திருச்சி கோ. அபிஷேகபுரம் - அப்போது அது வெறும் ஊராட்சிதான் - திருச்சியின் சுற்றுப்புற கிராமம்.
அதன் கடைசிப் பகுதியில் ஒரு தகரம் உற்பத்தித் தொழிற்சாலை ஷேக் மொய்தீன் ராவுத்தர் என்பவர் உருவாக்கி நடத்தி வந்தார். சில மாதங்களில், சில வருடங்களில் அது நட்டமடைந்ததால், வாங்கிய வங்கிக் கடனைக் கட்ட முடியாததால் அவர் தன்னை இல்சால்வன்ட் என்று அறிவித்ததன் விளைவு அந்த 20 ஏக்கர் பரப்பளவு இடமும், அதில் கட்டப்பட்டிருந்த ஒரு சில கட்டடங்களும் Official liquidator மூலம் (அச்சொத்து) ஏலத்திற்கு வந்தது!
திருச்சி பெரியார் மாளிகை புத்தூரில் உள்ளது. அங்கே போக்குவரத்து நெரிசல் அதிகமாகிய நிலையிலும், அம்மாளிகைக்குள்ளேயே நாகம் மையார் குழந்தைகள் இல்லம் (நாம் 'அனாதை' என்ற சொல்லை பயன்படுத்துவதில்லை), பெரியார் அயர்எலிமென்டரி ஸ்கூல் - 8ஆம் வகுப்புவரை, பெரியார் ஆரம்பப் பள்ளி, நாகம்மை ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி, பெரியார்ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, அய்யாவின் இல்லம் - இவை அத்தனையும் அம்மாளிகை வளாகத்தில் அடக்கம்! அதனால் அன்னை மணியம்மையார் அவர்கள் அய்யாவிடம், (மாநில நிர்வாகி திருச்சி சோமு மூலம் தகவல் அறிந்து) அதை ஏலத்திற்கு எடுத்துப் பயன்படுத்தலாம் என்று நினைத்தார்.
அதைவிட அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பணித் தோழர்கள் குடியிருப்பும் மாறி விட்டது. பள்ளிகளும் இல்லை இப்போது உள்ளதுபோல சுந்தர் நகர், கலைஞர் நகர் என பல நகர்கள் இல்லாத காலம்! ஏலம் கோரும்போது 50 ஆயிரம் ரூபாய் வரை கேட்க அய்யா மூலம் இசைவு பெறப்பட்டது. ஆனால், அதற்கு மேலே ஏலதாரர் சிலர் கேட்க முனைந்தனர்.
எதிர்பாராத வகையில், திருவண்ணாமலையிலிருந்து எனது மாமனார், மாமியார் சிதம்பரம் - ரங்கம்மாள் திருச்சி வந்திருந்தனர் அன்று. அவர்கள் ஏலத்தைப் பார்வையிட்டுக் கொண்டு, சொத்து மதிப்பீட்டையும் மனக்கணக்காகவே போட்டனர்!
55 ஆயிரம் ரூபாய் என்றால் முடிந்து விடும் நிலை என்று புரிந்தது இவர்கள் இருவருக்கும். அய்யாவிடம் சொன்னவுடன், அதற்கு மேல் (ரூ.55,000) கொடுக்க முடியாது; என்னிடம் கையில் பணம் இல்லை என்று கூறி விட்டார்.
அன்னை மணியம்மையாரும், எப்படியும் அதனை விட்டு விடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார்.
எனது மாமனாரும், மாமியாரும், நம் பேராசானிடம் சற்று உரிமை எடுத்துக் கொண்டு பேசக் கூடியவர்கள், எனவே 'சட்'டென்று அய்யா நீங்கள் வாங்கா விட்டால் இதை நாங்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்கிக் கொள்ள அதாவது 55,000 ரூபாய்க்கு வாங்கிடத் தயாராக இருக்கிறோம், என்ன சொல்லுகிறீர்கள்? என்று ஒரு போடு போட்டனர்!
உடனே அய்யா பெரியார், நீங்க மகராசர் எவ்வளவுக்கு வேண்டுமானாலும் தாராளமாக வாங்குவீங்க; என்னால் அப்படி முடியுமா? உம் அந்த அளவுக்குள் தான் கேட்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
55 ஆயிரம் ரூபாய் விலைக்குக் கேட்டு, மூன்றுதரம் ஏலம் கேட்டு முன் பணம் கொடுத்து முடித்து விட்டு, பெரியார் மாளிகையில் வந்து அய்யாவிடம் அவ்விருவரும் சொன்னார்கள். அய்யா 55,000-க்கு வாங்கி விட்டோம். நம் ஸ்தாபனம் பெரியார் பிரச்சார அறக்கட்டளையின் பெயருக்கே வாங்கிவிட்டோம்.பணத்தை நீங்க எப்ப வேண்டுமானாலும் எங்களுக்கு கொடுங்க - கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை என்றார்கள்!
அய்யா சிரித்துக் கொண்டே, ‘'நீங்க, இந்த அம்மா (மணியம்மையார்) எல்லாம் சேர்ந்து என்னை உங்களுக்கு கடன்காரனாக ஆக்கி விட்டீங்க. நான் கடன் வாங்கியும் பழக்கம் இல்லே. கடன் கொடுத்தும் பழக்கம் இல்லே - இருந்து என்னிடம் செக் வாங்கிக்கிட்டு ஊருக்குப் போங்க" என்றார்!
அந்த 20 ஏக்கர்தான், இன்று பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம் என்று கம்பீரமாக காட்சியளிக்கும் - பல கல்வி நிலையங்கள், பெரியார் மருந்தியல் கல்லூரி, நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நாகம்மையார் குழந்தைகள் இல்லம், சாமி கைவல்யம் முதியோர் இல்லம், பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியார் மருத்துவமனை, பெரியார் துவக்கப் பள்ளி, பெரியார் எல்.கே.ஜி. பள்ளி எல்லாம் அந்த நூற்றாண்டு வளாகத்தில் வந்து படிப்படியாக குடியேறி, இன்று ஒரு மாபெரும் கல்விப் பண்ணை - அறிவுச் சோலை இப்படி பல.
(மேலும் பல வரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக