பக்கங்கள்

செவ்வாய், 7 ஜனவரி, 2020

ஜப்பானிய முதியவர்களின் சிறந்த வாழ்வியல் "இக்கிகை" (IKIGAI) (6)

ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப் போரின் முடிவில் மிகப் பெரிய அழிவுகளிலிருந்தும், அதன் காரணமாக ஏற்பட்ட கொடுமையான விளைவுகளிலிருந்தும்  எப்படி வெளியேறி, தங்களை, தங்கள் நாட்டினை ஒரு  வலிமை வாய்ந்த தொழில் பொருளாதாரத்தில் நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது என்ற "ரகசியத்தை" நாம் அனைவரும் உணர்ந்து, பின்பற்ற முயல வேண்டும்.

வயதான முதியவர்களுக்கும், மூத்தோர்களுக் கும், பழைய நடைமுறைகளை அறிந்தவர் களுமான - 80 வயது தாண்டியவர்களுக்கும் ஒன்று நன்றாக நினைவிருக்கும்.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் "Made in Japan", "Made in Germany" என்று போடப்பட்டுள்ள அந்தந்த நாட்டு நுகர்வோர் பொருளை வாங்கும்போது - நம் நாட்டில் 'Made in Japan' பொருளை வாங்கத் தயங்குவார்கள்; அல்லது வாங்காமல்,'Made in Germany' என்று போடப்பட்ட ஜெர்மானிய நாட்டின் தயாரிப்புகள் கெட்டியானது, நீண்ட நாள் உழைக்கக் கூடியது என்று அனுபவித்தில் உணர்ந்து, அதையோ வாங்குவார்கள்.

அப்படிப்பட்ட ஜப்பான் எப்படி மாறியது? கைக் கடிகாரங்கள், எழுதும் பேனாக்கள், இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள மோட்டார் கார்கள் இவைகளை மக்கள் எதிர்நோக்குகிறார்கள்.

ஜப்பானின் தொழில் படையெடுப்புக்கு ஆளாகாத உலக நாட்டு குடும்பங்கள், வீடுகளே இல்லை என்பதே உண்மையாக இருந்தது.

தற்போது அது 'Made in China' வினால் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளது; அந்த நாட்டில் தான் அமெரிக்காவின் பிரபல கம்பெனிகளின் உற்பத்திப் பொருள்கள் தயாராகி, அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தைக்குச் சென்று அதைக் கைப்பற்றியுள்ளது. காரணம் லேபர் என்ற தொழிலாளிகளின் மலிவு கூலி முதலியவற்றால் (இதுவே மற்ற நாடுகளில் கொள் முதல், கூடுதல் சம்பளம் மற்றவை அதிகம் என்பதால்) என்ற நிலை.

ஜப்பானியர்களுக்கு அடிக்கடி பூகம்பங்கள்; சுனாமிகள், ஆழிப் பேரலைகள் தரும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல; என்றாலும் துணிவுடன் இயற்கைப் பேரிடர்களையும் அவர்கள் எதிர் கொள்கின்றனர்!

இதற்கு அடிப்படைக் காரணம் அம்மக்களின் மனஉறுதிக்கு மூலவித்து - எங்கேயிருந்து நடப் படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

ஆரம்பப் பள்ளிகளில் - ஜப்பானில் குழந்தை களுக்குச் சொல்லிக் கொடுக்கும் போதே ஒரு ஜப்பானியச் சொல்லை ஓதி விடுகிறார்கள்.

அது என்ன தெரியுமா? 'கேன்பாரு'  (Canbaru)

இச்சொல்லுக்குப் பொருள் என்ன தெரியுமா நண்பர்களே?

"விடா முயற்சியைக் கைவிடாதே"

"எது உன்னுடைய முழுத் திறமையோ  அதை நன்றாக செய்வதிலே முழு கவனஞ் செலுத்து" என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது!

வேறு திசை திரும்புதலே இருக்காது -  இருக்கக் கூடாது, அவர்கள் வேலை செய்யும் போது! பெரும் பெரும் கம்பெனிகளைப் பார்வையிட வெளிநாட்டு முக்கிய - தலைமை அதிகாரிகளோ, அமைச்சர்களோ சென்றால்கூட வேலை செய்யும் எவருடைய கவனமும் அவர்கள் மேல் பாய்வதே கிடையாதாம்!

இந்த 'பணியிடப் பண்பு' (Work Culture) நமக்கு வர வேண்டும்.

தேசத் தலைவர்கள் மறைந்தால், உடன் விடுமுறை விடும் பழக்கம் அங்கே கிடையாது. "உழைப்பதே அவர்களுக்கு நாம் காட்டும் உண்மை மரியாதை" என்று கூறுகிறார்கள் அவர்கள்! என்னே பண்பு நலம்!

இது நம் நாட்டில் எப்போது வருவது?

எதற்கெடுத்தாலும் விடுமுறை, விடுமுறை! இப்படி நாட்டு நலன் பாதிப்பு பற்றிய கவலையற்ற தன்மை. ஜப்பானில் குடிமை அறஞ் சார்ந்ததாக வளர்வதன் நற்பயன் பண்பு.

(தொடரும்)

-  விடுதலை நாளேடு 31 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக