மீனாட்சி: வ.உ.சி.யின் வாழ்க்கைத் துணை
"மீனாட்சி அம்மாள் வாழ்க்கைப்பட்டது இன் றைய தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் என்ற சிற்றூரில் வாழ்ந்த பாரம்பரியமான நிலவுடைமைக் குடும்பத்தில். வக்கீல் உலகநாத பிள்ளைக்கு மகனாகப் பிறந்த வ.உ.சி.யும் 1894இல் வக்கீல் சன்னது பெற்றுத் தூத்துக்குடி நகரில் பத்தாண்டுகளுக்கு மேல் தொழில் பார்த்ததில் அதிலும் நல்ல வருமானம். 1906ஆம் ஆண்டில் சுதேசிய வேகம் ஆட்கொண்ட பிறகு வக்கீல் தொழிலை அவர் பார்க்க முடியவில்லை . ஒரு புதிய கம்பெனியை, அதுவும் அரசாங்கத்திற்கு எதிராகக் கட்டியெழுப்புவதென்பது சாதாரணமா? ஓய்வில்லாப் பயணமும் அரசியல் கூட்டங்களும் வருமானம் ஈட்டுவதற்கான வழிகளல்ல. தேசியத்தைவிட வணிகத்தையே முக்கியமாகக் கருதிய மிதவாதிகளின் கையே சுதேசிக் கப்பல் கம்பெனியில் ஓங்கியிருந்த நிலையில் அவர் களையும் சமாளிக்க வேண்டிய நிலை. இந்தச் சூழ்நிலையில்தான் வ.உ.சி. சிறை சென்றார்.
பதின்மூன்று வயதில் அடியெடுத்துவைத்ததும் மீனாட்சிக்குத் திருமணம். இரண்டாம் தாரம். முறையான கல்விக்கு வாய்ப்பில்லை. கணவர் சிறைக்குச் சென்ற காலத்தில் மீனாட்சி அம்மா ளுக்கு வயது பத்தொன்பதுகூட இல்லை. நண்டும் சுண்டுமாக உலகநாதன், ஆறுமுகம் என இரு மகன்கள். வயதான மாமனார், மாமியார். அண்ணனுக்குக் கொடிய தண்டனை என்று கேட்டதும் பித்தரான கொழுந்தன். புகுந்த வீட்டின் மதினிமார், நாத்திமாரோடு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம். சிறைக் கைதியின் மனைவி என்ற சாமானியரின் ஏளனம். முன்னுதாரணமற்ற வகையில் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை வ.உ.சி.யின் நண்பர்கள் பலருக்கும் கிலியூட்டி, அவருடைய குடும்பத்தினரை விட்டு ஒதுங்கச் செய்தது. 1911 ஜூனில் நடந்த ஆஷ் கொலை இந்த அச்ச நெருப்புக்கு நெய் வார்த்தது. எவரும் நிலை குலைந்துபோயிருப்பார்கள், மீனாட்சி அம்மாள் துவளவில்லை.
வ.உ.சி. அடைக்கப்பட்டது கோவைச் சிறையில். குடும்பமோ தூத்துக்குடி வாடகை வீட்டில்..... இரும்புப் பெட்டி முதலியனவும் புத்தகங்களும் தூத்துக்குடி வீட்டின் சொந்தக் காரர்களுக்குச் செல்ல வேண்டிய வாடகை முதலியவற்றுக்கு ஈடுபோல் இருக்கின்றன' என்ற நிலையில், கணவர் சிறைப்பட்டிருந்த கோவைக்கு அடிக்கடி சென்றதோடு, சில காலம் அங்கேயே வசிக்கவும் செய்தார் மீனாட்சி அம்மாள். 1910 கடைசியில் வ.உ.சி. கண்ணனூர் (இன்றையக் கேரளத்தின் வடகோடியிலுள்ள கண்ணூர்) மத்தியச் சிறைக்கு மாற்றலான பின்னர் ஓராண்டுக்கும் மேல் மொழி தெரியாத தேசத்தில் வாடகைக்கு வீடமர்த்தித் தங்கினார். சிறை அதிகாரிகளுடன் மல்லுக்கட்டினார். அரசாங்கத் திற்கு விண்ணப்பங்கள் தயாரித்தார். கணவரின் அரசியல் நண்பர்களுடனும் தனி நண்பர்களு டனும் குடும்பத் தினருடனும் வக்கீல்களுடனும் சளைக்காமல் கடிதத் தொடர்பு கொண்டார். வாங்கிய பணத்துக்கு வழக்கும் நடத்தாமல், கணக்கும் காட்டாத வக்கீல்கள் சிலரின் தொல்லை. வ.உ.சி. சிறைசென்றதையே வாய்ப் பாகக் கருதி வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத சில நல்லவர்கள். இந்த நிலையில், 'என்னுடையவும் குழந்தைகளுடையவும் காலக்ஷேபத்திற்கு எவ்வகையிலும் பொருள் வருவாயில்லை' என்று கலங்கிய மீனாட்சி அம்மாள், தனது 'பர்த்தா அவர்கள் வந்து சேரும் வரை' தன்னையும் தன் குழந்தைகளையும் காப்பாற்றுவதற்குப்பட்ட துன்பம் சொல்லில் அடங்காது.
‘‘என்னிடமிருந்த சிறிய பொருளும் நகைகளும் ஊரார் எங்களுக்குத் தந்தனவும் எனது பர்த்தா அவர்களின் கேஸ்களுக்கும் அப்பீல்களுக்கும் எங்கள் சாப்பாட்டுக்குமாகத் தீர்ந்துபோய் விட்டன. எங்கள் உற்றாரும் உறவி னரும் மேலும் மேலும் எங்களுக்குக் கொடுத்துச் சலித்துப்போனார்கள்' என்று நொந்து கொண்ட மீனாட்சி அம்மாள், 'இனிமேல் அவர்களைக் கேட்பது, கசக்கி மலரை முகர்ந்ததோடொக்கும்' என்று அமைதிகொண்டார்.' '... எங்கள் தற்கால நிலைக்குத் தக்கபடி மிக எளிய சாப்பாடு செய்து கொண்டு வந்தும் எங்கள் சாப்பாட்டுச் செலவு வீட்டு வாடகை முதலிய செலவுகளும் எனது பர்த்தா அவர்கள் விடுதலைக்காக யான் செய்யும் முயற்சி சம்பந்தமான செலவுகளும் சேர்ந்து' தாங்க முடியாத செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை.' 'எனது நகைகளை அடகு வைத்து வாங்கி அனுப்பிய ரூபா இருநூறும் செலவாகிவிட்டது' என்ற நிலையில் 'தாங்கள் எனக்குக் கொடுக்கும் பணத்தை என் பர்த்தா அவர்கள் வந்த பின் நியாயமான வட்டியுடன் திரும்பச் செலுத்தவும் தயாராக இருக்கிறேன்'' என்று பலரிடம் மீனாட்சி அம்மாள் இறைஞ்சினார். நகைகளை விற்றுவிட்ட நிலையில், வ.உ.சி.யின் தாயாருக்கு அனுபவ பாத்தியதை யுள்ள அசையாச் சொத்துகளை அடமானம் வைக்கவும் அவர் தயாராக இருந்தார். சில சமயங்களில் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்ட நிலையில் அவமானப்படும் நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில் "நான் எனது மானம் கெடாத கூலி வேலைகள் செய் யவும் தயார்" என்று மீனாட்சி அம்மாள் எழுதி யதை யார்தான் கண் கலங்காமல் படிக்க முடியும்?
இவ்வளவு இன்னல்களுக்கிடையிலும் மீனாட்சி அம்மாள் சிறை அதிகாரிகளுடனும் அரசாங்கத்துடனும் - வழக்குரைஞர் களின் துணையோடும், சில வேளைகளில் துணையில்லா மலும் கூட - கடிதப் போக்குவரத்து மேற்கொண் டார். சட்டரீதியான கடிதங்களைத் தட்டச்சு செய்துகொண்டிருந்த ஒருவர் போலீசுக்கு அஞ்சி, கொடுத்த வேலைகளைச் செய்ய மறுத்ததுபோன்ற சில்லறைத் தொந்தரவுகள் வேறு.
இத்தனைக்கும் இடையில் 'உலகத்தாரின் மதிப்பையாவது அவமதிப்பையாவது சிறிதும் பொருள்படுத்தாமல், 'எனது கடமை எனது பர்த்தா அவர்கள் என்னென்ன உத்தரவுகள் கொடுக்கிறார்களோ அவ்வுத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து நடத்தலே' என்று சொற்றிறம்பாமல்' மனவுறுதியுடன் மரபார்ந்த இல்லற நெறிப்படி வாழ்ந்த மீனாட்சி அம்மாள் தம் கணவரின் பொதுவாழ்வின்மீதும் கொண்டிருந்த மதிப்புக் கும் குறைவில்லை.
அடியாளது பர்த்தா அவர்கள் பலவுயர்ந்த தமிழ் நூல்கள், இங்கிலீஷ் நூல்களும் இயற்றி யுள்ளார்கள்..
அவர் கல்வியும் அவர்கள் தவமும் அவர்கள் பெருமையும் அடியாளால் சொல்லும் திறத்தன வல்ல. அவர்கள் இப்பொழுது இவ்வுலகம் முழுவதையும் நீதியுடன் அரசாளும்படியான திறமையையும் மெய்ஞ்ஞானத்தை இவ்வுலகம் முழுவதற்கும் உபதேசிக்கும்படியான திறமை யையும் அடைந்துள்ளார்கள்.
என்று தம் மாமனாருக்கு ஆறுதல் கூறி, 'ஆதலால்... அவர்கள் சிறைப்பட்டார்கள் என்று நினையாது, கடவுள் ஞானத்தையும் மற்றைய உலக ஞானங்களையும் அடைவதற்குரிய தவச் சாலைக்கும் கல்விச்சாலைக்கும் சென்றிருந் தார்கள் என்று நினைத்துப் பூரண திருப்தியுடனும் சந்தோஷத்துடனும் இருக்கும்படி' அவரைத் தேற்றினார்.
'தற்காத்து, தற்கொண்டானைப் பேணி, தகைசான்ற சொல்லைக் காத்துச் சோர்விலாத ஆளுமையாக' நின்றிருக்கிறார் மீனாட்சி அம்மாள் என்று தயங்காமல் சொல்லலாம்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக