பக்கங்கள்

செவ்வாய், 6 மார்ச், 2018

சிறுநீரகப் பாதுகாப்பான 6 கட்டளைகள்!



நமது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தக்க முறையில் பாதுகாக்கப் பட வேண்டியதே.  என்றாலும் அடிப் படையானது இருதயம்; (Heart) தான் ஓய்வெடுக்காமல், உறங்காமல் சலிப் பின்றி தனது கடமையைச் செய்யும் முக்கிய உடல் உறுப்பு அது!

அதுபோலவே மூளையும் முக்கியம். அதன் செயலாக்கம்தான் நமது வாழ்வை பொருள் உள்ள (பணமல்ல - அர்த்த முள்ள வாழ்வு) வாழ்வாக ஆக்கிட உதவும். அது செத்துப்போனால் நாம் வாழ்வது பயனற்ற வாழ்க்கை அல்லவா? அதனால் மூளைச் சாவு ஏற்பட்ட வர்களின் உடல் உறுப்புக் கொடைமூலம், பலரையும் வாழ வைக்கும் அருமையான தொண்டறம் நடை பெறுகிறது. வாழு, வாழ விடு என்பதை சற்று மாற்றி, 'வாழு, முடியாவிட்டால் பிறர் வாழ வகை செய்ய நீ உதவிடு' என்பதற்காகவே இந்த உடல் உறுப்புக் கொடை. என்பது பரந்து விரிந்த மனிதநேயம்! இல்லையா?

கல்லீரல், கணையம் என்பதுடன் சிறுநீரகம் (Kidney) என்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்தால் தான் நமது உடல் நலம், கவலைகள் அற்றதாக இருக்க முடியும்.

நமது சிறுநீரகம் (Kidney)) அதுவும் சலிப்பின்றி பணி செய்து நம்மை வாழ வைக்கிறது. இரண்டில் ஒன்று பழுதானால்கூட மற்றொன்று அதன் கடமையைத் தவறாமல் செய்து நமது ஆயுளை வளர்க்க உதவுகிறது.

ஆனால் நம்மில் பலர் அதனை சரிவர கடமையாற்ற விடாமல் நமது தவறான பழக்க வழக்கங்களால் செய்து விடுகிறோம். எப்படிப்பட்ட கவலையும், கவனமும் சிறுநீரகத் நோய்த் தொல்லையிலிருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்ள முடியும் என்பதுபற்றி, நமது மருத்துவ நண்பர் அனுப்பிய ஒரு செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நமக்கு ஒரு தனி மகிழ்ச்சியே!

1. அதிகமாக மது அருந்துவோர் தங்களது சிறுநீரகம் கெடுவதற்கு விதை தூவி, உரம் போட்டு வருகிறார்கள். அது சிறுநீரகத்தை பாதிக்கிறது. குடிகாரர்கள்கூட (ஒரு தடவை) அளவுடன் குடித்தால் அது பெரிய அளவில் பாதிப்பதில்லை! மொடாக் குடியர்கள் என்றால் கல்லீரல் முதல் சிறுநீரகம் வரை நிச்சயம் பாதிக்கவே செய்யும் என்பது ஓர் எச்சரிக்கையாகும்.

2. நமது நாட்டில் வழங்கப்படும் எளிய பழமொழி ஒன்று உண்டு.

'ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம் மூத்திரத்தை அடக்கக் கூடாது' என்பதே சரியான அறி வுரை. அவ்வப்போது மூத்திரப் பையை (Bladder) 
காலி செய்யத் தயங்கக் கூடாது. இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியவர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள்.

சிறுநீர் வெளியேற்றப்படாமல் அடக்கி அடக்கி வைத்தால் அதனால் மூத்திரப் பையில் கற்கள் உருவாகி, பிறகு அது பெரும் வலியைத் தந்து உயிர்க் கொல்லி யாகவும்கூட சிற்சில நேரங்களில் ஆகும் ஆபத்தை உண்டாக்கி விடக் கூடும். எனவே சிறுநீரை அடக்கா தீர்கள்!

வயது முதிர்ந்தவர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  இளைஞர்கள் கூச்சப்பட்டோ, சோம்பல் காரணமாக சிறுநீர் கழிப்பதைத் தள்ளி போட்டால், சிறுநீரகக் கற்களை அவர்களே உற்பத்திக் கான ஆயத்தம் செய்கிறார்கள் என்று பொருள்.

3. தேவைப்படும் அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் ஆகும்.

போதிய தண்ணீர் குடிக்காவிட்டால் அதன் விளைவு நமது உறுப்புகள் செயலற்றுப் போக இந்தத் தண்ணீர் இன்மை (Dehydrate) காரணமாகிவிடும்!

நீரின்றி அமையாது உடம்பு என்று கவனமாக இருந்து அவ்வப்போது நீர் அருந்தினால் தான் நமது உடலின் கழிவுப் பொருள்கள் வெளியேற அது உதவி செய்யக் கடமை ஆற்றிடும், அதற்குப் போதுமான நீர் இல்லா விட்டால், அந்த சிறுநீரகம், - எண்ணெய் போடாத என்ஜின்  துருப்பிடிப்பதைபோல, இதுவும் கெட்டுப் போய் தட்டுத் தடுமாறிடும் நிலை ஏற்பட்டு டாக்சின் (Toxin)  என்ற விஷப் பொருள் உடம்பில் உற்பத்தியாகும். எனவே, போதிய  நீர் குடிப்பது மிகவும் தேவையாகும்.

4. உணவில் அதிக உப்பு ரொம்பவும் தப்பு - புரிந்து செயல்படுங்கள். சிறுநீரக பரிசோதனையில் உப்பு (Sodium) எவ்வளவு என்பதுபற்றியும் கிரியாட்டின் (Creatinine) 
அளவு சோதனை போலவே கவனிப்பார்கள். அதிக உப்பு, சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்ய முக்கிய காரணியாகச் செயல்படும். எனவே உடலில் உப்புச்சத்து குறைந்து விடவும் கூடாது; கூடியும் விடக் கூடாது என்பதில் விழிப்புடன் இருங்கள்.

உப்புச் சத்து அதிகம் உள்ள ஊறுகாய், கருவாடு இவைகளை அதிகம் எடுப்பவர்கள் கவனமாக இருங்கள்.

(ஊறுகாய்ப் பிரியனான நான் அதை குறைத்து வருகிறேன் - பிறகு நிறுத்தியும் விடுவேன்)

5. அளவுக்கு அதிகமாக ஒரு நாளில் பல முறை காப்பி (Coffee) 
) குடித்துக் கொண்டே இருந்தால் அது சிறு நீரகத்தை பாதிப்பது நிச்சயம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே!

எனவே அளவோடு, ஒன்று, இரண்டு முறையோடு காப்பியை நிறுத்திக் கொள்க.

6. தூக்கமின்மை: உணவு, விளையாட்டு, உடற்பயிற்சி இவையெல்லாம் நமது உடல் நலம் பேண எவ்வளவு முக்கியமோ அதுபோல தூக்கம் என்பதும் முக்கியமாகும்! குறிப்பிட்டநேரம் தூங்குவது எழுவது உடல் கடிகாரத் தினை ஒழுங்குபடுத்துவதோடு, நமது உடல்  நலத்தையும் பாதுகாக்கப் பயன்படும்!

தூக்கமின்மை என்பது பல நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது!

அண்மையில் படித்த ஒரு வாக்கியம் - பிடித்த சொற்களும்கூட!

"பகலில் தூங்கினால் அது உடல் சோர்வைக் குறிக்கிறது. இரவில் தூக்கம் வராமல் இருந்தால் அது மனச் சோர்வை - மன உளைச்சலைக் குறிக்கிறது என்று அது எவ்வளவு சரியான உண்மை!

வயது முதிந்தவர்களுக்குக்கூட குறைந்தது 8 மணி நேரம் அல்லது 7 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கிறார்கள் தூக்கம் பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள்.

எனவே, தூங்குவது அவசியம். குறிப்பாக இரவு 12 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை உள்ள நேரத்தில் கண் விழித்திருப்பதை தவிர்த்து தூங்கினால் அது உடல் நலப் பாதுகாப்புக்கு பொதுவாக நல்லது என்பது மருத்துவ ஆய்வியல் கூற்றாகும்.

எனவே இந்த ஆறு கட்டளைகளை தவறாது ஏற்று வாழக் கற்றுக் கொண்டு, சிறுநீரகம் சீராக இயங்க உதவி, நோயற்ற வாழ்வைப் பெறுவோமாக.

- விடுதலை நாளேடு, 6.3.18

வியாழன், 1 மார்ச், 2018

முதுமையும் - முதிர்ச்சியும்: ஒரு விளக்கம் (2)

24.2.2018 அன்று வெளிவந்த ‘‘வாழ்வியல் சிந்தனையின்  தொடர்ச்சி வருமாறு:




4. எதை விட வேண்டுமோ அதைவிடுவதற்குப் பழகிக் கொள்ளுங்கள். பல பழக்க வழக்கங்கள் நம்மை அடிமையாக்கி வைத்திருப்பதை, உறுதியுடன் விரட்டி விடுதலை பெறுங்கள். விளைவு முதிர்ச்சி தானே வந்து உங்கள் முன் நிற்கும்!

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுங் கள்.

நாம் வாழ்வில் எப்போது ஏமாற்றத்திற்கு ஆளா கிறோம் தெரியுமா? அதிகமான பேராசை, எதிர் பார்ப்புகள்! இயல்புக்கு முரணான பகற்கனவுகளில் உந்தப்பட்டு, கணக்குப் போட்டு பிறரிடம் பழகி, அவரே உங்களைப் புரிந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டு விலகும் நிலையெல்லாம் ஏற்படும் முன்னரே, எதிர்பார்ப்புகளை ஏராளம் பெருக்கிக் கொண்டு ஏமாற்றத்திற்கு ஆளாகாமல், உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள். நம் முதிர்ச்சிக்கு இதுதான் சரியான அடையாளமாகும்!

6. செய்வதை மன அமைதியுடன் செய்யுங்கள். பதற்றமின்றி, பரபரப்புக்கு இடம் தராமல் அமைதியுடன் செயல்படப் பழகுங்கள்!

ஒரு தீ விபத்தோ அல்லது மற்ற விபத்தோ ஏற்படும்போது ‘ஆம்புலன்சை' அழைப்பது, மருத்துவமனையில் சேர்ப்பது, குறிக்கவேண்டியன வற்றை குறித்துத் தகவல் கொடுப்பது போன்ற வையை மன அமைதி குலையாமல் செய்தால் முழுப் பயனை அடைய, அறுவடை செய்ய முடியுமே!

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுங்கள்.

இது தன்முனைப்பின் புது உருவாக்கம். ‘நானே அறிவாளி' என்ற கர்வத்தின் வாந்தியாகும்! இந்த வாந்தியை எடுப்பதை விட்டு விடுங்கள். வள்ளுவர் சொன்னார் ‘‘அரிதொரும் அறியாமை'' என்று! அறிந்ததை மறைத்து, அப்பாவி போல அவர் அளத்தலைக் கேட்டுப் பழகுங்கள் - ஏன் பொறுத்துப் பழகி அலட்சியம் காட்டுங்கள் - உங்களை முதன்மைப்படுத்தும் வியாதியை விட்டொழியுங்கள்!

8. நம் செயல்களை மற்றவர்கள் ஏற்கவேண்டும் - ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் என்ற திணிப்பு மனப்பான்மையை நம் மனதிலிருந்து விரட்டி யடியுங்கள். அவர் அதைக் கொள்ளவோ, தள்ளவோ முழு உரிமை பெற்றவர் என்று எண்ணுங்கள். உங்களிடம் அவர் என்ன அடிமை முறிச்சீட்டா எழுதிக் கொடுத்துள்ளார்? உங்களுக்கு அப்படி என்னென்ன உரிமை உள்ளது என்று சிந்தித்துப் பாருங்கள்; பிறகு, தானே உங்களின் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள முயலுவீர்கள்.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் காட்டிப் பேசுவது முதிர்ச்சியாகாது! அடக்கத்தோடு நம்மை நாம் பெரிதாக நினைக்காமல், எளிமை, இனிமை என்ற போர்வையை மனதுக்குப் போர்த்தி விடுங்கள்!

10. எதற்குமே கலங்காது, மனதை அமைதியாக வைத்துக்கொள்ளப் பழகுங்கள். ஒரே நாளில் அது வந்துவிடாது. மனப் பயிற்சி, ‘திடசித்தம்'மூலம் உறுதியாக வரும் அது!

எதற்கெடுத்தாலும் கவலை, கவலை, கவலை என்று மனதை நோயாளியாக்கி விடாதீர்கள். பிரச்சினைகளை வரவேற்று தீர்வுகளைக் காண நம்மால் முடியும் என்ற துணிவுடனும், தெளிவுடனும் வாழப் பழகுங்கள்!

11. நமது அடிப்படை தேவை (கீணீஸீts) என்ப தையும், நாம் விரும்புவன (கீவீsலீமீs) ஆசைகளையும், இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

அடிப்படைத் தேவை உணவு, உடை, கல்வி போன்றவை - அதை அடையலாம்.

தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் பொருள் கள் எல்லாம் தேவையா? ஏன் கடன் வாங்கித் தவணையில் வட்டிக் கட்டவேண்டும்? நாட்டில் வணிகமும், விளம்பரமும் நாளும் பெருகிக் கொண்டேதான் இருக்கும். அதையெல்லாம் உடனே வாங்கிவிடவேண்டும் என்று நினைக்கக் கூடாது.

அட்சய திரிதியில் பவுன் வாங்கினால், பெருகும் என்று நம்பி, கடன் வாங்கி, தேவையின்றி பவுன் வாங்கலாமா? உதாரணத்திற்கு இதைக் கூறுகிறோம். இப்படி வடிகட்ட வேண்டிய வாடிக்கை வழமைகள் பல உள்ளனவே!

மகிழ்ச்சி என்பது பொருள் - பணம், செல்வக் குவிப்பு, ஆடம்பரம்  இவைகளால் ஏற்படுவது  அல்ல; அவைகளை செய்ய குறுக்கு வழிகள், தவறான முறைகளில் ஈடுபட்டு வாழ்நாள் முழுவதும் வருந்தும் நிலை - இன்று வாடிடும் பலரைக் கண்டு நாம் பாடம் பெறவேண்டாமா?

நம் தேவைக்கேற்ப எளிமை, அடக்கம், சிக்கனம், துணிவு, தெளிவு எல்லாம் நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியுமே!

அவைகளின் மீதுதான் நாம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்.

பசித்தவுடன் சாப்பிடுவதே நலம்!

பசியில்லாமல் பகட்டுக்காகவும் அல்லது ஆசைக்காகவும் சாப்பிட்டு, செரிமானக் கோளாறால் நாம் அவதியுறலாமா?

‘எதுவும் நம் கைகளில்தான்' என்பதை மறவாதீர்!

‘எதுவும் நம் முடிவில்தான்' என்று உறுதியுடன் முதிர்ச்சி வழியும் வாழ்க்கையை அமைத்துக் கொள் ளுங்கள்!

வாழ்வில் வெற்றி பெறுங்கள்!!
- விடுதலை நாளேடு, 26.2.18

சனி, 24 பிப்ரவரி, 2018

முதுமையும் - முதிர்ச்சியும்: ஒரு விளக்கம் (1)



முதுமை என்பது நம்மால் தவிர்க்க முடியாதது. எதைத் தவிர்க்க முடியாதோ, அதை ஏற்கப் பழகவேண்டும் - இன்முகத்துடன்!

உலகின் அழகுப் போட்டியில் முதற்பரிசு பெற்று உலகம் முழுவதும் விளம்பர வெளிச்சம் - ஏராளமான பண வரவு, அடுத்து பணக்கார வாழ்க்கைத் துணையேற்றல் எல்லாம் கிடைக்கும்; கிடைத்திருக்கிறது. ஆனால், அந்தப் பெண்ணும், அதைப் பெரிதும் மதித்துப் போற்றிப் பெருமிதத்தால் விம்மிய ஆணும்கூட, வயது ஏற ஏற முதுமையைத் தானே ஏற்கவேண்டும்.

முதுமையை தள்ளிப் போ(ட)க எவ்வளவு ‘லஞ்சம்' கொடுத்தாலும், கொடுக்கப் பேரம் பேசினா லும்கூட, அது போகுமா? போடவும் முடியாதே!

எனவே, காலம் நமக்கு அளித்துள்ள பரிணாம வளர்ச்சியில் முதுமையும், மரணமும் (இன்று வரையில் - நாளை அறிவியல் இதை மாற்றும் வாய்ப்பு இருக்கலாம்) தவிர்க்க இயலாதவை அல்லவா! எனவே, கவலைப்படாமல் ஏற்று, அந்த முதுமையைப் பயன் உள்ளதாக்க, அதையே மகிழ்ச்சியுடன் அனுபவிக்க, மனித குலத்தவராகிய நாம் ஆயத்தமாகிடுவதே அறிவுடைமை - இல்லையா?

முதுமை நாம் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அது இயற்கை நம்மீது திணிக்கும் கட்டாயக் காதல்தானே! வேறு வழி இல்லையே!

ஆனால், முதிர்ச்சி என்பது அப்படி அல்ல. அது முதுமையடைந்தாலே தானே கதவைத் திறந்துகொண்டு வருவதல்ல. முதிர்ச்சி என்பது, நமது பண்புகள், பழக்கங்கள்மூலம் செதுக்கிப் பொலிவும், வலிவும் பெறவேண்டிய ஒரு அருங் குணம்! முதிர்ச்சி உடையோர் என்றும் இகழ்ச்சிக்கு ஆளாகார்!

அம்முதிர்ச்சி என்பது எப்படி வரும் - எது முதிர்ச்சியின் அடையாளம் என்று கேட்கிறீர்களா?

கீழ்வரும் 11 குணங்களை குறளில் உள்ள குறட் பாக்களைப் போல் படித்து, செரித்து, நடைமுறைப் படுத்துங்கள். மகிழ்ச்சியின் உச்சத்திற்கே உலகம் உங்களைக் கொண்டு சென்று நிறுத்தும்.

1. மற்றவர்களைத் திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே முதலில் திருத்திக் கொள்வது. மற்றவருக்கு அறிவுரை வழங்காதீர்; உங்களுக்கு நீங்களே அறிவுரை, அறவுரை வழங்கி, நடைமுறை யில் செயலுருவில் மாற்றத்திற்கு ஆளாகுங்கள்.

2. எவரிடமும் முழுமையான குணாதிசியங்களை (பூரணத்துவம் - Perfection அய்) எதிர்பார்க்காதீர்கள். குறைகளுடன் அவர்களை ஏற்றுக்கொள்வது அவசியம். ஊனமுற்ற நம் குழந்தைகளை நாம் நேசிக்கவில்லையா? கொன்றா போட்டு விடுகி றோம்? இல்லையே! இன்னுங்கேட்டால் அவர் களிடம்தானே அதிகப் பரிவும், பாசமும் காட்டு கிறோம்.

3. மற்றவர்களின் கருத்துகளை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ள முயலுங்கள். நீங்கள் உங்கள் கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வைக்கும், அவர்களது பார்வைக்கும், நடத் தைக்கும் மிகப்பெரிய வேறுபாடுகளும், காரண காரியங்களும் இருக்கும்; அந்த மறுபக்கத்தை ஆழமாக அலசி - மனிதநேயத்துடன் இதைப் பார்த்தால், நமது நோக்கும் - போக்கும் அவர்பற்றிய (அவசர) முடிவும் தவறு என்று தெரியும்.

ஜப்பானில் ஒரு ஏழைப் பெண் குழந்தை தவ றாமல் வகுப்புக்கு வந்தவர்; திடீரென காலதாமதமாக சில நாள் தொடர்ந்து வந்தார்; பிறகு விடுமுறை போட்டு, பள்ளிக்கு விட்டு விட்டு வந்து அபராதம் - தண்டனை பெற்றார்.

பிறகு ஒரு நாள் திடீரென பள்ளிக்கு வழமை போல் முன்கூட்டியே நேரத்திற்கு வந்தார். ஆசிரி யர்கள் மீண்டும் இவரைச் சேர்த்துக் கொள்ள மறுத்தனர்.

அப்போது அவர் சொன்னார்,

‘‘எனது ஊனமுற்ற தாயும், பாட்டியும் இருந்து என்னை பள்ளிக்கு அனுப்பினர். பிறகு தாய் நோயினால் இறந்துவிட்டார். பாட்டியைக் கவனிக்க மருந்து, உணவு தர எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு வருவதற்குத் தாமதமாகியது. பிறகு பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரை மருத்துவமனையில் சேர்த்து, நானும் உடனிருந்தேன். பாட்டி இறந்ததால், ஈமச்சடங்குகள் நேற்றுதான் முடிந்தன. இப்போது பள்ளிக்கு வந்துள்ளேன். நான் கவனிக்க, உதவிட யாரும் இனி எனக்கு இல்லை. எனவே, காலந்தவறமாட்டேன்'' என்று கண்ணீர் மல்க சொன்னார் அந்த மாணவி. ஆசிரியர்கள் அழுதார்கள்; பள்ளியில் அவரைச் சேர்த்துப் படிக்க வைத்தார்கள்.

இதுபோல நாம் நமது கோணத்தில் மட்டுமே பார்த்தால் உண்மை புரியாது. அவர்கள் நிலையில் இருந்து பாருங்கள். ‘‘ஒத்தறிவு'' (Empathy) என்பது மிகவும் தேவை. அது வந்தால் முதிர்ச்சி வந்துவிட்டது என்று பொருள்.

(தொடரும்)
- விடுதலை நாளேடு, 24.2.18

வியாழன், 15 பிப்ரவரி, 2018

அந்த 70 சதவிகிதத்தைத் துறந்து 30 சதவிகிதத்தைக் கவனியுங்கள்!



நாம் இறக்கும்போது நமது பணம் வங்கியில் இருக்கும்!

என்றாலும் நம்மில் பலருக்கு உயிருடன் உள்ளபோது செலவழிக்கப் போதிய பணமோ, மனமோ இருக் காது!

நாம் மறைந்த பிறகு செலவழிக்கப் படாத பணம் மிகுதியாக வங்கியில் இருக்கும்; இருக்கவே செய்யும் உண்மையில்!

சீனாவில் ஒரு பெருந்தொழிலதிபர் இறந்துவிட்டார். அவரது மனைவி யான அந்த விதவைக்கு அவர் விட்டுச் சென்றது 1900 கோடி யு.எஸ். டாலர்கள்!

அந்த விதவை, அந்தத் தொழில திபரின் காரோட்டியை மறுமணம் செய்துகொண்டார்!

அந்தக் காரோட்டி சொன்னார்:

‘‘இதுவரை நான் எனது முதலா ளிக்குத்தான் (Boss) வேலை செய் தேன் என்று நினைத்துக் கொண்டி ருந்தேன். இப்போதுதான் எனக்குப் புரிந்தது எல்லா வேளைகளிலும் எனக்காகத்தான் எனது முதலாளி உழைத்துக் கொண்டே இருந்தார் என்பது!''

இதிலிருந்து ஒரு கசப்பான உண் மையை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

அதிகமான செல்வம், சொத்து சேர்ப்பதில் கவனமாக, குறியாக இருப்பதைவிட மிக முக்கிய நல்ல ஆயுளை திடகாத்திரமாக இருக் கும்படி பார்த்துக் கொள்ள உழைப் பதே முக்கியம் என்பதாகும்!

எனவே, நாம் அனைவரும் நல்ல ஆரோக்கியம், பலம் வாய்ந்த உடல்கட்டினையே நிலை நிறுத்துவது மிக அவசியம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

யார் யாருக்கு உழைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; எதற்காக உழைக்கிறோம் - எதை நோக்கி நம் வாழ்க்கை அமைகிறது என்பதே முக்கியம் ஆகும்!

மிக விலை உயர்ந்த நவீன அதிக தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக் கிய கைப்பேசியை (செல்போனை) வாங்கிப் பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் நமது நண்பர்களில் பல ருக்கும் புரிய வேண்டிய முக்கிய செய்தி:

அதில் உள்ள 70 சதவிகித நவீன வசதியான தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்துவதில்லை - நமக்கு அது வெறும் ‘வேஸ்ட்' தான்!

அதேபோல அதிக விலை உயர்ந்த நவீன மாடல் காரினை பல புதிய பணக்காரர்கள் -  தொழிலதிபர்கள் - அரசியல்வாதிகள் - திரைப்பட நடிகர் நடிகைகள் வாங்கி மகிழ்கின்ற னர். அவர்கள் தங்களைத் தாங்களே  கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி. அதில் உள்ள 70 சதவிகித வேக மற்றும் நுட்ப மின் கருவிகள் (Gadgets) நமக்குத் தேவையா? அவற்றை நாம் பயன்படுத்துகிறோமா? இல்லை என்பதுதானே உண்மையான பதில்!

அதேபோல, ஆடம்பரமான மாட மாளிகை வீடுகள் - அம்பானியின் வீடும், மைக்ரோ சாஃப்ட் முதலாளி பில்கேட்ஸ் வீடும்  நவீன வசதியான பங்களாவில் உள்ள அத்தனை வசதிகளையும் அவரோ, அவரது துணைவியாரோ அன்றாடம் முழுமையாக அனுபவிக்கின்றனரா? அனுபவிக்க முடிகிறதா? இடங்கள் காலி தானே! 70 சதவிகிதம் வெட்டியாகத் தானே இருக்கின்றது?

அதேபோல், வசதி படைத்தவர் வீட்டில் உள்ள அலமாரிகளில் எத்தனைத் துணி மணிகள், உடைகள்! விதவிதமான நகைகள், செருப்பு கள்கூட எத்தனை எத்தனை விதங்கள் - இத்தியாதி! இத்தியாதி!!

இவற்றில் 70 சதவிகிதம் பயன்பாட்டில் அன்றாடம் உள்ளதா? பரிதாபகரமான பதில், ‘இல்லை; இல்லவே இல்லை' என்பதுதானே!

சேமித்து வைப்பவர்களில் பலரும் மற்றவர்களுக்காகவே 70 சவிகிதத்தைச் சேமித்து வைத்து விட்டுச் செல்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை!

எனவே, இதிலிருந்து அறிந்து, புரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளும், அதற்கு மேற்கொண்ட வாழ்வியல் கவனங்களும் எவை என்பதை எண் ணிப் பாருங்கள்!

அந்த 30 விழுக்காட்டை முழுமை யாகப் பயன்படுத்தி, நலவாழ்வு வாழுங்கள்!

எளிதான இளமையில் நாம் கற்ற பாடம் - மறந்துவிட்ட பாடம் - நினைவிற்கு வருகிறதா?

‘‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!''

எப்படி அதைச் செய்வது என்று கேட்கிறீர்களா?

1. நீங்கள் நலமுடன் உள்ளபோதும், நோய் வராத போதும் முறையாகக் குறிப்பிட்ட காலந்தோறும் உடற்பரி சோதனை மருத்துவரிடம் சென்று செய்துகொள்ளுங்கள்.

(Go for medical checkup even if not sick)..

2. நிறைய தண்ணீர் குடியுங்கள் - தாகம் இல்லாதபோதும் கூட!

3. மனதை வாட்டும் பிரச்சினைகள் வரும்போதுகூட அதைக் கண்டு பதற்றம் அடையாமல், அதன்படி நடக்கும்போது எப்படித் தீர்வு காணவேண்டும் என்பதற்கு அதையே ஒரு வாய்ப்பாகக் கொள்ளுங்கள்!

4. விட்டுக் கொடுத்துப் பழகுங்கள். உங்களது வாதம் சரியானது என்றாலும், மற்றவருக்கு மகிழ்ச்சித்தர உங்களை, நீங்கள் தோற்றதுபோல காட்டிடும் பெருந்தன்மை பேணுங்கள்!

5. எப்போதும் எளிமையாக இருங்கள். உங்களுக்கு நிறைய பணம் இருந்தாலும், அதிகாரம் இருந்தாலும்கூட! (இவ்வகையில் ராமச்சந்திரா மருத் துவப் பல்கலைக் கழக நிறுவனர் - மதிப்பிற்குரிய நினைவில் வாழும் ராமசாமி உடையாரின் எளிமை, அடக்கம் என்னை வியக்க வைத்தது!)

6. உடலுக்கும், உள்ளத்திற்கும், மனதிற்கும், மூளைக்கும் அன்றாடம் - நீங்கள் அதிக வேலைப் பளுவைச் சுமப்பவராக இருப்பினும், உடற்பயிற்சி தரத் தவறாதீர்கள்!

Exercise both for body & mind

7. நீங்கள் மதிக்கும் நண்பர்கள், பெரியவர்கள், அறிஞர்களுக்கு என உங்கள் நேரத்தில் கொஞ்சம் ஒதுக்கி அவர்களிடம் உரையாடி மகிழுங்கள்.

இவை அனைத்தும் உங்கள் வாழ்வில் ‘வசந்தங்களாகும்!'

70 சதவிகிதத்தைப் புறந்தள்ளி, 30 சதவிகிதத்திற்கே மிகுந்த முக்கியத் துவம் தாருங்கள்!

- விடுதலை நாளேடு, 13.2.18

செவ்வாய், 12 டிசம்பர், 2017

சேறும் சந்தனமாக மாறும்; மாற்றலாம் - அது நம் கையில்!


நம் வாழ்வில் அவதூறுகள் நம் எதிரிகளால் எளிதில் பரப்பப்படுவது இயல்பு.

அதுவும் பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள்மீது சேற்றை வாரி இறைப்பது, ஆதாரமற்ற செய்திகளை அள்ளி விடுதல் - இவைகளை வாடிக்கையாகவே கொண்டு வயிறு நிரப்பும் வம்பர்களுக்கு நமது நாட்டில் குறைவே இல்லை.

அதுவும் பெண்கள்பற்றியோ, சொல்லவேண்டி யதே இல்லை!

பயமுறுத்தி காசு பறிக்கும் கயமைக்கு இது ஒரு வழிமுறைபோல் சிலருக்குப் பயன்படும்.

எதையும் எதிர்கொண்டு பழக்கமில்லாதவர்கள், இல்லாத ‘பேய்’க்கு எப்படி மனிதர்களில் சிலர் அஞ்சி அஞ்சி நடுங்குகிறார்களோ, அதுபோலவே இந்த அவதூறு சேறு கண்டும் மிகவும் பலர் அஞ்சுவர்.

பொதுவாழ்க்கை என்ற முள்படுக்கைமீது உள்ள வர்கள் பதில் கூறவேண்டிய - அதாவது - பொருட் படுத்தவேண்டிய அவதூறுகளுக்குத் தக்க பதில் கூறவேண்டும்; இல்லாத பொல்லாப்பு, பொய் மூட்டைகளைப் புறந்தள்ளியே வாழப் பழகிட வேண்டும்.

சிலர் இதன்மூலம் ‘பிரபலம்‘ ஆவதற்கே இந்த அவதூறு பரப்புதலை ஒரு அன்றாடத் தொழி லாகவே செய்வதுண்டு.

எனது  பொதுவாழ்வில் இரண்டு அவதூறு வழக் குகளை நானே போட்டு, இரண்டிலும் உண்மையை நிலைநாட்டுவதில் வெற்றி பெற்று மகிழ்ந்தேன். மற்ற நண்பர்களையும், கழகக் கொள்கைக் குடும் பத்தவரையும் மகிழச் செய்தேன். மனநிறைவடைந் தேன். இளையவர்கள் தகவலுக்காக இது.

அ.தி.மு.க.வின் நாளேடாக நண்பர் ஜேப்பியார் நடத்திய ஒரு ஏடு, நண்பர் கே.ஏ.கிருஷ்ணசாமி நடத்திய ஏடுகளில், ‘நான்’ கலைஞரை அரசியல் ரீதியாக ஆதரித்ததினால், எரிச்சலுற்று, என்னை ‘‘கூவம் காண்ட்ராக்டர்’’ என்று, ‘சுத்தப்படுத்தாத கூவத்தில்’ தங்கள் பேனாக்களை நனைத்து எழுதி னார்கள். நான் பொருட்படுத்தவில்லை, அலட்சியப் படுத்தினேன்!

பிறகு, ‘மக்கள் குரல்’ நாளேட்டில் டி.ஆர்.ராமசாமி அய்யங்கார் (T.R.R.)    வேறு புனைபெயரில் இதே குற்றச்சாட்டை எழுதினார். பிரபல்யப்படுத்தி னார் - ‘கூவம் காண்ட்ராக்ட் புகழ்’ என்று பெயர் போட்டே எழுதியதை எதிர்த்து நான் ‘மக்கள் குரல்’ நாளேட்டின்மீது அவதூறு வழக்குப் போட்டு (Defamation I.P.C. கீழ்) சென்னை நீதிமன்றத்தில் அவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

தன்னிடம் உள்ள நாளேடான ‘மக்கள் குரலில்’ கொட்டை எழுத்துகளில், குறுக்கு விசாரணையில், என்னிடம் அவர்களது வழக்குரைஞர்கள் கேட்ட அதீத கேள்விகளை பெரிதாகவும், நான் கூறிய பதில்களை சிறிதாகவும் வெளியிட்டு மக்களைக் குழப்பிட தொடர்ந்து முயற்சி செய்தார்கள்.

அந்த டி.ஆர்.ஆர்., முதலமைச்சராக அன்று இருந்த எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கம். ஈ.வெ.கி. சம்பத் அவர்களது மகன் பொறியாளர் கவுதமன் திருமணம் பெரியார் திடலில், அவரது தலைமையில், திருமதி சுலோச்சனா சம்பத் அவர்கள் நடத்தினார். அதற்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வந்தார். பெரியார் திடலுக்கு முதன்முதலாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வருவதால், வரவேற்பது நமது கடமை என்பதால், நான் வரவேற்றேன்.

மேடையில் என்னை அழைத்து அமர்த்தி, அவர் என்னிடம், ‘‘நீங்கள் திராவிட இயக்கத்திற்கே பொதுச்செயலாளர்; எங்களுக்கு வழிகாட்டிடும் இடத்தில் உள்ளீர்கள். உங்கள்மீது இப்படி அவதூறு புகார் கூறியுள்ளதைப்பற்றி நீங்கள் வழக்குப் போட்டுள்ளதால் பரவுகிறதே’’ என்றார்.  ‘‘நீங்கள் ஏன் அவதூறு வழக்குப் போட்டீர்கள்’’ என்று அவர் கேட்ட தொனி, ‘‘வழக்கை வாபஸ் வாங்குங்கள்’’ என்று சொல்லாமற் சொன்னதாகும்!

காதோடு காதாக மேடையில் நாங்கள் பேசிக் கொள்கிறோம் - மற்ற அனைவரும் கவனிக்கின்றனர்.

நான் அவரிடம் சொன்னேன், ‘‘நீங்கள் முதல மைச்சர்; பொதுப் பணித்துறையின் கோப்புகளை வாங்கி, கூவம் சுத்தப்படுத்துவதுபற்றிய கோப்பில் -  நீங்களே உங்கள் செயலாளர்களை விட்டு ஆராய்ந்து பாருங்கள்; அப்படி என் பெயராலோ, என் தம்பி பெயராலோ ஏதாவது உள்ளதா என்று? எனக்குத் தம்பியே கிடையாது’’ என்றேன்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிரித்தார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியதும் அக்கோப்புகளை வரவழைத்துப் பார்த்து ஆய்வும் செய்துள்ளார் என்பது பிறகு தெரிய வந்தது!

வழக்கு பல வாய்தாக்கள் நடந்தது! எனக்குப் பல வங்கிகளில் கணக்கு இருக்கிறது; அவற்றை எல்லாம் ஆராயவேண்டும் என்று ‘மக்கள் குரல்’ சார்பில் எதிர்மனுதாரர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

நான் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்து, பட்டியல் தந்தேன். பிறகு ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய், 20 ரூபாய்தான் இருப்பு இருந்தன. அதனைப் பார்த்த நீதிபதி, ‘‘அதென்ன இப்படி’’ என்று அதிர்ச்சி அடைந்து கேட்டபோது,

‘‘பெரியார் சிலைகளை ஆங்காங்கு நிறுவிட, D.D. -க்களை (டிராப்ட்) என் பெயருக்கு கழகப் பொறுப்பாளர்கள் அனுப்புவதை டிராப்ட் களானபடியால், பற்பல வங்கிகளில் என் பெயரில் S/B 
சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் திறந்து போடப் பட்ட D.D. தொகையை எடுத்து அவர்களுக்குக் கொடுத்ததுபோக, குறைந்தபட்ச தொகைகளே இருப்புகள்’’ என்றேன்.

இதைக் கேட்டு நீதிபதி எதிர்மனுதாரர்களைப் பார்த்துச் சிரித்தார்! எதிரணி வக்கீலுக்கும் அதிர்ச்சி! வெட்கம்! தனியே என்னிடம் தனது வருத்தத்தை அப்போதே சொன்னார்.

கூவம் சம்பந்தமாக எந்த ஆதாரத்தையும் துளிகூட காட்ட முடியவில்லை; வழக்கு வழக்கம் போல 2 ஆண்டுகள் நடந்து முடிந்து, ‘மக்கள் குரல்’ ஆசிரியர் சண்முகவேல் அவர்களுக்கு சென்னைப் பெருநகர நீதிமன்றம் ஒன்றரை ஆண்டு தண்டனை அளித்தது! பத்திரிகையாளர் தண்டிக்கப் பட்டது அதுவே இங்கே முதல் முறை. அதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், எழுதியவர் வேறு ஒருவர் - தண்டனை வாங்கி உள்ளே போனவர் வேறு ஒருவர். அதுவும் தமிழர்! எனவே, மேல்முறையீட்டில்கூட உயர்நீதிமன்றத்தில் மிகவும் வற்புறுத்திடவில்லை.

அதன் பிறகு என்னை ‘‘கூவம் காண்ட்ராக்டர்’’ என்று எழுதுவதையே பல ஏடுகளும், மேடைகளில் நாக்கில் நரம்பில்லாமல் பேசி வந்தவர்களும் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டுப் போட்டுக் கொண்டனர்!

அவதூறுகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். பிரபல ‘இந்து’ ஆங்கில நாளேட்டின்மீது திராவிடர் கழகம் சார்பில் 1971 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கினை பொதுச்செயலாளர் என்ற முறையில் நானே நேரில் சென்று  (Party in person) வாதாடி வென்றோம்.

நாளை அதுபற்றி அறிந்துகொள்வீர்!
1.12.17

சேறும் சந்தனமாக மாறும்; மாற்றலாம் - அது நம் கையில்! (2)

சேலத்தில் தந்தை பெரியார் 1971 ஆம் ஆண்டு ஜனவரியில் 23, 24 ஆகிய இரு நாள்களில் மூடநம் பிக்கை ஒழிப்பு மாநாட்டினை வெகுசிறப்பாக நடத்தினர்.

அதில் பல புரட்சிகர தீர்மானங்கள் இரண்டாம் நாள் நிறைவேற்றினார்கள்.

அப்படி நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களில் ஒன்று,

‘‘ஒருவன் மனைவி மற்றொருவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கப்படக்கூடாது’’ என்ற ஒரு வாக்கியத் தீர்மானம் ஆகும்.

மகளிர் உரிமை என்பது ஆணுக்குள்ள உரிமை அத்தனையும் பெண்ணுக்கும் உண்டு; கற்பு என் பதோ, காதல் என்பதோ ஒருதலைப்பட்சமாக இருக்கக் கூடாது.

விரும்பாத நண்பனை விட்டு விலகுகிறோம் - வேண்டாத எஜமானனிடமிருந்துகூட வேலை செய்ய விரும்பாது வெளியேறுகிற உரிமை உடை யவர்கள் நாம்.

அப்படி இருக்கையில், திருமணம் என்றால், கொத்தடிமையை விலைக்கு வாங்குவது போன்று, பெண்ணை வெறும் போகப் பொருளாய், வேலைக் காரியாய், சமையற்காரியாய், பிள்ளை பெறும் போகக் கருவியாய் எண்ணி, கணவன் ஆதிக்கம் செலுத்த முயன்றால், அந்நிலையிலிருந்து அப் பெண் விடுதலைபெற விரும்பி வேறு ஒருவனை விரும்பினால், (மனைவியை) குற்றவாளியாக்கக் கூடாது என்பது மகளிர் உரிமையை மனதிற் கொண்டே தந்தை பெரியார் நிறைவேற்றிய அதிர்ச்சி வைத்திய தீர்மானம்.

ஏற்கெனவே இ.பி.கோ.வில் உள்ளதுதான் இது.

இதை வெளிப்படையான தீர்மானமாக வடிவம் கொடுத்தார் பெரியார் அம்மாநாட்டில்.

1971 தேர்தலில் தி.மு.க.வைத் தோற்கடிக்க தீவிரமாக கச்சை கட்டிக் கொண்டிருந்த ஏடுகள், எதிர்க்கட்சிகள் இதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு தவறான பிரச்சாரத்தை நாடு முழுவதும் கட்ட விழ்த்து விட்டார்கள்.

யார் மனைவியை யார் வேண்டுமானாலும் அபகரிக்க, சேலம் தீர்மானத்தின்மூலம் பெரியார் கூறி,  சமூக ஒழுக்கத்தையே பாழ்படுத்துகிறார்; அவர் ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா உங்கள் ஓட்டு என்று திசை திருப்பி விட்டனர்!

‘இந்து’, ‘தினமணி’, ‘எக்ஸ்பிரஸ்’ ஏடுகள் இதில் தீவிர முனைப்புக் காட்டின.

‘இந்து’  (இங்கிலிஷ்) வெளியிட்ட செய்தியிலும், அதில் வந்த ‘ஆசிரியருக்குக் கடிதங்களிலும், ஆங்கி லத்தில் தீர்மானத்தை திரித்துப் போட்டு’ எழுதினர்.

ஆங்கில வாசகம், ‘‘Coveting another man’s wife should not be a crime’ 
என்று பெரியார் இயக்கமான திராவிடர் கழகம்,  தீர்மானம் நிறைவேற்றியது.

மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் பேரா சிரியர் தி.வை.சொக்கப்பா, வக்கீல் நோட்டீஸ் அனுப் பியும், திருத்திப் போடாமல் திரும்பத் திரும்ப அதையே எழுதினர்.

உடனே அய்யாவின் அனுமதியோடு, நான் கழகப் பொதுச்செயலாளர் என்ற முறையில் வழக்குப் போட்டேன். பிறகும் அதை எழுதிய பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்காக்கி, மன்னிப்பு கேட்க வழக்காடினோம்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வீராசாமி, வி.வி.ராகவன் (அய்யர்) ஆகியோர் அடங்கிய அமர்வில் நான் மதியம் வழக்கெடுக்க (Lunch Motion) அனுமதி பெற்று, வழக்கை நானே நடத்தினேன்.

தலைமை நீதிபதி அவர்கள் என்னிடம், சரியாகத்தானே ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். நீங்கள் தமிழில் படித்த தீர்மானத்திற்கும், ஆங்கில வாசகங்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லையே என்றார்.

பிறகு நான் தலைமை நீதிபதி அவர்களிடம் கனம் தலைமை நீதிபதி அவர்களே தீர்மானத்தின் அடிப்படை மாற்றப்பட்டுள்ளது ஆங்கில வாசகத் தில். Desiring விரும்பினால் என்பது மனைவியின் உரிமை பற்றிய கருத்தாக்கம். அவர்கள் வெளி யிட்டதோ ‘Coveting another man’s wife’ என்பது கணவனின் சட்ட விரோதச் செயலை.

முந்தைய தீர்மான வாசகம் மனைவியைப் பற்றியது.

இவர்கள் வெளியிட்டது கணவனின் துர் ஆக்கிர மிப்புச் செயல் - நேர் எதிரிடையானது என்று விளக்கினேன்.

உடனே தலைமை நீதிபதி , மற்ற நீதிபதி ஆகியோர் விளங்கிக் கொண்டு, நோட்டீஸ் அனுப்பிய பிறகு,  ‘இந்து’ ஆசிரியரிடம் விளக்கம் கேட்டனர். மறுபடியும் அப்படிப் போடலமா? என்று கேட்டு வருத்தம் தெரிவிக்கச் சொன்னார். ‘தி இந்து’ சார்பில் கோர்ட்டில் வருத்தம் தெரிவித்தார் அதன் ஆசிரியர் கோபாலன் (என்று நினைவு).

பிறகு இந்து (இங்கிலீஷ்) நாளேடு வழக்கு 17.2.1971 இல் தலைமை நீதிபதி அமர்வு முன்வந்த உடன்,

இந்து பத்திரிகை சார்பில் உண்மையான நிபந் தனையற்ற வருத்தத்தை தெரிவித்து மன்னிப்புக் கோரியதை விண்ணப்பதாரர் (கே.வீரமணி) ஏற்றுக் கொண்டதால், வழக்கைத் திரும்பப் பெற கோர்ட் டார் அனுமதித்து தீர்ப்பளித்தனர். (இது 17.2.1971 இல் நடந்த நிகழ்வு).

இப்படிப்பட்ட வரலாறு, பலருக்கும் அதிர்வலை களை ஏற்படுத்தியது.

தலைமை நீதிபதிக்கும் மற்ற நீதிபதிக்கும் சற்று மயக்கத்தையும், குழப்பத்தையும் அவ்வாசகங்கள் ஏற்படுத்தியதை நல்ல வண்ணம் தெளிவுபடுத்திய தால், நீதி நிலை நாட்டப் பெற்று உண்மை வென்றது.

எனவே, உரிய வகையில் அணுகினால் நம்மீது வீசப்படும் சகதியையும், சந்தனமாக்கி விடலாம்  - அது நமது அணுகுமுறையில்தான் உள்ளது என்பது அவ்வழக்கு தந்த பாடமாகும்!

- கி.வீரமணி

- விடுதலை நாளேடு1,2.12.17