இப்படி ஒரு புத்தகமா? - (1)
• Viduthalaiபிரேசில் நாட்டைச் சார்ந்த பாலோ கொயலோ என்ற பிரபல எழுத்தாளர் - (இந்த நூல் மூலம்தான் பிரபலமானவர்) எழுதிய 'ஆடு மேய்க்கும் இளைஞன் ஒருவன் தன்கனவைப் பற்றிச் சொல்லும், ஓர் எளிய கதையாக எழுதி, முதலில் வரவேற்பின்றி- பிறகு விற்பனையில் சிகரம் தொட்டு சாதனை படைத்த நூல் (ஆங்கில மொழிபெயர்ப்பின் தலைப்பு The Alchemist என்றும்) "ரசவாதி" என்று திருமிகு நாகலட்சுமி சண்முகம் அவர்களால் சிறந்த முறையில் மொழிபெயர்த்து, 'மஞ்சுள் பப்ளிஷங் ஹவுஸ்' பதிப்பகத்தாரால் வெளி வந்துள்ள தமிழ்ப் புதினம் - இது!
இன்றும் வாழும் இந்த பிரபல எழுத்தாளரின் இந்த நூல், 170 நாடுகளில், 83 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையைப் பெறும் நூல் இந்த "ரசவாதி".
இதுவரை 23 கோடிப் பிரதிகள் விற்பனையாகி யுள்ளனவாம்! வியப்பின் உச்சமல்லவா?
'பிரேசிலின் அக்காடமி ஆஃப் லெட்ரோ' அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான அவர், செவாலியே விருது பெற்றவர்.
2007இல் அய்.நா. சபையின் அமைதித் தூதுவராக அவர் நியமிக்கப்பட்டவர்.
இந்த நூலில் மதம் பற்றிய குறிப்புகள், கருத்துக்கள் இருப்பினும் (நம்மைப் போன்றவருக்கு மாறுபட்ட நிலை இருப் பினும்) அடிப்படையாக சொல்ல வரும் கருத்து, பொக்கிஷத்தை எங்கெங்கோ தேடி அலுத்த நிலையில் அது (ஆற்றலும் - திறமையும்) அவனுக் குள்ளே இருக்கிறது. அதை வெளிக்கொணர ஏனோ பலரும் மறக்கின்றனர் என் பதே இந்நூலின் மூலம் பெற வேண்டிய பாடமாகும்!
நூலாசிரியரின் (போர்த்து கிசீய மொழியில் மூலத்தின் முன்னுரையை மட்டும் தருகிறோம்)
பிறகு இந்நூல் ஏன், எப்படி இப்படி உலகத்தவரை தன்னுள்ள ஈர்த்த கருத்துக் காந்தமாக மாறியது என்பது உங்க ளுக்கே புரியும்!
தோல்வியால் துவளுவதோ, முயற்சிகளை இடையில் கைவிடுவதோ கூடாது. கடும் உழைப் பின் பலன் நிச்சயம் நல்ல விளைச்சலை காலந் தாழ்ந்தாவது தரும் என்பதையும் நாம் அதன் மூலம் கற்றுக் கொள்ளலாம்.
வாழ்க்கைப் பயணத்திற்கு இத்தகைய நூல்கள் தன்னம்பிக்கையை விதைத்து, வெற்றிக் கான விளைச்சல் அறுவடையை நிச்சயம் தரும்.
படித்துப் புரிந்து கொள் ளுங்கள். நூலாசிரியரின் முன் னுரை:
'ரசவாதி' என்ற இந்நூல் 1988இல் என்னுடைய தாய் நாடான பிரேசிலில், என்னுடைய தாய்மொழியான போர்ச்சுகீஸில் முதன்முதலாக வெளியிடப்பட்ட போது, யாருமே அதைக் கண்டு கொள்ளவில்லை. முதல் வாரத் தில் ஒரே ஒருவர் மட்டுமே ஒரு பிரதியை வாங்கிச் சென்றதாக பிரேசிலின் வடகிழக்குப் பகு தியைச் சேர்ந்த புத்தக வியாபாரி ஒருவர் என்னிடம் கூறினார். இரண்டாவது பிரதி விற்பனையாவதற்கு இன்னுமோர் ஆறு மாதங்கள் ஆயின. முதல் பிரதியை வாங்கிய வர்தான் இதையும் வாங்கினார்..! மூன்றாவது பிரதி விற்பனையாவதற்கு இன்னும் எத்தனைக் காலம் ஆயிற்று என்று யாருக்குத் தெரியும்.
அந்த ஆண்டின் இறுதியில், அந்நூல் சரியாக விற்பனையாகவில்லை என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்தது. அந்நூலைப் பிரசுரித்த என்னுடைய முதல் பதிப்பாளர் எங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்தார். அவர் என்னுடைய புத்தகத்தை என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, அந்த ஒட்டுமொத்தப் பணித்திட்டத்தையும் கைவிட்டுவிட்டார். எனக்கு அப்போது நாற்பத்தோரு வயது. நான் ஏதேனும் செய் தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
ஆனால் நான் அந்நூலின் மீது நம்பிக்கை இழக்க வில்லை, நான் கொண்டிருந்த முன்னோக்கிலிருந்தும் நான் பிறழவில்லை . ஏன்? ஏனெ னில், என்னுடைய இதயம், ஆன்மா ஆகியவை உட்பட என்னுடைய ஒட்டுமொத்த இருத்தலும் அந்தப் புத்தகத் தில் இருந்தது. நான் அந்நூலில் பயன்படுத்திய உருவகத்தை நடைமுறையில் என் சொந்த வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஒருவன் ஏதோ ஒரு பொக்கிஷத்தைத் தேடி, ஓர் அழகான அல்லது மாயாஜாலமான இடத்தைப் பற்றிக் கனவு கண்டபடி ஒரு பயணத்திற்குள் அடியெடுத்து வைக்கிறான். தான் தேடிய பொக்கிஷம் அந்த ஒட்டுமொத்த நேரமும் தன்னுடன்தான் இருந்தது என்பதை அப்பயணத் தின் முடிவில் அவன் உணருகிறான். நான் என்னுடைய பிறவி நோக்கத்தைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். எழுதுவதற்கான என் னுடைய திறன்தான் என்னுடைய பொக்கிஷம்.
நான் அந்நூலில் எழுதியுள் ளதைப்போல, நீங்கள் ஒன்றை விரும்பும்போது, உங்களுக்கு உதவுவதற்காக இந்த ஒட்டு மொத்தப் பிரபஞ்சமும் உங்க ளுக்குச் சாதகமாகக் காய்களை நகர்த்துகிறது. நான் பிற பதிப்பாளர்களின் கதவு களைத் தட்டத் தொடங்கினேன். ஒரு கதவு திறந்தது. கதவுக்கு அந்தப் பக்கம் இருந்தவர் என்மீதும் என்னுடைய புத்தகத் தின்மீதும் நம்பிக்கை கொண்டு, 'ரசவாதி'க்கு இரண்டாவதாக ஒரு வாய்ப்புக் கொடுக்க முன்வந்தார். வாய் வார்த்தை வழியாக, அந்நூல் மெல்ல மெல்ல விற்பனையாகத் தொடங்கியது. மூவாயிரம், பிறகு ஆறாயிரம், பத்தாயிரம் என்று அந்த ஆண்டு நெடுகிலும் அது பல ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனை யாகியது.
எட்டு மாதங்களுக்குப் பிறகு, பிரேசிலுக்கு வருகை தந்த அமெரிக்கர் ஒருவர், உள்ளூர்ப் புத்தகக் கடை ஒன்றில் அந்நூலின் பிரதி ஒன்றை வாங்கினார். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும், அதை அமெரிக்காவில் வெளியிடுவதற்கு அமெரிக்காவில் ஒரு பதிப்பாளரைக் கண்டுபிடிக்கவும் அவர் எனக்கு உதவ விரும் பினார். அமெரிக்க வாசகர்களுக்கு அந்நூலைக் கொண்டுவருவதற்கு ஹார்ப்பர்காலின்ஸ் பதிப் பகம் ஒப்புக் கொண்டது. அதன்படி, மிகவும் கோலாகலமாக அது அந்நூலை வெளியிட்டது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிலும் இன்னும் பல பிரபலமான பத்திரிகைகளிலும் அந்நூல் பற்றி அது விளம்பரம் செய்தது, வானொலிப் பேட்டிகளுக்கும் தொலைக்காட்சி நேர்காணல் களுக்கும் ஏற்பாடு செய்தது. ஆனால் அந்நூல் மெதுவாகத்தான் விற்பனையாகியது. பிரேசிலில் நிகழ்ந்ததைப்போலவே, வாய் வார்த்தை வழியாக அமெரிக்கர்களிடையே அது படிப்படியாகப் பிரபலமாகத் தொடங்கியது. பிறகு ஒருநாள், பில் கிளிண்டன் தன் கையில் அந்நூலின் ஒரு பிரதி யுடன் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது போன்ற ஒரு புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாயிற்று. பிறகு ஒருநாள், மடோனா அந்நூலைப் பற்றி 'வேனிட்டி ஃபேர்' இதழில் புகழ்ந்து தள்ளினார். பின்னர், ரஷ் லிம்பாக் மற்றும் வில் ஸ்மித்தில் தொடங்கி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்வரை, வாழ்வின் பல்வேறு தளங்களைச் சேர்ந்த மக்கள் திடீரென்று 'ரசவாதி' நூலைப் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தனர்.
(தொடரும்)
• Viduthalai(முன்னுரையின் தொடர்ச்சி இது)
"அந்நூலின் விற்பனையும் வீச்சும் விசுவ ரூபம் எடுத்தன. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிடுகின்ற 'மிக அதிகமாக விற்பனையாகும் நூல்கள்' பட்டியலில் அந்நூல் இடம் பிடித்தது. இது எந்தவொரு நூலாசிரியருக்கும் ஒரு முக்கியமான மைல்கல் என்றால் அது மிகையல்ல. சுமார் 400 வாரங்களுக்கு மேல் அந்நூல் அப்பட் டியலில் நிலை கொண்டிருந்தது. இன்றுவரை எண்பது வெவ்வேறு மொழிகளில் அது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இன்று உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நூலாசிரியர்களுடைய நூல் களில் அந்நூல்தான் மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இருபதாம் நூற் றாண்டின் தலைசிறந்த பத்துப் புத்தகங்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது.
'ரசவாதி' புத்தகம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதை நான் அறிந்திருந்தேனா என்று மக்கள் என்னிடம் தொடர்ந்து கேட் கின்றனர். இல்லை என்பதுதான் அதற்கான நேர்மையான பதில். எனக்கு எந்த யோசனையும் இருக்கவில்லை. ரசவாதி மிகவும் பிரபலமாகும் என்பது எனக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? 'ரசவாதி' நூலை நான் எழுத உட்கார்ந்தபோது, நான் என்னுடைய ஆன் மாவைப் பற்றி எழுத விரும் பினேன் என்பது மட்டும் தான் எனக்குத் தெரிந்திருந்தது. என்னு டைய பொக்கிஷத்தைக் கண்டுபிடிப்பதற்கான என் னுடைய தேடலைப் பற்றி நான் எழுத விரும்பினேன். நான் சகுனங்களைப் பின் தொடர்ந்து செல்ல விரும் பினேன். ஏனெனில், சகு னங்கள் கடவுளின் மொழி என்பதை அப்போதே நான் அறிந்திருந்தேன்.
'ரசவாதி' நூல் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு இருந்தாலும், அது ஜீவனற்றுப் போய்விடவில்லை. அந்நூல் இன்றும் உயிர்த்துடிப்போடு இருக்கிறது. என்னுடைய இதயத் தையும் ஆன்மாவையும் போலவே, அது தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில், என் இதயமும் ஆன் மாவும் அதில் இருக்கின்றன. மேலும், என்னுடைய இதயமும் ஆன்மாவும்தான் உங்களுடைய இதயமும் ஆன்மாவும்கூட. சான்டியாகோ என்ற அந்த இடையன் நான்தான். நான் என்னுடைய பொக்கிஷத்தைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன். நீங்களும் அந்த இடையன் சான்டியாகோதான். நீங்கள் உங்க ளுடைய பொக்கிஷத்தைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஒருவருடைய கதைதான் எல்லோருடைய கதையுமாகும்; ஒரு நபரின் தேடல்தான் ஒட்டு மொத்த மனிதகுலத்தின் தேடலுமாகும். இக்காரணத்தால் தான், இத்தனை ஆண்டுகளாக உலகம் நெடுகிலும் பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களால் அந் நூலுடன் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்துள்ளது. எந்தப் பாரபட்சமும் இன்றி அந்நூல் உணர்ச்சிரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் அவர்களைத் தொட்டுள்ளது.
'ரசவாதி' நூலை நான் மீண்டும் மீண்டும் படிக்கி றேன். நான் அதை முதன் முதலில் எழுதியபோது என்னுள் எத்தகைய உணர் வுகளை நான் உணர்ந்தேனோ, அதே உணர்வுகளை இப் போது நான் அந்நூலைப் படிக்கின்ற ஒவ்வொரு முறை யும் நான் அனுபவிக்கிறேன். நான் மகிழ்ச்சியை உணரு கிறேன். ஏனெனில், நீங்களும் நானும் அதில் ஒன்றுகலந்து இருக்கிறோம். நான் இனி ஒருபோதும் தனியாக இருக்க மாட்டேன் என்ற அறிதலும் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக் கிறது. நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னைப் புரிந்து கொள்ளுகின்றனர். அவர்கள் என்னுடைய ஆன்மாவைப் புரிந்து கொள்ளுகின்றனர். இது தொடர்ந்து எனக்கு நம்பிக் கையூட்டுகிறது. உலகம் நெடு கிலும் நிகழ்ந்து கொண்டிருக் கின்ற அரசியல்ரீதியான மோதல்கள், பொருளாதார ரீதியான மோதல்கள், மற்றும் கலாச்சாரரீதியான மோதல்களைப் பற்றி நான் படிக்கும் போது, ஓர் இணைப்புப் பாலத்தைக் கட்டுவதற்கான சக்தி நமக்குள் இருக்கிறது என்பது எனக்கு நினைவு படுத்தப்படுகிறது. என்னுடைய அண்டை வீட்டுக்காரரால் என்னுடைய மதத்தையோ அல்லது என்னுடைய அரசியலையோ புரிந்து கொள்ள முடியாவிட்டால்கூட, என்னு டைய கதையை அவரால் புரிந்து கொள்ள முடியும். அவர் என்னுடைய கதையைப் புரிந்து கொண்டால், அவர் என்னிடமிருந்து வெகுதூரம் தள்ளி இல்லை என்று அர்த்தம். ஒரு பாலத்தைக் கட்டுவதற்கான சக்தி எப்போதும் எனக்குள் இருக்கிறது. கருத்து வேறுபாடுகள் நீங்கப் பெற்று மீண்டும் சமாதானம் செய்து கொள்ளுவதற்கு எப்போதும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. என்றேனும் ஒருநாள் நானும் அவரும் ஒரு மேசையைச் சுற்றி ஒன்றாக அமர்ந்து, எங்களுடைய மோதல்களுக்கு ஒரு முடிவு கட்டுவதற்கான ஒரு வாய்ப்பு எப்போதும் இருக்கிறது. அந்த நாளன்று, அவர் தன்னுடைய கதையை என்னிடம் கூறுவார், நான் என்னுடைய கதையை அவரிடம் பகிர்ந்து கொள்ளுவேன்.
- பாலோ கொயலோ
(இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சில சொற்கள் எமக்கு உடன்பாடில்லாதவை என்றாலும் நூலா சிரியர் கருத்து என்பதால் அதை நீக்காமல் அப்படியே வெளியிட்டுள்ளோம் - அது எனது ஒப்புதல் ஆகாது).