பக்கங்கள்

வியாழன், 9 நவம்பர், 2017

அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (3)&(4)


புத்தகங்களை வாங்கிக் குவிக்கும் டாக்டர் அம்பேத்கருக்கு நண்பரான யு.ஆர்.ராவ் (தாக்கர் அன்ட் கோ பதிப்பாசிரியர்) டாக்டர் ஏராளமான புத்தகங்களை வாங்கி, அதற்கே தனது வருவாயில் பெரும் பகுதியைச் செலவழித்து  விடுவது மிகப்பெரிய வியப்பு என்றாலும், இவ்வளவு புத்தகங்களையும் எப்படி இவரால் படித்து முடிக்க முடியும்? புரிய வில்லையே! என்ற கேள்வி அவரது மனதை வெகுநாளாகக் குடைந்துகொண்டே இருந்தது!

ஒரு நாள் இதனைத் தெளிவுபடுத்திக் கொள்ள டாக்டரிடம், ‘‘டாக்டர் நீங்கள் இவ்வளவு புத்தகங்களை வாங்கிக் கொண்டு சென்று, சேர்த்து வைக்கிறீர்களே, இவைகளை  உங்களால் எப்படிப் படிக்க முடிகிறது?’’ என்று ஒரு கேள்வியைக் கேட்டார்!

தனது மூக்குக் கண்ணாடி வழியே என்னை (யு.ஆர்.ராவ்) உற்றுப் பார்த்தார்; பிறகு ஒரு கேள்வி கேட்டார், என்னிடம்,

‘‘படிப்பது  என்றால் என்ன?’’ என்று கேட்டார்.

அதிர்ச்சியடைந்த நான் (யு.ஆர்.ராவ்), கொஞ்சம் தடுமாறிக் கொண்டும், தயங்கிக்கொண்டும், ‘‘ஒரு புத்தகத்தைப் படிப்பது என்றால், பக்க வாரியாகப் படித்து, முதலிலிருந்து கடைசிவரை அதை முடித்த பிறகு, அதைப் புரிந்து, நன்கு செரிமானம் செய்துகொள்வது’’ என்று பதில் கூறினேன்.

உடனே டாக்டர் புன்னகைத்துக்கொண்டே சொன் னார். ‘‘எனது புத்தகப் படிப்பு முறை அதற்குச் சற்று மாறுபட்டது.

சில புத்தகங்களைத் தான் நாம் அப்படி ஆழமாகப் படித்து, உள்வாங்கி, செரிமானம் செய்யும் நிலை உள்ளது; அவை  மிகவும் சொற்பமே! மற்றவை நாம் அறிந்த பல செய்திகளின் தொகுப்புதான். அப்படிப் பட்ட புத்தகங்களில் முக்கிய பகுதிகளைப் படிப்பேன். மற்றவை நமக்கு அறிமுகமான பகுதிகள் - இப்படி செய்தாலே புத்தகத்தைப் படித்து முடித்ததாகப் பொருள்’’ என்றார்.

இதிலிருந்து புத்தக வாசிப்பு என்பது எப்படி சரியான முறையாக அமையவேண்டும் என்பதற்கு பாபா சாகேப் அம்பேத்கர் இலக்கணம் வகுத்து நமக்குப் பாடம் நடத்துகிறார் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

எப்போதும் புத்தகங்களில் எவை ஆழமாகப் படித்துப் பதிய வைக்கவேண்டியவை; எவை ஏதோ கதை வாசிப்பதுபோல வேகமாகப் படிக்கவேண்டி யவை என்று தரம் பிரித்துப் படிக்கும் பழக்கத்தை உடையவர்களாக நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.

ஒரு முக்கியப் பிரச்சினை  - அதன் தேவையும், முக்கியத்துவமும் பற்றிய அந்தப் புத்தகம் எதனை நமக்குப் புதிதாகக் கற்றுத் தருகிறது என்று புரிந்து படித்து நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

வள்ளுவரின்,

நவில்தொறும் நூல்நயம்போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு  (குறள் 783)

இதனை ஆழ்ந்து படித்துப் பொருளை அறிந்தால், திரும்பத் திரும்ப படித்துச் சுவைக்கும் தகுதியுள்ள புத்தகங்கள் போலும்தான்,  எத்தனை முறை பழகி னாலும் இன்னும் அவரிடம் பழகி, அவரது பண்பை நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா என்ற ஆசையினால், உந்தப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று நட்புக்கு இலக்கணம் நல்ல நூல் என்பது எது எப்படிப்பட்ட தன்மையது என்பதையும் விளக்குகிறது.

அதையே டாக்டர் அம்பேத்கர் - குறளைப் படிக்கா மலேயே, தனது பகுத்தறிவு, தனித்த சிந்தனை சமூகக் கவலை, பொதுநலம் - இவற்றில் புத்தகங்களையே சாதாரணமாக படிக்கவேண்டியவை - வாசிக்க வேண்டியவை. சிலவே சுவாசிக்கவேண்டியவை என்று நமக்கு இப்பதிலில் கற்றுத் தருகிறார்.

தந்தை பெரியார் அவர்கள் ஏராளமான புத்தகங்களைப் படிப்பார்.

ஏன் ‘தமிழ் அகராதி’, ‘அபிதான சிந்தாமணி’, ‘அபிதான கோசம்‘ போன்ற பழைய தமிழ்க் களஞ்சியங்களை - நூல்களைப் படித்து ஆய்வுக்குரியதாகவே சில பகுதிகளை மனதிற்கொண்டதோடு, எழுதுவதற்கோ, பேசுவதற்கோ அப்பகுதியை உடனடியாக - நேரத்தை வீணாக்காமல் - கண்டு ஆதாரமாகக் கூறிட - அப்புத்தகத்தின் இறுதியில் உள்ள வெள்ளைத் தாளில் உள்பகுதி - அட்டையிலும் தன் கைப்பட சிறு எழுத்துக்களில் எழுதி வைத்து - ‘‘இராமன் பிறப்பு -பக்கம் 29’’ இப்படி குறிப்பை அந்தந்த புத்தகங்களின் இறுதியில் எழுதி வைப்பார். டாக்டர் அம்பேத்கரின் நூல்களை அய்யா பெரியார் படித்து அப்படி பக்க குறிப்பு வைத்துள்ளார் என்பது மிகவும் வியக்கத்தக்க உண்மை அல்லவா?

புத்தகங்களை படிப்பதில்கூட பல முறைகள் உள்ளன என்பதை இவர்களது புத்தக வாசிப்பின்மூலம் எளிதில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்- இல்லையா?

உலகின் தலைசிறந்த புத்தகப் பிரியர்களில் குறிப் பிடத்தகுந்தவர் டாக்டர் அம்பேத்கர்.


இவரது புத்தக வாசிப்பு முறை, புத்தகங்களை அவர் வாங்கி சேகரிப்பது; தனது வருவாய் மிக அதிகமாக இல்லாதிருந்த நிலையிலும்கூட, ‘புத்தகப் பைத்தியமான’(!) இவர், தனக்கு வந்த வருவாயின் - உரிமத் தொகைமூலம் வந்தவைகளில் புத்தகங்களை வாங்கிக் குவித்து செலவழித்தார் என்பதை, தாக்கர் அன்ட் கோ பதிப்பாசிரியர் யு.ஆர்.ராவ் அவர்கள் கூற்றுகள்மூலம் சிலவற்றை முன்பு கண்டோம்.

மற்ற எஞ்சிய தகவல்கள் அவரிடம் பழகிய நெருக்கமான நண்பர்கள், அவரது அணுக்கத் தொண் டர்கள், அவரிடம் பணியாற்றியோரின் மூலமும் பல சுவையான தகவல்கள் கிடைத்துள்ளன!

டில்லியில் பெரிய அதிகாரியாகவும், இறுதிவரை அவருடன் அன்றாட சந்திப்புக்குரிய சீடர், தோழர் - எல்லாமுமானவர் சங்கரானந்த சாஸ்திரி  (‘சாஸ்திரி’ என்பது ‘லால்பகதூர் சாஸ்திரி’ என்ற பெயரில் உள்ளதுபோல படித்து வாங்கிய பட்டம் - ஜாதிப் பட்டம் அல்ல). இவர் பாபா சாகேப் மறைவுக்குப் பின்னரும், அவரது தொண்டினைத் தொடரும் சுடரை ஏற்றுப் பணிபுரிந்தவர். 1958-1959 இல் புதுடில்லி அம்பேத்கர் பவனத்தில், தந்தை பெரியாரின் வட நாட்டுச் சுற்றுப் பயணத்தின்போது (நானும் உடன் சென்றிருந்தேன்) பேச வைத்து, சிறப்பான வரவேற் பினை அய்யாவுக்குத் தந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி அவர்.

அவர் கூறுகிறார்:

‘‘உலக நாடுகள் - தலைவர்கள்பற்றி - பெரும் சுற்றுப்பயணம் செய்தும், சந்திப்புக்களை நிகழ்த்தி பிரபல நூல்கள் பலவற்றை எழுதியவரான ஜான்குந்தர் (John Gunther)  என்ற அமெரிக்க எழுத்தாளர். Inside Europe, Inside Asia போன்ற பல நூல்களை எழுதிய வர் இவர். (Inside Asia நூலில் உயர்திரு.

சி.ராஜகோபாலாச்சாரியாரைப் பற்றி ஜான்குந்தர், ‘‘He is an old - cunning Fox’’    - ‘‘ராஜாஜி வயது முதிர்ந்த கிழட்டுக் குள்ள நரி'' என்று எழுதியுள்ளார்).

அவர் டாக்டர் அம்பேத்கரை 1938 இல் பம்பாயில் ‘‘ராஜ்கிரகத்தில்’’ சந்தித்தார் (ராஜ்கிரகம் அவரது இல்லம்). அப்போது அவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு தனது இல்ல நூலகத்தில், 8000 நூல்கள் இருப்பதாகக் கூறினார். ஆனால், அது டாக்டர் மரணத்தின்போது, 35,000 நூல்களாகப் பெருகிவிட்டது’’ என்று கூறுகிறார். இந்த அரிய அறிவுக்கருவூலமான டாக்டர் அம்பேத் கரின் நூலகத்தை மாளவியா, மற்றும் ஜே.கே.பிர்லா போன்ற பலர் பெருந்தொகை கொடுத்து வாங்கிக் கொள்ள முயற்சித்தார்கள் - அவர் உயிருடன் இருக்கும்போதே!

காரணம், இவ்வளவு பெரிய பதவியிலிருந்த டாக்டர் வறுமையில்தான் உழன்றார். என்னே, தூய அவரது பொதுவாழ்வுத் தொண்டறம்!

தனது சிறப்பு நூலான  ‘Buddha & Dhamma’ - - ‘‘புத்தரும், தம்மமும்‘’ என்ற அரிய ஆய்வு நூலை பவுத்தத்தைத் தழுவிய பிறகு எழுதி, அச்சிடப் பணமின்றித் தவித்தார். அதற்கு மத்திய அரசின் நூல் வெளியீட்டு கல்வியக உதவி - கடனாக ரூ.50 ஆயிரம் கேட்டு பண்டித ஜவகர்லால் நேருவுக்குக் கடிதம் எழுதினார்.

அவர் அக்கடிதத்தை ‘தத்துவமேதை’ என்று வர்ணிக்கப்பட்ட துணைக் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் ஆய்வுக்கு அனுப்பி, அவர் அதற்கு அந்தப் பணம் 50 ஆயிரம் கிடைக்க உதவாமல் முட்டுக்கட்டை போட்டு முடித்து விட்டார்! பிறகு, தானே கஷ்டப்பட்டு வெளியிட்டார். அப்போது யாருக்கும் விற்காமல், பணத் தாசைக்கு முக்கியத்துவம் தராத தொண்டறச் செம்மல் என்பதால், தான் நிறுவிய கல்வி அமைப்பான People’s Educational Society- - க்கே - மாணவர்களுக்குப் பயன் படவேண்டும் என்பதற்காகவே அளித்து விட்டார்!

என்னே, அவரது பெருங்கொடை உள்ளம்! அதில் ஏராளமான Reference Books  
உண்டு. ஆய்வுக்குப் பயன்படக் கூடிய அறிவுப் பெட்டகங்கள் பலவும் உண்டு.

மேலும் தொடருவோம்!

- விடுதலை நாளேடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக