பக்கங்கள்

திங்கள், 4 டிசம்பர், 2017

முதுமை எய்திய முதுகுடியினருக்குச் சில வேண்டுகோள்!



நம் பிள்ளைகளோ, உறவுகளோ, குடும்பத்தவரோ நம்மை மிகவும் மதிக்கவில்லையே, அலட்சியப்படுத் துகிறார்களோ  என்ற அவசரப்பட்ட முடிவிற்கு வந்து மனதை அலை பாய விட்டு, வருத்தம் - வேதனையை 'குதிரையாக்கி' அதன்மீது 'சவாரி' செய்யாதீர்கள்!

இன்றைய வாழ்க்கை முறையில், வீட்டில் மகன், மகள், மருமகள் இவரின் பேரப் பிள்ளைகள் உட்பட, பலரும் படிப்பு, பணிகள் என்பதில் சுறுசுறுப்பாக இருப்பதாலும், அவர்களது மனநிலை (Mindset) பழைய கூட்டுக் குடும்ப  நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டு, வேலையில்லாது எப்போதும் வீட்டுக்குள் இருந்த கார ணத்தால், அப்போது நெருக்கம் இருந்திருக்கலாம்; இப் போதுள்ள காலச் சூழ்நிலை, நேரம், கைத்தொலைபேசி யுகம் - இவைகளைக் கணக்கிட்டுக் கொண்டால் முதியவர்கள் சங்கடப்பட வேண்டியதில்லை.

ஆனால், அலட்சியத்தோடு செல்பவர்களாகும் இளைஞர்களை நாம்  ஏற்க முடியாது.

குறைந்த தேவைகளும், எவருடனும் இணைந்து சற்று விட்டுக் கொடுத்த - தன்முனைப்பில்லாத வாழ்க்கை முறை நாம் எந்த வயதிற்கு ஏறினாலும் நமக்கு ஒருபோதும் ஏமாற்றத்தைத் தராது. எதிர்பார்ப்பு எங்கே அதிகமோ ஏமாற்றமும் அங்கேதான் அதிகம், மறவாதீர்!

அண்மையில் முதுகுடி  மக்களுக்கான உலக நாள்.

இதையொட்டி நமது மூத்த மருத்துவ நண்பர் ஒருவர் அனுப்பிய முக்கிய எச்சரிக்கைத் தொகுப்புகள் சில.

அமெரிக்காவில் 51 விழுக்காடு முதுகுடிமக்கள் படிக்கட்டுகளில் ஏறும் போது விழுந்து விடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இப்படி விழுந்து மரணமடைவோர் எண்ணிக்கை கூடிய வண்ணமே உள்ளது.

60 ஆண்டுகளை கடந்த முதிய வர்கள் 10 செயற்பாடுகளில் மிக்க கவனம் தேவை.

இவைகளை அறவே தவிர்ப்பது நல்லது.

1.            படிக்கட்டு ஏறாதீர்கள்; அப்படி ஏறித்தான் தீர வேண்டுமெனில், பக்கத்தில் உள்ள சுவர் அல்லது பிடிப்புகளைப் பிடித்துக் கொண்டே ஏறுங்கள்.

2.            உடனடியாக உங்கள் தலையைச் சுற்றாதீர்கள் - திருப்பாதீர்கள்; முதலில் உங்கள் முழு உடலையும் நின்று நிதானித்து பிறகு திருப்புங்கள். (Warm up your whole body)

3.            கீழே உள்ள கட்டை விரலைத் தொடுவதற்காக உடலை வளைக்காதீர்கள். மேலே சொன்னபடி - அதற்கு முன் உங்கள் முழு உடலை நிதானித்துக் கொள்ளுங்கள்.

4.            உங்கள் கால்சட்டைகளை (Pants)  காலில் மாட்டிக் கொள்ள முயலும்போது,  நின்று கொண்டு போடா மல், பக்கத்தில் அமர்ந்த - உட்கார்ந்த நிலையில் போடுங்கள். அதுவே பாதுகாப்பானது. தடுக்கி கீழே விழுந்து விடாமல் அம்முறை நம்மை 'தடுத்தாட் கொள்ளும்.'

5.            மல்லாந்து படுத்துள்ள நிலையில், முகம் மேலே பார்க்கும் நிலையில் உடனே (திடீரென்று) எழுந் திருக்காதீர்கள். மெதுவாக ஒருபுறம் திரும்பி - இடதுபுறம் அல்லது வலதுபுறம் உடலைத் திருப்பி பிறகு எழுந்திருக்கப் பழகுங்கள்.

6.            உடற்பயிற்சிக்கு முன் உங்கள் உடலைத் திருப்பி வளைக்காதீர்கள் - உடலை நின்று நிதானித்து கொண்ட பின்பே திருப்பிட முயலுங்கள்.

7.            பின் பக்கமாக நடக்க முயலாதீர்கள். பின்பக்கம் விழுந்தால் அதனால் ஏற்படும் அடியும், காயமும் மிகப் பெரியவை ஆகலாம்; மறவாதீர்!

8.            மிகவும் கனமான பொருள்கள் - பெட்டி சாமான்களை தூக்கிட அப்படியே இடுப்பை வளைக்காதீர்கள். முதலில் உங்கள் முழங்கால்களை வளைத்து, பாதி அமர்ந்தது போன்ற நிலையில் அவைகளைத் தூக்கிடுங்கள்.

9.            படுக்கையிலிருந்து தடால் என்று வேகமாக எழுந்து விடாதீர்கள். சில நிமிடங்கள் அமர்ந்த பிறகு, மெது வாக எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

10.          மலங் கழிக்கும்போது அதிகமாக 'முக்கி' முயற்சி செய்யாதீர்கள்; அது இயல்பாக வருகிற போது வரட்டும். அதுவே உங்களை ஒரு நேரத்தில் கதவைத் தட்டி அழைக்கும்; கவலைப்படாதீர்கள்.

கவனிக்க: அருள்கூர்ந்து இந்த வாழ்வியல் கட்டுரையை உங்களின் மூத்தகுடி முதிய நண்பர் களுக்கும் அனுப்பிடுங்கள் அல்லது விவாதத்தில்  பேசு பொருளாக கவனஞ் செலுத்துங்கள்!

நாம் எவ்வளவு காலம் வாழுகிறோம் என்பதைவிட, பிறருக்குத் தொந்தரவு, தொல்லை தராத 'சுதந்திர வாழ்வு' வாழுவதே முக்கியம்! அப்போதுதான் நம்மீதும் எவருக்கும் சலிப்போ, வெறுப்போ, சங்கடமோ ஏற் படாது - இல்லையா?

- கி.வீரமணி
- விடுதலை நாளேடு,17.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக