பேராசான் தந்தை பெரியார் அவர்களிடம் அந்தக் காலத்தில் கழகப் பேச்சாளர்களிடையே - ஒருவித அச்சம் உண்டு. அதில் ஓரளவு உண்மையும் உண்டு.
மேடையில் தவறாகவோ அல்லது தனிப் பட்ட தாக்குதல்களாகவோ, சற்றுத் தரக்குறை வாக அல்லது பேசும் பேச்சாளரின் வயது, ‘தகுதி‘க்கு மீறிய சில கொச்சைச் சொற்றொடர் களையோ பேசினால் அதைக் கேட்டுப் பொறு மையாக அய்யா அவர்கள் இருக்கமாட்டார்கள்.
காரணம், அத்தகைய இளம் பேச்சாளர்கள் கைத்தட்டல்கள் கிடைக்க வேண்டும் என்பதற் காக சற்று கீழிறக்கமாகப் பேசுவது - இதுபோன்ற முறைகளால் இயக்கத்திற்கு அவப்பெயரும், கொள்கை பரப்புதலுக்கு அவமரியாதையும் ஏற்படக்கூடும்; மக்கள் நம் இயக்கப் பேச்சாளர்கள் பற்றியும் கேவலமாக மதிப்பிடும் அவலமும் உண்டாகும்; எனவே அதைத் தடுக்கவே - கண்டிப்பான ஒரு பொறுப்புள்ள தலைவர் என்பதால், அப்பேச்சுகளை தன்னிடம் இருக்கும் கைத்தடியைத் தட்டி, அதையும் பேசும் பேச்சாளர் கவனிக்கத் தவறுவாறே யானால் ‘இம்' என்று ஒருமுறை, இருமுறை லேசாக இருமுவது போல், "உறுமும்" குரலும் கேட்கும்படிச் செய்வார்கள்.
இப்படி அய்யா செய்வதைப் பேச்சாளர் புரிந்துகொண்டு பேச்சை முடிவுக்குக் கொண்டு வந்து நிறுத்திக் கொள்வார்! அதையும் கவனிக் காமல் வெறும் கைத்தட்டல்களுக்காகவே பேச் சைத் தொடர்ந்தால், அவர் அய்யாவின் கடும் நடவடிக்கைக்கும் ஆளாக வேண்டியிருக்கும்.
‘விடுதலை' ஆசிரியர் பொறுப்பினை ஏற்ற பிறகு எனக்கே அப்படிப்பட்ட ஒரு கசப்பான அனுபவம் ஏற்படவும் செய்தது!
திருவண்ணாமலை - செங்கம் அருகே புதுப்பாளையம் எனும் ஓர் ஊரில் பழைய நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கப் பிரமுகர் - ஊரில் உள்ள முக்கிய பிரமுகர் - மிராசுதாரர் அய்யாவுக்கு மிகவும் வேண்டியவர். அவரது குடும்பத்தில் திருமணம்; அய்யாவுடன் என் பெயரையும் சேர்த்து மணவிழா அழைப்பிதழில் அச்சிட்டு அழைத்திருந்தனர். எனது மாமனார் - மாமியார் ஆகியோரது குடும்ப நண்பரும் கூட அத்திருமணக்காரர்!
நான் சென்னையிலிருந்து திருவண்ணாமலை சென்று காலையில் மணவிழாவுக்குப் புறப் பட்டுச் சென்றேன் - உரிய நேரத்திற்குச் சற்று தாமதமாக. அய்யாவும், அன்னையாரும் முதல் நாள் இரவே அவர்கள் வீட்டிற்குச் சென்று ஓர் இடத்தில் தங்கிவிட்டார்கள். அய்யா, காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மணவிழா வைத் துவங்கி நடத்திக் கொண்டுள்ளார். தலைமையுரையே பேசுகிறார்; நான் அப்போது தான் போய்ச் சேர்ந்தேன் - அதிர்ச்சியாக இருந்தது. அய்யா பேசி திருமணம் நடத்தி வைத்து என்னைப் பேசிடப் பணித்தார்.
நான் வழக்கம்போல் சுயமரியாதைத் திரு மணத்தில் சடங்குகள் தவிர்க்கப்பட்டிருக்கும் சிறப்பு, நேரம், உழைப்பு, பொருள் மிச்சம் பற்றிப் பேசினேன். ஒரு 10 நிமிடம்தான் இருக்கும்; அய்யா தடியைத் தட்டினார். உடனே நான் ‘பட்'டென்று முடித்து விட்டேன். எனக்கு ஒரே மனச் சங்கடம். "நம்மீது கோபமாக அய்யா தடியைத் தட்டும்படி ஆகிவிட்டதே!" என்று அமைதியாகஅமர்ந்தேன். மணவிழா சிறிது நேரத்திற்கு எல்லாம் முடிந்து, அய்யாவுடன் வேனில் கிளம்பினேன். ‘வேன்' சற்று தூரம் சென்றது. வேனில் மற்றவர்கள் யாரும் இல்லை - அய்யா, அம்மா, புலவர், எனது மாமனார், மாமியார் தவிர!
அய்யா என்னைப் பார்த்து, "நான் ஏன் உன்னை சீக்கிரம் முடிக்கச் சொன்னேன் தெரியுமா? முதல் நாள் இரவு அங்கே அவரது வீட்டில் ‘சில சடங்குகள்' நடைபெற்றன. அதைப் பிறகு தான் தோழர்கள் இரவு வந்து சொன்னார் கள். நான் திருமண வீட்டுக்காரர்களில் எனக்கு வேண்டியவரிடம் கேட்டேன்.
அவரும், ‘பெண்கள் ஏதோ ஏதோ செய்து விட்டனர்!' என்று கூறி வருத்தம் தெரிவித்தார். நீங்கள் இப்போதுதான் வந்ததால் உங்களுக்கு இதுபற்றித் தெரிய வாய்ப்பில்லை; நீங்கள் வழக்கம் போல சுயமரியாதைத் திருமணம் என்றால் சடங்குகளற்ற முறையில் நடப்பது தானே என்பதால் பேசி விட்டீர்கள்!
ஊர்க்காரர்கள் இதுபற்றித் தவறாக நினைக் கக்கூடாது என்பதால் தான் விரைந்து முடிக்கத் தடியைத் தட்டி ஜாடைக் காட்டினேன்" என்று விளக்கம் சொன்னார்; நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்! பிறகு நிம்மதி அடைந்தேன்.
சென்னை மயிலாப்பூர் வீரப்பெருமாள் கோவில் தெரு எதிரில் (விவேகானந்தா கல்லூரி அருகில்) கழகக் கூட்டம். அய்யா இராமாயண விளக்கம் பற்றிப் பேசுகிறார்; என்னையும் அழைத்து முன்னால் பேசப் பணித்தார்கள் - நான் பேசத் தொடங்கி 10 மணித் துளிகள் ஆயின; அய்யா தடியைத் தட்டும் சத்தம் கேட்டதும் - பேச்சை மேலே தொடராமல், உடனடியாக ஒரு சில வார்த்தைகளுடன் உரையை முடித்து மேடையில் உட்கார்ந்து விட்டேன்.
கூட்டத்தில் இருந்தவர்களுக்கும், மேடை யில் இருந்த நமது முக்கியத் தோழர்களுக்கும் அதிர்ச்சி; ஏன் இப்படிப் பேசாமல் திடீரென்று முடித்து உட்கார்ந்து விட்டார் என்று!
அய்யா இரண்டரை மணி நேரத்திற்கு மேல் பேசினார் - ஆதாரங்களோடு. இரவு 10.30 மணிக் குக் கூட்டம் முடித்து வேனில் திரும்பும்போது (வேனில் எங்களைத் தவிர வேறு வெளியார் யாரும் இல்லை) என்னைப் பார்த்து, “ஏம்பா வீரமணி! ஏன் இன்னிக்கு திடீரென்று உன் பேச்சை முடிச்சு உட்கார்ந்திட்டே, என்ன கார ணம்?" என்று கேட்டார்.
எனக்கு ஒரே திகைப்பு. நான் அய்யாவிடம், "அய்யா நீங்கள் தடியைத் தட்டிய சத்தம் கேட்டது எனக்கு. அதனால் உடனே நிறுத்தச் சொல்லுகிறீர்கள் என்று கருதியே உடனடியாகப் பேச்சை நிறுத்தி விட்டு அமர்ந்தேன்" என்ற வுடன்,
ஓங்கி சிரித்த அய்யா, "அடப் பைத்தியக்காரா, நான் சீட்டா நாய் மேடையில் பக்கத்தில் சற்று அடம் பிடித்ததால் அதனை அடக்குவதற்குத் தான் தடியைத் தட்டினேன். அதை நீ தவறாகப் புரிந்து கொண்டு விட்டாய்" எனக் கூறி சிரித்தார். "இதற்குத்தானா இவ்வளவு சீக்கிரம் பேச்சை நிறுத்தி விட்டார்" என்று புலவரும், அம்மாவும் சிரித்துக் கொண்டே கூறினார்.
கட்டுப்பாடு காக்கும் தொண்டர்கள் கற்றுக் கொண்ட பாடங்களில் இதுவும் ஒன்றல்லவா?