா என்று கூறி அலைய விடுவதில்லை. உட னுக்குடன் தக்கது செய்தும் கூறியும் அவர்களை அனுப்பி வைப்பார்.

நம்மைப் பெரிய மனிதர் என்று புகழ்கின்றார்களே! இந்தக் காரி யத்தைச் செய்தால் பிறர் நம்மைப் பரிகசிப்பார்களே! நம் எளிமையைக் கண்டு ஏளனம் செய்வார்களே! என் றெல்லாம் நினைப்பதில்லை தியாகராயர். நம் காரியத்தை நாம் செய்வதில் தாழ்வு என்ன இருக்கிறது! சிறுமை என்ன இருக்கிறது! என்று கூறுவார். அவரது எளிய வாழ்க்கை அவர் காலத்து மக்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருந்ததெனின், அது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

லார்டு வில்லிங்டன் சென்னை கவர்னராக இருந்த சமயம். அப்போது தியாகராயர் சர் பட்டம் பெற்ற பெரிய மனிதர். சென்னை நகர சபையின் தலைவர் - சட்டசபை அங்கத்தினர். ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருந்த நீதிக் கட்சியின் தலைவர். அப்போது வில்லிங்டன் ஒரு புதுமையான சங்கத்தைத் துவக்கி நடைமுறையில் இயங்கி வரும்படி செய்திருந்தார். அச் சங்கத்திற்கு சனிக்கிழமை சங்கம்: என்பது பெயராம். இச்சங்கத்தின் சார்பில் சென்னை நகரப் பெரும் பிரமுகர்கள் ஒவ்வொருவரின் பங்களாவிலும் ஒரு வட்டமேசை கூட்டம் கூடும். கவர்னர் - பல பிரமுகர்கள் அக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். பல பொருள்கள் குறித்துப் பேச்சு நடைபெறும் - விருந்துகள் நடை பெறும் கேளிக்கைகளும் இடம் பெறும்.
இப்படிப்பட்ட வட்டமேசை கூட்டம் ஒன்று சர்  - தியாகராயர் பங்களாவில் நடந்தது. கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. தியாகராயரும் தயாராகிக் கொண்டிருந்தார். அங்கிருந்த ஒரு பையனைக் கூப்பிட்டார். தான் அணிந்து கொள்வதற்கு ஒரு சொக்காய் எடுத்து வரும்படி கூறினார். அந்தப் பையனும் ஒரு சொக்காய் எடுத்து வந்து கொடுத்தான். அதனை அணிந்து கொள்ளப் போனார். அது ஒரிடத்தில் சிறிது கிழிந்திருந்ததைக் கண்டார். உடனே அந்தப் பையனைக் கூப்பிட்டார். ஊசியும் நூலும் கொண்டு வரச் சொன்னர். ஊசியும் நூலும் வந்தன. கிழிந்த இடத்தைத் தைக்கத் தொடங்கிவிட்டார்!

அந்தச் சமயம் ஒரு பிரமுகர் வந்து சேர்ந்தார். அவர் பெயர் ‘மோப்பரப்பா’ என்பதாகும். ராவ்பகதுர் பட்டம் பெற்றவர். ‘மதராஸ் ரயில்வே’ செக்ரட்டரியாக உத்தியோகத்திலிருந் தவர். சென்னை நகர சபையிலும் அங்கத்தினராக இருந்து வந்தவர். தியாகராயர் தைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்துவிட்டார். சில விநாடிகள் சென்றன. அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை.

வேறு சொக்காய் எடுத்துவரச் சொல்லுவது தானே என்று கூறினார் மோப்பரப்பா.

இதற்கு என்னவாம்! கொஞ்சம் கிழிந்திருக்கிறது. தைத்துவிட்டால் சரியாகிவிடுகிறது என்றார் தியாகராயர்.

நீங்கள் தைக்கிறீர்களே! வேறு யாரையாவது விட்டுத் தைக்கச் சொல்லக் கூடாதா?

வேறு ஒருவரைத் தைக்கச் சொல்லு வதாவது, என் சொக்காயை நானே தைத்துக்கொள்வதில் தவறென்ன?

என்னிடம் கொடுங்கள்! நான் தைத்துத் தருகிறேன்! பெரிய மனிதர்கள் இதையெல்லாம் செய்வது கவுரவமாக இருக்காது!

நீங்கள் ஏன் தைக்க வேண்டும்? நானே தைத்துக் கொள்ளுகிறேன். பெரிய மனிதர்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யக் கூடாது என்று யார் சொன்னது? அவரவர் காரியங்களை அவரவர் செய்து கொள்வது தான் பெரிய மனிதர்களுக்கு கவுரவம்!

இப்படியாகக் கூறியவாறே சொக் காயைத் தைத்துச் சரிசெய்துவிட்டார் தியாகராயர். அந்தச் சொக்காயை அணிந்து கொண்டுதான் வட்டமேசைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்!

எவ்வளவு பெரிய மனிதர்களாயினும் அவர்களது சொந்த வேலையை அவரவர்களே கவனிப்பது சிறந்தது; அது அவர்களது கவுரவத்தைக் குறைத்திடாது! இப்படிப்பட்ட உயர்ந்த எண்ணத்துடன் வாழ்ந்த பெரியாராவார் தியாகராயர்!

- இவ்வுண்மையை வலியுறுத்த மேலும் ஒரு நிகழ்ச்சியை இவண் குறிப்பிடலாம்
.
ஒரு சமயம் தியாகராயர் வெளியே நடந்து சென்றார் மழை பெய்தது. குடை ஒன்றை எடுத்துக் கொண்டார். நடந்தார். காத்திருந்தோர் பலர்  குடைபிடிக்க முன்வந்தனர். ஒருவரையும் குடை பிடிக்க விடவில்லை தியாகராயர். ஒருவனுக்கு மற்றொருவன் குடைபிடிப்பது கெட்ட பழக்கம்! நானே குடை பிடித்துக்கொண்டு செல்வதால் என்னுடைய கவுரவம் குறைந்து விடாது! அப்படிக் குறைந்துவிடுமென்றால் குறைந்துதான் போகட்டுமே! யாருக்கு வேண்டும் அப்படிப்பட்ட கவுரவம்! என்று கூறித் தாமே குடை பிடித்துச் சென்று தம் வேலையை முடித்துவிட்டு வந்து சேர்ந்தார்.”

மேலே காட்டப்பட்டவை ஒரு பெருங் குதிருக்குள் உள்ள சில பொறுக்கு நெல் மணிகளே; இப்படி ஏராளம் உண்டு.

இன்றைய பொது வாழ்க்கைத் தலைவர்கள் அக்கால நீதிக்கட்சித் தலைவர்களான டாக்டர் நடேசனார், சர்.பிட்டி தியாகராயப் பெருமான், டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்களின் அரிய தனி வாழ்க்கைத் தியாகத்தினையும் பண்பாட்டினையும், ஒழுக்க வரலாறு களையும், அறிந்து நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்க தலைவர்களின் விழுமியம் பொங்கும் விவேக வாழ்க் கையினையும் புரிந்து கொண்டு அதில் ஓரளவாவது கடைப்பிடித்தல் விரும்பத் தக்கது.

பொதுவாழ்வின் பாடங்கள் அவை அல்லவா?
- கி.வீரமணி
-விடுதலை,27.4.16

வெள்ளி, 27 மே, 2016

புத்தியின் சிகரத்தை எட்ட 6 வழிகள்!

புத்தியின் சிகரத்தை எட்ட 6 வழிகள்! (1)
- கி.வீரமணி
மனிதர்களுக்கு உள்ள ஆறாவது அறிவைப் பயன்படுத்தினால் நல்ல அறிவாளியாக அவர்கள் திகழக்கூடும்.
பிறக்கும் எவரும் முட்டாள்கள் அல்ல; பயன்படுத்தாமை காரணமாகவே அறியாமையில் - இருட்டில் சிலர் தடுமாறு கிறார்கள்.
அதில் மேலும் சிறந்து அனுபவங் களையும், சூழ்நிலைகளையும் தம்வயப் படுத்தி, பாடம் கற்று, நிலைமையை எளிதில் புரிந்து செயல்பட்டு வெற்றிக் கனியைப் பறிப்பவர்கள் புத்திசாலி மனிதர்கள் ஆகிறார்கள்!
எல்லா அறிவாளிகளான (Intelligent) மக்களும் புத்திசாலிகளாக (Wise people) ஆக இருப்பதில்லை.
அறிவாளிக்கும், புத்திசாலிக்கும் இடை யில் உள்ள நுண்ணிய பிரிவுக்கோடு மிகவும் துல்லியமானது!
அறிவாளி தன் அறிவை மட்டுமே பயன்படுத்தும் இயந்திர மனிதன்.
புத்திசாலி அந்த அறிவை, அனுபவப் பாடங்களில் தோய விட்டு எதையும் முடிவு செய்யும் தனித்தன்மை வாய்ந்த வன்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு திரைப்படத்தில், நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ் ணன் அவர்கள் ‘‘புத்திமானே பலவான் ஆவான்’’ என்ற ஒரு மொழியை, நிகழ் வுகள் மூலம் புரியச் செய்து நகைச்சுவை மூலம் பாடம் நடத்துவார்!
எனவே, எல்லா அறிவாளிகளும் புத்திசாலிகள் ஆவதில்லை; காரணம் அவர்கள் சமயோசிதமாக நடந்து, வெற்றி காணத் தெரியாதவர்கள்.
எனவே, “அறிவாளிகள்’’ முதல் கட்டம்; புத்திசாலிகள் அதற்கு அடுத்த கட்டமாக.
தங்கு தடையின்றி புத்தியை முழுக்கப் பயன்படுத்தியதால்தான் “சித்தார்த்தன்’’ - “புத்தர்’’  ஆனார் என்று எளிமையாக விளக்கினார் தந்தை பெரியார். புத்தியைப் பயன்படுத்துகிறவன் அனைவரும் புத்தரே என்றார்!
அறிவு (Knowledge)  - அறிதல்
புத்தி - அறிந்ததோடு நில்லாமல் நிலைமைக்கேற்ப அதை வளர்த்துப் பயன் பெறல் - அறிவின் முதிர்ச்சி (Wisdom)
1980 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனி யில் “புத்திசாலிகளாக உயரும் திட்டம்’’(Wisdom Project) ஒன்றை வரையறுத் தார்கள்!
புத்திசாலித்தனத்தை எவ்வகையில் பெறலாம் - அறிவை விரிவு செய்தல் என்பதை மூன்று துறைகள்மூலம் பெறலாம் என்று பகுத்தனர்.
1. தத்துவார்த்த அறிவின்மூலம்
2. நடைமுறை அறிதல் மூலம்
3. மிக நேர்த்தியாக பிரச்சினைகளைத் தீர்க்கும் தீர்வுகள்.
இதில் பிரச்சினை சீரிய முறையில் நிறைவு செய்து வெற்றி பெறுவது; பல் வேறு பழைய கடந்த கால அனுபவங் கள்மூலம் கற்றுக் கொள்ளும் திறமை; அடக்கம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத் துவதன்மூலம் பெறும் பலம். தோல்வி களிலிருந்து வெளியே வந்து அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம், வெளிப்படைத் தன்மை - முதிர்ச்சி - மற்றவர்கள் உங்களை உண் மையில் நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வாய்ப்பளித்தல்; அதோடு மனித சுபா வத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளும் தன்மை.
இதில் மற்றவர்களின் துன்பம், துயரம் இவைகளை  “ஒத்தறிவு’’ (Empathy) கொண்டு பார்த்தல், தனி நபர்களுடையது மட்டுமல்ல; மற்றவர்களின் கலாச்சாரத் தன்மைகளைப் புரிந்துகொள்ளல்.
இவை மனிதர்களை புத்திசாலிகளாக (Wise people)   ஆக்கிட உதவுபவை ஆகும்!
பொதுவான இந்த முன்னுரையுடன் இனி உரிய செய்திக்குப் போகலாமா?
1. மேற்சொன்ன அத்தனையும் உங் களிடம் இருக்கிறதா, இல்லையா? என்று கண்டுபிடிப்பதில் நேரம், காலத்தைச் செலவழிப்பதைவிட, பின்வரும் ஆறு வழிமுறைகளைப் பயன்படுத்தினால், புத்திசாலிகளாக நீங்கள் தானே மாற முடியும் என்ற அந்த ஜெர்மனி புத்தி ஆய்வுத் திட்டத்தினர் விளக்குகின்றனர்.
என்ன அந்த ஆறு அம்சங்கள்?
1. சமூகத்தில் கலந்து உறவாடல் (Being Social)
பல மனிதர்களுடன் கலந்து பழகிடும் பழக்கமுடையவர்கள், தனித்திருப்பவர் களைவிட அதிக புத்திசாலித்தனம் உடையவர்களாக ஆக முடியும். கார ணம், அவர்கள் பலரிடம் பழகும்போது கற்ற பாடங்களும் அனுபவங்களுமாகும்.
பல புதியவர்கள், தங்களது புது அனுபவங்கள், புதுத் தகவல்கள் - இவை களைத் தருதல் காரணமாக - நம்முடைய அறிவை விரிவாக்கிட பெரிதும் அந்த சமூக உறவுகள் நமக்குப் பயன் அளிக் கின்றன.
மற்றவர்களாக நீங்கள் அவர்களிடம் பழகுவது என்பதைவிட, உங்களை நீங்கள் மேலும் புத்திசாலியாக்கிக் கொள்ள  அத்தகைய நட்புறவு - பழகுதல் பயன்படும்.
நவில்தொறும் நூல்நயம் போலும்                     பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு (குறம் 783)
“பண்புடையாளர் தொடர்பு’’ என்ற வள்ளுவர் இதே கருத்தை வலியுறுத்து கிறார்!
எனவே, பழைய நண்பர்களோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்; நல்ல புதிய நண்பர்களோடு பழகுவதைத் தவிர்க் காதீர்!
2. திறந்த மனத்தினராகவே இருங்கள்!
புத்திசாலித்தனம் என்பது ஒரு பிரச்சினையில் பல்வேறு கோணங் களையும் புரிந்துகொள்ளும் திறமை யேயாகும். அதேநேரத்தில், நம்முடைய சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அடிமையாகிவிடாமல் இருப்பது மிகவும் முக்கியம்; சொந்த உணர்வுகள் நம்மை சூழுமேயானால், பிரச்சினைகள் சரிவர (Objective) ஆக நடுநிலையில் நின்று புரிந்துகொள்ள முடியாதல்லவா? எனவே தான், அது முக்கியம்!
திறந்த மனம் என்பதன் சரியான பொருள் என்ன தெரியுமா? பிறர் நிலை யில் நம்மைப் பொருத்தி உணரும் “ஒத்தறிவு’’ ’ (Empathy)
வின்படி அவரவர் நிலை, சூழ்நிலைக்கேற்ப இருக்கும்; அதை நம் அளவுகோலால் அளந்துவிடக் கூடாது என்பதுதான் அந்த “ஒத்தறிவின்’’ சிறப்பு.
ஒரு செயலை இவர் செய்யாமல் இருந்திருந்தால், அது சரியாக, இவ்வளவு தொல்லைக்கு இடம் ஏற்பட்டிருக்காதே என்று நம் நிலையில் நின்று தீர்ப்புக் கூறுவது மிக எளிது. ஆனால், அவர வரின் நிலைப்பாடு என்ற வட்டத்திற்குள் நின்று பார்த்தால் அவரது செயலை நாம் சரிவரப் புரிந்துகொள்ள முடியும்!
ஒரு நோயாளியின் மனவேதனையும், மருத்துவம் பார்க்கும் மருத்துவரின் மனநிலையும் ஒன்றாகிவிட முடியுமா?
மருத்துவர் நோயாளி நிலைக்கு மாறினால்தான் சரிவர உணர முடியும்! வலிக்கு மாத்திரை சாப்பிடுங்கள் என்று கூறுவது மருத்துவரின் அறிவுரை. வலியினால் துடிக்கும் நோயாளியின் அனுபவம் தனி அல்லவா?
ஒவ்வொரு நாளும் நம்மை வருத்திய துன்பங்களை எழுதி வைத்தல் ஒரு நல்ல பழக்கமாகும். (பின்னால் அதைப் படிக் கும்போது கிடைக்கும் இன்பத்திற்குத்தான் இணை ஏது?).
ஒவ்வொரு நாள் இறுதியிலும் அதிலிருந்து வெளிவர புதிய புத்தாக்கச் சிந்தனைகள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்கு வியப்பு தரும் “ஓகோ’’ இப்படி ஒரு வழி இருக்கிறதா இப்பிரச்சினையைத் தீர்க்க என்று எண்ணி ஆறுதலோ, மகிழ்ச்சியோ அடைவீர்கள்!
(தொடரும்)


3. “நான் தவறிழைத்திருக்கக் கூடும்’’
அதிபுத்திசாலியாக உள்ள ஒரு மனிதன் புரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான ஒன்று வாழ்க்கையில், திடீரென்று ஒரு வளைகோடு (Curves) வந்துவிடும் - எதிர்பார்க்காத நேரத்தில்.
அதனால் தடுமாறி நாமே - தவறான முடிவுகளும், தீர்வுகளும்கூட  கண்டிருப் போம். அது தவறு என்று பிறகு புரியும்போது உடனே அதை ஏற்று “ஆம், எனது முடிவு தவறுதான்; நான் அதை மீண்டும் திரும்பச் செய்யாமல் சுட்டிக்காட்டியவருக்கு நன்றி கூறுவது’’ புதிய புத்திசாலித்தனத்தின் நிரந்தர வைப்பு நிதியாக்கிக் கொள்ள மிகுதியும் வழிவகுக்கும்!
அது உங்கள் புகழை, பெருமையைக் கெடுத்துவிடுமோ என்று அஞ்சாதீர்கள்; மாறாக, உங்கள் புகழை மேலும் ஜொலிக்கச் செய்யும்!
ஏனெனில், புத்திசாலி மனிதர்களின் வளர்ச்சியே, தனது தவறை மறைக்காது ஒப்புக்கொள்ளுதலும், அடுத்த முறை அதே தவறைச் செய்யாத உறுதிக்கே அது அடித்தளம் இடும் என்பதை மறவாதீர்!
“புத்திசாலித்தனம் எப்போதும் அறிவிற்குள்ள எல்லை இவ்வளவுதான் என்று அறிய ஒரு வாய்ப்பைத் தரும்’’ என்றார் நீட்ஷே என்ற அறிஞர். நம் எல்லை இவ்வளவுதான் என்று புரிந்து கொள்ளுவது மிகப்பெரிய அனுபவப் பாடம் அல்லவா?
எனவே, எனது அறிவின் எல்லை அவ்வளவுதான்; அதனால்தான் இப்படித் தவறிழைக்க நேர்ந்தது; அந்த எல்லையை நான் புரிந்துகொண்டதால் இனிமேல் அத்தவறு நேராதபடி எனது அனுபவம் எனக்கு ஆசானாகி, கற்றுக் கொடுக்கும் என்று உணருவீர்கள் அல்லவா?
4. புதுச் செய்திகளை அறிதலும் -
புதிய முயற்சிகளில் ஈடுபடுதலும்!
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ஈடுபாடுகளும், சுவைத்தலும், வழமையாக இருக்கும்.
எப்பொழுதும் விருப்பமானவற் றிலேயே திரும்பத் திரும்ப ஊறித் திளைப்பதிலிருந்து, சற்று மாறுபட்ட புதிய துறைகளிலும் நாம் கவனம் செலுத்தி, புதியவற்றைக் கற்றுக் கொள்ளவோ அல்லது குறைந்த பட்சம் அறிந்துகொள்வதோ கூட நமது புத்திசாலித்தனத்தின் எல்லையை மேலும் விசாலமாக்கக் கூடும்!
எனது நண்பர்கள் - பலதரப்பட்ட அறிஞர்கள், வல்லுநர்கள் கூறும் பல பு
திய, அரிய, வியக்கத்தக்கச் செய்தி, எனக்கு சிலவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள பெரிதும் உதவிடுகிறது என்பது அனுபவம்!
ஒரே வகையான புத்தகங்களையே கூட நான் தொடர்ந்து படிப்பதிலிருந்து சற்று விலகி புதிய செய்திகள் - கருத்தாக்கங் களைக் கொண்ட எனது கொள்கைக்கு மாறுபட்ட நூல்களைக்கூட வாசிப்பது, எனது அறிவுக்கு - புத்திசாலித்தனம் என்று கூறத் துணிவில்லாவிட்டாலும் - உரம் போடுவதாக அது அமைந்து, மனதை வளப்படுத்துகிறது!
புதிய கண்ணோட்டம், புதிய வெளிச் சங்கள் கிடைக்கின்றன.
இப்படி புதிய முயற்சியினால் சளைக் காமல் துணிவுடன் ஈடுபடுதல், நம்மை மேலும் இளமையாக்குகிறது!
கணினியைப் படிப்பதற்கு மாணவப் பருவம் சிறந்தது என்றாலும், யாரும் - எந்த வயதினரும் முயன்றால், கற்றுக்கொள்ளலாமே!
நம் பேரப் பிள்ளைகளே நமக்கு “குமரகுரு’’க்களாகி சொல்லிக் கொடுக் கிறார்கள். அங்கே நாம் மாணவர்கள்; அவர்கள் நமது பெருமைக்குரிய ஆசிரி யர்கள்! இல்லையா?
5. தன்னை உணர்தல்
(Self awareness)
நம்மைப்பற்றி நாம் பற்பல நேரங் களில் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளுகி றோமே தவிர, உண்மையான சுய மதிப்பீட்டினைச் செய்து, நமது பலம் எது? நமது பலவீனம் எங்கே? என்று ஆராய்ந்துள்ளோமா? வாழ்க்கையில் நாம் பல்வேறு அனுபவங்கள்மூலம், பல படிப்பினைப் பெறுகிறோமே அவற்றை நினைவில் நிறுத்தி சிந்திப்பது உண்டா? பல நேரங்களில் இதற்கு விடை இல்லை என்பதுதான்!
இப்படி ஒரு புது முயற்சியில் ஈடுபடுங்கள்!
உங்கள் வாழ்வில் ஏற்பட்ட மூன்று வெற்றிகளையும், மூன்று பெரிய தோல்வி களையும் எழுதிப் பாருங்கள்.
அவற்றிற்கு அடுத்து, பக்கத்திலேயே - அவைகள் ஏற்பட, காரணமான நிகழ்வு களையும் எழுதுங்கள். அதன்பின் அதி லிருந்து நீங்கள் கற்ற பாடம் என்ன? அதையும் குறியுங்கள்.
இப்போது பெருமையோ, துயரமோ, வெட்கமோ இன்றி, அவற்றை அந்த முறை களை கற்று, அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களையும் மனதில் பதிய வைத்து படிப்பினைகளாக்கிக் கொள்ளுங்கள்.
தன்னை வெல்வான் தரணியை வெல்வான் என்றார் அறிஞர் அண்ணா!
தன்னை அறிந்தவன் தகுந்ததோர் நிலையிலிருந்து என்றும் தாழான்; வீழான்!
6. உங்களைச் சுற்றி என்ன நிகழ்கிறது? என்பதை அறியுங்கள்!
பற்பல நேரங்களில் நமக்குவரும் செய்திகள், ஒரு டிராமா போலவோ, தவறாக சித்தரித்தோ, மிகவும் வருத்தமும், சோகமும் கலந்தவைகளாகவோகூட வரக்கூடும்!
மிகவும் நிதானத்துடன், எல்லாக் கோணங்களிலும் சிந்தித்தும், ஒருபுறமே சாய்ந்துவிடாது - முடிவு எடுக்கும் பக்கு வத்தை நாம் கற்றுக்கொள்ளாவிடில் - நாம் தவறு இழைக்க வாய்ப்பு நேரிடும்.
இது, நகரத்தில் தொடங்கி, நாடு, உலகம் வரை எதற்கும் பொருந்தக்கூடிய பொது உண்மையாகும்!
செய்தித் தாள்களைப் படியுங்கள், தொலைக்காட்சி செய்திகளைக் கேளுங்கள், செய்திகளைப்பற்றிய கட்டுரைகளையும் படியுங்கள்; வெறும் தலைப்புகளை மட்டும் படித்து மூடிவிடாதீர்கள்!
இந்த உலகில் வாழ, இவ்வுலகைப் புரிந்துகொள்ள, உங்கள் பார்வையை விசாலமாக்கி பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, உலகின் பல நிகழ்வுகளையும் அறிந்து, எடை போட்டு தெளிவுபடுத்திக் கொண்டால், அங்கே புத்திசாலித்தனம் ஆளுமை கொண்டு விட்டது என்பது திட்டவட்டமாகும்.
-விடுதலை,6,7.4.16

புதன், 25 மே, 2016

வள்ளுவர் கூறும் நல வாழ்வியல் - உணவு



மக்களின் நல வாழ்க்கைக்கான வழிமுறைகளைத் தேடி, மாமருத்துவர்களையும், ஆய்வாளர்களையும், அதனை விளக்கும் அறிஞர்தம் அறிவுப் பொழிவுகளையும், கருத்துக் கோவைகளையும் நாமும் நாளும் நாடுகிறோம்.
என்றாலும், திருக்குறளை எடுத்து ‘மருந்து’ என்ற தலைப்பில் (அதிகாரம் 95) உள்ள 10 குறள்களைப் படித்து அசை போட்டுச் சிந்தித்தால், நம் வாழ்வின் நலம் மிகவும் மேம்படும்.
வள்ளுவர் தம் மருத்துவ அறிவு மிகவும் வியக்கத்தக்க தாகும்.
இதுபோன்ற பகுதிகளை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் குறுகத் தரித்த குறளின் கருந்தாழம் எவ்வளவு என்று அவர்கள் உணர முடியும்.
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது டம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு   (குறள் - 943)
இதன் பொருள்: “ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, செரிக்கக் கூடிய அளவினை அறிந்துகொண்டு, உண்ண வேண்டும். நல்ல உடம்பினைக் காப்பாற்றி வாழ வைக்கக் கூடிய வழியும் அதுவேயாகும்.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து           (குறள் - 944)
பொருள்: ஒருவன் தான் உண்ட உணவு செரித்துள்ளதை அறிந்து கொண்டு, உடம்பிற்கு மாறுபாட்டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு, மிக நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்!
‘ஒவ்வாமை’ என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பொருளை உண்ணுவதால் ஒவ்வாமை ஏற்பட்டு அதுவே உயிர்க் கொல்லியாகவும் சில நேரங்களில் மாறிவிடக் கூடும்.
இதை Allergy என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவரின் அறிவு கண்டறிந்து அதைப் பரப்ப வேண்டும் என்று எண்ணியுள்ளதால் எழுதப்பட்டதே இக்குறள்.
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு     (குறள்-945)
பொருள்: “உடம்பிற்கு மாறுபாடு ஏற்படுத்தாமல், ஒத்துப் போகக் கூடிய உணவாக இருந்த போதிலும் அது அளவுக்கு மீறிப் போகாமல் தடுத்து நிறுத்திச் செரிக்கும் அளவிற்கு மட்டுமே ஒருவன் உண்டால், அவனுடைய உயிர் வாழ்க்கைக்கு நோய்களினால் துன்பம் ஏற்படுவது என்பது இல்லை.
‘ஒவ்வாத உணவு வகைகளைக் கண்டறிந்தேன்; ஒதுக்கி விட்டேன். எனவே ஒவ்வும் உணவை ஒரு ‘பிடி’ பிடித்தேன்’ என்று ஏராளம் சாப்பிடலாமா? கூடாது கூடவே கூடாது.
அந்த உணவைக்கூட அளவு மீறாமல் சாப்பிடுக என்கிறார். அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டு வந்தால் அதுவே பல்வேறு நோய்களுக்கு அழைப்பு விடுத்ததாகி விடும் என்று நல்ல எச்சரிக்கையை விடுக்கிறார் வள்ளுவர்!
உண்ணுவதில் இன்பம் எது? அனுபவ அறிவை அப்படியே கொட்டி நம்மை ‘குட்டுகிறார்’ வள்ளுவர் என்ற மாமருத்துவர் நாளை பார்ப்போமா!
- கி.வீரமணி
-விடுதலை,31.3.16







வள்ளுவர் கூறும் நல வாழ்வியல் - உணவு (2)



நமது உடல் நலத்திற்கும் பலத்திற்கும் நாம் உண்ணும் உணவே பெரிதும் அடிப்படையாக அமைகிறது!
ஏற்கனவே நாம் இதே பகுதியில் காலை உணவை - சிற்றுண்டியாகக்கூட அல்லாமல் ‘பேருண்டியாக’ எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை நல்லதுதான் என்பது அண்மைக் காலத்தில் மருத்துவர்களின் அறிவுரை (அதற்காக மித மிஞ்சி சாப்பிட்டு காலை வகுப்பிலோ, பணிமனையிலோ தூங்கி விடும் அளவுக்குச் சென்று விடலாமா?) ஒரு கருத்தை வலியுறுத்தும் வகையில் கூறப்படுவதே அது.
காலை உணவினை தவிர்ப்பவர்கள் மூளை பலத்தையும் இழக்கிறார்கள்!
குறிப்பாக நமது குடும்பத்தில் உள்ள இணையர்கள், காலை உணவைச் சாப்பிடாமலேயே பள்ளிக்கோ, கல்லூரிக்கோ ஓடும் நிலை பலவிடங்களில் காணும் ஒன்றேயாகும். அதன் தீமையை நம் பிள்ளைகளுக்கு விளக்கி காலை உணவுதான் மிக முக்கியம் என்பதை வலியுறுத்த வேண்டும்.
உள்ள வளம், உடல் நலம் இரண்டுக்குமே இது இன்றிய மையாத ஒன்றாகும்!
எவ்வகை முக்கிய உணவாயினும் அதனை எப்படி உண்ண வேண்டும்?
இதோ திருவள்ளுவர் தம் குறள் மூலம் நமக்கு அறிவுரை தருகிறார்!
“இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்”         (குறள் - 946)
பொருள்: “உண்ணும் உணவின் அளவில் சிறிது குறைய உண்பதே நல்லதாகும் என்று அறிந்து உண்பவனிடம், இன்பமானது நீங்காது நிற்பதைப் போலவே, மிகவான உணவை உண்பவனிடம் காணப்படும் நோயும் நீங்காது நின்றுவிடும்.
எவ்வளவு சுவையான விருந்து, உணவு என்றாலும் சிறப்பான உடல் நலம் காக்கும் வகையில் உண்ணுதலில் ஒரு சிறந்த வழிமுறை என்ன தெரியுமா?
‘சுவையாக உள்ளது; இன்னும் கொஞ்சம் உண்ணலாம்‘ என்ற நினைப்பு வரும்போது, உண்மையிலேயே - வயிற்றின் ஒரு பகுதியை முழுவதும் நிரப்பாமலேயே எழுந்து விடுவதைவிட சிறந்த முறை வேறு கிடையாது.
‘அருந்தியது அற்றது போற்றிஉணின்’ என்பதற்கொப்ப, செரிமானம் செய்யும் நிலை உடலில் செரிமானக் கருவிகளுக்கு அதிக கூடுதல் சுமை (Over the work) தராமலேயே நாம் இருந்தால் பல நோய்கள் வராமலேயே பாதுகாத்துக் கொள்ளலாமே!
இது படிப்பதற்கு எழுவதற்கும் எளிது
இதைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துவது அரிது. இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்!
“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்“ (குறள் 947)
பொருள்: ஒருவன் தன் உடம்பின் தன்மையையும், அதற்கேற்ற உணவையும், அதற்கான காலத்தினையும், வயிற்றில் உணவு செரிக்கும் அளவினையும் ஆராய்ந்து பார்க்காமல், அதிகமான உணவை அவன் உண்பானே யானால், அவனிடத்தே நோய்களானவை அளவு கடந்து வளரவே செய்யும் என்பதே இக்குறளின் பொருளாகும்!
எதையும் அளவுடன் அனுபவிப்பது எப்போதும் நம்மை உயர்த்தும், வாழ்விக்கும்!
இதைத்தான் எளிய மொழியில் நம் மூத்தவர்கள் ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்று ஒரு வாக்கியத்தில் சொன்னார்கள்!
வந்தபின் தொல்லையான நோய்க்கு மருத்துவரை நாடுமுன், வராமல் தடுப்பது நம் கையில் தானே உள்ளது? இல்லையா?
- கி.வீரமணி
-விடுதலை,1.4.16

ஞாயிறு, 22 மே, 2016

இதோ திருக்குறளுக்கு ஒரு இனிய, எளிய புரட்சி உரை!


வள்ளுவரின் திருக்குறளுக்குப் பலரும் உரையெழுதியுள்ளனர் - பரிமேலழகர், மணக்குடவர் தொடங்கி பிறகு வ.உ. சிதம்பரனார்; புரட்சிக் கவிஞர், திருக்குறளார்  வீ. முனுசாமி, புலவர் குழந்தை, கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற பலரும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு உரையெழுதியுள்ளார்கள்!
சென்னையில் (ஜனவரி 15,16 - 1949) மாபெரும் திருக்குறள் மாநாட் டினை அறிஞர் அண்ணா போன்றாரை உடன் வைத்து, பெரும் புலவர் பெருமக்களையும், பேராசிரியர்களையும் அழைத்து குறளைப் பொது மக்களிடம் போகும்படிச் செய்ய ஒரு திருப்பத்தை உருவாக்கினார்கள்.
அதுவரை வள்ளுவர் குறள் புலவர் வீட்டுப் புத்தக அலமாரிக்குள்ளே இருந்தது; பொது மக்கள் மன்றத்திற்கு வந்ததுடன், மேலே காட்டிய பல பகுத்தறிவாளரின் உரையெழுதும் பயனுறு பணி நடைபெற்றது.
புரட்சிக் கவிஞரின் திருக்குறள் உரை முழுமை பெற்றுக் கிடைக்கும் நிலை இல்லை என்பது நமக்கோர் இழப்பாகும்!
அண்மையில், பெரம்பலூர் பகுத்தறிவுக் கவிஞர் முத்தரசன் அவர்கள், என் குரலில்   ‘திருக்குறள்’ என்ற ஒரு அருமையான கையடக்க நூலாக, ஒவ்வொரு குறளுக்கு நேராக  உரை, நடை எளிதில் புரியும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு, ‘மெய்ப் பொருள்’ கண்டுள்ள நூலை, அவர் தர நான் படித்தேன்; சுவைத்தேன் -மலைத்தேன். (அது மலைத் தேனுங்கூடத்தான்!)
‘கடவுள் வாழ்த்து’ என்பது திருக்குறளில் திருவள்ளுவர் எழுதியது அல்ல; அது இடைச் செருகல் என்று தமிழறிஞர் கப்பலோட்டிய தமிழன், ஒப்பற்ற தியாகச் செம்மல் வ.உ.சி. வரையில் குறிப்பிட்டுள்ளனர்.
பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு தந்தை பெரியார் அவர்கள் இந்த வாழ்த்து அதிகாரம் பற்றிக் குறிப்பிடுகையில், தலைமைப் பண்புகள் என்றே பொருள் பொதிந்துக் கூறினார்!
எந்த இடத்திலும் ‘கடவுள்’ என்ற சொல்லே இல்லை - தலைப்பிட்டவர்கள் ‘கடவுள் வாழ்த்து’ எனக் கூறி தொகுத்தமையால் அது தொடர்கிறது. எனவே ‘பாயிரம்‘ என்றே தலைப்பிட்டுள்ளார்!
பலருக்கு மாற்றிச் சிந்திக்கத் தெளிவுமில்லை; தெளிவுற்றவர்களுக்கு; ... துணிவுமில்லை.
இந்நூல் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் ஈர்த்துப் படிக்கத் தூண்டும் வகையில் பகுத்தறிவுத் தேனில் வள்ளுவர் கருத்தினை விருந்தாகப் படைத்துள்ளார் கவிஞர் முத்தரசன் அவர்கள்! புலவர் வெற்றியழகன் அவர்களது அணிந்துரை சிறப்பானது.
இதைச் சிலர் ஏற்கலாம்; பலர் தள்ளலாம்! அதுபற்றிக் கவலைப்படாது துணிந்துப் பகுத்தறிவில் தோய்ந்த சரியான பார்வையுடன் இவர் குரல் ஒலிக்கிறது! அதில் திருக்குறள் தான் ஒலிக்கிறது; வேறு ஒலியல்ல; பலியான தமிழர்மீள புலி போன்ற பாய்ச்சல் இது! எடுத்துக்காட்டாக முதல் அதிகாரப் பொருள் இதோ!
-விடுதலை,3.3.16

குப்பையிலிருந்து கோபுரம் ஏறிய கோமகள்!


வாழ்வியல் சிந்தனைகள்

குப்பைகளைக்கூட செல்வமாக்கலாம் - உழைப்பும், முயற்சியும் தன்னம் பிக்கையும் இருந்தால்!
தஞ்சை வல்லத்தில் உள்ள பெரி யார் - மணியம்மைப் பல்கலைக் கழ கத்தில் ஒரு  அனுபவக் கருத்துரை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
‘Waste in Wealth’ -- கழிவையும் காசாக்குவோம்.
செல்வமாக்கி, செழிப்புறுவோம்’ என்பதே அது! சில கட்டுமானங்களே இதனை நடைமுறைப்படுத்திய நமக்கு சான்று பகிர்கின்றன!
மகாராஷ்டிர மாநிலம், புனேயில், குப்பைகளைப் பொறுக்கிய சுமன் என்ற அம்மையார் குப்பையை சேகரித்து, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாய் திரட்டுகிறார்; அது மட்டுமா?
சுவிஸ் நாட்டு ஜெனிவாவில் கருத்தரங்கிற்கு இவர் அழைக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டார்.
குப்பையிலிருந்து கோபுரம் ஏறி நின்ற கோமகள் இந்த அம்மையார்.
‘தினமணி’ கதிரில் (24.1.2016) வந்த ஒரு கட்டுரை இதோ:
இவரது வருமானம் ஆண்டுக்கு
1 கோடி ரூபாய்!
“வாழ்ந்து ஆக வேண்டுமே என்று 34 ஆண்டுகளுக்கு முன்பு சுமன் குப்பைகள் பொறுக்கத் தொடங்கினார். குப்பைகளைப் பொறுக்கி விற்றால் அன்று கிடைத்தது ஐந்து ரூபாய்.
இன்றைய தினம் சுமன் இந்தக் குப்பைகள் மூலமாக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் என்றால் நம்ப மாட்டீர்கள். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
சுமன் வாழ்வது புனே நகரில். இன்று சுமன் விரல் அசைத்தால் தான் புனே நகரம் சுத்தமாகும். அன்றைக்கு சாக்கை விரித்து குப்பைகள் பொறுக்கிய சுமன், இன்று புனே நகரைச் சுத்தமாக வைத்திருக்கும் சக்தியாக மாறியிருக்கிறார். இந்த வேஸ்ட் மேனேஜ்மென்ட் யுக்தி, சென்ற ஆண்டு ஜெனிவா நகரில் சர்வதேச உழைப்பாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேச சுமனை சிறப்பு அழைப்பாளராக உயர்த்தியது. இந்த உயர்ச்சி சுமன் மட்டுமல்ல, வேறு யாரும் எதிர்பார்க்காதது. குப்பையில்தான் மாணிக்கம் கிடைக்கும். சுமன் குப்பை அள்ளியே மாணிக்கமாகிப் போனவர்.
சுமன் சாதனை செய்தது இப்படித் தான். ஒருவித நாணம் கலந்து தயங்கித் தயங்கிக் கூறுகிறார்.
“குப்பை அள்ளும் வேலைக்கு வந்து 37 ஆண்டுகள் ஆகின்றன. சமூகத்தில் குப்பைகளை அள்ளுபவர்களுக்கு என்ன மதிப்பு தரப்படுகிறது என்று நான் சொல்லத் தேவையில்லை. பெரும்பாலும் எங்களைத் திருடர்களாகத்தான் பார்க் கிறார்கள்.
வயிற்றுப் பிழைப்பிற்காக புனே வந்து சேர்ந்தோம். கணவர் நாடோடி இனத்தைச் சேர்ந்தவர். நான்கு குழந்தைகள். தினமும் ஒரு வேளை உணவு, எங்களுக்குப் பகல் கனவாக இருந்தது. எனக்கு படிப்பு இல்லை. வீடுகளில் பத்துப் பாத்திரம் கழுவக் கூட வேலை கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் பழைய இரும்பு, காகிதம் என்று பொறுக்க ஆரம்பித்தேன். ஒன்பது மணி நேரம் தெருக்களில் சுற்றி அலைந்து, பொறுக்கியவற்றை விற்றால் இருபது ரூபாய் கிடைக்கும். அதை வைத்து இரவு உணவைத் தயாரிப்பேன். அடுத்த வேளை உணவு அடுத்த நாள் இரவுதான்.
வறுமை, பசி எங்களைச் சொந்த கிராமத்திலிருந்து விரட்டியது. புனே சென்றால் ஏதாவது வேலை செய்து பசியைத் தணிக்கலாம் என்றால்... புனேவிலும் அதே கதைதான். அதையே நினைத்து எத்தனை நாள் நொந்து கொள்வது? குப்பைகளைப் பொறுக்கி பொறுக்கி விற்றதில் ஒன்று புரிந்தது. சேகரிக்கும் குப்பைகளை தரம், இனம் வாரியாகப் பிரித்து விற்றால் அதிக விலை கிடைக்கும் என்று புரிந்து கொண்டேன்.
புனே நகரில் குப்பை பொறுக்குப வர்களை ஒன்று சேர்த்தேன். “புனே நகர துப்புரவு கூட்டுறவு சங்கம்‘ ஒன்றை ஆரம்பித்தேன். என்னை அதன் தலைவி ஆக்கி விட்டார்கள். இன்று எனது வருமானத்தை நலிவடைந்தவர் களுக்காகச் செலவு செய்கிறேன்.
குப்பை பொறுக்குபவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கச் செய்தேன். இதனால் போலீசின் தொந் தரவு குறைந்தது. பொது மக்களும் நாங்கள் பழைய பொருள்கள், குப்பைகளைப் பொறுக்குபவர்கள்... என்று நம்பத்தொடங்கினர். நகரின் சுத்தமாக்கும் வேலைகள் எந்தத் தாமதமும் இன்றி நடக்கின்றன. இந்த வேலையில் உள்ளவர்களுக்கும் வருவாய் அதிகமானது. கிட்டத்தட்ட இந்த வேலை பார்ப்பவர்களின் மொத்த வருவாய் ஆண்டிற்கு ஒரு கோடி. எனது ஆரம்ப நிலைமை என் பிள்ளைகளுக்கு வரக் கூடாது என்பதில் படு தீவிரமாக இருந்தேன். எனது பிள்ளைகளை கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தேன். அவர்கள் இன்று நல்ல நிலைக்கு வந்துவிட்டார்கள். ஒரு மகன் பத்திரிகையாளர். இன்னொருவர் ஐஏஎஸ் தேர்வு எழுதுகிறார். மருமகள் கல்லூரியில் வேலை பார்க்கிறார். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் ஆகிவிட்டது. சொந்தமாக பிளாட் வாங்கினாலும், பழைய குடிசையை மாற்றி கட்டிடம் கட்டி சேர்ந்து வாழ்கிறோம்.
திடீரென்று ஜெனிவா கருத்தரங்கத் திற்கு அழைப்பு வந்தது. கையும் ஓடலை. காலும் ஓடலை.. அங்கே போனபோது சேலை அணிந்த பெண் நான் மட்டும்தான். நமக்கு மட்டும்தான் பிரச்சினை என்றால், ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகள். குளிரூட்டப்பட்ட அரங்கில் அமரச் செய்தார்கள். ஏசி எனக்கு பழக்கம் இல்லாததினால் , என்னால் இருக்க முடிய வில்லை. ரொம்பவும் கஷ்டப்பட்டேன். நான் பேசியதைக் கேட்டு எல்லாரும் பாராட்டினார்கள். குப்பை அள்ளியும் கௌரவமாக வாழலாம் என்பதற்கு எங்கள் சங்கம் தான் ஓர் அழகான எடுத்துக் காட்டு’’ என்கிறார் சுமன்.”
நன்றி: ‘கதிர்’
‘நம்மால் முடியாதது
வேறு யாராலும் முடியாது
வேறு யாராலும் முடியாதது
நம்மால் மட்டுமே முடியும்’
என்ற மொழிக்கு இதைவிட நல்ல சான்று வேண்டுமா?
- கி.வீரமணி
-விடுதலை,28.5.16
°Š¬ðJL¼‰¶ «è£¹ó‹ ãPò «è£ñèœ!

உணவில் கவனிக்க வேண்டிய முக்கிய பாதுகாப்பு!


இன்றைய (23.1.2016) ‘தி எக்னாமிக் டைம்ஸ்’ ஆங்கில நாளேட்டில், மக்கள் நல்வாழ்வு பகுதியில் பல்வேறு முக்கிய உடல் நலக் குறிப்புகள் பற்றிய அறிவுறுத்தல் வெளி வந்துள்ளன. அவற்றை நாமும் பகிர்ந்துண்டு பயன் பெறலாமே!
சாக்கரை நோய் உள்ளவர்களில் பலருக்கு கண் பார்வையைப் பறிக்கும் ‘குளுகோமா’ என்ற கண் அழுத்த நோய், திடீர் கண் பார்வை பறிக்கும் நோய் தடுப்புக்கும் மிக அவசியமானது பச்சைக் கீரைகளும், அவை சார்ந்த காய்கறிகளும் நாம் உணவில் உட்கொள்வது ஆகும்.
காரணம் இந்த பச்சைக் கீரை காய்கறி (Green Leafy vegetables) வகையறாக்கள், ‘நைட்டிரேட்’ என்ற ஒரு வித சத்துக்களை ஏராளம் கொண்டவை ஆதலின் அவை கண்ணைப் பாதுகாக்க உதவுகின்றன.
இதற்காக அமெரிக்காவில் சுமார் 1 லட்சம் பேர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி, முடிவு கண்டறிந் தனர்; 21 சதவிகிதம் பேர் இவ்வகை பயனாளிகளாகவும், இப்படி பச்சைக் கீரை, காய்கறி வகைகளை உண்ணாத வர்கள் நைட்டிரேட் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளார்கள்! அப்படி உண் ணாதவர்களை, குறிப்பாக 60 வயது - 70 வயதுள்ளவர்களை ‘Open angle Glaucoma’ தாக்குகிறது என்று கண்டறிந்துள்ளனர்.
இந்த ‘Open - angle glaucoma’  என்பது, கண்களைச் சுற்றியுள்ள உள் பகுதியில் திரவங்கள் சேர்வதினால் அது முக்கிய நரம்பான ‘‘Optic nerve’ ’வைத் தாக்கி அதை பழுதடையச் செய்து, பார்வையைப் பறிக்கிறது!
எளிய கீரை - காய்கறியைச் சாப்பிடுவதினால் எவ்வளவு நன்மை என்று யோசித்தீர்களா?
மருத்துவச் செலவும், நோய் வலியும் - உபாதையும் மன உளைச்சலும் இன்மை மிச்சம் அல்லவா?
வருமுன்னர் காக்க கற்றுக் கொள் ளுதல் அவசியம்.
****
சிலர் வாரம் முழுவதும் நான் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறேன்; முறையான ஆரோக்கிய உணவையே உட்கொள்ளுகிறேன். என்றெல்லாம் கூறி விட்டு, இறுதியில் வாரத்தின் இறுதியில் ஓரிரு நாட்களில் (சனி, ஞாயிறு, என்று உதாரணத்திற்குச் சொல்லுவோமே) தான் பர்கர், Burgers, Chips, சிலீவீஜீs போன்றவைகளைச் சாப்பிடுவேன் என்று கூறுவதுண்டு.
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழக மருந்தியல் துறையின் தலைவர் ஓர் ஆய்வு நடத்தியுள்ளார்.அதன் மூலம் அவர்கள் கண்டறிந்த முடிவு என்ன தெரியுமா?
மனிதர்களின் குடற்பகுதி நிuts பல கோடி மில்லியன் (100 Trillion) மைக்ரோபியல் செல்களை கொண்டதாக உள்ளதால், மெட்டபாலிசத்தில் அவை தான் பாதிப்பு ஏற்படுத்த காரணமாகின்றன.
குடற் புண்கள் - மலக் குழாய் புண்கள்(linked with gastro intestinal conditions such as inflamatory bowel disease and obesity)
வயிறு பெருத்தல் உட்பட ஏற்பட வழி வகுக்கின்றன.
மோரீஸ் என்ற அந்த பேராசிரியர் தான் இப்படி முதன் முதலாக ஒப்பீடு செய்து சுகாதாரமற்ற உணவு எப்படி உணவுக் குழாய் முதல் மலக்குடல் வரை பல வகை தாக்குதல்களை (Microbiota) உருவாக்குகிறது என்று அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
எனவே உணவுப் பழக்கத்தில் ஒரு சீர்மையைக் கடைப் பிடியுங்கள் அது அவசியம்.
- கி.வீரமணி
-விடுதலை,23.1.16

சனி, 21 மே, 2016

மண விலக்கும், மன விலக்கும்!


கிறித்துவ மதவாதிகள் சொல்வ துண்டு, “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்று; அதன் காரணமாக அம்மதத்தில் (அண்மைக் காலம் வரைகூட) மண விலக்கு (Divorce) அனுமதிப்பதில்லை.
ஹிந்து மதம் என்ற ‘சனாதன’ வேத மதத்தில், திருமணம் என்பது பிரிக்கப்பட முடியாத ஒரு ‘புனிதக் கட்டு’ (Sacrement) என்று கூறி, மண விலக்குகளை அனுமதிக்காமல் இருந்து பிறகு 19,20-ஆம் நூற்றாண்டுகளிலிருந்து  ஹிந்து மத முறைப்படி நடைபெற்ற திருமணங்களுக்கு மணவிலக்கு, சட்டப் படி அனுமதிக்கப்பட்டது.
முன்பெல்லாம் குறைவாக இருந்த மணவிலக்கு வழக்குகள் இப்போது மூன்று நான்கு மடங்கு அதிகமாகி உள்ளன என்று புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றன.
சென்னையில் மட்டும் 8 ஆயிரத்துக் கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மேலும் கூடுதலாக 4 குடும்ப நல நீதிமன்றங்களை தொடங்கும் முயற்சியில் நீதித்துறை இறங்கியுள்ளது.
இதில் முதல் இடம் (மணவிலக்கு வழக்கு) அய்.டி. என்ற கணினி வேலை யில் ஈடுபட்டவர்களேயாவர் என்பது மற்றொரு செய்தி.
இதன் காரணமாக அண்மையில் ‘மணமகள் தேடிய ஒரு அன்பர் நம்மிடம் கூறியது என்ன தெரியுமா?
“என்ன சார், எம்பெண்ணை எந்த மாப்பிள்ளைக்கும் கட்டித் தர தயாராக இருக்கிறேன்; ஆனால், கம்ப்யூட்டரில் பணி புரியும் மாப்பிள்ளை மட்டும் வேண் டாங்க” என்றார் - மிகுந்த கனிவுடனும், பணிவுடனும் (என்னே வேடிக்கை).
ஒரு காலத்தில் அய்.டி. வேலையில் உள்ள ‘கொழுத்த சம்பளம் வாங்கும்‘ மணமகளையோ, மணமகனையோ விரும்பித் தேடிய காலம், அந்தக் காலமாகி விட்டது!
காரணம் கம்ப்யூட்டர் அய்.டி. பணியில் வேலை செய்வோரிடம், அந்த முதலாளிகள் தங்கள் துறையினரை கசக்கி பிழிந்து வேலை வாங்கி விடுகின்றனர். கொடுமையிலும் கொடுமை இது!
மணவிலக்குக்கு காரணங்கள் எவை என்று ஆராயும்போது,
1. விட்டுக் கொடுக்கும் மனப்பான் மையின்மை, தன்னையே முன்னிலைப் படுத்தும் (Ego) பிரச்சினை!
2. சகிப்புத்தன்மை இன்மை - காதல் திருமணங்களில்கூட ஏன் இப்படி?
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள ஏன் தயக்கம்? புற அழகு, வாங்கும் சம்பளத்தின்மீதுள்ள கவர்ச்சி - ஆடம்பர வாழ்க்கையின்மீதுள்ள மோகம் - எல்லாவற்றையும்விட, இளமையின் பால் கவர்ச்சி, உடல் இன்ப ஆவேசம்!
திருமணம் ஆகி வாழ்க்கை துவங்கும் நிலையில் இவை சிறுக சிறுக பனிக்கட்டி உருகுவதுபோல உருகி ஓடும்போது, சறுக்கல், வழுக்கல் தவிர்க்க முடியாததுதானே!
‘ஒருமனதாயினர் தோழி,
திருமண மக்கள் வாழி!’
என்ற புரட்சிக் கவிஞரின் பொன் வரிகளால் காதல் உறுதியான கான்கிரீட் டானால் அது கரையாது; உடையாது!
ஆனால் வெவ்வேறு உள்நோக் கங்களுடன், புறக் கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து, அகத்தை அறியாமல் “தலையைக் கொடுத்து”விட்டால் (உலகியல் மொழி இது!) பிறகு அவதியை அனுபவிக்கத்தானே வேண்டும்?
இதில் நீதிமன்றங்களைவிட தன்னார் வத் தொண்டமைப்புகளை அதிகம் ஈடுபடுத்தி, இருவருள்ளங்களிலும் உள்ள தேக்க நிலையினை சற்று ‘எக்ஸ்ரே’ கண் கொண்டு பார்த்து இதயத்தால் முடிவு - மூளையால் அல்ல - செய்தால் பற்பலநேரங்களில் மனிதம் பிழைக்கும்.
முடியாவிட்டால், முடிவுப்படி விலகிக் கொண்டு விடுதலை பெறுவதே விவேகம். பல நாள் நண்பர்கள்கூட (பழகியவர்கள்) பிரிந்து விடுகின்றனரே! அதில் என்ன தவறு?
மன அமைதிதான் - நிம்மதிதான் முக்கிய கண்ணோட்டமாக இருக்க வேண்டும் - வீண் வீம்புக்கு இருவர் நிம்மதி ஏன் பலியாக வேண்டும்?
- கி.வீரமணி
-விடுதலை,22.1.16