பக்கங்கள்

செவ்வாய், 7 ஜனவரி, 2020

புத்தாண்டு சபதங்களும் - உறுதிமொழிகளும்!

2020 புத்தாண்டு பிறந்துவிட்டது; ‘காலமும், அலைகளும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை' என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி!

எது எப்படி நடந்தாலும், நாளும், மணியும் நகர்ந்து கொண்டே இருக்கிறது.

வயதும் ஏறிக்கொண்டே செல்கிறது. இதில் ஒவ்வொரு புத்தாண்டையும் அறிவுள்ள மனித குலம் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்கிறது.

கூடி மகிழ்ந்து, மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ளும் இவ்வுணர்வு ஜாதி, மதம், நாடு, இனம் என்ற எல்லைகளைக் கடந்த மனித குலத்தின் மாண்புகளில் ஒன்று.

‘‘உலகம் ஓர் குலம்; மனிதர்க்கு அழகு மான மும், அறிவும்!'' என்று அறிவுரைத்த பெரியார் களின் வழியை லட்சியப் பயணத்தில் "சுவடு களாக்கி" நடக்கவேண்டிய நேர் வழியில் அனை வரும் நடந்தால், காவல் துறையும், நீதிமன்றங் களும், சட்டங்களும்கூட தேவையிருக்காது!

கூட்டாக வாழ்ந்த சமூகத்தில் சிலர் தலை மையைப் பற்றியவுடன், அதைக் காப்பாற்றிடவே பெரிதும் சுயநலவாதிகளாகி தவறுகளை இழைக்கத் தொடங்கியதன் விளைவே சட்டங் களை உருவாக்கினர். பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்னே நம் அறிவு ஒளிகள் கூறினர்:

‘‘தீதும் நன்றும் பிறர் தர வாரா,''

என்னே அருமையான கவிதை வரிகள்! ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என்று தொடங்கும் பாடலில் வரும் வரிகள் மேலே காட்டியது.

ஒவ்வொரு நாளும், நாம் கணக்குப் பார்த்துச் செலவு செய்வதுபோல, பொதுப் பணிகள் - அறப்பணிகள் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டு, செய்து முடித்தோமா என்ற வரவு - செலவு கணக்கை மனிதகுலம் பார்த்து மகிழும் பழக்கத்தை ஒரு நெறியாக்கிக் கொண்டால், அதைவிட சரியான வாழ்வுதான் வேறு ஏது?

‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ' என்று உழைத்து, அதன்மூலம் உயர்ந்துவிட்டதும், சமூகத்திற்கு என்ன செய்தோம்? நம்மை வாழ வைக்கும் நமது மனித சமூகத்திற்கும் சேவை  - தொண்டு - செய்வதைவிட மகிழ்ச்சி வேறு உண்டா? பலரும் ஒன்றாம் தேதி உறுதியெடுத்து முதல் வாரம் கடுமையாகக் கடைப்பிடித்து, அடுத்த வாரம் முதல் நீர்த்துப் போகச் செய்வதில் எந்தப் பயனும் இல்லை!

சபதம் - சூளுரை இவைகளை எடுப்போரின் நெஞ்சில் அதைச் செயல்படுத்தும் உறுதியுடன் செயல்பட்டு, நிறைவேற்றி மகிழவேண்டும்!

நமக்கு  நாமே இடும் கட்டளையும், அதன் செயற்பாடுகளும் மிகவும் முக்கியமாகும்.

பொருள் சம்பாதிப்பதில், ஒரு பகுதியைச் சேமிக்க சபதம் எடுத்து, சம்பளம் வாங்கியவுடன் அல்லது மாதம் பிறந்தவுடனேயே சேமிப்பு நிதியாக வங்கியில் போட்டுவிட்டுத்தான் மற்ற ‘செலவின பட்ஜெட்' - என்ற பழக்கம் - வழக்க மாக - வைராக்கியமாக மாறவேண்டும்.

கண்டதையெல்லாம் வாங்காதீர், "இது இன்றியமையாததா?" என்று ஆயிரம் முறை எண்ணி, அலசி, துருவி, கேள்வி கேட்டு, ஆம்! தேவைதான் என்றால் மட்டுமே வாங்குங்கள்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் உங்கள் நேரத்தையும், பொருளையும் கொள்ளை யடிக்கின்றன - வாங்கிடத் தூண்டும் "போதையை" ஊட்டுகின்றன - எச்சரிக்கையுடன் செலவழியுங்கள்.

எளிமையால் ஏற்றம் வரும்!

ஆடம்பரம் ஆழக் குழிதோண்டும்!

சொகுசு கார்கள் வாங்கிடும் எவரும் 24 மணிநேரமும் அதிலா படுத்துறங்குகிறார்கள்? எண்ணிப்பாருங்கள்!

பழைய காரில் கீறல் விழுந்தால் ஏற்படாத கவலை, விலை உயர்ந்த காரில் விழும் கீறலால் அதிகக் கவலையை உருவாக்கும் என்பதுதானே மிச்சம்!

இதுபோல, ‘சிக்கனம் எக்கணமும்!' என்ற உறுதி, உங்களை வாழ வைப்பதோடு, உங்கள் சுய மரியாதையையும் எவரிடமும் அடகு வைக்கத் தூண்டாது!

புத்தாண்டு மலர்ந்ததோடு

புது உறுதிகள் செயல் வடிவமெடுக்கும்.

- விடுதலை நாளேடு, 1.1. 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக