மஞ்சுள் பப்ளிஷிங் அவுஸ் என்ற பதிப்பகம் சிறந்த ஆங்கில நூல்களைத் தமிழாக்கம் செய்து தமிழ்த் தொண்டை அருமையாக செய்து வரு கின்றனர்!
மும்பை திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர் களும், அவரது வாழ்விணையர் திருவாளர் குமார சாமி அவர்களும் சிறந்த தமிழாக்கப்பட்ட அரிய நூல்களைத் தொடர்ச்சியாக - அலுப்பு சலிப்பின்றி தமிழ் வாசக நேயர்களுக்குத் தருவது மிகப் பெரிய அறிவுக்கொடை என்றே பாராட்ட வேண்டும்.
பயனுறு வாழ்வாக அவ்விருவரும் தங்கள் வாழ்க்கையை அமைத்து - வணிக அம்சம் அதில் ஒரு பகுதிதான் - தொண்டறம் என்றே சொல்ல வேண்டும். ஆங்கிலம் படித்திராத தமிழ் வாசகர்களுக்கு அந்த புதுமைச் சிந்தனையாக்க நூல்களைப் படித்து, கற்கும் வாய்ப்பு இம்முயற்சி இன்றேல் எளிதில் கிடைக்காதே!
ஜப்பானிய மக்களின் பழக்க வழக்கங்கள் - நீடித்த ஆயுள் - பழம்பெரும் பண்புநலன்கள் பற்றிய சில நூல்களை சில மாதங்களுக்கு முன்பு ‘வாழ்வியல் சிந்தனை' பகுதியில் அறிமுகப்படுத்தியிருந்தேன்.
அண்மையில் திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்கள், பிரபல சிந்தனையாளர் - எழுத்தாளர் ருட்கர் பிரெக்மென் எழுதி வெளியாகியுள்ள ஆங்கில நூல் Humankind என்பதாகும். அதனை தமிழாக்கி "மனித குலம் - நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு" என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
பல நூல்கள் இருக்கும் ஒரு நூலகத்திற்குள் நுழைந்து படித்து, அறிந்து, உய்த்து உணரும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
அண்மைக்காலத்தில் மிக சிறப்பாக மனித குலம் பற்றி யூத நாட்டு எழுத்தாளர் வரலாற்று பேராசிரியர் "யுவல்னோ ஹாரரி" அவர்கள் எழுதிய புதுமை நூல்களைத் தாண்டியுள்ள ஒரு புத்தாக்கச் சிந்தனை இந்த "மனித குல வரலாறு" என்ற நூலில் சிறகடித்துப் பறக்கிறது.
நமக்கு ஒரு புதிய வெளிச்சத்தை உளவியல், வரலாற்று மரபியல், அறிவியல், மானுடவியல் ஆகிய பலவற்றின் கலவையாக அறிவுக்களஞ்சியத்தைக் காட்டுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு ஆங்கில நூலை (Humankind) எனது நண்பர் ஒருவர் மூலம் பெற்று படித்தேன்.
அதன் ஆங்கில நடையும், கருத்தும் குன்றாது, குறையாது, மேலும் பொலிவுடன் திருமதி நாகலட்சுமி அம்மையார் எழுதியுள்ளது மனித குல மாண்பினை ஒரு புதிய கண்ணோட்டத்தோடு காட்டுகிறது!
இதுவரை 90 நூல்களை மொழிபெயர்த்து தமிழாக் கம் செய்த தகையாளர் இவர்; இதுவும் ஜொலிக்கிறது. ஆற்றொழுக்கான தமிழ் நடை மிளிர்கிறது.
"மனித குலம்" எனும் இந்நூல் ஒரு புது விவாதத்தை முன் வைக்கிறது.
அடிப்படையில் மக்கள் நல்லவர்கள் என்று அனு மானிப்பது யதார்த்தமானதாகவும், அதே நேரத்தில் புரட்சிகரமானதாகவும் இருக்கிறது என்ற வாதம் தான் அது!
மற்றவர்களோடு போட்டி போடுவதற்குப் பதிலாக அவர்களோடு ஒத்துழைப்பதற்கும், அவர்களைச் சந்தேகிப்பதற்குப் பதிலாக அவர்களை நம்புவதற்கும் நமக்கு ஏற்படுகிற உள்ளுணர்வு, பரிமாண அடிப் படையில் உருவான ஒன்று.
மற்றவர்களைப் பற்றி மோசமாக நினைப்பது, நாம் அவர்களை எவ்வாறு பார்க்கிறோம் என்பதன் மீது மட்டுமல்லாமல், நம்முடைய அரசியல் மீதும், பொருளாதாரத்தின் மீதும் தாக்கம் ஏற்படுத்துகிறது."
பன்னாட்டளவில் விற்பனையில் சாதனை படைத் துள்ள நூல்களை எழுதியுள்ள ருட்கர் பிரெக்மன், இந்த முக்கியமான நூலில் உலகில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரபலமான ஆய்வுகளில் சிலவற்றையும், பிரபலமான வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றையும் எடுத்து, மறுவடிவமைப்புச் செய்து, கடந்த 2,00,000 ஆண்டு கால மனித குல வரலாற்றைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தில் வழங்குகிறார்!
படித்தேன் - சுவைத்தேன்! நீங்களும் பயன் பெறலாமே!