நேற்று (15.11.2017) உலக நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அதைத் தடுக்கும் நாளாகும்.
இந்தியா உலகத்தின் நீரிழிவு நோயின் தலைமை நாடு என்பதோ, தமிழ்நாடும் இதில் முன்னணி பங்கு வகிக்கிறது என்பதோ பெருமைப்படத்தக்கதா? வேதனையுடன் கூடிய பதில் இல்லை என்பதே!
நான் ஏற்கெனவே பல முறை இப்பகுதியில் எழுதியுள்ளதைப் போன்று, இந்த நோய் - சர்க்கரை நோய், ஒரு முறை நமக்குள் படையெடுத்து இடம் பிடித்து விட்டால், பிறகு என்ன செய்தாலும் அதை முழுவதும் விரட்டி அடித்து விடவோ, ஓட்டி விடவோ முடியாது - இன்று வரை, நாளை எப்படியோ!
வயது முதிர்ந்தவர்களை மட்டுமே தாக்கி, படை யெடுத்து ஆக்கிரமித்துக் கொண்ட இந்த ஆட் கொல்லி - மெல்ல மெல்ல பல உறுப்புகளைப் பழுதாக்கி தாக்கிக் கொல்லும் நோய் இந்நோய் ஆகும்! அதனால் தான் டாக்டர்கள் இதை ஒரு சந்திப்பு நிலைய நோய் (Junction Disease) என்று பொருத்தமாக வர்ணிக்கிறார்கள் போலும்!
ஆம்! இந்த சந்திப்புத் தொடர் வண்டி நிலையத் திலிருந்து பல தொடர் வண்டிகள் புறப்படுவது போல, அதன் தாக்குதல் கண்களை நோக்கி இருக்கும். விழித்திரைகளைப் பாதித்து, குளுக்கோமா என்பதன் மூலம் படிப்படியாக பார்வையை இழக்கும் தண் டனையை - அது நமக்கு அளிக்கும் (இத்தண்டனைக்கு மேல் முறையீடு - அப்பீல்கள் - கிடையாது என்பதை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்!)
கால் விரல்கள் - புண்கள், பிறகு 'கேங்கரின்' மூலம் கால்களையோ, விரல்களையோ வெட்டி விடும் நிலை.
இதய நோய் அதிகமாகி முக்கியமாக நம்மை மரணபுரியை நோக்கி அழைத்துச் செல்லும்; சாவின் சாகாத தூதுவன் ஆகவும் இருக்கும்.
'ஸ்ட்ரோக் (Stroke) என்ற பக்கவாத நோயையும் அளிக்கும் கொடுமையை இந்நோய் அளிக்கலாம்!
இப்படி எத்தனை எத்தனையோ...
இவை உங்களை பயமுறுத்த அல்ல. தக்கப் பாதுகாப்புடன் - வருமுன்னர் காத்து நீங்கள் - ஏன் நாம் - வாழ வேண்டும் என்பதற்காக!
தடுத்துக் கொள்ள - அடிக்கடி ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரு முறை உடற்பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
"முதியோர்கள் - அல்லது 70, 80 வயது தாண்டிய முதுகுடி மக்கள்தான் இப்படிப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - நாங்கள் இளைஞர்கள், வாலி பர்கள் தானே! நாங்கள் எதைச் சாப்பிட்டாலும் செரிமானம் ஆகக் கூடிய வயதுதானே" என்ற அலட்சிய பதிலைக் கூறாதீர்கள், இளைஞர்களே!
இக்காலத்தில் உங்கள் வயதினரும் அதிகம் பாதிக்கப்பட்டு, சிறுநீரகம் பழுதடைந்து வாழ்நாளின் பல்வேறு வாய்ப்புகள், இன்பத் துய்ப்புகளைக்கூட இழந்திடும் பரிதாப நிலை ஏற்பட்டு விடும்.
மருத்துவச் செலவை பின்பு பல்லாயிரக்கணக்கில் செய்து, வேதனையை, வலியை, இழப்பை அனுப விப்பதற்குப் பதில் 'வருமுன்னர் காத்தல்' அறி வுடைமை அல்லவா?
இளைஞர்கள் பலரும் நம் வீடுகளில் கவலை யோடும், பொறுப்போடும் சமைக்கும் நம் அம்மாக் களின் உணவை அலட்சியப்படுத்தி விட்டு, வெளி நாட்டு உணவகங்களின் - வேக உணவுகளை (Fast Food) தின்பது, Coke - கொக்கோகோலா மற்றும் சுவையூட்டப்பட்ட போத்தல் குடிநீர்களை - அவை களின் தற்காலிக சுவைக்காக, நிரந்தர உடல் வலிமையை விலைபேசி வீணாவதைப்பற்றிக் கவலைப்பட மறுக்கின்றனரே!
எப்போதோ ஒரு முறை சாப்பிடுவதை நாம் தடுக்கவில்லை; அன்றாடம் - அனுதினமும் இந்த வெளிநாட்டு வேக உணவுகளைக் கொண்டு வயிற்றை நிரப்புவது - பரோட்டா, முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா என்று மைதா என்ற உடல் நலனைப் பாழ்படுத்தும் வகையறாக்களை உண்ணும் வாடிக்கை என்றால் அதன் விளைவு வருங்காலத்தில் 'தீராத நோயாக' நமக்குத் திரும்பி வந்தே தீரும்!
எனவே உணவால் எச்சரிக்கை, நாக்குக்கும், மூளைக்கும் (ஏன் பற்பல நேரங்களில் வயிற்றுக்கும் கூட) ஏற்படும் மனப் போராட்டத்தில் நாக்கு(ச்சுவை)தான் வெற்றி பெறும் தற்காலிகமாக!
'இறுதிச் சிரிப்பு' போல இறுதி வெற்றி மூளைக் குத்தான் நண்பர்களே, மறவாதீர்! காலந்தாழ்ந்து உணர்ந்து, வருந்தி என்ன பயன்?
எனவே உணவில் மிகுந்த கவனத்துடன். கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து, வளமை என்பது பணம் சம்பாதிப்பதில்லை; நோயற்ற வாழ்வில்தான் உள்ளது என்ற 'குறைவற்ற செல்வம்' அதுவே என்பதை உணருங்கள்!
இனிப்புச் சுவையை எப்போதும் தள்ளிட வேண்டாம் - அன்றாடப் பழக்கமாக்கிக் கொள்ளாமல் உடல் நலம் பேணுங்கள்!
-கி வீரமணி, வாழ்வியல் சிந்தனைகள்
-விடுதலை நாளேடு, 16.11.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக