நடைப்பயிற்சியை நாள்தோறும் வீட்டின் சுற்றுப்பகுதிகளில் மேற்கொள்ளும் போது, சுற்றிப் பூத்துக் குலுங்கும் செடிகளைப் பார்த்தவுடன் மனதிற்கு ஒருவகை மகிழ்ச்சி - எனது வாழ்விணையரும், மருமகளும் அச்செடிக் கொடிகளை அனுதினமும் - குழந்தைகளைப் பராமரிப்பதுபோல காத்து வருவது அவர்களுக்கு ஒரு தனி இன்பம் தரும் - மகிழ்ச்சி தரும் மகத்தான பணி!
தனியே நடைப்பயிற்சியின் போது; பலவகை சிந்தனை ஓட்டங்கள் - கருத்துக்கள் மனவானில் பளிச்சென மின்னும், நினைவு மேகங்கள் கூடும் - கருத்துருவாக்கம் என்ற மழையைப் பொழிந்து வறண்டுள்ள வாழ்க்கையை ஈரமாக்கும். லட்சிய வயலில் எப்படி எதிர்ப்புகள் எவ்வளவு இழிந்தவைகளாயினும் அவை உரமாகி பயிர் செழிப்பதற்கு உதவிடுகின்றனவோ அது போல! எண்ணங்கள் - ஆக்கப் பூர்வ சிந்தனைகள் - ஆற்றிட வேண்டிய கடமைகள், எதிர்கொண்ட ஏளனங்கள் இவைபற்றியெல்லாம் யோசித்துக் கொண்டே நடப்பேன்.
வீட்டின் செடிகள் தான் எவ்வளவு கடமை தவறாதவை என்பதை தவறாமல் பூப்பது, பருவம் தவறாது பூத்துக் காய்ப்பது -கனிகளைத் தருவது மூலம் எவ்வளவு செம்மையாகச் செய்கின்றன. பூக்கும் பருவம்; காய்க்கும் காலம்; கனியாகிச் சுவைதரும் - கைமாறு கருதாத பணி - இவைகளை எண்ணி கருத்துக்கள் சுழன்றோடிக் கொண்டிருந்த போது, ஏன் ஆறறிவு பகுத்தறிவு படைத்த மனிதன் மாத்திரம் வார்த்தை தவறுகிறான்; கடமை தவறுகிறான் - எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே ஏமாறுகிறான்? நன்றி காட்டுவதை நஞ்சாகக் கருதுகிறான்?
தாவரங்கள் எதையும் எதிர்பார்க்காமல், ஆண்டுதோறும் பருவம் தவறாமல் - புயலால் சாய்க்கப்படும் வரை - அல்லது முதுமையால் இற்று வீழும் வரை விதையூன்றியவரின் வீட்டிற்கு எத்தகைய சேவகம் செய்கின்றன!
மனிதர்கள் அவர்களுக்குச் செய்கின்ற செய்நன்றி, வெட்டி எறிவதுதானா?
என்னே இச்சகம்? என்னே கொடுமை! பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் என எத்தனை தலைமுறைகளுக்கும் கனி தரும் மரங்கள் பூச்சிக் கொல்லிகளால் பாழாகும் வரை பயன்தரும் பூச்செடிகள் - இவைகளிலிருந்து மனிதர்கள் ஏன் பாடம் கற்கவில்லை?
பகுத்தறிவுள்ள மனிதன் என்ற அகந்தைதான் அதற்குக் காரணமோ ? ஜாதி பார்க்காது பூக்கும் மல்லிகைக்குக் கூட, நமது மனித குலத்தவர் ஜாதி மல்லிகை என்று பெயர் சூட்டி - (ஜாதி கெட்ட மல்லிகை என்றும் உண்டோ?) மகிழ்கின்றனரே!
புரட்சிக்கவிஞரின் காதல் நினைவுகள், அதில் ஒரு சில கவிதை வரிகள்:
முல்லையிலே சிரித்தபடி தென்றலிலே சொக்கி
முன்னடியும் பெயர்க்காமல் இன்னும்இருக் கின்ற
பொல்லாத மாலைக்குப் போக்கிடமோ இல்லை?
- என காதலி காதலன் வருகைக் காலதாமதம் ஆவதற்கு மனஉளைச்சல் கொள்ளும் காலத்தைக் கூட சிரிக்க வைக்க, தென்றலை அனுபவித்து சொக்கி நிற்கும் என்று வர்ணிக்க முல்லைச் சிரிப்பு என்று தானே வெள்ளை உள்ளத்து - வெள்ளைப் பற்கள் கொண்ட சிரிப்பை உருவகப்படுத்து கின்றன! எனவே நிறபேதம், முதல் எதுவும் பார்க்காது கடமையாற்றும் தாவரங்களைப் பாருங்கள் - மனிதர்களே - கடமை தவறாமையைப் பிறழாது, தவறாது கடைப்பிடித்து ஒழுகுங்கள்!
- கி.வீரமணி
- விடுதலை நாளேடு, 28.3.18