பக்கங்கள்

வெள்ளி, 13 நவம்பர், 2015

இளைஞர்களே, இணையதளம் முகநூல் பிரியர்களே! கவனிக்க


13 வயது முதல் 19 வயது வரை  உள்ள இளையர்களுக்குக் கூட இப்போது ரத்தக் கொதிப்பு (B.P) வருகிற கொடுமை நிகழ்கிறது!
இளையர்களுக்கும் மிகக் குறை வான வயதுடைய இளைஞர்களுக்கும் கூட மாரடைப்பு - இருதய நோய் ஏற்படுவது இப்போது அன்றாடச் செய்தியாகி வருகிறது, இதைவிட வேதனையும் கவலையும் அடையத் தக்கச் செய்தி வேறு உண்டா?
அது போலவே அதே வயதுள்ள இளைஞர்களுக்கு சர்க்கரை நோயும் கூட இருப்பதை மருத்துவர்கள் கண் டறிந்து, எச்சரிக்கும் நிலையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பெருகி வருகிற அவலமும் கண்கூடு!
இவை ஏற்பட, இத்தனை இள வயதில் ஏற்படக் காரணம்  என்ன?
மற்ற வயதானவர்கள், பெரும் நிர்வாகச் சுமையாளர்கள் போன்று அடிக்கொரு முறை ஏற்படுவதற்கு மன அழுத்தம் - மன உளைச்சல் ஒரு போதும் காரணமாக இருக்க முடியாது. பின் என்ன?
நாமறிந்தவரையில் இளைஞர் களின் உணவுப் பழக்கம்தான் வீட்டில் சமைப் பது  ஆரோக்கியமான உணவு; ஆனால் அதை உண்ணாமல் Fast Foods என்ற துரித உணவை நுகர்வோர் கலாச் சார நோயால் பாதிக்கப் பட்டவர்கள் கால நேரம் கருதாமல்  சாப்பிடுவதேயாகும்!
பர்கர், பிட்சா, கெண்ட்டக்கி, மெக் டானல்டுஸ், பிட்சா ஹட், டொமெனி யாஸ் - இவைகளில் மொய்க்கின்றனர். இவைகளின் சேவை!? 24 மணி நேரம் பல ஊர்களில்!
என்னதான் கண்காணிப்பு - கலப்படம் தடுத்தல் இருந்தாலும், சுவை அதிகமாக இருந்து இளைஞர்களைக் கவர எத்தனை சேர்ப்புக்கள்! கொழுப்பு! கொழுப்பு! கொழுப்பு! இதோடு சேருகிறது பணக் கொழுப்பும்! பிறகு கேட்கவா வேண்டும்?
கூடுதல் எடை, ஊதிய பலூன், உப்பிய மகோதரம் போன்ற உடல்வாகு, இத்தியாதி! இத்தியாதி!!
கொழுப்பு  இதயக் குழாய்களில் அடைப்பு - ரத்த ஓட்டம் தடைபடுத்தப் படல், மாவுச் சத்து அதிகமாகி இன்சுலின் சுரப்பிகள் செயலிழந்து, ரத்தச் சர்க்கரை கிரியாட்டின் என்று சிறுநீரில் இருக்க வேண்டிய உப்பின் அளவு எல்லை தாண்டிய நிலை!
இதில் மேலும் கொடுமை, பெப்சி கோலா, கொக்கொகோலா என்ன வென்னமோ - குடிக்க!
(டாஸ்மாக்கிலும் இளைஞர் பட்டாளம் படையெடுப்பு   மிக மிக வேதனை தரும் வெட்கப்பட வேண்டிய யதார்த்தம்!)
இதோடு சதா சர்வ காலமும் மனித உறவைப் புறக்கணிக்க  கணினிக் காதல், கணினியோடே இணைந்த செயல்பாடு மிக்க தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை!
கழிப்பறையில் தான் முன்பு தனிமை கிடைக்கும்; இப்போது கைத் தொலை பேசி வந்த பிறகு அதுவும் போச்சு!
8.10.2015 அன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டில் ஒரு முக்கிய தகவல்: அதிகமாக இணையத் தினைப் பயன்படுத்திடும் இளைஞர் களுக்கு - அதாவது 14 மணி நேரம் (ஒரு வாரத்தில்) என்ற அளவில் கணினி இணையதளத்தோடு இழைந்தால் அவர் களுக்கு அதிகமான ரத்தக் கொதிப்பு Hypertension ஏற்படுகிறது என்று வாஷிங்டன் ஆய்வாளர்கள் கண்டறிந் துள்ளனர். 148 இளையர்கள் - இணை யத்தை அதிகம் பயன்படுத்தியோரில் 26 பேருக்கு இந்த Hypertension இரத்தக் கொதிப்பு நோய்  மிக அதிகமாக  ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர்.
இதன் விளைவு...? மாரடைப்பு, சிறுநீரகப் பாதிப்பு முடக்குவாதம், மூளை நோய் Heamoscope  போன் றவை ஏற்பட வாய்ப்பு மிக அதிகம்.
ஹென்றி போர்டு நிறுவனம் ஒரு தனி ஆய்வுத் துறையை அமைத்தது! Health Sciences Department  அதன் முக்கிய அதிகாரி ஆண்ட்ரிகேசடி பர்ரோ - இப்படி ஆய்வில் கண் டறிந்து எச்சரித்துள்ளார்!
இணையத்தின் பயன் மேலானது தான், இணையம் அவசியம்தான்!
எதையும் அளவறிந்து வாழ வேண்டும் என்பதால் கட்டுப்படுத்தி - தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உதவிக்கு வந்தது உயிர்க் கொல்லி யாக மாறலாமா?
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
-விடுதலை,16.10.15

ஞாயிறு, 8 நவம்பர், 2015

எளிமை + பண்பு + பல்திறன் = அறிஞர் அண்ணா


அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களை தமது வாழ்நாள் தலைவராகக் கொண்டு இறுதிவரை வாழ்ந்து காட்டியவர்.
அய்யா பெரியார் அவர்களிடத்தில் இருந்த - தொண்டு புரிந்த காலத் தையே தமது வாழ்வின் வசந்தம் என்று முதல் அமைச்சர் ஆன பிறகும் நிலை நாட்டி உறுதிபடக் கூறியவர் அறிஞர் அண்ணா.
தந்தை பெரியார் அவர்களுடன் இருந்து ஈரோட்டுக் குருகுல வாச முன்னோடியான அவர், எப்போதும் எளிமையான பழக்க வழக்கங்களைக் கொண்ட மாமேதை.
பதவி அவரை அதிகார போதை யில் தள்ளாடச் செய்யவில்லை; மாறாக; இவ்வளவு பெரிய பொறுப்பை மக்கள் நம்மீது - இத்தேர்தல் முடிவு மூலம், சுமத்தி விட்டார்களே என்ற கவலை அவரை ஆட் கொண்டது. மேலும் தன்னடக்கத்தின் தாயகமாகத் தன்னை ஆக்கிக் கொண்டார்!
அருமை நண்பர் கவிவேந்தர் கா. வேழவேந்தன் அவர்களின் தித்திக்கும் தீந்தமிழ் என்ற தலைப்பில் பல கட்டுரைத் தொகுப்பாக ஒரு நூலைத் தொகுத்து, மணிவாசகர் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள்.
அந்நூலை எனக்கு அனுப்பி அதுபற்றி கருத்து எழுதும்படிக் கேட் டுக் கொண்டார்.
மகிழ்ச்சியோடும், மனநிறை வோடும் எழுதுகிறேன்.
நூலைப் படித்தேன் - நவில் தோறும் நயம் அதில் மலரின் தேன் போல் இருந்தது! படித்தேன் - சுவைத்தேன்.
அறிஞர் அண்ணாவின் சிந்தனைச் செழுமை என்ற தலைப்பில், ஒரு அரிய கட்டுரை. (பக்கம் 112 - 118 வரை) பல்வேறு செய்திகளை மருந்துக் குப்பி (சிணீஜீறீமீ) போன்று அடக்கி எழுதப் பட்டுள்ளது.
இன்றைய தலைமுறையும் தலை வர்களும் தங்களுக்கு அதனை வழி காட்டியாக, கலங்கரை வெளிச்சமாக கொண்டால் அவர்களுக்கு நல்லது.
அந்த பக்கங்களில் உள்ள செய்திகள்:
அண்ணா தம் வாழ்க்கையின் தொடக்க முதலே, பொது வாழ்க்கைக்கு இலக்கணம் வகுப்பவராக எளிமை யோடும், பொருளாசை இன்றியும் வாழ்ந்து காட்டினார்.
நீதிக்கட்சியும் அவர் ஆற்றலுடன் இயங்கியதைக் கண்ட முத்தையா செட்டியார் அவர்கள், அண்ணாவை அணுகி, உங்களுக்குக் கை நிறைய ஊதியமும், தனி வீடும், தனிக் கார் வசதியும் தருகிறேன்; என்னிடம் பணிக்கு வந்து விடுங்கள் என்று கூறியபோதும், பெரியாரின் குருகுல வாழ்க்கையை விட்டு வர மாட்டேன் என்று, சொற்பச் சம்பளத்தில் தந்தை பெரியாரின் விடுதலை இதழில் தொண்டாற்றினார் அண்ணா. தாம் எம்.ஏ. படித்திருந்தாலும், அய்யாவின் அறிவியக்கத்தின் தன்மானக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அண்ணா இறுதிவரை, நான் கண்டதும், கொண் டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் தாம் என்றார்.
1949இல் இராபின்சன் பூங்காவில் பெரியாரிடமிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தனி இயக்கம் கண்ட போதும், மேடையின் மத்தியில் ஒரு காலி நாற்காலியிட்டு, இது தந்தை பெரியாருக்கே உரிய தலைவர் நாற்காலி; தி.மு.கழகத்திற்குத் தனித் தலைவர் கிடையாது. என்றைக்கு இருந்தாலும்  தந்தை பெரியார்தாம் தலைவர் என்று, தந்தைபெரியாரிடம் பக்தியும் பாசமும் காட்டியவர் அண்ணா.
1967இல் மக்கள் அண்ணாவை முதல் அமைச்சர் ஆக்கியவுடன், முதல் வேலையாகத் திருச்சிக்கே சென்று, அங்கே தங்கியிருந்த தந்தை பெரியா ருக்கு மாலை அணிவித்து, அமைந்தி ருக்கும் மந்திரி சபையே தந்தை பெரியா ருக்குக் காணிக்கை என்று கூறி, அய் யாவை நெகிழ வைத்தார். தாம் கடுமை யாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தாலும், தனயன் அண்ணா காட்டிய உயரிய பண் புணர்வு, தந்தை பெரியாரைச் சிலிர்க்க வைத்தது.
தமிழக மக்கள் படிப்பாற்றல் பெற்றவர் களாகவும், நூலறிவு மிக்கவர்களாகவும் திகழ வேண்டுமென்று, அண்ணா கனவு கண்டார். ஏனெனில், அவரே எளிய ஓட்டு வீட்டில் பிறந்தாலும் ஏராளமான நூல்களை இராப் பகலாகப் படித்து, மாமேதையாக விளங்கியதால், புத்த கங்களே மக்களுக்குப் புத்தறிவு ஊட்டக் கூடியவை என்று, திடமாக நம்பினார்.
ஓர் எழுத்தாளர் சங்க மாநாட்டில் அறிஞர் அண்ணா, இப்படி முழங்கினார்: பாருங்கள்! நம் நண்பர் ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்குச் சென்றால், அவர் பெருமிதத்துடன் தாம் புதிதாகக் கட்டிய வீட்டின் திண்ணைகளைக் காட்டுவார்; கூடத்தைக் காட்டுவார்; வர வேற்பு அறையைக் காட்டுவார்; சமையல் அறையைக் காட்டுவார்; சாப்பிடும் அறையைக் காட்டுவார்; படுக்கை அறை யைக் காட்டுவார்; கடவுள் அறையை காட்டுவார். ஆனால் இதுதான் நான் படிக்கும் படிப்பறை என்று, ஒன்றைக் காட்டுகிறாரா? அப்படி வீட்டுக்கு வீடு நூலக அறை திகழும் நாள்தான், அறிவுப் புரட்சிக்கு வழிவகுக்கும் திருநாள்!
எத்தனை சிந்தனை ஆழத்துடன் அண்ணா அவர்கள் உதிர்த்த சொற்கள் இவை!
அதேபோல் தமிழ் மாந்தர், அறி யாமைச் சேற்றிலிருந்தும் வைதிகச் சகதியிலிருந்தும் வெளியே வந்தால் தான் அறிவார்ந்த விஞ்ஞான முன் னேற்றம் காண முடியும் என்று, திட்ட வட்டமாக எண்ணினார் அண்ணா.
அவர் ஒருமுறை அழுத்தத்து டனும், சிந்தனைச் செழுமையுடனும் கூறினார்; கடிகாரத்தின் நொடி முள்ளும், மணிமுள்ளும் நகர்வதைக் கவனித்து, வாழ்க்கையை வேகமாக நகர்த்திக் கொண்டிருக்கும் மேனாட் டார், எங்கோ உயரத்திற்கு முன் னேறிப் போய்க் கொண்டிருக்கி றார்கள். ஆனால் இன்னமும் பஞ்சாங் கத்தைப் பார்த்து, நவக்கிரகங்கள் நகர்வதைப் மட்டுமே சார்ந்து செயல் படும் நாம், பின்னேறிக் கொண்டே இருக்கிறோம்
அறிவுப் பாதைக்கு நம்மை ஆற்றுப் படுத்திட அண்ணாவின் சிந்தனையோட்டம் எப்படியெல்லாம் செயல்பட்டது.
அறிஞர் அண்ணா முதல் அமைச் சரான பிறகுகூட ஒரு விருந்து ஏற்பாடு நாகரசம்பட்டியில் திரு என்.எஸ். சம்பந்தம் வீட்டில். அப்போது முதல் வரை தனக்கு அருகில் அமர்த்திட வேண்டுமென அய்யா  - விரும்பி ஜாடை காட்டினார் எங்களிடம்.
அண்ணாவோ மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர். அவர் தயங்கி சில இலைகள் தள்ளி என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். இதற் கிடையில் அய்யாவுக்குப் பக்கத்தில் ஒரு அதிகம் பேசும் தொணதொணா ஒருவர் அந்த இலையை ஆக்கிர மித்துக் கொண்டார்! அய்யாவுக்கு வந்த கோபத்தை எங்கள்மீது பார் வையில் காட்டி பிறகே உணவு உண்டார்!
ஈரோட்டில் விடுதலை ஆசிரிய ராக இருந்தபோது எப்படி அய்யா விடம் இருந்தாரோ - நடந்தாரோ - அதே பயபக்தி யுடன் முதல் அமைச் சரான அண்ணாவும் இருந்தார்.
அத்தகையவர்களை இனி எளி தில் எங்கே சந்திக்கப் போகிறோம்?
கவவேந்தர் கா. வேழவேந்தனின் மற்ற கட்டுரைகளும் நல்ல தகவல் களஞ்சியங்கள் ஆகும்.

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்
-விடுதலை,27.6.15

வளர்த்த கிளியும், பெற்ற கிளியும்!


மனிதர்களின் ஆறாம் அறிவு காரணமாக பாசமும், பகுத்தறிவும் அவர்களுக்கு இயல்பானது!
அய்ந்தறிவுள்ள மிருகங்களுக்கோ, அதைவிடக் குறைந்த அறிவுள்ள பட்சி பறவைகளுக்கோ பாசம் இல்லையா? அதன் குஞ்சுகளை வளர்க்கவில்லையா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழாமல் இல்லை.
அவை தம் குஞ்சுக்கு மட்டுமே கூடு கட்டும், இறக்கை முளைத்ததும் தானே பறந்து விடும் பிறகு நீயாரோ நான் யாரோ தான் (பெரியார் படப் பாட்டு மாதிரி).
ஆனால், மனிதர்களின் உறவு பாசம் - அப்படிப்பட்டதல்ல! பகை வந்த போதிலும் மனதுக்குள் புகையாய் இருக்கவே செய்யும். எளிதில் மறந்து போகாது.
பாசத்தைச் செலுத்த தங்களுக்குப் பிள்ளைகள் பிறக்கவில்லையே என்று கவலைப்படுகிறார்கள் மனிதர்கள்! வைதிக மனப்பான்மையும், மன இறுக்கமும் கொண்ட குடும்பத்தவர்கள் பலர் குழந்தைபெற்றுக் கொள்ளாத பெண்களைக் கரித்துக் கொட்டி வறுத்து எடுக்கும் வன்கொடுமையையும் வாழ்த்து மடலாக வாசிக்கத் தவறுவதே இல்லை பல குடும்பங்களில்.
இதற்காகவே இப்போது மழை காலத்துக் காளான்களைப் போல ஆங்காங்கு குழந்தைப் பண்ணை விளைநிலத்தைப் பக்குவப்படுத்தும் மருத்துவ வியாபாரங்கள் ஓங்கி வளர்ந்து வருகின்றன!
தந்தை பெரியார் அவர்கள் ஒரு முறை அழகாகக் கூறினார். மனிதன் தனக்கே குழந்தை பிறக்கு வேண்டு மென்று பிடிவாதமாக இருப்பது, தனியார் சொத்துரிமைக் கருத்து ஆட்சி செய்த பிறகே தான். பாசம் காட்ட குழந்தைதான் வேண்டுமென்றால் வேறு ஒரு குழந்தை - அதிகம் பெற்று காப்பாற்ற முடியாமல் திணறுகிறார்களே அப்படிப்பட்ட ஒரு குழந்தையை தத்து - வளர்ப்புக் குழந்தையாக்கி பாசம் காட்டி மகிழலாமே! அதுகூட வேண்டாம்; பலர் நாய், பூனை, கிளி போன்ற பல்வேறு வகை மிருகங்கள் பட்சிகளையும்கூட வளர்த்து பாசம் காட்டி, மகிழ்ச்சியை அடைகிறார்களே அது போல செய்யலாமே என்பார்!
சிங்கப்பூரில் நான் தங்கியிருக்கும் கவிதாமாறன் இல்லத்திற்குச் செல்லும் மின்தூக்கி (லிவீயீ) ஒன்றில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது!
பக்கத்து பிளாக்கில் வசிக்கும் ஒருவர் வளர்த்த கிளி திடீரென காணாமற் போய் விட்டிருக்கிறது. அக்கிளிக்கு இவர் சிகிச்சை தந்து கொண்டிருந்தார். அந் நிலையில் காணாமற் போன அக்கிளியைக் கண்டுபிடித்து  தந்தால் அந்த நபருக்கு 5000 சிங்கப்பூர் டாலர்கள் பரிசு என்று அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார்.
நம்ம இந்திய பணத்திற்கு இது சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் 2,40,000 ரூபாய் ஆகிறது! அவரது பாசமும், பரிவும் தான் எத்தகையது! அக்கிளி பற்றிய வர்ணனை அதை வளர்த்துள்ளவர்களின் மனிதநேயத்தையும் - பாசத்தையும் உறவையும்கூட காட்டும் வகையில் அதற்கு சிகிச்சை அளித்துக் கொண் டுள்ளோம். பல மருந்துகளைத் தந்து குணப்படுத்தும் நிலையும் உள்ளது என்று சோகத்தையும் கொட்டியுள்ளார் அந்த அறிவிப்பில்:
அந்த படம் (தனியே காண்க).
பொதுவாக அமெ ரிக்க, அய்ரோப்பிய நாடுகளில் மனிதனாகப் பிறப்பதற்குப் பதிலாக நாயாக, பூனையாக, பிறந்தால்  (றிமீ கிஸீவீனீணீறீ) பெரிய வாய்ப்பு!
அவனைத் திட்டி னால்கூட அலட்சியம் செய்து விடுவான்; ஆனால், அவர்களு டைய நாயை, பூனையைத் திட்டினால் படுகோபத்துடன் சண்டை போடவும் தயங்க மாட்டார்கள்!
இவைகளுக்கு என்னே சொகுசு -வாய்ப்பு! சில நாள் களுக்கு முன் ஆந்திரா வில் மூன்றாவது ஒரு பெண் குழந்தை பிறந்தது என்று வெறுப்படைந்த கணவர் தனியார் மருத் துவமனைக்கு வரவே இல்லை என்றும், மருத் துவமனை பணம்(பில்) கட்ட 25 ஆயிரம் ரூபாய்க்கு அந்தக் குழந் தையை யாரோ ஒருவருக்கு விற்று விட்டு, இந்தப் பெண் வீடு திரும்பி அழு திருக்கிறாள்!
வளர்த்த கிளிக்கு வருத்தம் அங்கு!
பெற்ற கிளியையே விற்ற கொடூரம் இங்கு!
இதுதான் நம்நாட்டில் பாசம் படும்பாடு!
-vsodlnr,29.6.15

ஞாயிறு, 1 நவம்பர், 2015

டாக்டர் பேசுகிறார்... கேளுங்கள்




நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பெரியார் பெருந்தொண்டர் மறைந்தும் மறையாதவராக நம் நெஞ்சில் நிலைத்த டி.ஏ. கோபாலன் அவர்களின் சகோதரர் டி.ஏ. ஜோதி - யசோதா ஆகியவர்களின் மண விழாவின் 50ஆம் ஆண்டு (பொன் விழா) நிறைவையொட்டிய வாழ்த்தரங்கில் கலந்து கொள்ளச் சென்றேன். அப் போது நமது கழகப் பொறுப்பாளர் காஞ்சி செ.ரா. முகிலன் அவர்கள், ஒரு சிறு தமிழாக்க நூல் ஒன்றை எனக்கு அளித்தார்.
ஆரோக்கிய கருத்து என்றால் என்ன? என்ற தலைப்பில், பத்ம பூஷன் டாக்டர் பி.எம். ஹெக்டே அவர்கள் (மணிப்பால் மருத்துவப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந் தரின் திருச்சி பொழிவின் கருத்துரை களைக் கொண்ட சிறு கேப்சியூல் (Capsule)போன்ற புத்தகம் இது.
அருமையான கருத்து வெளிச்சம் அதன்மூலம் பரவ வாய்ப்பு ஏற்பட் டுள்ளது .
பல மருந்துகள் நோய்களை தீர்ப்பதைவிட புதிதாக நோய்களை (உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதன் மூலம்) வர வழைப்பதாக அமைந்து விடுகின்றது என்ற நல்ல எச்சரிக்கையினை நம் அனைவருக்கும் அளித்து, நோய்களை மூலதனமாக்கி, பகற்கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட் மருத்துவமனை வியாபாரங்களைப் பற்றி மிகவும் - மனிதநேயம் பொங்க அருமையாக எழுதியுள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள உலக ஆரோக்கிய அமைப்பு இதனை வெளியிட்டு, மக்களுக்கு நல்ல தொண்டறப் பணி செய்வது பாராட்டத் தகுந்தது!
சில கருத்துக்கள் பகுத்தறிவாளர் களுக்குச் சற்று மாறுபட்டவைதான் என்ற போதிலும், பொதுவான உண்மைகளை நாம் அனைவரும் வரவேற்றுப் பயன் பெறக் கூடியதே!
உடலின் உண்மையான நலப் பாதுகாப்பு என்பது மருந்துகளை  உட் கொண்டு நோய்களை விரட்டுவதைவிட, இயற்கையான நோய் தடுப்பு சக்தியை நமது உடல்கள் வளர்த்துக் கொள்வதே சரியான ஆரோக்கிய வழி என்பது நல்ல கருத்தாகும். (Immunity) என்ற  உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நாளும் குறைவதற் குரிய 1) உலகச் சுற்று சூழல் மாசு அடைவது 2) சுவாசிக்கிற காற்று தூய்மையற்றது. 3) குடிக்கும் தண்ணீர் மாசுபடுதல் 4) உண்ணும் உணவு கலப்பட சங்கமமாக அமைவது முதலிய பல காரணங்களால் என்கிறார். மறுக்க முடியாத உண்மைகள் தானே இவை?
இயற்கையோடு சேர்ந்து வாழப் பழகணும் என்கிறார் டாக்டர் ஹெக்டே!
நவீன மருத்துவத்தின் தந்தையின்னு சொல்லப்படற ஹப்போக்கிரடீஸ் சொன்னார் - மருந்துகள் எப்பவாவது தான் குணப்படுத்தும் பெரும்பாலும் சவுகரியம் கொடுக்கிறது. வலி தடுப்பு (Antibioties, Pain  Killers) மருந்துகளின் நோய் புதிய பரிமாணம் பெற்று நம்மை மேலும் கடுமையாகப் பாதிக்கவே செய்கின்றன என்கிறார் டாக்டர்.
ஹிப்ரோகிரடீஸ் Oath பிரமாணம் எடுக்கிறார்கள். ஆனால் பலர் கடைப் பிடிப்பதில்லையே என்கிறார்! ‘Never  make money in sick room’  நோயாளி அறையை வைத்து அதன் மூலம் பணம் பண்ணாதீர் என்ற அறிவுரையைவிட அதிகம் காற்றில் பறப்பது எது? கேட்கிறார் டாக்டர்!
மாற்றுத் தீர்வு என்ன? அதையும் அழகாகச் சொல்கிறார்; கேட்போம்.
1. அளவாகச் சாப்பிடப் பழகுங்கள். (மிதமிஞ்சிய உணவைத் தவிர்ப் போம்).
2. எல்லோரையும் சமமாக நடத்துவோம்; யாரையும் தாழ்வாகவோ, கேவலமாகவோ நடத்த வேண்டாம்! (அப்போது நமது உடல் நலம் மனநலம் பெற்று சீரடைவோம்).
3. உண்மையையே பேசுவோம்.
4. மன்னிப்போம் - மறப்போம் என்பதை கைக் கொண்டு ஒழு குங்கள்.
5.    எல்லோரையும் உலகளாவிய நிலையில் நண்பர்களாக, உறவினர்களாக நினைத்துப் பழகுங்கள்.
6. நாள்தோறும் நடைப் பயிற்சி (Walking)யைவிட நல்ல மருந்து வேறில்லை.
7. கடினமாக உழையுங்கள்.
8. எமர்சன் என்கிற தத்துவஞானி சொல்கிறார்.
சந்தோஷமாக இருக்கிறதல்ல வாழ்க்கை
வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கணும்
கருணை உள்ளதாக இருக்கணும்
உண்மை உள்ளதாக இருக்கணும்.
9. வாழ்க்கை நல்லா வாழ்ந்தால் மட்டும் போதாது இன்னொரு உயிரைத் தொடனும்.
10. நாம் வாழுவதைவிட மற்றவர்களை நாம் வாழவிட்டிருக்கிறோம் என் பது உலகத்துக்குத் தெரியணும்!
இவைகளைக் (கூடுமான வரையிலாவது) கடைப்பிடித்தால், நலன் தானே கிட்டும்; ஆயுள் - நோயற்ற வாழ்வாக மட்டுமல்ல குறைவற்ற செல்வமாகவும், வளர்ந்தோங்கும் என்கிறார் உண்மைதானே!
நீண்ட ஆயுள் முக்கியமல்ல நண்பர்களே, நல்ல உடல் வன்மை - நலத்தோடுகூடி வாழும் ஆயுளே முக்கியம் என்பதால், பள்ளமில்லாத உள்ளத்தால் அதை அடைய முயற்சி யுங்கள்.
-விடுதலை,21.7.14

இந்த சள - எந்த வகை? புரிந்துகொள்க!


நம்முடைய மக்களிடையே பேச்சுகள் பற்றி சில நேரங்களில் சிலர் குறிப் பிடுகையில் சளசளவென்று பேசுவதே அவரது வாடிக்கை!
சும்மா சளசளவென பேசாதே! என்று கூறுகிற பழக்கமும் நம்மில் பல ருக்கு, பிறர் பேசும் போது குறுக்கிட்டுக் கூறுவதுண்டு.
நம்மில் பலர் அதனை தொண தொணவென்று பேசுகிறார்கள் என்ற பொருளில்தான் கூறுகின்றனர்.
ஆனால், இந்த சள என்பதற்குச் சரியான பொருள் என்னவென்பது, அண்மையில் கோவையில் என்னைச் சந்தித்து - சிறந்த நூல்களை எனக்கு மாலைக்கு - சால்வைக்குப் பதிலாக தரும் வழக்கம் உள்ள மானமிகு இ.கண்ணன் அவர்கள் (பெரியார் பகுத்தறிவு இலக் கிய அணியின் பொறுப்பாளர்களில் ஒருவர்) தந்த தேவிபிரசாத் சட்டோபாத் தியாயா எழுதிய இந்திய நாத்திகம் என்ற நூலைப் படித்தபோது,
இந்தியத் தத்துவத்தில் கடவுள் என்ற தலைப்பிட்ட 5 ஆவது அத்தியா யத்தில் மேலே கூறிய சள என்பது இந்திய தத்துவம் சார்ந்த கலைச்சொற் களில் ஒன்றாகும் என்பதை விளக்கு கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா அவர்கள்.
இதுபற்றி அந்நூலில் எவருக்கும் விளங்கும் வண்ணம் சளபற்றிய விளக் கம் இனி (பக்கம் 31-35) காண்போம்.
இந்தியத் தத்துவாசிரியர்களில் பெரும்பாலோர் நாத்திகர் என்பது உண்மையில் சரியான கூற்றா?
இந்திய தத்துவாசிரியர்களில் பெரும் பாலர் நாத்திகர் என்பது உண்மையில் சரியான கூற்றா? இக்கேள்விக்கு மத்திய காலக் கடவுள்வாதிகளுக்கு இருந்தது போன்றே இன்றைய ஆத்திகர்களுக் கும் மிகவும் நெருடலான ஒரேயொரு விடை தான் உண்டு! தமக்குச் சங்கட மான உண்மைகளை மூடி மறைக்கத் தத்துவ ஞானிகள் கைக்கொள்ளும் வழக்கமான தந்திரம் என்ன? வார்த்தை ஜாலத்தில் அடைக்கலம் தேடுவதே அது.
இதுதான் நாணயமற்ற அறிவாளித் தனத்தின் வழக்கமான வடிவமாக ஆதி காலத் தத்துவப் போர்களில் இருந் திருக்க வேண்டுமென்பது இத்தகைய சர்ச்சைகள் தொடர்பான நூல்களி லேயே மிகவும் பழைமையான ஒன்றில் நாம் காணும் இத்தந்திரம் குறித்த விரி வான விவாதத்திலிருந்து தெரிய வரு கிறது; ஆம், அதன் தத்துவார்த்தப் பயன் ஏதுமில்லைதான்.
இந்திய தத்துவம் சார்ந்த கலைச் சொற்களில் இது சள எனப்படும்; அதாவது, தனது வார்த்தை ஜாலத்தால் எதிரியின் நிலைப்பாட்டைத் திருத்தி விவாதத்தைத் திசை திருப்பி அவர் கனவிலும் நினைத்திராத கருத்தை முன் வைத்ததாகக் கதைப்பது! இதைப் பல வழிகளில் செய்யலாம்; சாமான்ய சள என்பது அவற்றுள் ஒன்று: ஒரு விச யத்தை அல்லது ஒரு பொருளைப் பற்றிய விவரிப்பில் எதிரி குறிப்பாக முன்வைக்கிற கருத்தைப் புறந்தள்ளி விட்டு அவ்விசயத்தின் அல்லது அப் பொருளின் பொதுவான குணாம்சத்தில் பொதிந்திருக்கிற - ஆனால், அவரால் பேசப்படாத கேலிக் கூத்தான அம்சத் தைப் பிடித்துத் தொங்குவது!
இந்திய கடவுள் வாத நூல்களில் தலையாயதாகக் கருதப்படும் நியாய- குசுமாஞ்சலியின் ஆசிரியரும், நியாய-வாதக் கூட்டத்தைச் சேர்ந்தவரும், மத்திய காலத் தத்துவ ஞானிகளில் பெரும் புகழ் பெற்றவருமான உதயணர் என்பாரின் எழுத்துகளில் மேற்சொன்ன தந்திரத்தின் உதாரணம் ஒன்றைக் காண முடியும். ஒவ்வொருவரும் அவரவர் வழியில் கடவுளை நம்புகின்றனர்; ஆத லால் நாத்திகர் என நானிலத்தில் எவரு மில்லை என அந்நூலின் ஆரம்பத்தில் அடித்துச் சொல்கிறார். நம் காலத்தில் மிகத் திறமை வாய்ந்த ஒருவரால் மொழி பெயர்க்கப்பட்ட அப்பத்தியை முழுமை யாக இங்கே மேற்கோள் காட்டுவது அவசியம்.
இயற்கையிலேயே தூய்மையா னதும், அறிவொளி பரப்புவதுமான பரம்பொருள் ஒன்றே என உபநிடத ஆதரவாளர்களும், முழுமுதல் ஞானி எனக் கபிலரின் சீடர்களும் இவ்வுலகத் துன்ப துயரங்கள், செயல்பாடுகள், பலாபலன்கள் ஆகியவற்றால் அண்ட முடியாதவராகவும், விஸ்வரூபம் எடுத்து வேதங்களை இவ்வுலகுக்கு அளிப்பவ ராகவும், அருள்பாலிக்கிறவராகவும் விளங்குபவர் எனப் பதஞ்சலியின் சீடர்களும், வேதங்களாலும், சாதாரணப் பழக்கங்களாலும் அங்கீகரிக்கப்பட்ட எந்தவித நடவடிக்கைகளாலும் மாசு படுத்த முடியாத, முற்றிலும் தனித்துவ மான ஒன்று என மகா பசுபதியின் மாணவர்களும், சிவன் எனச் சைவர் களும், புருசோத்தமன் என வைணவர் களும், முதன்மைத் தந்தை (அதாவது தந்தைமார்களின் தந்தை) எனப் பவுராணிகர்களும், உயிர்ப் பலியின் ஆன்மா எனப் பலி கொடுப்பவர்களும், சர்வ ஞானி எனப் பவுத்தர்களும், நிர் வாணக் கோலத்தவன் எனத் திகம்பரர் களும், வேதங்களால் வழிபாட்டுக்குரி யது என நிர்ணயிக்கப்பட்டது என மீமாம்சகர்களும், தனக்குரிய அனைத் துக் குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றது என நையாயிகர்களும், உலக வழக்காறுகளால் நிர்ணயமாகிய அதி காரத்தைச் செலுத்துபவர் எனச் சாரு வாகர்களும் - மேலும் கூறுவதாயின் - விஸ்வகர்மா (மாபெரும் வரைகலை ஞர்) எனக் கைவினைஞர்களும் - போற்றிப் பாராட்டுகிற மற்றும் சாதி, கோத்திரம், மிகச் சிறந்த முனிவர்களின் கூட்டம்(Pravara), (வேதப்) பள்ளி, குடும் பக் கடமைகள் போன்றவை தொடர் பான மேலதிகாரத்தைச் செலுத்துபவராக அனைவரும் அறிந்துகொண்டுள்ள சிவன் பற்றிய அய்யத்திற்கு எந்த ஆதா ரமும் இருக்க முடியாது என்பதால், அவனின் இருப்பு குறித்த ஆராய்ச்சிக்கு அவசியமே இல்லை! அந்த சிவனின் சிந்தனை என அழைக்கத் தக்கதும், தருக்கவியல் அடிப்படையில் அமை யப் பெற்றதுமான இந்த விளக்கவுரை, ஸ்ருதியைக் காதில் வாங்கி அதைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளதால் இதனை அவருக்குரிய வழிபாடு எனக் கருத லாம்.
ஒவ்வொருவரையும் கடவுள் நம்பிக் கையாளராக மாற்றிடும் காரியத்தை லாவகமாகச் செய்திடும் இத்தகைய எடுப்பான் (சமஸ்கிருத) மொழிநடை, சமஸ்கிருத மொழி மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டோருக் குக் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம்; ஆனால், வேண்டுமென்றே உண்மை யைத் திரித்துரைப்பதற்காக வலிந்து புனையப்பட்ட சொல் அலங்காரம் என்றே இந்திய தத்துவ வரலாற்று மாணவருக்கு இது தோன்றும். கடவுள் இருப்பைப் பொய்யென நிறுவிடப் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்ட கபிலரின் சீடர்கள். சாங்கிய தத்துவாசி யர்கள், சவ்கதர்கள், பவுத்தர்கள், திகம்பர சமணர்கள், மீமாம்சகர்கள் ஆகி யோரை மட்டுமின்றி சாருவாகர்களை யுங் கூடக் கடவுள் நம்பிக்கையாளர் களாகச் சித்தரிக்க மேற்கண்ட மிடுக் கான மொழிநடை முயற்சிக்கிறது; சுருங்கச் சொல்வதாயின், நாத்திகத் திற்குப் பெயர்போன கூட்டத்தைச் சேர்ந்த எல்லோரையுமே கடவுள் நம் பிக்கையாளர்கள் எனக் கதை கட்டுகிற உதயணரைக் கண்ணுறுகிற ஒரு மந்தி ரவாதி கூடக் கண் சிமிட்டும் நேரத்தில் தொப்பியிலிருந்து பொருட்களைக் கொட்டி உடன் மறைக்கும் கண்கட்டி வித்தையில் அவர் தன்னைவிடக் கை தேர்ந்தவரோ எனப் பொறாமைப்படு வார்! அவர் இந்த மாயா ஜால வித் தையை எவ்வாறு செய்தார்? இந்திய தத்துவாசிரியர்களால் சமான்ய சள என அழைக்கப்படுகிற எதிரியின் உண்மை யான நிலைப்பாட்டைத் திரித்துக் கூறிடும் தருக்க முறையைக் கையாண்டு தான் இந்த சாதனையை நிகழ்த்தி யுள்ளார்!
பவுத்தர்களும், சமணர்களும் எவ் வாறு முறையே புத்தர், ஜீனர்கள் ஆகி யோரின் ஞானத்திற்கு வரம்பே இல்லை எனக் கருதினரோ அதேபோன்றுதான் சாங்கியர்களும் கபிலரை முதல் ஞானி அல்லது ஆதி வித்வான் என அழைத் தனர்; அப்படியாயின் அவர்கள் எல் லையற்ற அறிவு எனும் பாதை வழியே கடவுளை நம்பினர் என்பது சரியா? இல்லவே இல்லை! தங்களின் தத்து வத்தை நிறுவியவர் தெரிந்தே கடவு ளைப் புறந்தள்ளிவிட்டு இப்பேரண்டத் தின் படிமலர்ச்சி பற்றிய விளக்கத்தைத் தேடிட மேற்கொண்ட முயற்சியைப் பல முக்கியமான காரணங்களில் ஒன்றாக எண்ணியே அவரின் அறிவாற்றலை வியந்தனரேயொழிய அவரை எல்லை யற்ற ஞானக் கடலெனக் கருதிட வில்லை! பவுத்தர், சமணர் விசயத்திலும் இது பெரும்பாலும் பொருந்தும்; மந்திரச் சடங்குகள் தொடர்பான வேதக் கட்ட ளைகளில் மீமாம்சகர் ஆழ்ந்த நம் பிக்கை கொண்டிருந்தனர்; ஆயினும் அவர்களின் எந்த ஏட்டிலும் அந்த வேதக் கட்டளைகள் வழிபாட்டுக்குரி யவை என்பதற்கான குறிப்பு எவ் விடத்தும் காணப்படவில்லை; மாறாக, அவர்கள் வேதக் கட்டளைகளே எனி னும் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்த விரும்பியதால் கடவுள் மறுப்பில் சளைக்காமல் ஆர்வம் காட் டினர்; அதன் பொருட்டே வழிபாட்டு முறைகளையும் உதாவதவை எனப் புறந்தள்ளினர். சடங்குகளால் அவற்றின் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டே சகலத்தையும் சாதித்திட முடியும். இந்த நம்பிக்கையில் தெய்வீகத் தலையீட் டுக்கு இடமிருக்க முடியாது.
சள எனும் சொல்லாடலை உத யணர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பது சாருவாகர்களையும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என அவர் கூறுவ திலிருந்து விளங்கும்; உலக வழக்கின் அடிப்படையில் ஆண்டவனின் அதி காரம் அவர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டதாகக் கூறுகிறார். பிற்காலத்திய எழுத்தாளர்கள் இதிலிருந்து உருப்படி யாக எதையாவது உய்த்துணர முயன் றார்கள்; முடியாத ஒன்றைச் சாதிக்கும் முயற்சியே இது. இத்தகைய முட்டாள் தனமான சள எனும் வாத முறை பொருளற்றது; மார்க்ஸ், லெனின் மற்றும் பொதுவுடைமைத் தத்துவம் ஆகியவற்றிலுங்கூட மதத்தைத் தேடு கிற மகா புத்திசாலித்தனத்தை(!) இதற்கு இணையான நம் சம காலத்திய வாதம் எனலாம்.
கம்யூனிசம் என்கிற மதத்தின் இறைத் தூதர் லெனின்; அறிவியல் (அதாவது விஞ்ஞானம்) அதன் புனிதச் சின்னம் என்கிறார் இராதாகிருஷ்ணன். இதற்குச் சான்றாக மாஸ்கோ மனமகிழ் மன்றத்தின் சுவர்களில் வரையப்பட் டுள்ள பின்வரும் வாசகங்களை அவர் குறிப்பிடுகிறார்: உலகம் தோன்றியது எப்போது என்பதை எவரும் அறியார்; ஆனால், அக்டோபர் 1918 இல் புத்துலகு ஒன்று பிறந்ததை அறியாதார் யார்? விண்ணுலகிலிருந்து கடவுளர்களையும், மண்ணுலகிலிருந்து முதலாளித்துவத் தையும் வெளியேற்றுவோம்! கட்டிளங் கம்யூனிசக் காளைகளுக்கு வழிவிடு வோம்! இத்தகைய பிசிரற்ற(!) சான்று களைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் அவர் மேலும் தொடர்கிறார்:
பூடகமான ரஷ்ய மண்ணின் மீது தூவப்பட்ட காரல் மார்க்சின் கம்யூனிச விதை மதமாக முகிழ்த்து அதிகாரத்தின் அரவணைப் பில் தன்னை வளர்த்துக் கொள்ள அதற்கேற்ற உத்திகளைக் கையாள் கிறது; செஞ்சேனை, பள்ளிக்கூடங்கள், பத்திரிகைகள், பொதுக்கூட்ட மேடை கள் ஆகிய அனைத்தும் அந்த மண் ணிலிருந்து மதத்தைத் துரத்திடப் பகீ ரதப் பிரயத்தனம் செய்து வருகின்றன! நம்பிக்கை, ஆழ்ந்த ஈடுபாடு, சாகவும் துணியும் தியாகம் ஆகியவையே போல்ஷ்விக் கொள்கையின் உந்து சக்தி! யூத மதத்தவர் கடவுளின் அருள் வெளிப்படும் நாளை எதிர்நோக்கி இருப்பதைப் போன்றே போல்ஷ்விக்கு களும் புதிய விண்ணுலகம் - மண்ணு லகம் பற்றிய கனவுகளில் மூழ்கிக் கிடக் கிறார்கள்! நாங்கள் மதத்திற்கு எதிரி களோ, ஆதரவாளர்களோ அல்லர்; அதைப் புறந்தள்ளிவிட்டு நாங்கள் படைக்கவுள்ள உலகளாவிய சகோதரத் துவம் என்பது கடவுள், கிருஸ்து அல்லது வேறெந்த மதத்தை விடவும் உன்னதமானது என்றொரு சோசலிச வாதி முழங்குவாராயின் அவர் பெரும் பாலான கடவுள் நம்பிக்கையாளர்களை அல்லது கிருஸ்துவை வணங்குகிறவர் களை விடவும் மேலான மத நம்பிக் கையாளர் என நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்!
மார்க்ஸ், லெனின் ஆகியோரிடத் திலும், பொதுவுடைமைத் தத்துவத்திலும் மதத்தைக் கண்டுபிடிக்கிற இராதா கிருஷ்ணனின் வாதத்தையும், சாங்கியம், பவுத்தம், சமணம், பூர்வ மீமாம்சம் ஆகியவற்றோடு நிற்காமல் சாருவாகத் தத்துவத்திலும் கடவுளை அடையாளங் காட்டுகிற உதயணரின் முயற்சியையும் ஒன்றை மற்றொன்று முந்துவதற்காகத் தமக்குள் மோதிக் கொள்ளத் தற் போதைக்கு வழிவிடுவோம்! அதே சமயம் புனை கதைகளைப் புறந்தள்ளி விட்டு உண்மைகளை நாடிப் போவோம்!
இந்தியத் தத்துவ ஞானிகளில் டாக்டர் இராதாகிருஷ்ணன் பலரால் புகழப்படுகிறார்; ஆனால், எப்படி சளவாதியாக உள்ளார் என்பதை சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா!
கடவுள் மறுப்பாளரான, பகுத்தறிவு மேதையான புத்தரையே, மகாவிஷ்ணு வின் - 9 ஆவது அவதாரம் என்று காட்டினார் டாக்டர் இராதாகிருஷ்ணன் - அவரது சள முயற்சிக்கு மற்றொரு - திரிபுவாதம் - திசை திருப்பல் இது!
நாம் இந்த சளவுக்கு நமது தொலைக்காட்சி விவாதங்களில் சரக் கில்லாது வாதம் புரியும் சளவாதிகள் பலரை அனுதினமும் பார்க்கிறோமே!
எனவே, சளவாதிகளிடம் அதுவும் சாமான்ய சளவாதிய சரித்திரப் புகழ் வாய்ந்த சளவாதிகள் வரை எச்சரிக்கை யோடு இருப்போமாக!
-விடுதலை,21.10.15