பக்கங்கள்

வியாழன், 9 நவம்பர், 2017

அம்பேத்கர் - 'புத்தப் பிரியர்' மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (11)&(12)



டாக்டரின் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களைக் கவனித்து ஒழுங்குபடுத்தியும், அவரது மிகப் பெரிய வீட்டு நூலகத்தை -  டில்லியில் அவரது குடியிருப்பிலும் சரி, பம்பாயின் இராஜ கிருகம்' என்ற அவரது சொந்த வீட்டிலும் சரி, வீடு முழுவதும் புத்தகங்களே இருக்கும். தேவிதயாளுக்கு அதனை அடுக்குவது, அவர் விரும்பும் அதே இடத்தில் மாறாமல் வைப்பது, அவர் எழுதிக் கொண்டோ, சிந்தித்துக் கொண்டோ இருக்கும் போது திடீரென்று தேவைப்படும் புத்தகங்களையோ, பாதுகாக்கப்பட்ட பத்திரிக்கை துணுக்குகளையோ (Press Cuttings) 
உடனுக்குடன் எடுத்துத் தர வேண்டிய மிக கடினமானப் பொறுப்பு - இவைகள்தான் முக்கியப் பணியாக இருந்தது.

எனவே அவருடைய தேவையைக் குறிப்பறிந்து இவர் செய்வார்; அவர் அம்பேத்கரின் வீட்டு நூலகம் பற்றிக் குறிப்பிடுகையில்,

"நம் எல்லாருக்கும் வீடு - நம் வசதிக்காக; ஆனால்  டாக்டருக்கோ, புத்தகங்களுக்காகத்தான் வீடு; பிறகே இவரது வசதிக்காக என்று இறுதி வரை வாழ்ந்தவர்" என்று கூறிவிட்டு, தேவிதயாளிடம் பாபாசாகேப் ஒரு முறை தனியே இருக்கும்போது கூறினாராம் - ஓர் உரையாடலில்.

"நான் மிகவும் ஏழை. எனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு எனக்குத் தாராளமான வருவாய் இல்லை. எனது முதுமைக் காலத்தில் என் நிலை எப்படி இருக்கும் -எனக்கு ஆதரவு வசதிகளுக்குரிய வருவாய் இல்லை.

எனக்கு வரும் வருமானத்தில் பெரும் பகுதியை; நான் புத்தகங்களுக்கே செலவழித்து விடுகிறேன். என்னால் அதைத் தவிர்க்க முடியாது. மாற்றிக் கொள்ள முடியாது.

எனது  இந்த நூலகத்தை - கிடைத்தற்கரிய  நூல் களையெல்லாம் நான் சேகரித்து வைத்துள்ள இந்த நூலகத்தினை தனியார் யாருக்காவது கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் (அப்போது  அது பெரிய தொகை என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுவோம்) ஆனால் அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை; நான் இந்த நூலகத்தை சித்தார்த்தா கல்லூரிக்கு (டாக்டர் துவக்கிய கல்லூரி) அளித்துவிட முடிவு செய்து விட்டேன்" என்று உருக்கத்துடன் தனது நிலையைப் பகிர்ந்து கொண் டுள்ளார்! அவரது மிக நெருக்கமான பல நண்பர்கள் தேவிதயாளிடம்  கூறுவார்களாம்! "என்ன டாக்டர் தனக்கு 100 ரூபாய் கிடைத்தால் அதில் 50 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கிவிடுகிறார், 200 ரூபாய் என்றால் அதில் ரூ.100க்கு புத்தகம் வாங்கி விடுகிறாரே!" என்று கவலையுடனும், வியப்புடனும் கூறுவார்களாம்.

புத்தகங்களை - அவை விலை உயர்ந்தவைகளாக - அப்போது 150 ரூபாய் 200 ரூபாய் விலையுள்ளவை மிக அதிக விலையுள்ள நூல்கள்; அதுபற்றிக் கவலைப்படாமல் அவர் புத்தகங்களுக்கே 'துணிந்து' செலவழித்து விடுகிறார் என்பார்களாம்.

தேவிதயாள் மேலும் கூறுகிறார்: "எனது சக்திக்கு அப்பாற்பட்டதாகவும்கூட அந்த நூலகப் பராமரிப்பு பற்பல நேரங்களில் இருந்ததை நானே உணர்ந்துள்ளேன். மிகவும் கடினமான பணி. அந்தந்த நூல்களை டாக்டர் எந்த இடத்தில் வைத்தாரோ, அவை எடுக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்ட பிறகுகூட, குறிப்பிட்ட அதே இடத்தில் அதே வடிவத்தில் இருக்க வேண்டும் என்றுதான் டாக்டர் விரும்புவார்!

சுமார் 4 ஆண்டுகள் நான் டில்லி வீட்டில், புத்தகம் பராமரிப்பு, மேற்பார்வை என்ற பணிகளைச் செய்த போது பெற்ற அனுபவங்கள் சிற்சில நேரங்களில் கடுமையாக அமைந்ததும் கூட உண்டு.

அவர் கேட்டவுடனேயே சிறிது தாமதம்கூட இல்லாமல் உடனடியாக குறிப்பிட்ட அந்த புத்தகத்தை அவருக்கு எடுத்துத் தர வேண்டும். ஒரு நிமிடத்திற்கு மேல் தயக்கம் என்றால், எனக்கு ஏராளமான 'திட்டுகள்' டாக்டரிடமிருந்து சரசரவென்று வந்து வெடித்து விழும்!

ஒரு குறிப்பிட்ட கட்டுரையைக் கேட்கிறார்; தேடு கிறேன்; உடனே கிடைக்கவில்லை டாக்டர் என்னைப் பார்த்து, உன்னால் உடனே அதனை எடுக்க முடிய வில்லையா? "நீ இத்தனை ஆண்டுகள் இதனைப் பராமரித்து வைத்துள்ள லட்சணமா இது?" என்று கேட்டு அவரே குறிப்பிட்ட நூல் அல்லது கட்டுரை இருக்கும் இடத்தையும் குறித்து தனது குறையாத நினைவு  ஆற்றலைப் புரட்டி விட்டுச் சொல்வார் 'அங்கிருக்கும் எடுத்து வா' இந்த வண்ணத்தில் இந்த மூலையில் இருக்கும் என்று 'லொக்கேஷனோடு' (Location) கூறுவார்.

பிறகு அவரது வசைமொழிகள் மழைத் துளிகளைப் போல கொட்டும்.

"முட்டாள் கழுதை' நீ இருந்து என்ன பயன்?"

சில நேரங்களில் எல்லை தாண்டிய கோபத்தில் எனக்கு அறைகள் விழுந்ததும் உண்டு. காரணம் அவரது சிந்தனை ஓட்டத்தின் வேகம் குறையாமல் - பணிகளை நடத்திட்ட பாங்கு; அதற்கு நான் இப்படி பயன்பட்டதுண்டு!

அப்போதுள்ள அவருக்குரிய புத்தகக்காதல், புத்தக உலகத்திலேயே மூழ்கித் திளைத்தவர் அவர் என்பதை அறிந்ததால் நான் அதற்காக வருந்தியதில்லை.

தாங்க முடியாத கால் வலி - பல நேரங்களில் டாக்டருக்கு வந்தால், அவர் அதைப் போக்கிக் கொள்ள மருத்துவ டாக்டரிடம் செல்லுவதற்குப் பதிலாக, மருந் தினைத் தேடி எடுத்துக் கொள்ளுவதற்குப் பதிலாக, சில புத்தங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டு, பிறகு சொல்வர்; புத்தகப் படிப்பு எனக்கு வலி தெரியாமல் செய்து விட்டது என்று புத்தகம் அவருக்கு நன் மருந்தாம்! என்னே ஆர்வம் - அதிசயம்!

டாக்டர் அம்பேத்கரின் புத்தக உதவியாளர் தேவி தயாள் அவர்கள் டாக்டருக்கு உடல்வலியைக் கூட மறக்கச் செய்வது இந்த புத்தக வாசிப்புதான் என்று குறிப்பிட்டுள்ளார். அதை ஒரு உரையாடலில் டாக்டரே தன்னிடம் கூறியதைப் பதிவும் செய்துள்ளார்.

‘‘ஒரு நாள் காலை நான் அவர் அறைக்குச் சென்று நேற்றிரவு கால் வலி பற்றிக் கூறினீர்களே, அது இப்போது எப்படி இருக்கிறது’’ என்று விசாரித்தேன். அதற்கு டாக்டர், ‘‘நேற்றிரவு அவ்வலி 12.30 மணி யளவில் ஆரம்பித்தது; என்னால் தூங்கவே முடிய வில்லை. ஒரு புத்தகத்தை எடுத்தேன். அதை விடியற் காலை 5 மணிவரை தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தேன். வலியே தெரியவில்லை’’ என்றார்.

தேவிதயாள் அசந்து போய்விட்டார்!

என்னே விசித்திரமான மருத்துவம்!!

‘‘கவலையை மறப்பது நாட்டியக் கலையே!’ என்று ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் ‘சிவகவி’ என்ற ஒரு திரைப்படத்தில் பாடியதை எனது இளமைக் காலத்தில் கேட்டுள்ளேன். ஆனால், தேவி தயாளின் இந்த டாக்டர் கூறியது கேட்டு,

‘‘வலியை மறப்பது புத்தக வாசிப்பே’’ என்ற புதிய பாட்டு வரியை எழுதவேண்டும் போலும்! புத்தக வாசிப்பில் அவர் ஈடுபட்டால் வேறு எதுவும் அவ ரைப் பாதிக்காது என்பது இதிலிருந்து புரிகிறதல்லவா?

டாக்டர் அம்பேத்கரின் உதவியாளர் நானக்சந்த் ராட்டு (1922-2002) என்பவர் டாக்டருக்கு தனிச் செயலாளராகவும், டைப்பிஸ்ட்டாகவும், டாக்டர் எழுதிய பலவற்றை ஒழுங்குபடுத்தி, தொகுத்து, புத்தக வடிவத்திற்குரிய வகைப்படுத்துதல் போன்ற பல பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு இறுதிவரையில் டாக்டருக்கு நிழல்போல் இருந்தவர்.

‘புத்தமும் தம்மமும்‘, ‘இந்து மதத்தின் புதிர்களான இராமன் - கிருஷ்ணன்’ போன்ற டாக்டரின் அரிய கருத்துக் கருவூலங்களை ஒழுங்குபடுத்திய உதவி யாளர்.

‘அம்பேத்கரின் கடைசி சில ஆண்டுகள்’ (1995), ‘அம்பேத்கர்பற்றிய பலரும் அறியாத பல்வேறு வாழ்க்கை அம்சங்கள்’ (1996), ‘நினைவுகளும், நிகழ்வுகளும் அம்பேத்கர் பற்றியவை’ (1996) என்ற பல நூல்களை அவர் எழுதியுள்ளார்.

ராட்டு அவர்கள் எழுதுகிறார்:

‘‘பல நாட்கள் தொடர்ந்து தனது அறையை - புத்தக நூலக அறையை விட்டு டாக்டர் வெளியே வராமலேயே - வெளியுலகின் வெளிச்சமே படாம லேயே புத்தகப் படிப்பு - எழுதும் பணியில் அலுப்பு, சலிப்பின்றி ஈடுபடுவார்! நான் அப்போது அவருக்குக் காலை உணவு, பகல் உணவு, தேநீர், காஃபி, இரவு உணவு இவைகளை அங்கேயே கொண்டு போய்க் கொடுத்து வந்துள்ளேன்!

அவரது மெயின் வராண்டாவின் ஒரு பகுதியான நூலகம், அவரது வாசிப்பு அறை - படுக்கை அறை இதில்தான் அவர் தன்னை ‘சிறைப்படுத்திக் கொண்டு’ தொடர்ந்து படிப்பதோ, எழுதுவதோ ஆகியவற்றில் ஈடுபட்டார்’’ என்பது அதிசய மானதல்லவா?

முக்கிய பார்வையாளர்கள் வந்துள்ளார்கள் என்பதை நாங்கள் தெரிவித்த நிலையில், அவர் களைப் பார்த்து, ஓரிரு வார்த்தைகளே பேசி, உடனே வழியனுப்பி விட்டு, தன் பணியைத் தொடர்வார். பல பார்வையாளர்களுக்கு இது வருத்தத்தைத் தருவதானாலும்கூட, பிறகு அவர்களே, ‘டாக்டரை அவரது மும்முரமான எழுத்து அல்லது வாசிப்புப் பணியில் நாம் குறுக்கிட்டு இருக்கக் கூடாது’ என்று உணர்ந்தவர்களும் உண்டு!

அதில் பலர், ‘அம்பேத்கர் வாழ்க’ என்று முழக்க மிட்டு விடைபெற்றுக் கொள்வது வாடிக்கைதான்!

தனது புத்தக வாசிப்புக் காதல் - கடமைபோல, மக்களிடம் சென்றால்தான் - அனைவரும் நூல் களைப் பயன்படுத்தினால்தான் மனித குலம் முன்னேறும் என்ற அவரது கருத்து, அவரது இளமைக் காலத்தில் - மாணவப் பருவத்திலேயே அவரைப் பற்றிக்கொண்ட ஒன்று என்பதை டாக்டர் அம்பேத்கரின் அரிய தோழர், சீடர்களில் ஒருவரும், மகராஷ்டிரா அரசு வெளியிட்ட அம்பேத்கரின் எழுத்தும், பேச்சும் - பல தொகுதிகளின் மூல ஆசிரி யருமான வசந்த்மூன் அவர்கள் மராத்தி மொழியில் தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். அதனை திருமதி.கெயில் ஆம்வெட் அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, ‘Growing up untouchable in India A Dalit Autobiography’’ (2001) என்னும் நூல் வெளிவந்துள்ளது!

தனது 24 வயதில் டாக்டர் அம்பேத்கர் தனது எம்.ஏ., படிப்பை முடித்து, பிஎச்.டி. ஆய்வினை அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மேற்கொண்ட நிலையில், பாம்பே கிரானிக்கள் (‘Bombay Chronicle’)  என்ற பிரபல நாளேட்டிற்கு எழுதிய ஒரு கடிதம், அவர் எத்தகைய புத்தகப் பிரியர் என்பதற்குச் சான்று ஆவணமாகும்!

பிரபலமான பம்பாய் பிரமுகர் சர் பெரோஷ் மேத்தா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி வந்தது. அதையொட்டி பம்பாயில் அவருக்குச் சிலை ஒன்று நிறுவிட வேண்டுமென அவ்வேட்டில் பலர் எழுதி யிருந்தனர். அதனைப் படித்த டாக்டர், அவ் வேட்டிற்கு ஒரு கடி தம் எழுதினார்; அதில் அவருக்குச் சிலை எழுப்புவதைவிட, அவர் பெயரால் ஒரு தலைசிறந்த நூலகம் ஒன்றை பம்பாயில் ஏற்படுத் தினால், அது சமூக முன்னேற்றத் திற்குப் பெரிதும் துணை புரியக் கூடும்.

பம்பாயில் பெரிய ஆய்வுகளுக்கு உதவக்கூட பெரிய பொது - அரசு நூலகம் இல்லை. பல தனியார், சிறு நூலகங்கள்தான் உள்ளன. இப்படி ஒரு பொது நூலகம் அமைந்தால், அது பொதுமக்களுக்கும், கல்வியாளர்களுக்கும் பெரிதும் பயன்படும் என்று ஆசிரியருக்குக் கடிதத்தை  நியூயார்க்கிலிருந்தபடியே 1916 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டில் மாணவராக இருந்தபோதே எழுதினார்.

இது பாபா சாகேபின் புத்தகக் காதலும், புத்தகங்களால்தான் அறியாமை இருள் மறைந்து, அறிவொளி பரவிட முடியும் என்ற கருத்தும் எத்தகைய உறுதி வாய்ந்த ‘சீரிளமைத் திறன்’ கொண் டவை என்பது புரிகிறதல்லவா?

- விடுதலை நாளேடு,7,8.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக