பக்கங்கள்

வியாழன், 2 ஜனவரி, 2020

ஜப்பானிய முதியவர்களின் சிறந்த வாழ்வியல் "இக்கிகை" (IKIGAI) (4)

முதுமை அடைபவர்கள் அது குறித்துப் பெரிதும் கவலை ஏதும் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அது இயற்கையானது; அதைத் தடுத்திட எவராலும் முடியாது; இயல்பானது - உடற் கூற்றுக்கு ஏற்றபடி!

ஆனால் முதுமையிலும் 'இளமை' ததும்ப எப்படி வாழு கிறார்கள் - நூறு வயதினைத் தாண்டி விட்ட ஜப்பானிய முதி யவர்கள் என்பதை கடந்த சில வாழ்வியல் கட்டுரைகளில் படித் தீர்கள்;

அதன் தொடர்ச்சியே இக்கருத்துக்களும் - படிப்பதோடு நிறுத்திவிடாதீர்கள்; செயல்படுத்தி பயனடைய முயற்சியுங்கள்!

உடலின் அனைத்து உறுப்புகளும் முதுமையில் பாதிப்புக்கு ஆளாகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாயினும்கூட, அதில் இதயம், மூளை போன்ற முக்கிய உறுப்புகளை 'இளமை' யாகவே வைத்திருக்கவும், அதன் மூலம் நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் பெரிதும் பயனடையவும் செய்யலாமே!

இளைய இதயம், ஈரமான இதயம் ஈகையின் ஊற்றான இதயம் - பழி வாங்குதலை மறுத்துவிட்ட - மறந்துவிட்ட இதயம் - மன்னிக்கத் தயங்காத - தவறாத இதயம்! புரிகிறதா?  எல்லாம் நமது பண்பைச் செம்மையாக்கும். நமக்கு மகிழ்ச்சி ஊற்றாக - என்றும் அடைபடாததாக பெருக்கெடுத்தோடும்!

மூளையை இளமையாக்கிக் கொள்ளுதல்  எப்படி? நம்முடைய வயதை யொத்தவர்களோடு மட்டும் பழகாமல் - நமது பேரப் பிள்ளை களையொத்த வயதினருடன் கலந்து உரையாடுங்கள் - உறவாடுங்கள்!

அவர்களது துணிச்சல் - அஞ்சாமை! - உங்களில் பலருக்கும் வந்து தீரும்!

முதுமை என்பது அனுபவச் சேமிப்பு!

இளமை என்பது - துணிவின் துடிப்பு!!

இரண்டும் நம்மிடம் அமைந்தால் பருத்தி ஆடையாய் காய்த்ததற்கு ஒப்பாகும்! இல்லையா?

சாலையில் சந்திப்பவர்களை புன்சிரிப்போடு வணக்கம் தெரிவித்து, கலகலப்பாக காட்சி யளியுங்கள். ஒருபோதும் "உம்முணா மூஞ்சிகளாக" இருக்காதீர்கள்! உங்களைப் பற்றிய நினைப்பு உங்கள் பேரப் பிள்ளைகளுக்கு, உங்கள் நண்பரான இணையருக்கு வரும்போதெல்லாம் புன்னகை பூத்த உங்கள் முகம்தான் அவர்களின் அகத்தில் காட்சியளிக்க வேண்டும், மறவாதீர்!

உங்கள் கவலைகளை மறக்க வீட்டுக்குள் ளேயே இருந்து மனதிற்குள் முணுமுணுத்து முதுமையைப் பெருக்கிக் கொள்ளாதீர்கள்!

முகிலைக் கிழித்த முழு மதிபோல காட்சி யளித்து, 'ஹலோ' சொல்லி சந்திப்பவர்களை எதிர்கொள்ளத் தவறாதீர்கள்!

வீட்டில் ஒரு சிறு தோட்டம் வைத்து அவற்றை வளர்ப்பதில் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். அத்தோட்டம் காய்கறித் தோட்டமாக அமையின் மிகவும் சிறப்பு.

பூத்த பூக்களும், பழுத்துள்ள மரங்களும் நம் உழைப்பை மூலதனமாக கொண்டு வளர்ந் தோங்கிய அத்தோட்டம் நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆனந்தமாகக் குளித்து, கரையேற வைக்கும்!

சிறிது நேரம் அச்செடிகளிடம் பேசுங்கள்; அப்பூக்களுடன் கொஞ்சுங்கள் - அங்கே காய்த் துக் குலுங்கும் பழங்களோடு சிரித்து மகிழுங்கள்!

பூக்களைப் பறித்து தலையில் சூட்டி மகிழ் வோரைவிட, செடியில் அவை பூத்துக் குலுங்கு வதைக் காண ஏற்படும் பிறரது மகிழ்ச்சிக்கு ஈடு இணை எவைதான் உண்டு நண்பர்களே?

விரல்களுக்கு வேலை கொடுங்கள் - எழுதும் கட்டுரைகளை வாயால் கூறி (Dictate) இயந்திரக் கருவிகளில் பதிவு செய்வதைவிட எழுதும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சத்தில் நிறைந்த இளம் புரட்சிக் கவிஞன் தாரா பாரதியின் கவிதை வரிகளை நான் மறப்பதே இல்லை.

"வெறுங்கை என்பது  மூடத்தனம் - உன்

விரல்கள் பத்தும் மூலதனம்"

நம்மிடமிருந்து பறிக்க முடியாத மூலதனம்  - அதனை முடக்காதீர்கள்!

செயல்படுத்துங்கள் - மூளையும் உங்கள் வசப்படும் என்றும்!

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 28 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக