பக்கங்கள்

வெள்ளி, 4 டிசம்பர், 2015

முதுமையும் ஏற்க இயலாத முடிவுகளும்!


இன்றைய நாளேட்டில் ஒரு வேதனை தரும் செய்தி. நெல்லையைச் சேர்ந்த 80 வயது நிறைந்த பிரபல டாக்டர் ஒருவர் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்!
நெல்லை சந்திப்புப் பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்தியவர் அந்த டாக்டர் (நாம் பெயர் குறிப்பிட விரும்பவில்லை)
இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனராம்! அவர்களில் ஒருவர் முடக்கியல் டாக்டராகவும், மற்ற இரு பிள்ளைகள் தொழிலதிபர்களாகவும் உள்ளனராம்!
நெல்லைப்பேட்டைப் பகுதியில் அமைந்த ஒரு நகரில் (பெயர் கோடீசுவரன் நகராம்) தனியே வசித்து வந்த அவர் இப்படி  ஒரு முடிவை அவரே தேடிக் கொண்டாராம்!
அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் வயது முதிர்ந்த நிலையில் என்னைக் கவனிக்க யாரும் இல்லை. தற்போது பார்வை குறைந்ததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாராம்!
என்னே கொடுமை!
வறுமை, கடன் தொல்லை, காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி என்பது போன்ற காரணங்களால் நிகழும் தற்கொலைகளைக்கூட பகுத்தறிவாளர் களால் ஏற்க முடிவதில்லை. இருட்டுக்குப் பின் வெளிச்சம் உண்டு - இரவுக்குப் பின் வெள்ளி முளைத்து விடியல் வருவது உறுதி. இரவே இருபத்து நான்கு மணி நேரமும் நீடிக்காது என்பது தானே இயற்கை நியதி? புரிந்து கொள்ள பலர் மறந்து விடுகிறார்களே!
ஆனால் வளமை - வசதி  - வாய்ந்த - குறையில்லாத போதும் தனிமையும் உதவி செய்ய எவரும் முன் வரவில்லையே என்ற ஆதங்கமும் அந்த டாக்டரை தற்கொலை முடிவுக்குத் துரத்தியது எவ்வளவு வேதனையானதொரு செய்தி! அது மட்டுமா? அவர் பிள்ளைகள் அவ்வளவு பெரும் நிலையில் உள்ளார்கள் என்றால் அதற்கு இந்த தந்தையின் கடும் உழைப்பும், உதவியும் அல்லவா?
முதுமை எல்லோருக்கும் வருவது என்பது காலத்தின் கட்டாயம்; இயற்கை யின் நியதி; இதைக் கண்டு இப்படி ஒரு முடிவுக்கு வந்து தமது இன்னுயிரைப் போக்கிக் கொள்ளும் முடிவை எடுத்தது புத்திசாலித்தனமா?
நல்ல நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு, வாழத் திட்டமிட்டி ருக்கலாமே!
அல்லது வயதானவர்களுக்கென்று பல நகரங்களில் அமைந்துள்ள முதியோர் இல்லங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து, அதில் பணம் கட்டியாவது சேர்ந்து வாழ்ந்திருக்கலாமே! இந்த அவசரப்பட்ட முடிவுக்கு அவர் வந்தது - ஒரு கெட்ட வாய்ப்பு என்றே நினைத்து வருந்த வேண்டும்! ஆண் பிள்ளைகள் மூவர் - சம்பாதிப்பவர்கள் தங்களை ஆளாக்கியவரை, அம்போ என்று விட்டு விட்டார்களே என்ற பழி அல்லவா அவர்கள்மீது வீழ்ந்துவிட்டது!
ஒரு தரப்பு வாக்குமூலத்தை வைத்தே தீர்ப்பு எழுத நாம் விரும்பவில்லை என்றா லும் பொதுவாக நாட்டில் இன்றுள்ள நிலை என்னவென்றால், நம் நாட்டில் இப்போதைய தேவை கைவிடப்பட்ட அனாதைக் குழந்தைகள் இல்லம் அல்ல.
மாறாக, கைவிடப்பட்ட முதியோர் பாதுகாப்பு பராமரிப்பு  இல்லங்களே யாகும்!
பெற்றோர்களைத் தங்களிடம் வைத் துப் பராமரிக்கும்போது அந்த முதியவர் களும் சற்று அந்தக் குடும்பத்திற்கு உதவிகரமான நீக்குப் போக்குடன் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, அங்கு நான்தான் வயதில் மூத்த குடும்பத்தின் தலைவன் என்ற பழைய ஆதிக்க நினைப்பிலேயே அதிகாரம் செலுத்தவோ, ஆணைகள் பிறப்பிப் பதோ இல்லாமல், அவர்களுக்கு இன்றுள்ள நிலையில் (ஏனெனில் மகன் மருமகள் ஆகிய இருவரும் வேலைக் குப் போகின்றவர்கள்; அவர்களுக்கும் குழந்தைகளை ஆளாக்கும் கடமை இப்படி பல உண்டு என்பதை மனதில் நிறுத்தி) அன்போடு நடந்து கொண்டு அரவணைப்பு அணுகுமுறை தேவை.
பிள்ளைகளும், தங்களுக்கும் முதுமை வரும்; இதே கதி நமக்கு வருங்காலத்தில் நமது பிள்ளைகளால் ஏற்பட்டால் நம் நிலையும் தற்கொலை யில் தான் முடிய வேண்டுமோ என்று ஒரு கண நேரம் சிந்தித்தால், முதியவர் களின் தவறுகளைப் பெரிதாக்காமல், தக்கதோர் அன்பு, பாசம், கடமை உணர்வினால் கட்டுண்டு, பல முதி யோர்களை காப்பகத்தில் புகாமலோ, தற்கொலை முடிவுக்கு துரத்துதலோ இன்றி வாழ வைக்க முடியும்! யோசிப் பார்களா?
- கி.வீரமணி
-விடுதலை,20.10.12

சுறுசுறுப்புடன் இருக்க உதவும் 7 உணவுகள்

அமெரிக்காவின் மூளை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் பலரது ஆராய்ச்சியின் விளைவாக - எவ்வகை உணவு உண்டால், மூளைத் திறன் சிறப்பாகச் செயல்படும், நினைவாற்றல் பழுதுபடாமல் தடுக்கப்படும், ஆற்றலும் சிறப்பாக அமையும் என்பதை (Cognitive abilities) அடிப்படையாகக் கொண்டு செய்யப் பட்ட ஆராய்ச்சியின் காரணமாக -பின்வரும் 7 வகை உணவுகளை அவர்கள் கண்டறிந்து வெளி உலகத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
(1) இளநீர் : தேங்காய் மூலம் கிடைக்கும் இவ்விளநீர் - பொட் டாஷியம் ஒரு மினரல். மூளைக்குத் தரும் ஆற்றல் இதனிடத்தில் உண்டு. மூளையின் நரம்பு செல்கள் மிகவும் சுறுசுறுப்புடன் சரியான வேகத்தில் இயங்கிட இது தூண்டுகிறது. அருமையான தூய்மையான உணவு இது!
நமது உடலில் பொட்டாஷியம் அளவு குறைந்தால் மூளையின் செயல்திறன் அவ்வளவு விரைந்து செயல்படாது சில நேரங்களில் மனக் குழப்பத்தை உருவாக்கவும் கூடும்.
நீங்கள் அதிகமான அளவு உப்பைத் தின்னும் நிலையிருப்பின், பொட்டாஷியத்தின் தேவை மிகவும் அவசியம் என்கின்றன மருத்துவத் தகவல்கள்.
நடுத்தர அளவுள்ள வாழைப்பழத் தில் உள்ள பொட்டாஷியம் அளவு சுமார் 450 மில்லி கிராம் ஆகும்.  8 அவுன்ஸ் இளநீரில் உள்ள பொட்டா ஷியம் அளவு 250 மில்லி கிராம் ஆகும்!
குளுகோசாக (சர்க்கரை) மாறிவிடும் தன்மை இதற்கு அதிகம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். (டையாபெட்டிக் - சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரிடம் கேட்டே இளநீர் கூட அருந்தலாம். சர்க்கரை வேகமாக மூளைக்குள் பாய்வதை விட படிப்படியாக (மெதுவாக) மூளைக்குச் செல்லும்போது அதன் பயன் நீடித்தது - சிறப்பானதும் கூட. அவ்வகையில் வாழைப்பழத்தை விட, இளநீரே மிகவும் வரவேற்கத்தக்கதாகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்!
எனவே ஒவ்வொரு நாளும் 1 குவளை இளநீர் குடியுங்கள். இனிப்பு கூட லேசாகத்தான் இருக்கும். கலோரிகளும் கூட குறைவான அளவே இருக்கும் அதில். சிலர் பாலில் கலந்து சாப்பிடு கிறார்கள். சிலர் காலைச் சிற்றுண்டியில் உண்ணும் தானியங்களோடு இள நீரையும் சேர்த்து சாப்பிடுகின்ற வழக்கம் உடையவர்களாக உள்ளனர்.
(2) ப்ளூபெர்ரீஸ் - (Blueberries)::  இந்தப் ப்ளூபெர்ரீஸ் உள்ள மிக அதிகமான நல்ல சத்துகள் (Super rich) பற்றி பலரும் அறியவில்லை.
பிராணவாயுவை மிகவும் ஈர்த்து உடலுக்குள் செலுத்தும் அற்புதமான (உணவு) இது!
ஒருநாள் உணவில் 2400 (ORAC) என அளவு தேவை என்றால் ப்ளூ பெர்ரீஸ் சுமார் 670 செர்ரீஸ், 483 பிங் (Pink) கலர் திராட்சையின் சத்து இதில் உண்டாம்!
அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகங்களில் ஒன்றான டஃப்ட்ஸ் பல்கலைக் கழகத்தில் (Tufts University - Boston)  பிராணிகளுக்கு ப்ளூபெர்ரீஸ் உணவுடன் சேர்த்துக் கொடுத்துப் பார்த்து ஆராய்ச்சி செய்தனர். மூளை யின் Hippocampus என்ற பகுதியின் செல்கள் மிகவும் அதிகமாக வளரவும், ஞாபக சக்தி வளருவதற்கும் இது மிகவும் உதவியுள்ளது என்று கண்டறிந்துள் ளனர்.
எனவே ஒவ்வொருநாளும் அரை குவளை ப்ளூபெர்ரீஸ் எடுத்துக் கொள்ளுதல் நல்லது! ப்ளூபெர்ரீஸ் கிடைக்கவில்லையானால், ஸ்டாபெர்ரீஸ் அல்லது அக்காய் பெர்ரீஸ்  (A purple slightly tart berries) கன்கார்ட் கிரேப் ஜூஸ் (Concord Grape Juice)  எடுப்பது மிகவும் பலன் பெறும்.
மூளையின் செயலை ஊக்கப்படுத்த சில மருந்து மாத்திரைகளை விட, இந்த கன்கார்ட் கிரேப் ஜூஸ் (Concord Grape Juice) அருந்தியவர்கள் (76 வயதுள்ள 21 பேர்) - இவர்களில் பலர் சற்று லேசான மூளை செயல்பாடு குறைந்தவர்கள் - இவர்களுக்கு மிகவும் பலன் தந்துள்ளது என்பதை சின்சினாட்டி பல்கலைக் கழக ஆராய்ச்சிகள் தங்களது பரிசோதனை (மேலே சுட்டியது போல) மூலம் கண்டறிந்துள்ளனர். 16 வாரங்களுக்குப் பின் இந்த கன்கார்ட் கிரேப் ஜூஸ் மூலம் பயன் அடைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.  MRI பரிசோதனை யிலும் இவர்கள் சுறுசுறுப்புடன் இயங்குகிறார்கள். மூளைக்கு ரத்த ஓட்டம் மிகவும் அதிகரித்தது இதன் மூலம்தான் என்று  கண்டறிந்துள்ளனர்!
(3) சார்டின்ஸ் மீன்கள் -(Sardines):
ஒமேகா -3 இப்போது உலகம் முழுவதும் பரவலாக - இதயப் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்டு, பலராலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது அல்லவா? அந்த ஒமேகா -3 இந்த சால்மன் மீனில் அதிகம் உள்ளது. அதன் திரவங்கள் (Fatty acids) கொழுப்புகள், இரண்டும் ஏராளமான ஒமேகா - 3 தந்து, இதயத்தின் முக்கிய ரத்தக்குழாய்களை (Arteries) பாதுகாக்க உதவுகிறது.
இது அளவில் சிறியதாக இருப்ப தால், இந்த மீனின் திரவத்தில் உள்ள பாதரசம் (Mercury) அளவும், விஷப் பொருள்களும்  (Toxins)  மிகவும் குறை வாக இருப்பது இதன் தனிச் சிறப்பாகும்.
நம் மூளையைச் சுற்றியுள்ள மெல்லிய தசை சுவர்கள் (Membrances)  குறிப்பு களை சரிவர வளருவதற்கு இந்த ஒமேகா-3 மிகவும் பயனளிக்கிறது!
இவ்வகை மீன்களை அதிகம் சாப்பிடுவது நினைவு வன்மை, இதைக் குறைவாகச் சாப்பிடுகிறவர்களிடம் குறைவாகவே இருப்பதாக - சுமார் 500 வயது வந்த வாலிபர்களிடம் முயன்று கண்டறிந்துள்ளனர் - டேனிஷ் நாட்டில்!
நினைவு தவறும் நோயான  டெமென் ஷியா  (Demensia) என்பதைக் குறைக்க இது பயன்படும் என்று கண்டறிந் துள்ளனர்!
மற்ற வகை மீன்களிடமிருப்பதை விட இந்த வகை சார்மீன்கள் - சாலமின் மீன்களிடமே ஒமேகா-3 அதிகம் உள்ளது.
அவெகேடா ஒரு மாதிரி வெளிர் பழுப்பு கலந்துள்ள பழம் - அதில் இந்த ஒமேகா -3 உள்ளது.
(4) வால் நட்ஸ் (Wall nuts)     வாதுமைப் பருப்பு:
பொதுவாக எல்லா கொட்டை வகைகளும் மூளைக்கு நல்லவை தான். உப்பு போடாமல், எண்ணெய், நெய்விட்டு வறுக்காத வரை!
வாட்டிய மீன்களைப் போலவே இந்த ஒமேகா-3 சத்து இந்த வாதுமைப் பருப்புகளில் ஏராளம் உண்டு. இதுவே மூளையைப் போலத்தானே காட்சியளிக்கிறது! அத்துடன் வைட்டமின் E -யும் இவற்றில் கூடுதலாகக் கிடைக்கிறது என்பது ஆய்வாளர்களின் முடிவு. அல்ஷைமர்ஸ் (Alzhemiers’ Desease)  முழுமறதி நோய் என்ற அந்த நோயைத் தடுக்க இது உதவி செய்யும்; காரணம் ஒமேகா-3 இதில் ஏராளம் இருப்பதே!
மெக்காடாமியா   (Macadamia)  கொட்டைகளும்  இதுபோல சிறந் தவையே. (நம் நாட்டில் அதிகம் பாவிப்பதில்லை நாம்.)
அட்வெண்டிஸ்ட் ஹெல்த் ஸ்டடி (Adventists health Study) குழுவின் லோமா லிண்டா பல்கலைக் கழகத் தின் ஆய்வுப் பிரிவினரால் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது! அதில் வாரம் 5 அல்லது கூடுதலான முறை இந்த வாதுமைப் பருப்புகள், கொட்டை களைச் சாப்பிடுவோர் மாரடைப்பு வரும் வாய்ப்பு சரி பகுதியாகக் குறையக் கூடும் என்றே கூறுகின் றனர் ஆய்வு முடிவாக!
கால்பாகம் - தினசரி சாப்பிடுங் கள். ஆனால் கொட்டைகள் மூலம் கலோரி அதிகம் செடி உணவுகளை விட, அதையும் மனதிற்கொண்டு இவைகளைச் சாப்பிடுவதை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்.
(தொடரும்)-விடுதலை,14.9.12

சுறுசுறுப்புடன் இருக்க உதவும் 7 உணவுகள் (2)


(5) இனிப்பு உருளைக் கிழங்குகள்(Sweet Potatoes):
இவை நமது இரத்தத்தில் உடனடி யாக சர்க்கரை அளவைக் கூட்டி விடாது. இதன் மூலம் நமது சக்தி யையும் குறையாமல், கவனம் சிதறா மலும்(Concentration) இருக்கவும் - நாள் முழுவதும் - இது உதவுகிறது.
பீட்டா கரோட்டின் (Beta corotin) என்ற சத்துதான் மூளையைக் கூர்மை மழுங்காமல் காக்கும் சத்து.
வாரத்திற்கு இந்த இனிப்பு உருளைக் கிழங்குகளை 2 அல்லது 3 முறை சாப்பிடுங்கள். நேரிடையாக சாப்பிட முடியவில்லையானால் இதை மஞ்சள் கூழாக்கியோ, அல்லது ஸ்பெகடி போலவோ செய்து உள்ளே தள்ளிவிடுங்கள்.
ஓட் மீல் என்ற ஓட்ஸ் கப் சாப்பாடு மலச்சிக்கலைப் போக்கும் முயற்சிகளைப் பலர் அறிவர். ஒரு உருளைக் கிழங்கு அதனைச் செய்து விடுகிறதாம்! இந்த நார்ச்சத்து உணவு மூலம் நமது கொலஸ்ட்ரால் - கொழுப்புச் சத்தைக் குறைத்து: மூளையைச் சுறுசுறுப்பாக்க உதவுகிறது என்பதையும் மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்!
(6) க்ரீன் டீ: - பச்சைத் தேநீர் என்று அழைக்கலாமே!
இது நமது மூளையைத் தாக்கும் எதிரிகளான Free Radicals  என்பதி லிருந்து மூளையைப் பாதுகாக்கிறது.
சுற்றுச்சூழல் காற்று மாசு மூலமா கவோ, விஷச் சத்துக்களாலோ, மிக அதிகமான கொழுப்புச் சத்துள்ள உணவு கள் மூலமாகவோ ஏற்படும் கெடுதியி லிருந்தும் இந்த க்ரீன் டீ நம்மை வெகுவாகப் பாதுகாக்கிறது!
நம் மூளைக்குத் தேவையான டோப்பாமைன் (Dopamine) என்ற சத்து இந்த க்ரீன் டீயில் அதிகம் உள்ளது.
இந்த டோப்போமைன் தான் மூளை யின் மகிழ்ச்சியைத் தூண்டி பரிசளிக் கும் நரம்பு இயக்கிடும் நிலையம் (Neuro transmitter). வாழ்க்கையின் பல முக்கிய கிரியா ஊக்கி மய்யமாகவே இந்த சக்தி செயல்படுகிறது!
க்ரீன் டீயில் உள்ள அமினோ ஆசிட் என்ற சத்தும் மூளை பழுதானவர்களை மீண்டும் செயல்பட உதவிடும் ஒரு துணைவன் ஆவார்; என்னே விந்தை! தீவிர கவனம் (Concentration)  சக்தி, குறைந்த கவலை - இவற்றை இந்த அமினோ ஆசிட் பார்த்துக் கொள்கிறது.
(7) மஞ்சள் (Turmeric):
இந்த பளிச்சென்ற மஞ்சள் நிறம் - Anti Oxidents  அளவு கூடுதலாக இருப்பதைக் காட்டும். இதில் உள்ள Creactive protein என்ற புரதச் சத்து மூளை சில நேரங்களில் எரிச் சலுக்கு ஆளாகி, அதன் சில பகுதிகள் கெடுவதை தடுப்பான் ஆகி நின்று காக்கும் ராணுவ வீரனாகிறது!
சமைக்கும் உணவில் - கறியில் இந்த மஞ்சளை (சாப்பிடுவது) சேர்த்து உண்ணும் 1000 முதியவர்களை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் - அவர் களின் மூளைத்திறன் - அதன் விளை வான செயல்திறன் கூடுதலாகியுள்ளது என்று அறிந்துள்ளனர்!
பொதுவாக வாசனை உணவுப் பொருள்கள் (Spices)  எல்லாமே உணவில் இப்படிப் பயன்படுகின்றன -  இஞ்சி, லவங்கப்பட்டை போன்றவை மூளைப் பாதுகாப்பு அரண்களாக இருந்து காக்கின்றன!
உங்களது தினசரி உணவில் ஒரு கால் கரண்டி இவைகளை சேர்த்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
அமெரிக்காவில் இருந்து வரும் Bottom Line (1-6-2012) என்ற மருத்துவ இதழ் ஒன்றில் கண்ட கட்டுரையை ஆதாரப்படுத்தி எழுதியுள்ள கட்டுரை இது.)
என்ன வாசக நண்பர்களே!
இந்த இரண்டு வாழ்வியல் கட்டுரைகளும் நீங்கள் படிப்பதற்காக மட்டும் எழுதப்படவில்லை; நீங்கள் உடனடியாக முடிந்த அளவு அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க உங்களைக் கேட்டுக்கொள்ளவே எழுதப் படுகின்றன!
என்ன, உடனே வாங்கி, அன்றாடம் சாப்பிட்டு வருவதை பழக்கமாக்கி, பிறகு வழக்கமாக்கிக் கொள்வீர்களா?
எனவே எழுதியவர்களுக்கு நன்றி கூறவேண்டாம் - செயல்முறைக்குக் கொண்டு வந்து, ஆயுளை வளர்த்துக் கொள்ளுங்கள்!  நண்பர்களே!
இது தேவையா? பெண்களே முடிவு செய்யுங்கள்.
-விடுதலை,15.9.12

புதன், 2 டிசம்பர், 2015


உலகின் மிகக் கொடிய உயிர்க் கொல்லி நோய்களில் முக்கியமானது மாரடைப்பு (Heart attack) நோய் ஆகும்!
என்னங்க சற்று நேரத்திற்கு முன்தான் என்னிடம் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றோம். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வழி யிலேயே உயிர் பிரிந்து விட்டது என்று கூறினர் என்று சொல்லி கோவென அழும் உறவினர்கள் ஏராளம்!
இரவெல்லாம் எங்களிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்து தூங்கப் போனவர்; விடியற்காலை எழுந்து விடும் பழக்கம் உடையவர், பொழுது விடிந்தும் இவ்வளவு நேரமா தூங்குகிறார் என்று எழுப்பப் போனால், எழும்பவில்லை; தூங்கும் போதே சில மணி நேரங்கள் முன்பே அவர் இறந்து விட்டார் என்று டாக்டர் கூறினார் என்று சொல்பவர் களை பார்க்கிறோம்.
முதியவர்களைத்தான் இந்த மாரடைப்பு என்னும் இதய நோய் தாக்கும் என்பது அவசியமில்லை; இந்த துரித உணவு யுகத்தில் இளைஞர்கள், வாலிபர்கள் உட்பட பலரையும் இந்தக் கொடூர நோய், திடீர் பூகம்பம் ஏற்படுவதுபோல, அல்லது சுனாமிபோல தாக்கி உயிரைப் பறித்து விடுகின்ற கொடுமையில் நிராதரவான குடும்பங் கள் பல உண்டு.
எனவே இதுபற்றி மிகவும் எச்சரிக் கையாக இருக்க வேண்டும். வந்த பின்பு சிகிச்சை தேடுவதைவிட வரும்முன்னர் காப்பதே அறிவுடைமையாகும்.
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக்கெடும் (குறள் -435)
வரும்முன்னர் காக்கத் தவறி விடுவது எப்படி எனில் வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து சாம்பலானதைப்போல ஆகிவிடும் என்று அற்புதமாக விளக்கினார்!
நமது இருதயம் நல்ல ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால், சிறப்பாக அது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டு மானால் கீழ்க்காணும் 10 கட்டளைகளை ஒவ்வொருவரும் கடைப்பிடித்து ஒழுக வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இந்த 10 கட்டளைகள் மிகவும் எளிமை யானவை. மனஉறுதியும் சோம்பலின்றி இதைஅன்றாடம் நம் வாழ்வில் கடைப் பிடிப்பதுதான் இந்தவழிகள். மருத்துவரிடம் நம்மை விரட்டி, திடீர் மின்னல் தாக்குதல் போல் தாக்கிடாமல் தடுக்க வாய்ப்பை அது உருவாக்கித்தரும்.
முதல் கட்டளை
30 நிமிடங்கள் - அரை மணி நேரம். குறைந்தபட்ச நடைபயிற்சி அவசியம் தேவை. இது மாரடைப்பு நோயைத் தடுக்க 30 சதவிகிதம் உதவுகிறது என்பது இதய நோய் மருத்துவர்களின் கணிப்பு ஆகும்!
இப்படி ஒரு பழக்கத்தை அன்றாடம் செய்யப் பழகி விட்டோமேயானால், மற்ற விதிகளை நாம் சோம்பலுக்கு இடமின்றி தானே கடைப்பிடிக்கத் துவங்கி விடுவோம் என்பது உறுதி!
இன்றைக்கு ஒருநாள் தானே பரவாயில்லை என்று பழகி விட்டால் இந்த பழக்கம் பிறகு வழக்கமாகி விடுவது உறுதி!
உங்களுக்குப் பழக்கமான ஒரு நண்பர் அல்லது நிர்வாகத்திலோ, இயக்கத்திலோ உங்களோடு கலந்துரையாடும் நிலையில் உள்ளவரோ அல்லது வாழ்விணையரோ அன்றாடம் நடந்து பழகிக் கொள்ளுதல் மிகவும் பயனுடையதாகும்! (தஞ்சை வல்லத்திற்குப் போகும் போது நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் நடை பயிற்சிக்கு உறு துணையாக நமது துணைவேந்தருடன், அல்லது விவாதிக்க வேண்டிய பேராசிரி யர்களுடன் நடந்து செல்வோம்; கட்டடப் பணிகள் முதல் பலவற்றை ஆய்வு செய்து பார்வையிடும் பணியும் முடிந்து விடும் குறைந்த நேரத்தில் நிறைந்த பணிகள் என்று மன மகிழ்ச்சியும் பெறுவோம்)
தொண தொணப்பு நச்சரிக்கும் பெருங் கூட்டத்தோடு நடப்பது விரும்பத்தக்கதல்ல.
கட்டளை 2
உங்கள் இரத்த அழுத்த நிலையை தவறாமல் கண்காணித்து வாருங்கள். இந்த முன்னெச்சரிக்கை மிகவும் அவசியம்.
இரத்த அழுத்தம் (Blood pressure) அளவு 115 மேல் /கீழ் 75 (115/75) என்ற அளவில் இருப்பது மிகவும் நல்லது. நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறி என்கிறார்கள் அமெரிக்க டாக்டர்கள்.
இந்த இரத்த அழுத்தம் அறிதல் மிகாமல் பார்த்தல் என்பது, கொலஸ்ட்ரால் கட்டுப் பாட்டை விட மிக மிக முக்கியமானதாகும்.
உடற்பயிற்சிகள் மூலமும், வயிற்றில் சேரும் கொழுப்புக்களைக் குறைத்தல் மூலமும் இரத்த அழுத்தம் கூடுதலாக இருப்பின் குறைக்க முடியும். இது கூடுத லானால் அது சீறுநீரகத்தை வெகுவாகப் பாதித்து, மாரடைப்புக்கு வித்திடுகிறது. எடை கூடுதலாக உள்ளவர்கள் அதைக் குறைக்க வழி செய்தல் வேண்டும். (Body Mass Index (BMI) என்பதை எளிதில்  அறிந்து அதற்கேற்ப டாக்டர்களின் ஆலோ சனை பெறுவதும், கடைப்பிடிப் பதும் அவசியமாகும்!
ரத்த அழுத்தம் 140/90 என்றால் உடனே மருத்துவரிடம் சென்று, அதைக் கட்டுக்குள் கொண்டுவர அவரது ஆலோசனைகளை மேற்கொண்டு மருந்து மாத்திரை, உணவுக் கட்டுப்பாடு, உப்புச் சத்துக் குறைத்தல், சர்க்கரை அளவை அல்லது உடனடியாக சர்க்கரை யாகும் உணவுகளை (Carbohydrates) குறைத்தோ, நல வாழ்வு வாழ முயற்சிக்க வேண்டும்!
கட்டளை 3
ஒவ்வொரு நாளும் Nuts என்ற கொட்டைகள் - பருப்புக்களை - வால்நட், பாதாம் பருப்பு, போன்றவைகளை ஒரு அவுன்ஸ் அளவு அன்றாடம் சாப்பிட்டு வாருங்கள்.
இனிப்பான (ஸ்வீட்டுகளை) மிட்டாய் களை வாங்கிக் கொடுப்பதைவிட, மேற்காட்டிய கொட்டைகள், பருப்புகள் கொண்ட பாக்கெட்டுகளை வாங்கித் தாருங்கள். தினமும் தவறாமல் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
நல்ல கொலஸ்ட்ரால் அளவு கூடுத லாகப் பெருக Wallnuts - வால்நட்டுகள், (வாதுமைக் கொட்டை) பெரிதும் உதவி செய்கின்றது என்பதை பல இதய நோய் சிகிச்சை மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்! ஒமேகா - 3 என்ற பயன் வால்நாட் டில் இந்த Fibre  என்ற நார்ச்சத்துமூலம் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. அத்துடன் ஆரோக்கிய அளவு புரது.  மூளையைப் போன்ற உருவம் படைத் தவை வாதுமைக் கொட்டை!
சிலருக்கு தனியே சாப்பிடத் தயக்க மானால் ரெய்சின் உலர்ந்த திராட்சை (சிலர் கிசுமுசு பழம் என்பர்)யுடன் இணைத்து உண்ணுங்கள்.
- (நாளை தொடரும்)

கட்டளை 4
நல்ல கொலஸ்ட்ரால் என்பது (தேவையான விரும்பத்தக்க கொழுப்புச் சத்து) மிகவும் நமக்குத் தேவை. அதிகம் இருப்பது நல்லது. 50 இருந்தால் மிகவும் விரும்பத்தக்க ஆரோக்கிய நிலையாகும்.
நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் ஆக வேண்டுமானால், அதற்குரிய வழிமுறை கள் (அ) உடற்பயிற்சி (அ) குடிக்கும் பானங்கள் ஒருமுறைதான். ஆரோக்கிய மான கொழுப்புச் சத்துக்களையே எடுத்துக்கொள்ளவும். ஆலிவ் எண் ணெய், சனோலா எண்ணெய் நேற்றைய கட்டுரையில் எழுதப்பட்ட கொட்டை, பருப்புகள்.
உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று நியாசின்  (Niacin) மருந்தும் எடுக்கலாம்; (இது பக்க விளைவுகளை உண்டாக்கும் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டும்) அதுபோலவே மருத்துவரிடம் போண்டோதெனிக் ஆசிட்  (Pantothenic Acid) அல்லது வைட்டமின் பி-5 பற்றியும் கேளுங்கள் - இவைகள்  குறிப்பாக  (Statin drugs) கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவிடக் கூடும்!
கட்டளை 5
மாரடைப்பு நோய் தடுப்பான்களில் ஒன்று தக்காளி சாஸ் (Tomoto Sauce) 10 தேக்கரண்டி (Table Spoon) சாப்பிட்டு வரவேண்டும் - ஒரு வாரத்தில்!
இது ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப் பெரிதும் உதவி செய்யக் கூடியதாகும்! பொட்டாஷியம் என்பது இதில் மிகவும் அதிகம் என்பதால் அதற்கு அச்சக்தி உள்ளது.
உப்பு அல்லது கொழுப்பு கலந்த சாஸ் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். Pasta என்ற சுவையூட்டும் இவைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்! முன் னதை எளிமையாக செய்து ஆரோக்கியம் கவனிக்கப்படல் வேண்டும்.
கட்டளை 6
பற்களுக்கு இடையே உள்ள அழுக்கு களை (Floss) நீக்கம் செய்வது மிகவும் பாதுகாப்பானது; பிரியோ பின்ட்டல் நோய் வந்து வெந்துவிடாமல் தடுத்து, அதன்மூலம் இருதய ரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
வாய் பற்களுக்கும் - இருதய நோய்க்கும் என்ன தொடர்பு என்பதே பல பேர்களுக்கு - படித்தவர்கள் உள்பட - தெரியவே தெரி யாது. ரத்தக் குழாய் இருதயத்திற்குச் செல் வது வாய் பற்கள் சுத்தமாக இல்லாவிட்டால் கேடு விளைவிக்கும் என்பது மிகவும் தெரிந்து, செயல்படவேண்டிய செய்தியாகும்!
இருதய ரத்தக் குழாய்களுக்கு மட்டு மல்ல, பால் உறுப்புகள் (Sex Organs) இவைகளையும்கூட பாதித்து ஆண்மைக் குறைவு, பால் உணர்ச்சி, இன்ப நுகர்ச்சிக் குறைவை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
கட்டளை 7
கொழுப்புச் சத்து அறவே நீக்கப்படக் கூடாது - ஓரளவு தேவை. அதிலும் கொலஸ்ட்ரால் போல மூன்று வகை உண்டு.1. Saturated Fat 2. Unsaturated Fat 3. Gans Fat Saturated Fat (கெட்ட கொழுப்பு) Trans Fat இவை ரத்தக் குழாய்களில் வெந்து போகும்.
அளவு (Inflamation - வீக்கம் எரிச்சல்) உண்டாக்கும். 7 கிராம் அளவு saturated Fat பட்டை (லவங்கப் பட்டை)யில் உள்ளது. A 113 கிராம் கெட்ட கொழுப்பு வறுத்த பன்றிக் கறியில் உள்ளது. Jadalon 4 கிராம் அளவு உள்ளது. வறுத்த எண்ணெய், பொறித்தது இவைகள் எல்லாம் இந்த கெட்ட கொழுப்பு அதிகரித்துவிடும் நிலை ஏற் படுத்தும். ஒரு நாளைக்கு 20 கிராமுக்குமேல் இந்த கெட்ட கொழுப்பு (Saturated Fat) மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கட்டளை 8
சில உணவுப் பொருள்களை நாம் வாங்கும்போது, அதில் அச்சிடப்பட்டுள்ள சத்துக்களின் அளவுபற்றிப் படித்துப் பார்த்து வாங்குகிறோம். (இந்தப் பழக்கம் மேலை நாட்டு இல்லத்தரசிகளிடம் மிகவும் அதிகம். நம் நாட்டிலும் பெண்கள் படித் துள்ளதால் ஓரளவு வளர்ந்து வருகிறது).
குறைந்த கொழுப்பு என்று போட்டிருப்பதைக் கண்டு ஏமாந்து விடுபவர் பலர்; அந்த வரிசையில் ஒவ்வொன்றின் சக்திபற்றி போட்டிருப்பதில் முதல் அய்ந்தில் சர்க்கரை முதலாவது  என்று போடப் பட்டிருந்தால் அதனை வாங்காமல் நிராகரிக்க வேண்டும் என்பது ஒரு பாதுகாப்பான ஏற்பாடு. சர்க்கரை தீமைபற்றி பலரும் அறிந்ததால் அதிகம் விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆரோக்கிய மான கொழுப்பு சக்தி என்பது சர்க்கரை சத்தைவிட ஆரோக்கியமாகும், பழங்களில் உள்ள சர்க்கரை சத்து நல்லது என்பர் ஆய்வாளர்கள்.
கட்டளை 9
இதை நாம் கடைப்பிடிக்க வேண்டி யதில்லை. பீர் அல்லது ஒயின் ஒரு கிளாஸ் பருகலாம் என்ற அறிவுரை மேலைநாட்டுக் கண்ணோட்டம். இவை கள் சிறுநீரகத்தையும், இருதயத்தையும் தூய்மைப்படுத்த உதவுகிறது.
கட்டளை 10
பழங்கள் தவிர்க்கப்படவே கூடாது. நம் உணவில் ஒரு பகுதியாகவே அமைத்துக் கொள்வது மிகவும் அவசிய மாகும். இதய நோய் தடுப்பு மட்டுமல்ல, புற்றுநோய், சிறுநீரகப் பிரச்சினைகள் உள்பட பலவும் தவிர்க்கப்பட, பழங்கள் நல்ல மாமருந்துகளை விட மேன்மை யானது! நார்சத்து (Fibre Content)  அதிக மாகும். இதனால், பழங்களைக் கழுவி அரிந்து உண்ணவேண்டும். கூடவே, அளவோடு காய்கறிகள் இணைந்த உணவு!
சீசன் பழங்களை சுவைப்பது அவசி யம். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கப் படவேண்டிய பழங்கள், மாம்பழம், பலாப்பழம். (பப்பாளி மிகவும் நல்லது).
மறவாதீர்! இதில் முடிந்த அளவு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்!
(ஏப்ரல் 2012, ரீடைர்ஸ் டைஜஸ்ட் இதழில் வந்த கட்டுரையை தழுவி எழுதப்பட்டது இரண்டு வாழ்வியல் கட்டுரைகளும்)
-விடுதலை

பேராசைக்குத் தடை போடுங்கள்!


மோசடிகளில்கூட மிகவும் முன் னேற்றமான முறைகள் (?) உலகில் எங்கும் காணப்படுகின்றன.

இணையம் - அறிவு சார் கண்டுபிடிப்பு - அகில உலகத்திலும் தகவல் பரிமாற்றத்தினுடைய மிக அருமையான சாதனம்! அதைவிட செய்திகள் காற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு அதி வேகத்தில் பயணிக்கும் நல்ல வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மின் அஞ்சல் என்பதன்மூலம் ஒரு கோடியிலிருப்போர் மறுகோடி மனிதர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும், உரையாடல்களை (Chatting) நிகழ்த்தவுமான அரிய வாய்ப்பு கள் இந்த மின்னணுவியல் துறை யின் மகத்தான கண்டுபிடிப்புகளால் மிகவும் மலிந்துவிட்டன!

ஆனால் இதன் மறுபக்கமோ மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கும், ஆபாச வியாபாரத்திற்கும் வித்திடும் கொடூரமான நிலையும்கூடவே வளர்ந்து வருகின்றன!

சைபர் கிரைம்ஸ் (Cyber Crimes) என்ற இவ்வகை குற்றங்கள் நாளும் புதுப்புது வடிவங்களை எடுத்து, மனித குலத்தை வாட்டி வதைத்துக் கொண்டே யிருக்கின்றன!

ஒரு பட்டதாரி இளைஞன், பொறி யியல் கல்லூரியில் படித்தவர் என்று நினைவு, அவருக்கு ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு இந்த வங்கி மூலம் (வெளிநாட்டிலிருந்து) 20 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. அதை நீங்கள் பெற வேண்டுமானால், கீழ்க்காணும் கணக் குக்கு 5 லட்ச ரூபாய்களை உடனே அனுப்புங்கள் என்றவுடன் பல கோடி ரூபாய் வருவதை எண்ணி கனவுலகத்தில் சஞ்சரித்த அந்த இளைஞன் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தான்; தன் கையில் பணம் இல்லை.

தாய், தந்தை நண்பர் களிடம் பணம் சிறுகச் சிறுக சேர்த்தான். கடனாகவும் (ஏராளமான வருவாய் வருவதால்) பெற்று அந்தக் கணக்கில் பணத்தைப் போட்டு மிகுந்த ஆவலுடன், கோடிகளை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்!

கடன் கொடுத்தவர்கள் வட்டியையும், முதலையும் திருப்பிக் கேட்டபோது தான் இவருக்கு ஏற்பட்ட நெருக்கடி புரிந்தது! வசதியற்ற அவன், தான் ஏமாற்றப்பட்டோம் என்பதைப் புரிந்து கொண்டு தூக்கு மாட்டிக் கொண்டு செத்து மடிந்துள்ளான் - என்னே பரிதாபம்! படித்தவர்கள்கூட பகுத்தறிவைப் பயன்படுத்தவில்லையே!

உனக்குப் பசியா வரம் தருகிறேன் அம்மணி. எனக்குக் கொஞ்சம் பழைய சோறு போடு! என்று கேட்ட  சாமியாரை நம்பி, தன் வீட்டில் இருந்த பழைய சோற்றை துணைவருக்கென ஒதுக்கி வைத்தது - இந்தக் காவி மோசடி சாமியாருக்குப் போட்டு விட்டார் ஒரு வயதான பெண்மணி!

(தந்தை பெரியார் சொன்ன குட்டிக் கதை இது) கணவன் வீடு வந்தவுடன் இந்தப் பெண்மணி அவரிடம் சொல்ல, அவர் மோசம் போய் விட்டாயே, உனக்குப் பசியா வரம் தரும் சக்தி அவனுக்கு இருந்தால், அந்தச் சாமியார் ஏன் உன்னிடம் பழைய சோறு கேட்பான்? - புரிந்து கொள்ளவில்லையே - ஏமாந்து விட்டாயே! என்றாராம்! அதன்பிறகு தான், தன் அறியாமையைப் புரிந்து வருந்தினாராம் - அந்தப் பெண்மணி!

பேராசை - குறுக்கு வழிகளில் பணம் சேர்த்தல், தகுதிக்கு மீறி போலிப் பெருமைகளுக்காகக் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்த முடியாமல் ஒளிந்து வாழும் உன்மத்த வாழ்க்கை - இவை எல்லாம் தொடர் கதைகளாகி விடும் அவலம் ஏற்பட்டு, அத்தகையவர் களைத் துரத்திக் கொண்டே இருக் கும் வாழ்க்கை முழுவதும்.

எனவே அளவறிந்து வாழ வேண்டும். எதையும் யாராவது தாராளமாக அல்லது எதிர்பாராமல் தருகிறார்கள் என்றால் ஏன் என்று உடனே யோசிக்க வேண்டும். இவருக்கு என்ன இப்படி நம்மீது திடீர் ஆர்வம்? ஏன் இவர் வள்ளல் போல வாரி வாரி வழங்கி வலை வீசுகிறார் என்று யோசிக்க வேண்டும்.

எச்சரிக்கை யுடன் இத்தகைய ஆசாமிகளிடம் சிக்கிக் கொள்ளாமல்,  விசுவரூபம் எடுக்கும் பேராசைக்கு அடி பணி யாமல், எளிய வாழ்வு, சிக்கன வாழ்வு கடனற்ற வாழ்வு வாழ்ந்தால்  பல பகைவர்களைத் தவிர்க்கும் பலன் தரும் அவ்வாழ்வாக அமையும்.

எனவே எதிலும் அளவுக்கதிக மான கவனமும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
-விடுதலை,8.5.12

வைட்டமின் ‘D’ விளைவிக்கும் அற்புதம்!


வைட்டமின் ‘D’-யின் முக்கியத்துவம் குறித்து அண்மைக்கால ஆய்வுகளில் மிகவும் அலசி ஆராயப்பட்டு, இது மரண அபாயத்திலிருந்து, மனிதர்களைக் காப்பாற்ற பெரிதும் பயன்படுகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கான்சாஸ் பல் கலைக் கழக மருத்துவமனை ஆராய்ச்சி ஒன்றினை 10,899 நோயாளிகளை மய்யமாக வைத்து நடத்தியிருக்கிறார் கள். அதில் 70 விழுக்காட்டிற்குமேல் ‘D’ வைட்டமின் குறைபாடு உள்ளவர் களாகவே இருந்துள்ளனர். இவர்கள் மருத்துவக் குறிப்பின்படி ஒரு மில்லி மீட்டருக்கு 30 நேனோகிராம்கள் என்ற பொதுவாக நல் ஆரோக்கியத்திற்கு அடிப்படைத் தேவையான அளவீட்டை விட குறைவாக உள்ளவர்களாகவே காணப்பட்டார்கள்.

இவர்களது மருத்துவ வரலாறு இவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந் துகள், மற்ற சில அம்சங்கள் - ஆகிய பலவற்றையும் கண்காணித்து ஆய்வு செய்த, இதய நோய் மருத்துவர்கள், இத்தகைய நோயாளிகளுக்கு சர்க்கரை வியாதி வருவதற்கும் இரு மடங்கு வாய்ப்பு உள்ளது; ரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்கு, 40 விழுக்காடு வாய்ப்பும், கார்டியோ மையோபதி (Cardiomyopathy) என்ற இதய தசைகள் பலகீனமானதால் ஏற் படும் இதய நோயும் 30 விழுக்காடு வருவதற்கும் வாய்ப்புண்டு என்று கணித்துள்ளார்கள்.

வைட்டமின் னு குறைவில்லாதவர், 60 சதவிகிதம் மற்ற நோயாளிகளுக் குள்ள மரண அபாயத்தைத் தள்ளிப் போட்டவர்களாக இருக்கிறார்களாம்!

இதை ஆய்வு செய்து அந்த கான் சாஸ் (மருத்துவ) பல்கலைக் கழகத்தின் மருத்துவமனை ஆய்வாளர்களும் டாக் டர்களும் உறுதிப்படுத்தியுள்ளனராம்!

வைட்டமின் ‘D’ - குறைவினில் பல்வேறு நோய்கள் உடலைத் தாக்கிட வாய்ப்புகள் உண்டு என்றும் அந்த மருத்துவக் குழு கூறுகிறது!

இதனைத் தடுக்க; தவிர்க்க - வைட்டமின் - ‘D’யை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறி வுரை கூறுகின்றனர்.

கான்சாஸ் பல்கலைக் கழக மருத் துவமனையின் இதய நோய்  மெடிக்கல் சென்ட்டர் வல்லுநர் டாக்டர் ஜேம்ஸ், எல் வாசிக் (Dr. James L. Vacek) இதய நோய் தாக்குதலுக்கும் வைட்டமின் ‘D’ தாக்குதலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை  ஆராய்ந்தோம்; மிகவும் பலமாகவே அத்தொடர்பு இருக் கிறது என்று தெரிய வந்தது என்று கூறியுள்ளார்!

ஆனால் வைட்டமின் ‘D’ மட்டுமே நோய்களுக்குக் காரணம் என்றும் எண்ணிவிடக் கூடாது மற்ற நோய்களுக் குரிய பல்வேறு காரணிகளும்கூட இந்த வைட்டமின் ‘D’யின் குறைபாடு; நம் உடலில் ஏற்படுத்துவதற்குரியவைகளாக அமையக்கூடும்! என்கிறார் அவர்!

சிலர் 90 விழுக்காடு சூரிய வெளிச்சம் வெப்பத்திலிருந்து வைட்டமின் ‘D’யைப் பெற்று 10 விழுக்காட்டை உணவு மூலம் பெற்றுக் கொள்வதாக அதே டாக்டர் கூறுகிறார்!

வெயிலில் வேலை செய்த பலருக்கு - நம் மூதாதையர்களுக்கு மாரடைப்பு - மற்றும் இளமைக்கால மரணம் ஏற்படாமல் - நீண்ட காலம் அவர்கள் உயிர் வாழ்ந்த ரகசியங்களில் ஒன்று இதன் மூலம் புரிகிறது அல்லவா?

அவ்வளவு நேரம் இல்லா விட்டாலும் சில குறிப்பிட்ட அளவு மணித்துளி களாகவும் தாங்கும் வெயிலில் உடம்பைக் காட்டி சூரியக்குளியலை (ஓரளவு) செய்து வைட்டமின் னுயை செலவின்றி சேமிக்க லாமே!

ஒவ்வொரு நாளும் 10 மணித் துளிகள் இப்படி உடம்பை சூரியனுக்குக் காட்டினா லேயே போதிய வைட்டமின் - ‘D’ நமக்குக் கிடைத்து விடக் கூடும் என்கிறார் டாக்டர் வாசிக் அவர்கள். எண்ணெய்ப் பசையுள்ள மீன்கள், முட்டைச் சத்துள்ள பால் தயாரிப்புகளும்கூட இந்த வைட்டமின் - னு யை நமக்குத் தர வாய்ப்புண்டு.

ஆண்டிற்கு ஒரு முறை அல்லது இரு முறை வைட்டமின் ‘D’க்கென தனி ரத்தப் பரிசோதனையை நல்ல ரத்தப் பரிசோ தனை, நிலையங்களில் செய்து கொண்டு, அதைக் காட்டி, மருத்துவர்களின் ஆலோ சனை பெற்று, நலவாழ்வு வாழலாமே!
-விடுதலை,1.12.11

இளைஞர்களே, உங்கள் உள்ளங்களைத் திறந்து இடமளியுங்கள்!


நேற்று உலக குருதிக் கொடை நாள் மட்டுமல்ல, முதியோர்களைக் கொடுமைப்படுத்தலைத் தடுக்கும் நாளும் கூட.
உலகெங்கும் உள்ள பல நாடுகளில் முதியோர்கள் எண்ணிக்கை மிகவும் கூடியிருக்கிறது. இந்தியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளும் பல அய்ரோப்பிய நாடுகளும் கூட இந்தப் பட்டியலில்!
முன்பு இருந்த சராசரி வயது இப்போது கூடியுள்ளது. மருத்துவ வசதிகளின் பெருக்கம், அறிவியல் மின்னணுவியல் துறை வளர்ச்சி Bio-medical என்ற துறையில் பொறியியல் மருத்துவத் தொழில் நுட்பம் மிகவும் உதவிகரமாக உள்ளது. Health Care  என்ற ஒரு துறையே மருத்துவப் பொறியியல் துறையில் கூடுதலாக இணைந்து ஓர் அமைதிப் புரட்சிக்கு வித்திட்டு, மனித ஆயுளை மேலும் பல ஆண்டுகள் கூட்டியுள்ளது. இதெல்லாம் மகிழ்ச்சிக்குரிய சாதனைதான்; ஆனால் இதற்கொரு மறுபக்கம் நம் நாட்டிலும் மற்ற சில நாடுகளிலும் உள்ளது பற்றியும் நாம் யோசிக்க வேண்டாமா?
கூட்டுக்குடும்ப முறை நம் நாட்டில் வேகமாகச் சிதைந்து அல்லது தளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில், சொந்த மகன்கள் அல்லது மகள்கள் தங்களது தாய், தந்தையர்களைப் பெரிதும் கொடுமையாக நடத்தும் போக்கு தொத்து நோய் போல, (பன்றிக் காய்ச்சல் - டெங்குக் காய்ச்சல் போல) வேகமாகப் பரவி வருகிறது!
தங்களைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, கல்வி கொடுத்து, உத்தியோகம் பார்த்து கை நிறையச் சம்பாதிக்கும் நிலைக்குத் தன்னை உருவாக்கிய பெற்றோர்களை - அவர்களது முதுமைக்காலத்தில் மிகவும் மோசமாக, அலட்சியத்துடன், ஏதோ பிச்சைக்காரர்களைப் போல கேவலமாக நடத்தும் கொடுமை - அவமானம் பற்பல குடும்பங்களில் அன்றாட வாழ்க்கையாகி உள்ளது!
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - தாய் சொல் மிக்க வாசகம் இல்லை என்று சொல்லிக் கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டிலேயே - கைவிடப்பட்ட அல்லது விரட்டப்பட்ட முதுமையடைந்த தாய் தந்தையர்களின் கண்ணீர்க் கதைகள், சோக வரலாறுகள் அன்றாட அவல நிலையாகி வருகின்றன!
எதையும் பயன்படுத்திவிட்டு, பிறகு குப்பையில் எறிதல் போன்று (Use and throw) அவர்களை மனிதர்களாகவே நடத்தாத அவரது பிள்ளைகள், பெண்கள் - இரு பாலரும் மிகப் பெரிய சமூக விரோதிகள் அல்லவா? நன்றி கொல்லும் நயவஞ்சக நரிகள் அல்லவா?
இவர்களைக் கிரிமினல் குற்றவாளி களாக்க புதுப்புதுச் சட்டங்கள் நம் நாட்டிலேயே செயல்படத் துவங்கி யுள்ளன.
சில மாதங்களுக்கு முன் தந்தைக்குச் சோறு போட மறுத்த ஒரு மகனை சென்னை அயன்புரம் காவல்துறையினர் அழைத்துக் கண்டித்து, காவல்துறை லாக்அப்பில் உள்ளே தள்ளி, பிறகு நடவடிக்கைக்குப் பயந்தவர் தந்தையைப் பராமரிக்க ஒரு வழியாக ஒப்புக் கொண்ட தால் வெளியே அனுப்பிய செய்தி இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய செய்தி யாகும்!
சட்டத்தாலா மகன் தந்தை உறவும், பாசமும் கடமையும் நிலை நிறுத்தப்படவேண்டும்? இதைவிட நம் சமுதாயத்தின் கீழிறக்க நிலைக்கு வேறு என்ன உதாரணம் தேவை?
கணவன் - மனைவி உறவு கூட விலகிக் கொள்ள உரிமை அளிக்கும் உறவுதான். ஆனால் தாய் தந்தையுடன் மகன், மகள் உறவு, அண்ணன் தம்பி உறவு என்பவைகளெல்லாம்  விலகிக் கொள்ளும் உரிமையை  சட்டமோ அறநிலையோ அனுமதிப்பதில்லையே! அதுதானே அதன் தனிச் சிறப்பு.
மனித பாசத்தை, அன்பை, காதலை சட்டம் போட்டா ஒரு சமுதாயம் நிலை நிறுத்துவது? இதை விட மிகமிக வெட்கக்கேடு வேறு உண்டா?

முதியவர்களிடம் அலட்சியம் காட்டி, புறந்தள்ளி ஒதுக்கப்பட்டவர் களாக்கும் இளையவர்களே, உங்களுக்கு ஏன் ஒன்று மறந்து விடுகிறது?
நாளை நீங்களும் முதியவர்களாகி முதுமையில் தள்ளாடும் நிலை காலத்தின் கட்டாயம் என்பதை ஏனோ வசதியாக மறந்து விடுகிறீர்கள்? அப்போது உங்கள் செல்வர்கள் (பிள்ளை, பெண்கள்) உங்களை இப்படி நடத்திடுவர்; அப்போது உங்கள் மனம் எப்பாடுபடும் என்பதைச் சிந்தித்தீர்களா?
எனவே முதியோர் இல்லங்களைத் தேடாதீர்கள் உங்கள் பெற்றோர் களுக்காக - மூடிய உங்கள் உள்ளங் களைச் சற்றே அகலமாகத் திறந்து அவர்களை மீள் குடியேற்றுங்கள். இது அவர்களுக்காக அல்ல; நீங்கள் மனிதம் உள்ள மனிதர்கள்தான் என்பதை மன்பதைக்குக் காட்ட -  மதிப்பும் மரியாதையும் பெறுவதற்காக! புரிகிறதா?
- கி.வீரமணி
-விடுதலை,15.6.12

டாக்டர்களைப் பார்க்கும் போது...!


டாக்டர்களிடம் நம் உடம்பைக் காட்டி, மருத்துவ ஆலோசனை கேட் கும்போது, அவர்கள் கேட்கும் ஒவ் வொரு கேள்விக்கும் உரிய பதிலைக் கூறுவதோடு, அவர்கள் எழுதிக் கொடுத்தபடி, காலாவதி ஆகாத மருந் துகளை வாங்கி வேளை தவறாமல், முறைப்படி எடுத்துக் கொள்ளுதல் நமக்குச் சரியான அணுகுமுறை.
அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில், டாக்டர்களிடம் நோயா ளிகள் எடுத்துக் கொள்ளும் உரிமை - நம் நாட்டு டாக்டர்களைப் பார்க்கும் போது மிக அதிகம் எனலாம்.
அங்கே டாக்டர்களேகூட Ask Questions ‘ கேள்வி கேளுங்கள் என்றே நம் சந்தேகங்களை - அவை சரியான தாகவும் இருக்கலாம் அல்லது மாறான தாகவும் கூட இருக்கலாம் -அவை எப்படி இருப்பினும்கூட, பொறுமையாக பதில் கூறுவார்கள்.
சில டாக்டர்கள் நம் நாட்டில் நோயாளிகளுடன் அதிக நேரம் செல வழிக்க முடியாதவர்களாக, பொறுமை உள்ளவர்களாகவும்கூட இருப்பதில்லை.
மாறாக, மற்ற பலர், விளக்கமாக நோயாளிகளுக்கு எதனால்    இது வந்தது; எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை படம் வரைந்துகூட விளக்கிடத் தவறுவதில்லை. அத்தகை யோரிடம் வந்த நோயாளிகள் மிகவும் மன நிறைவோடு திரும்புவார்கள்.
படித்த நோயாளிகள் பலர், டாக்டர் களையே நோக்கி ஏன் அந்த மருந்து கொடுக்கக் கூடாது? இந்த மருந்து மாற்றம் செய்யலாமே என்று சற்று அதிகப் பிரசங்கித்தனமாக கேட்பதும் உண்டு.
சாதாரணமாக உள்ள எளிய கிராமத் துவாசிகளாக அதிகம் படிக்காதவர் களாகவும் உள்ள நோயாளிகள்கூட இப்போதெல்லாம் - ஏன் டாக்டர் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்து விடு கிறீர்களா? என்று கேட்பது சகஜமாகி விட்டது!
டாக்டர் வைக்காத செலவைக்கூட நோயாளிகள் வலியச் சென்று செல வழிக்கத் தயாராகவிருக்கும் விசித்திர யுகத்தில் நாம் வாழ்கிறோம்!
இதுபோலவே மருந்து மாத் திரைகளைத் தரும் டாக்டரிடம் ஏன் டாக்டர் ஊசி போட மாட்டீங்களா? என்று நச்சரிக்கும் நல்லவர்களும் உண்டு.
அதுபற்றி நரம்பியல் மற்றும் தோல் சிகிச்சை மருத்துவ நிபுணரான டாக்டர் வே. பாஸ்கரன் அவர்கள் வண்ணக் கதிர் (15.11.2015) இதழில் எழுதியுள்ள ஒரு அனுபவக் கட்டுரை இதோ: படியுங்கள்
ஜுரம், தலைவலி, உடம்பெல்லாம் வலி  மெடிக்கல்ல மாத்திரை வாங்கிப் போட்டுக்கிட்டேன். இரண்டு நாளாகுது, இன்னும் சரியாகலை டாக்டர் -  அய்ம்பது வயது மதிக்கத்தக்க அந்த பேஷன்டு என் முன் அமர்ந்தபடியே, முக்கலுடன் சொன்னார்.
விரைவாகத் தொண்டை, கண்கள், நாக்கு, வயிற்றுப் பகுதி, மார்பு எல்லாம் பார்த்து,  இது வைரஸ் ஜுரம். மூன்று முதல் அய்ந்து நாள் வரை இருக்கும். மாத்திரை, மருந்து எழுதித் தருகிறேன்  சரியாகிடும்  என்றேன். ஊசி கிடையாதா, டாக்டர்? என்னை எப்போதும் அயர் வடையச் செய்யும் கேள்வி இது. என்ன ஊசி வேணும், சொல்லுங்க, போட்டுறலாம் என்றேன் புன்னகைத் தவாறே.
ஒரு மிரட்சியான பார்வையுடன் என்னைப் பார்த்தார். ஜுரத்தைவிட கண்களில் வெப்பம் அதிகமாகத் தெரிந்தது.
எனக்கெப்படித் தெரியும் - நீங்க தானே டாக்டர் ? -  என்றார்! அப்படின்னா, நான் சொன்ன மருந்துகளை எடுத்துக்கோங்க  இரண்டு நாள் ரெஸ்ட் எடுங்க; நிறைய தண்ணீர் குடிங்க! இந்த வியாதிக்கு ஊசி கிடையாது.  அதில்லை டாக்டர்  ஊசி போட்டா சீக்கிரம் குணமாயிடும் இல்லே, அதுக்குத்தான் கேட்டேன் யார் சொன்னாங்க ? இது ஒரு தவறான எண்ணம். ஊசிபோட்டாலும், போடலைன்னாலும் மூன்று நாளைக்கு இந்த ஜுரம் இருக்கும்  எல்லா டாக்டர்களும் முதலில் ஊசிதான் போடுகிறார்கள். நீங்க மட்டும்தான்..  என்று குற்றம் சாட்டினார்!
நான் இந்த பேஷண்டை இழப்பது உறுதி ! வேறு ஒரு நல்ல டாக்டரிடம் போய்விடுவார்! ஒரு வேளைக்கு ஊசி, இரண்டு வேளைகளுக்கு மாத்திரைகள் வாங்கிக் கொண்டு, மூன்று நாட்கள் மருத்துவரைத் தொடர்ந்து சந்திப்பார். இதுதான் ராசி என்னும்  மாயை!
போலியோ ஜுரமாக இருந்து, ஊசிபோட்ட மறுநாள் குழந்தைகளுக்கு கால் விழுந்து விடுகின்ற அவலத்தை நான் பார்த்திருக்கிறேன். ஊசி வலியின் தீவிரத்தில், டாக்டரைப் பார்க்கப் போன வலிகள் மறைந்து கொள்வதும் உண்டு ! ஊசி போட்ட இடத்தில் சீழ்க்கட்டி உரு வாகி, எட்டிப் பார்ப்பதும் சாத்தியமே!
மருத்துவராய் என் முப்பது வருட அனுபவத்தில்  அவசியமின்றி  ஊசி போடும் பழக்கத்தைத் தவிர்த்து வந்திருக்கிறேன். நிறைய பேஷண்ட்ஸ் என்னை விட்டுப் போயிருக்கலாம். எனக்கு இழப்பில்லை என்றாலும் இதில் எனக்கு வருத்தம்தான்.
படித்த அறிவு ஜீவிகள் கூட, அசட்டுச் சிரிப்புடன்  ஊசி  கேட்பதைப் பார்த்து சலிப்படைந்திருக்கிறேன். ஜெனரல் பிராக்டிசில், ஒரு ஊசி (வெறும் பி காம்ப்ளக்ஸாகக் கூட இருக்கலாம்!), மூன்று வேளை மாத்திரை (அ) மருந்து, வெளிக்கடையில் ஒரு மாத்திரை/மருந்து எழுதிக் கொடுப்பது தொன்றுதொட்டு வரும் வழக்கம்.
அதுபோலவேதான்  டிரிப்ஸ்  எனப்படும், சலைன்/ குளுகோஸ் ஏற்று வதும்  வாயில் வெற்றிலை, புகை யிலைக்க றையுடன்,  வீக்கா இருக்குது டாக்டர், இரண்டு பாட்டில்சலைன் ஏத்திக்கிட்டுப் போகலாம்னு வந்தேன்  என்று வருபவர்களும் இந்த ஊசி ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான்!
இவர்களுக்கு யார் சொன்னது எல்லாவற்றுக்கும் ஊசியும், டிரிப்ஸ் ஏற்றிக் கொண்டால் உடனடி நிவாரணம் என்று? அப்போ ஊசியே கிடையாதா ? என்னா டாக்டர் நீங்க? உண்டு அதற்கென்ற சந்தர்ப்பங் களும் உண்டு - மருந்து விழுங்கத் தெரியாத, முடியாத குழந்தை
- வாந்தியெடுக்கும் நோயாளி (மருந்து வெளியேவந்து விடும்)
- மயக்கம், கோமா நிலையில் இருக்கும் நோயாளி,
- வாய்வழி மருந்தாக  இல்லாத சில மருந்துகள்
இப்படி சில தருணங்களில் ஊசிதான் சரி !
சில மருந்துகள் (உதாரணமாக: ஆண்டிபயாட்டிக்ஸ்) இரண்டு வேளையும் ஊசி வழியாகச் செலுத்த வேண்டியிருக்கும்  அப்போது மருத்துவ மனையில் சேர்வது அவசியம்.
இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு மட்டுமே நிவாரணம் அளிக்கும் மருந்து களை வலி, ஜுரம் போன்றவைகளுக்கு  ஊசியாகக் கேட்கும் நோயாளிகளை நான் கூடிய வரையில் தவிர்க்கிறேன்.
அவசர நிலையில் அலர்ஜி, வாந்தி, ஆஸ்துமா போன்றவை தவிர, சாதாரண ஜுரம், தலைவலி, உடல்வலி போன்ற வைகளுக்கு ஏதோ ஒரு ஊசியைப் போடுவது  நோயாளியே விரும்பி னாலும்  எனக்கு உடன்பாடல்ல.
எனவே, மருத்துவர்களிடம் சென்று, ஊசி போடச் சொல்லி வற்புறுத்தா தீர்கள்;  நல்ல மருத்துவராகவே தொடர விடுங்கள். உங்கள் விருப்பத்திற்கு சிகிச்சை செய்வதைவிட, வியாதியின் தன்மை பொறுத்து மருத்துவர் சொல்லும் சிகிச்சை செய்து கொள்வது எல்லோ ருக்கும் நல்லது!
முக்கியமாக ஒன்று - இதிலிருந்து மாறுபடும் மருத்துவர்கள் நோயாளிகள், நண்பர்கள் பலர் இருக்கக் கூடும். அவர்கள் இந்தக் கட்டுரையைப் புறக் கணித்து விடலாம் - நல்ல சிகிச்சை யைப் போல!
(கட்டுரையாளர்: நரம்பியல்  மற்றும் தோல் சிகிச்சை மருத்துவர்)
(நன்றி:  வண்ணக்கதிர் 15.11.2015)
-விடுதலை,16.11.15