.28.10.2017 அன்று வெளிவந்த வாழ்வியல் சிந்தனையின் தொடர்ச்சி....
இவ்வளவு பணமுடையுடன் போராடிய நிலை யிலும், புத்தகங்களை வாங்கும் டாக்டர் அம்பேத் கரின் விழைவு - விருப்பம் - வேட்கை சற்றும் தணிந்தபாடில்லை!
அவரது அருமைச் சீடரும், நண்பருமான சங்க ரானந்த சாஸ்திரி அவர்கள் டாக்டரைச் சந்திக் கிறார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை (20 டிசம்பர், 1944) அவரே கூறும் ஒரு சுவையான தகவல்.
‘‘என்னுடன் வாருங்கள்’’ என்று டில்லி ஜூம்மா மசூதி பகுதிக்கு அழைத்துச் சென்றார். அது ஒரு பழைய புத்தகங்கள் விற்கும் பகுதி. அங்கே உள்ள மார்க்கெட் பகுதியில் பல பகுதிகளுக்கு டாக்டர் நடந்தே சென்று பழைய புத்தகங்களைத் தேடிப் பிடித்து, எந்தெந்த நூலை எப்படித் தேர்வு செய்யவேண்டும் என்ற முடிவுடன், வெகுநேரம் பழைய புத்தகங்களைத் தேர்வு செய்கிறார் - வாங்குவதற்கு. சங்கரானந்த சாஸ்திரி, ‘‘டாக்டர் மதிய உணவுக்கு நேரமாகிறது’’ என்று சொன்னதையும் அவர் பொருட்படுத்தவே இல்லை!
அப்புத்தகங்கள்மீது படிந்துள்ள தூசியைப் பொருட்படுத்தவே இல்லை - டாக்டர் அம்பேத்கர். இதற்கிடையில், ‘‘அம்பேத்கர் வந்து புத்தகங்களை வாங்குகிறார்’’ இந்த பழைய புத்தக மார்க்கெட்டில் என்ற செய்தி தீபோல மளமளவென்று அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் பரவுகிறது. மக்கள் ஏராளம் கூடிவிட்டனர்!
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற சில இராணுவ வீரர்கள், அதிகாரிகளும் சில புத்தகக் கடையில் பழைய புத்தகங்களை விற்கிறார்கள். அங்கு சென்று சில பழைய புத்தகங்களை அவர்களது கடையில், படித்து ஆராய்ந்து தேர்வு செய்கிறார்! இரண்டு டஜன் பழைய புத்தகங்களை வாங்குகிறார். அந்தப் புத்தகக் குவியலில் வரலாற்று நூல்களும், பூகோள நூல்களும் அடக்கம். அதில் அவர் கண்டுபிடித்து வாங்கிய ஒரு முக்கியப் புத்தகம் பேராசிரியர் பி.லட் சுமி நரசு அவர்கள் புத்த மார்க்கம்பற்றி எழுதி வெளி யிட்ட ஒரு அற்புதமான அறிவுக்கருவூலம் ஆகும்.
பேராசிரியர் லட்சுமி நரசு அவர்கள் சென்னை யில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவரது ‘‘ஷிtuபீஹ் ஷீயீ சிணீstமீ’’ - ஜாதிகள்பற்றிய ஆய்வு என்ற நூலும், புத்த மார்க்கம்பற்றி அவர் எழுதிய இந் நூலும் மிகவும் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்!
புத்த நெறி பற்றிய இந்த சிறந்த ஆங்கில நூல் மறுபதிப்பு இல்லை என்பதை அறிந்து, அதன் புதிய பதிப்பிற்கு டாக்டர் அம்பேத்கர் முன்னுரை எழுதி இணைத்து, பம்பாயில் இவரது புத்தகங்களை வெளியிடும் பதிப்பகத்தாருக்கு - தாக்கர் அன்ட் கோவிடம் தந்து, புதிய பதிப்பினை வெளியிடுகிறார்!
டாக்டர் அம்பேத்கரின் ‘‘புத்தமும் தம்மமும்‘’ வெளிவரும் முன்பே, 1911 ஆம் ஆண்டிலேயே அந்தப் புத்தகம் வெளிவந்தது. 1945 இல் மீண்டும் அதன் மீள் பதிப்பை வெளியிட்டு ஒரு முன் னோட்டமாக அவர் செய்தது, புத்தப் பிரியரான இவர் எப்போதோ மாறிவிட்டார் என்பதை நிரூபிப் பதாக உள்ளது!
அது ஒரு முன்னோட்டம் - இந்த புத்தப் பிரியர் - தான் புத்தகப் பிரியராகவே மாறிய நிலையில், பேராசிரியர் லட்சுமி நரசுவின் புத்தகம் ஒரு ஒளி வீச்சாகவே திகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ்நாட்டிற்கும், பாபா சாகேப்பிற்கும் உள்ள - பவுத்தப் பிரிய தொடர்பு எப்படிப்பட்டது பார்த்தீர்களா?
நண்பர் சங்கரானந்த சாஸ்திரி அவர்கள் கூறும் மற்றொரு சுவையான தகவல்,
1945 இல் டாக்டர், ‘‘காந்தியும், காங்கிரசும் தீண்டாதார்களுக்குச் செய்ததென்ன?’’ என்ற புத்தகத்தை எழுதிக் கொண்டுள்ளார்.
அவரது அந்த புத்தகத்தில் ஒரு மேற்கோளை இணைக்க விரும்புகிறார் டாக்டர் அவர்கள்; அவர் சங்கரானந்தை, அவருக்குத் தேவைப்படும் குறிப் பிட்ட புத்தகத்தை எடுக்கச் சொல்லிவிட்டு எழுதிக் கொண்டுள்ளார்.
இவர் அந்த நூலைத் தேடுகிறார், அவரது நூலக அலமாரியில்; சற்று காலதாமதம் ஆனது. டாக்டர் எழுந்து வந்து, இவர் தலையில் ஒரு தட்டு தட்டிவிட்டு, (குட்டு என்று வைத்துக் கொள்ளலாம்) அவரே, இவர் தேடும் புத்தகத்தை உடனே எடுத்து விட்டுச் சொன்னார், ‘‘என்னிடம் நீங்கள் வரும்போது ஏராளம் புத்தகங்களைப் படிக்கிறீர்கள். என்ன பயன் - இதைப் புரிந்துகொள்ள முடியவில்லையே? என் முன்னே நின்று உங்கள் நேரத்தை ஏன் வீணாக் குகிறீர்கள்?’’ என்று ‘செல்லமாகக்‘ கடிந்துகொள்ளு கிறார்!
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் டாக்டர் அவர்களே அலமாரியில் உள்ள புத்தகங்கள் ஒவ் வொன்றையும் தூசி தட்டி துடைத்து வைப்பதை தனது முக்கிய வேலைகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டார்!
புத்தகங்களை வாங்குவதோ, படிப்பதோ, அடிக் கோடிட்டு விட்டு படித்து முடிப்பதோ, முக்கியம் என்றாலும், அதைவிட முக்கியம் அப்புத்தகங்களைத் தூசி அடையாமல் பாதுகாப்பதும், பராமரிப்பதும்கூட!
இதை அவரிடம் அனைத்துப் புத்தகப் படிப் பாளர்களும், புத்தக சேகரிப்பாளர்களும் கற்றுத் தெரிந்துகொள்ளவேண்டும்!
காரணம், பற்பல நேரங்களில் புத்தகங்கள்மீது, எழுதுகிறவர்களைவிட, வாங்கிப் படிப்பவர்கள் மிகுந்த ‘காதல்’ - பேராசை கொண்டு புத்தகங்களை அப்படியே விழுங்குபவர்களாக இருப்பவர்கள் கரையான்களிடமிருந்து அவைகளைப் பாதுகாக்க வேண்டாமா?
(நதி ஓடும்)
டாக்டர் அம்பேத்கருடன் பல கட்டங்களில் நெருங்கிப் பழகி, உரையாடி பல்வேறு அரிய செய்திகளை அறியும் வாய்ப்புப் பெற்ற நண்பர்கள் வட்டத்தில் இருந்தவர்களில் ஒருவர் நாம்தேவ் நிம்காடே. இவர் டாக்டர் அம்பேத்கருக்கு அடுத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பூத்த ஒரு குறிஞ்சி மலர் - ஆம்! வேளாண் விஞ்ஞானியான இவர் அமெரிக்காவில் பிஎச்.டி., பட்டம் அத்துறையில் எடுத்தவர்.
மாணவப் பருவம் தொட்டு, வெளிநாட்டுப் பட்ட தாரியாகி - ஆய்வாளராகி உயர்நிலைக்குச் சென்ற நிலையிலும், டாக்டருடன் பழகிய அக்கால இளை ஞர்களில் ஒருவர். (இவர் 1920 இல் பிறந்து 2011 இல் மறைந்தவர்).
இவர் ‘ஒரு அம்பேத்கரிஸ்டின் சுயசரிதை ’(The Autobiography of An Ambedkarite) என்று அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுவைபட எழுதியுள்ளார்.
அதில் புத்தகங்களை எப்படிப் படித்தார்; பாதுகாப்பதில் எவ்வளவு கவலையாக டாக்டர் அவர்கள் இருந்தார் என்பதை பற்பல இடங்களில் விரிவாக விளக்கியிருக்கிறார்.
அம்பேத்கர் புதுடில்லியில் அரசியல் சட்ட வரை வுக் குழுத் தலைவர், பிறகு சட்ட அமைச்சர் நிலை களில் வாழ்ந்த பங்களாவில்கூட, மற்ற அமைச்சர் களின் பங்களாக்களில், அழகுப் பொருள்கள் வர வேற்புக் கூடங்களை அல்லது அலுவலக அறை களை அலங்கரிக்கும்.
ஆனால், டாக்டருடைய அந்தக் கூடங்கள் - அவரது வளமனையில் - புத்தக அலமாரிகள் வரிசைப்படுத்தப்பட்டு, அது கண்ணாடி போடப் பட்டு பல இடங்களில் இருக்கும். திடீரென்று, பேருரையாடல்கள் நண்பர்களிடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் கட்டமாகவோ அல்லது எழுதிக் கொண்டிருக்கையில் தேவைப்படும் நூல்களாகப் பல இருப்பதால், எந்த சூழலிலும் உடனே எடுத்துப் படித்துக் காட்டவோ, குறிப்பெடுக்கவோ அல்லது விவாதத்தில் எழுந்த அய்யப்பாடுகளைக் களை யவோ அது பயன்படும் வண்ணம் ஆங்காங்கே கண்ணாடிக் கதவுகளைக் கொண்ட புத்தக அலமாரிகள் இருக்கும்!
பம்பாயில் (அப்போது மும்பை பெயர் மாற்றம் கிடையாது என்பதால் இச்சொல் இங்கே பயன் படுத்தப்படுகிறது) உள்ள அவரது ‘ராஜ்கிரகா’ இல்லம்தான் மிகப்பெரிய, அரிய நூல்களைக் கொண்ட மிகப்பெரிய தனியார் இல்ல நூலகம் ஆகும்.
நண்பர் நாம்தேவ் நிம்காடவே, ஒருமுறை கேட்டார்; ‘‘உங்கள் நூலகம்தான் பெரிய தனியார் இல்ல நூலகம் என்று கூறப்படுகிறதே’’ என்று.
அதற்கு அம்பேத்கர், ‘‘அப்படி நான் உங்களிடம் பெருமையாக, இதுதான் உலகின் மிகச் சிறந்த தனியார் நூலகம் என்று கூறிக்கொள்ள மாட்டேன். சிறந்த தொகுப்புகள்தான் என்பது உண்மை. பனா ரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்திற்கு இதனை அளித்து விடுங்கள் - விலைக்குத்தான் என்னிடம் கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன்’’ என்று கூறினார்.
நாம்தேவ் நிம்காடே கூறுகிறார்:
டாக்டரின் நூலகத்தில் பற்பல தலைப்புள்ள நூல் வகையறாக்களும் இருக்கும். எல்லா விஷயங்கள் பற்றியதாக, தெரிந்துகொள்ளும் வகையில்,
Theory of Relational முதல் புத்த மார்க்கம் - அரசியலில் இருந்து கோழி வளர்ப்புவரை எல்லா விதமான புத்தகங்களும் இருக்கும். அவரிடம் எந்த விஷயம்பற்றியும் உரையாடி விவாதிக்கலாம். நீர்ப்பாசனம் தொடங்கி, அணுமின் சக்தி, நிலக்கரி சுரங்கம்வரை பலதரப்பட்ட தலைப்புகளிலும் ‘பளிச்' சென்று அவர் படித்த செய்திகளையும் இணைத்துக் கூறத் தயங்கவே மாட்டார் டாக்டர்!
அவரிடம் ஒருமுறை நாம்தேவ் கேட்கிறார்:
‘‘அய்யா, நீங்கள் இவ்வளவு சலிப்பின்றி, களைப்பின்றி அதிக நேரம் புத்தகங்களை எப்படி வாசிக்க உங்களால் முடிகிறது? அதன் ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். இடையில் சற்று இளைப்பாறிட (Relax)
மாட்டீர்களா?’’
அதற்குப் புன்னகைத்துக் கொண்டே பதில் சொல்கிறார் டாக்டர்.
‘‘எனக்கு இளைப்பாறுதல் என்பது ஒரு தலைப்பிலிருந்து வேறு ஒருவகையான முற்றிலும் மாறான ஒரு புத்தகத்திற்கு மாறுவதுதான்’’ என்றார்.
அதாவது ஒரு குறிப்பிட்ட தலைப்பு புத்த மார்க்கம்பற்றி ‘சீரியசான’ ஆய்வு நூலைப் படித்து - சற்று நிறுத்திவிட்டு - உடனே நிகழ்கால நட வடிக்கைபற்றிய புது வெளியீடு ஒன்றை மாற்றிப் படிப்பது என்றார்.
இந்தப் பதில் எனக்கு மிகவும் தெம்பூட்டும் பதில்; ஏனெனில், மிக நீண்ட காலம் அம்பேத்கர் முறைபற்றி அறியாமலேயே அதைப் பின்பற்றும் புத்தக வாசிப்பாளன் நான் என்பது, எனது முறை - இளைப்பாறுதல்தான் ‘மாறிடும் தலைப்பு’ - வழிமுறை மிகவும் பயன்தரக் கூடியதே!
எனவேதான், எனது புத்தகக் கூடத்தில் பலதரப்பட்ட தலைப்பு நூல்கள் - படிக்கவேண்டிய புதிய நூல்களை வைத்துக் கொண்டிருப்பேன் - சிலவற்றை பயணங்களிலும் எடுத்துச் சென்று படிப்பேன். அந்த இளைப்பாறுதல் மிகவும் பயனுறு காலச் செலவீடு அல்லவா?
(நதி மேலும் ஓடும்)
- விடுதலை நாளேடு,30,31.10.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக