பக்கங்கள்

செவ்வாய், 7 ஜனவரி, 2020

முதுமை பற்றி மூத்த மருத்துவர்களின் விளக்கம்

I. வயதாவது

1. வயது கூடுவது இயல்பான மனித  வளர்ச் சியின் தவிர்க்க இயலாத மாற்றம். இது நம்முடைய வாலிபப் பருவத்திலிருந்தே தொடங்குகிறது என்பது நினைவிலிருக்கட்டும்.

2. நடுத்தர வயதை நாம் எட்டும்போதே நமது உடலின் அவயங்கள் - உறுப்புகளின் திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் துவங்குகின்றன.

3. ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் முதுமை திடீரென வந்துவிட்டது என்று யாரும் கருத வேண்டாம்.

II. பல்வகை வயதுகள்

(அ) கால ஓட்ட வயது (Chronological Age)

இது காலத்தை ஒட்டிய கணக்கீட்டு முறை வயது. ஒருவரின் வயது கால அளவுப்படி பிறந்த நாளிலிருந்து கணக்கிடுவதால் சொல்லப்படும்  வயது.

(ஆ) உடல் உறுப்புகளை வைத்து மதிப்பிடப் படும் வயது (Biological Age)

உடல் உறுப்புகளின் செயல் திறன் மதிப் பீட்டையொட்டி, கணக்கிடப்படும் வயது. 50 வயதாகியிருக்கும் உணர்வு, உண்மையில் 35 வயதே நிரம்பிய இளைஞருக்கு ஏற்படும் உணர்வு என்றால், அவரது உடற்கூற்றின் பயன் பாடு, செயல் திறனைக் கொண்டதே இந்த வயது கணக்கீடு.

(இ) மனோ தத்துவ ரீதியான வயது

(Psychological Age)

வயதானாலும்கூட, அவர்களின் மனதிடம், உற்சாகம் - சுறுசுறுப்பு, விரக்தி அடையாது விறு விறுப்பான அன்றாட வாழ்க்கை! எதிர் காலத்தில் அவர்கள் செய்ய வேண்டிய பணிபற்றி இடை யறாது சிந்தித்து ஒரு இளைஞரின் துடிப்பையே கொண்டிருப்பதுதான். இந்தக் கணக்குப்படி அவர்களது திட்டமிடல் எதையும் ஆக்கரீதியாக அணுகி சலிப்போ, சோர்வோ இன்றி தான் மேற்கொள்ளும் பணியில் உற்சாகத்தோடு, உள்ளார்கள் அவர்கள். காலக் கணக்குப்படி 'முதியவர்கள்' முத்திரை பெற்றவர்களாயினும், நடைமுறையில் அவர்கள் வாலிபர்களே என்பதை இந்த மனோ ரீதியான வயது   செயல் வடிவாகி இளமையைப் பறை சாற்றும். பொதுவாக வயது முதியவர்கள் ஒரு கேள்வியை எழுப்பக் கூடும். நமக்கு ஏற்படும் முதுமை அனுபவங்கள் இயல்பானதுதானா? அல்லது  வயதுக்கு மேற் பட்ட முதுமை உருவாகியுள்ளதா என்ற சந்தேகம் வரக்கூடும்.

இதற்கு விடை என்ன தெரியுமா? ஒவ்வொரு மனிதரும் முதுமைப் பருவமடைதலில் தனித்தனி தன்மையரே. அவர்கள் இதில் மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்ப்பதே கூடாது; தேவையில்லை; அது அவர்கள் உறுப்புகளின் வளர்ச்சி, முதுமையால் என்ற மாறுதலை உருவாக்கும் தன்மை வெவ்வேறாகவே இருக்கும்.

ஒருவர் இன்னொருவருடன் தம்மை ஒப்பிட்டு மனக் கலக்கம் அடைய வேண்டிய அவசியமே இல்லை.

சில பேருக்கு இள வயதிலே நரைக்கத் தொடங்குகிறது; சிலர் வழுக்கைத் தலையர்களாக ஆகிறார்கள்! அது அவரவர்கள் கூற்றின் மாறு தலையொட்டி உள்ளுறுப்பின் வளர்ச்சி அம்சத் தின் மாறுபாட்டை ஒப்பிட்டே செய்ய முடியும்.

உலகத்தின் பல தலைவர்களின் சிந்தனையும், செயலாக்கமும், அவரவரது இளமைக் காலத்தை யொட்டிய  பழக்க வழக்கம், நடப்புக்கும், எதை யும் எப்படி ஒருவருக்கும் - மற்றவருக்கும் ஒப்பிட முடியாத மாறுதல் - வளர்ச்சி- முதுமையில் காணப்படுவது இயற்கையே!

(தொடரும்)

- விடுதலை நாளேடு 4.1.20

புத்தாண்டு சபதங்களும் - உறுதிமொழிகளும்!

2020 புத்தாண்டு பிறந்துவிட்டது; ‘காலமும், அலைகளும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை' என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி!

எது எப்படி நடந்தாலும், நாளும், மணியும் நகர்ந்து கொண்டே இருக்கிறது.

வயதும் ஏறிக்கொண்டே செல்கிறது. இதில் ஒவ்வொரு புத்தாண்டையும் அறிவுள்ள மனித குலம் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்கிறது.

கூடி மகிழ்ந்து, மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ளும் இவ்வுணர்வு ஜாதி, மதம், நாடு, இனம் என்ற எல்லைகளைக் கடந்த மனித குலத்தின் மாண்புகளில் ஒன்று.

‘‘உலகம் ஓர் குலம்; மனிதர்க்கு அழகு மான மும், அறிவும்!'' என்று அறிவுரைத்த பெரியார் களின் வழியை லட்சியப் பயணத்தில் "சுவடு களாக்கி" நடக்கவேண்டிய நேர் வழியில் அனை வரும் நடந்தால், காவல் துறையும், நீதிமன்றங் களும், சட்டங்களும்கூட தேவையிருக்காது!

கூட்டாக வாழ்ந்த சமூகத்தில் சிலர் தலை மையைப் பற்றியவுடன், அதைக் காப்பாற்றிடவே பெரிதும் சுயநலவாதிகளாகி தவறுகளை இழைக்கத் தொடங்கியதன் விளைவே சட்டங் களை உருவாக்கினர். பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்னே நம் அறிவு ஒளிகள் கூறினர்:

‘‘தீதும் நன்றும் பிறர் தர வாரா,''

என்னே அருமையான கவிதை வரிகள்! ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என்று தொடங்கும் பாடலில் வரும் வரிகள் மேலே காட்டியது.

ஒவ்வொரு நாளும், நாம் கணக்குப் பார்த்துச் செலவு செய்வதுபோல, பொதுப் பணிகள் - அறப்பணிகள் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டு, செய்து முடித்தோமா என்ற வரவு - செலவு கணக்கை மனிதகுலம் பார்த்து மகிழும் பழக்கத்தை ஒரு நெறியாக்கிக் கொண்டால், அதைவிட சரியான வாழ்வுதான் வேறு ஏது?

‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ' என்று உழைத்து, அதன்மூலம் உயர்ந்துவிட்டதும், சமூகத்திற்கு என்ன செய்தோம்? நம்மை வாழ வைக்கும் நமது மனித சமூகத்திற்கும் சேவை  - தொண்டு - செய்வதைவிட மகிழ்ச்சி வேறு உண்டா? பலரும் ஒன்றாம் தேதி உறுதியெடுத்து முதல் வாரம் கடுமையாகக் கடைப்பிடித்து, அடுத்த வாரம் முதல் நீர்த்துப் போகச் செய்வதில் எந்தப் பயனும் இல்லை!

சபதம் - சூளுரை இவைகளை எடுப்போரின் நெஞ்சில் அதைச் செயல்படுத்தும் உறுதியுடன் செயல்பட்டு, நிறைவேற்றி மகிழவேண்டும்!

நமக்கு  நாமே இடும் கட்டளையும், அதன் செயற்பாடுகளும் மிகவும் முக்கியமாகும்.

பொருள் சம்பாதிப்பதில், ஒரு பகுதியைச் சேமிக்க சபதம் எடுத்து, சம்பளம் வாங்கியவுடன் அல்லது மாதம் பிறந்தவுடனேயே சேமிப்பு நிதியாக வங்கியில் போட்டுவிட்டுத்தான் மற்ற ‘செலவின பட்ஜெட்' - என்ற பழக்கம் - வழக்க மாக - வைராக்கியமாக மாறவேண்டும்.

கண்டதையெல்லாம் வாங்காதீர், "இது இன்றியமையாததா?" என்று ஆயிரம் முறை எண்ணி, அலசி, துருவி, கேள்வி கேட்டு, ஆம்! தேவைதான் என்றால் மட்டுமே வாங்குங்கள்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் உங்கள் நேரத்தையும், பொருளையும் கொள்ளை யடிக்கின்றன - வாங்கிடத் தூண்டும் "போதையை" ஊட்டுகின்றன - எச்சரிக்கையுடன் செலவழியுங்கள்.

எளிமையால் ஏற்றம் வரும்!

ஆடம்பரம் ஆழக் குழிதோண்டும்!

சொகுசு கார்கள் வாங்கிடும் எவரும் 24 மணிநேரமும் அதிலா படுத்துறங்குகிறார்கள்? எண்ணிப்பாருங்கள்!

பழைய காரில் கீறல் விழுந்தால் ஏற்படாத கவலை, விலை உயர்ந்த காரில் விழும் கீறலால் அதிகக் கவலையை உருவாக்கும் என்பதுதானே மிச்சம்!

இதுபோல, ‘சிக்கனம் எக்கணமும்!' என்ற உறுதி, உங்களை வாழ வைப்பதோடு, உங்கள் சுய மரியாதையையும் எவரிடமும் அடகு வைக்கத் தூண்டாது!

புத்தாண்டு மலர்ந்ததோடு

புது உறுதிகள் செயல் வடிவமெடுக்கும்.

- விடுதலை நாளேடு, 1.1. 20

ஜப்பானிய முதியவர்களின் சிறந்த வாழ்வியல் "இக்கிகை" (IKIGAI) (6)

ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப் போரின் முடிவில் மிகப் பெரிய அழிவுகளிலிருந்தும், அதன் காரணமாக ஏற்பட்ட கொடுமையான விளைவுகளிலிருந்தும்  எப்படி வெளியேறி, தங்களை, தங்கள் நாட்டினை ஒரு  வலிமை வாய்ந்த தொழில் பொருளாதாரத்தில் நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது என்ற "ரகசியத்தை" நாம் அனைவரும் உணர்ந்து, பின்பற்ற முயல வேண்டும்.

வயதான முதியவர்களுக்கும், மூத்தோர்களுக் கும், பழைய நடைமுறைகளை அறிந்தவர் களுமான - 80 வயது தாண்டியவர்களுக்கும் ஒன்று நன்றாக நினைவிருக்கும்.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் "Made in Japan", "Made in Germany" என்று போடப்பட்டுள்ள அந்தந்த நாட்டு நுகர்வோர் பொருளை வாங்கும்போது - நம் நாட்டில் 'Made in Japan' பொருளை வாங்கத் தயங்குவார்கள்; அல்லது வாங்காமல்,'Made in Germany' என்று போடப்பட்ட ஜெர்மானிய நாட்டின் தயாரிப்புகள் கெட்டியானது, நீண்ட நாள் உழைக்கக் கூடியது என்று அனுபவித்தில் உணர்ந்து, அதையோ வாங்குவார்கள்.

அப்படிப்பட்ட ஜப்பான் எப்படி மாறியது? கைக் கடிகாரங்கள், எழுதும் பேனாக்கள், இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள மோட்டார் கார்கள் இவைகளை மக்கள் எதிர்நோக்குகிறார்கள்.

ஜப்பானின் தொழில் படையெடுப்புக்கு ஆளாகாத உலக நாட்டு குடும்பங்கள், வீடுகளே இல்லை என்பதே உண்மையாக இருந்தது.

தற்போது அது 'Made in China' வினால் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளது; அந்த நாட்டில் தான் அமெரிக்காவின் பிரபல கம்பெனிகளின் உற்பத்திப் பொருள்கள் தயாராகி, அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தைக்குச் சென்று அதைக் கைப்பற்றியுள்ளது. காரணம் லேபர் என்ற தொழிலாளிகளின் மலிவு கூலி முதலியவற்றால் (இதுவே மற்ற நாடுகளில் கொள் முதல், கூடுதல் சம்பளம் மற்றவை அதிகம் என்பதால்) என்ற நிலை.

ஜப்பானியர்களுக்கு அடிக்கடி பூகம்பங்கள்; சுனாமிகள், ஆழிப் பேரலைகள் தரும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல; என்றாலும் துணிவுடன் இயற்கைப் பேரிடர்களையும் அவர்கள் எதிர் கொள்கின்றனர்!

இதற்கு அடிப்படைக் காரணம் அம்மக்களின் மனஉறுதிக்கு மூலவித்து - எங்கேயிருந்து நடப் படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

ஆரம்பப் பள்ளிகளில் - ஜப்பானில் குழந்தை களுக்குச் சொல்லிக் கொடுக்கும் போதே ஒரு ஜப்பானியச் சொல்லை ஓதி விடுகிறார்கள்.

அது என்ன தெரியுமா? 'கேன்பாரு'  (Canbaru)

இச்சொல்லுக்குப் பொருள் என்ன தெரியுமா நண்பர்களே?

"விடா முயற்சியைக் கைவிடாதே"

"எது உன்னுடைய முழுத் திறமையோ  அதை நன்றாக செய்வதிலே முழு கவனஞ் செலுத்து" என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது!

வேறு திசை திரும்புதலே இருக்காது -  இருக்கக் கூடாது, அவர்கள் வேலை செய்யும் போது! பெரும் பெரும் கம்பெனிகளைப் பார்வையிட வெளிநாட்டு முக்கிய - தலைமை அதிகாரிகளோ, அமைச்சர்களோ சென்றால்கூட வேலை செய்யும் எவருடைய கவனமும் அவர்கள் மேல் பாய்வதே கிடையாதாம்!

இந்த 'பணியிடப் பண்பு' (Work Culture) நமக்கு வர வேண்டும்.

தேசத் தலைவர்கள் மறைந்தால், உடன் விடுமுறை விடும் பழக்கம் அங்கே கிடையாது. "உழைப்பதே அவர்களுக்கு நாம் காட்டும் உண்மை மரியாதை" என்று கூறுகிறார்கள் அவர்கள்! என்னே பண்பு நலம்!

இது நம் நாட்டில் எப்போது வருவது?

எதற்கெடுத்தாலும் விடுமுறை, விடுமுறை! இப்படி நாட்டு நலன் பாதிப்பு பற்றிய கவலையற்ற தன்மை. ஜப்பானில் குடிமை அறஞ் சார்ந்ததாக வளர்வதன் நற்பயன் பண்பு.

(தொடரும்)

-  விடுதலை நாளேடு 31 12 19

வியாழன், 2 ஜனவரி, 2020

ஜப்பானிய முதியவர்களின் சிறந்த வாழ்வியல் "இக்கிகை" (IKIGAI) (5)

ஜப்பானில் வாழும் 100 வயது தாண்டிய அல்லது தாண்டும் முதியவர்கள்  குறிப்பாக 'ஒக்கிவானா' தீவில் வாழும் சுறுசுறுப்பும் இளமை உணர்வும் ததும்பும் முதியவர்கள் ஒருவருக்கொருவர் கலந்து பேசி மகிழ்வுடன் தமது அன்றாடப் பொழுதை இனிதே கழிக் கிறார்கள்; அவர்கள் முதுமையை ஒரு சுமை யாகக் கருதுவதில்லை; மாறாக சுகமாகவே எண்ணுகிறார்கள்!

ஜப்பானிய தத்துவங்களில் 'ஜென்' புத்த பிரிவின் கொள்கை தத்துவங்களில் ஒன்று எளிமை.

தந்தை பெரியார் போல், அன்னை மணியம்மையார் போல் ஒரு சிறு பைக்குள் அவரது உடை பணப்பை முதலிய சகலவும் அடக்கம். ஒரு சேலை உடுத்தியிருப்பது - மாற்றுக்கு ஒன்று! அவ்வப்போது துவைத்து அன்றாடம் பயன்படுத்துவார்கள்.

இந்த எளிமையில் இருக்கும் 'கனமற்ற' வாழ்வு - லேசான - லகுவான வாழ்வின் மன நிறைவு வேறு எதிலும் கிடைக்காதே!

சிலர் எளிமையாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்கு 'மிகவும் செலவு' செய்கின்றனர்! அத்தகைய எளிமை. போலித்தனமானது மட்டுமல்ல; விளம்பரத்தனமானதும்கூட!

இன்னும் சில முதியவர்கள் 25 நிமிடங்கள், பணியில் 5 மணித்துளிகள் இடைவேளை, ஓய்வு நேரம் எனப் பகிர்ந்து பக்குவமாக தங்கள் 'பேட்டரிகளை ரிசார்ஜ்'  செய்து கொள்கின்றனர்! அந்தப் படிக்குக்கூட இல்லாமல் 50 நிமிடங்கள் பணி; 10 நிமிடம் சிறு ஓய்வு என்றுகூட நாம் நம் வசதிக்கேற்ப, பகுத்துக் கொள்ளலாம்!

எதைச் செய்தாலும் அப்பணியிலேயே முழு கவனஞ் செலுத்திடவும் அர்ப்பணிப்பு மிகவும் சிறந்ததாகவும் (Mindfulness) அமையும்.

உணவு உண்ணும்போது உணவின் சுவையில் மட்டுமே முழு கவனம் - உள்ளத்தைச் செலுத்துதல்; மற்றயாவினும் நம்மனக் கண்முன் மறைந்து விடல் வேண்டும்! (Practical Mindfulness)

அதே போல் எழுதும்போது, வேறு கவனம் வரவே கூடாது. என்பழக்கம் எழுதத் துவங்கிய நிலையில் என்னையே மறந்து விடுவேன்; அக்கம் பக்கம் என்ன நடந்தாலும் எனக்குத் தெரியாது. என்னை அது பாதிப்பதில்லை; காரணம் நான் அதில் மூழ்கி முத்துக்களைத் தேடுபவன் ஆவேன்.

வில்லில் நாணேற்றியவனின் குறி இலக்கை நோக்கி மட்டும் இருக்க வேண்டும் என்பது எப்படி ஒரு போர் வீரனுக்கு முக்கியமோ, அதுபோல எப்பணியில் எந்த நேரத்தில் எவர் ஈடுபட்டாலும் எதுபற்றியும் சிந்திப்பதில்லை; சிந்திக்க வேண்டிய திசை திருப்பல்களும்கூடாது!

அடுத்து,

கவலை (Worry) என்பதை அறவே ஒதுக்கி விட்டு, மகிழ்ச்சியுடன் கலகலப்பாக ஒருவருடன் ஒருவர் கலந்து பேசி, எல்லையற்ற இன்பத்தை ஈட்டுபவர்களாக இருக்க வேண்டும்.

பிரச்சினைகள் என்று வரும்போது, அவை களைத் தீர்ப்பது எப்படி என்பதுபற்றி பகுத் தறிவுக்கு வேலை கொடுத்து யோசிக்க வேண் டுமே தவிர, கவலைப்பட்டு கன்னத்தில் கை வைத்து, தலையைத் தொங்கப் போட்டு, "அய்யோ என்ன செய்வேன் இனி?" என்ற புலம்பல் தேவையேயில்லை!

மனக் கவலையால் தீர்க்கும் பிரச்சினைகள் எதுவும் இல்லை; மாறாக மனக்கவலையால் பிரச்சினை தீராத தலைவலியும், செரிமானக் கோளாறும்தான் மிச்சமாகும்! புரிந்து கொள் ளுங்கள்.

கூட்டுக் குடும்பங்களில்கூட மற்றவர்களுடன் கலகலப்புடன் பேசி சிரித்து, மகிழ்வதே சிறந்த வழி; மாறாக நடந்தால் அது மனக்கவலையை அவர்களுக்கு உச்சத்தில் வைக்கும். இது ஒருவகை பொறாமைத் தீயின் பொல்லாத வடிவம் ஆகும். அதைத் தவிர்ப்பது அவசியம்.

(நாளையும் தொடரும்)

- விடுதலை நாளேடு, 30.12.19


ஜப்பானிய முதியவர்களின் சிறந்த வாழ்வியல் "இக்கிகை" (IKIGAI) (4)

முதுமை அடைபவர்கள் அது குறித்துப் பெரிதும் கவலை ஏதும் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அது இயற்கையானது; அதைத் தடுத்திட எவராலும் முடியாது; இயல்பானது - உடற் கூற்றுக்கு ஏற்றபடி!

ஆனால் முதுமையிலும் 'இளமை' ததும்ப எப்படி வாழு கிறார்கள் - நூறு வயதினைத் தாண்டி விட்ட ஜப்பானிய முதி யவர்கள் என்பதை கடந்த சில வாழ்வியல் கட்டுரைகளில் படித் தீர்கள்;

அதன் தொடர்ச்சியே இக்கருத்துக்களும் - படிப்பதோடு நிறுத்திவிடாதீர்கள்; செயல்படுத்தி பயனடைய முயற்சியுங்கள்!

உடலின் அனைத்து உறுப்புகளும் முதுமையில் பாதிப்புக்கு ஆளாகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாயினும்கூட, அதில் இதயம், மூளை போன்ற முக்கிய உறுப்புகளை 'இளமை' யாகவே வைத்திருக்கவும், அதன் மூலம் நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் பெரிதும் பயனடையவும் செய்யலாமே!

இளைய இதயம், ஈரமான இதயம் ஈகையின் ஊற்றான இதயம் - பழி வாங்குதலை மறுத்துவிட்ட - மறந்துவிட்ட இதயம் - மன்னிக்கத் தயங்காத - தவறாத இதயம்! புரிகிறதா?  எல்லாம் நமது பண்பைச் செம்மையாக்கும். நமக்கு மகிழ்ச்சி ஊற்றாக - என்றும் அடைபடாததாக பெருக்கெடுத்தோடும்!

மூளையை இளமையாக்கிக் கொள்ளுதல்  எப்படி? நம்முடைய வயதை யொத்தவர்களோடு மட்டும் பழகாமல் - நமது பேரப் பிள்ளை களையொத்த வயதினருடன் கலந்து உரையாடுங்கள் - உறவாடுங்கள்!

அவர்களது துணிச்சல் - அஞ்சாமை! - உங்களில் பலருக்கும் வந்து தீரும்!

முதுமை என்பது அனுபவச் சேமிப்பு!

இளமை என்பது - துணிவின் துடிப்பு!!

இரண்டும் நம்மிடம் அமைந்தால் பருத்தி ஆடையாய் காய்த்ததற்கு ஒப்பாகும்! இல்லையா?

சாலையில் சந்திப்பவர்களை புன்சிரிப்போடு வணக்கம் தெரிவித்து, கலகலப்பாக காட்சி யளியுங்கள். ஒருபோதும் "உம்முணா மூஞ்சிகளாக" இருக்காதீர்கள்! உங்களைப் பற்றிய நினைப்பு உங்கள் பேரப் பிள்ளைகளுக்கு, உங்கள் நண்பரான இணையருக்கு வரும்போதெல்லாம் புன்னகை பூத்த உங்கள் முகம்தான் அவர்களின் அகத்தில் காட்சியளிக்க வேண்டும், மறவாதீர்!

உங்கள் கவலைகளை மறக்க வீட்டுக்குள் ளேயே இருந்து மனதிற்குள் முணுமுணுத்து முதுமையைப் பெருக்கிக் கொள்ளாதீர்கள்!

முகிலைக் கிழித்த முழு மதிபோல காட்சி யளித்து, 'ஹலோ' சொல்லி சந்திப்பவர்களை எதிர்கொள்ளத் தவறாதீர்கள்!

வீட்டில் ஒரு சிறு தோட்டம் வைத்து அவற்றை வளர்ப்பதில் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். அத்தோட்டம் காய்கறித் தோட்டமாக அமையின் மிகவும் சிறப்பு.

பூத்த பூக்களும், பழுத்துள்ள மரங்களும் நம் உழைப்பை மூலதனமாக கொண்டு வளர்ந் தோங்கிய அத்தோட்டம் நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆனந்தமாகக் குளித்து, கரையேற வைக்கும்!

சிறிது நேரம் அச்செடிகளிடம் பேசுங்கள்; அப்பூக்களுடன் கொஞ்சுங்கள் - அங்கே காய்த் துக் குலுங்கும் பழங்களோடு சிரித்து மகிழுங்கள்!

பூக்களைப் பறித்து தலையில் சூட்டி மகிழ் வோரைவிட, செடியில் அவை பூத்துக் குலுங்கு வதைக் காண ஏற்படும் பிறரது மகிழ்ச்சிக்கு ஈடு இணை எவைதான் உண்டு நண்பர்களே?

விரல்களுக்கு வேலை கொடுங்கள் - எழுதும் கட்டுரைகளை வாயால் கூறி (Dictate) இயந்திரக் கருவிகளில் பதிவு செய்வதைவிட எழுதும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சத்தில் நிறைந்த இளம் புரட்சிக் கவிஞன் தாரா பாரதியின் கவிதை வரிகளை நான் மறப்பதே இல்லை.

"வெறுங்கை என்பது  மூடத்தனம் - உன்

விரல்கள் பத்தும் மூலதனம்"

நம்மிடமிருந்து பறிக்க முடியாத மூலதனம்  - அதனை முடக்காதீர்கள்!

செயல்படுத்துங்கள் - மூளையும் உங்கள் வசப்படும் என்றும்!

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 28 12 19

ஜப்பானிய முதியவர்களின் சிறந்த வாழ்வியல் "இக்கிகை" (IKIGAI) (3)

ஜப்பானில் முதியவர்கள், எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டே இருப்பது, 'முதுமையை' விரட்டிடும் முழுமையானதோர் முறையாக அமைந்துள்ளது!

நம் நாட்டில் ஓய்வு பெற்ற முதியவர்கள் சாய்வு நாற்காலியில் சாய்ந்தே கிடக்கின்றனர்; 'காலாற' நடப்பதில்லை.

எவ்வளவுக்கெவ்வளவு நீண்ட நேரம் தொடர்ச்சியாக அமர்ந்தே வேலை செய்வது  (Sedentary Habits) அல்லது படிப்பது, எழுதுவது, கணினி முன்னே தொடர்பணி என்பவைகளின் முறைகளை 'இளையர்கள்' கூட சற்று மாற்றி அமைத்துக் கொள்ளுதல் அவர்களை வருங்கால பல நோய்களினின்று காப்பாற்றும் தடுப்பு சக்திகளாக அமையும். இத்தகைய மிகச் சுவையான அரிய தகவல்களை 'இக்கிகை' ('Ikigai') புத்தகம் மூலம் அறிகிறோம்.

சிறு சிறு இடைவேளைகளில் எழுந்து, கொஞ்ச தூரம் நடந்து, மீண்டும் புத்தாக்கத்துடன் பணி புரிய அதன்மூலம் வாய்ப்புகள் ஏற்படு கின்றன.

நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது என்ப தால், இரத்தக் கொதிப்பு, நீரழிவு நோய், இதய நோய்களும் வர வாய்ப்பு அதிகம் என்பது பல மருத்துவர்களின் கண்டுபிடிப்பும், கடுமையான அறிவுரையுமாகும். நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்வதால் - தொப்பை தொந்தியும், ஊளைச் சதை பெருக்கமும் (Obesity) உடலில் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகும்!

வயதாவதைத் தடுக்கும் 'தடுப்பான்களில்' ஒன்று குறைவற்ற தூக்கம் ஆகும்! அதற்காக சதா தூங்கிக் கிடக்க வேண்டும் என்று நாம் சொல்ல மாட்டோம்! 8 மணி நேரம் நல்ல தூக்கம் மிகச் சிறந்தது.

நமது முதுமையை மறைக்க யாரும் எவ் வளவு சாயம் அடித்துக் கொள்ளுதல், ஒப்பனைகள் ஏராளம் செய்து கொள்ளுதல் மூலம் முயன்றாலும் கூட நமது உடலின் தோல் - வயதைக் காட்டிக் கொடுப்பது உறுதி. தோலின் சுருக்கங்கள் மிகப் பெரிய முதுமை அறிவிப் பாளர்களாவர்!

மெலட்டானின் (Melatonin) என்ற ஹார்மோன் போதிய தூக்கத்தினால் நமக்குக் கிடைக்கும் அரிய ஒன்றாகும்!

இதுபற்றி உடற்கூறு மருத்துவர்கள் கூறுகை யில், இந்த சுரப்பி (Pineal gland) நீரோ டிரான்ஸ்மீட்டர் செரோட்டன் மூலம் இதனை உற்பத்தி செய்து தூக்கத்தை ஒழுங்குபடுத்தி, எப்போது தூக்கம் வருவது - தூங்குவது, எப்போது விழித்துக் கொள்ளுவது என்பதை ஒழுங்குபடுத்திக் கொடுக்கிறது!

இந்த சக்தி வாய்ந்த உடல் நலப் பாதுகாப்பான (anti-oxidant) 'மெலட்டானின்' நீண்ட காலம் நாம் வாழ்வதற்கு உதவி புரிகிறது.

அது மட்டுமா? மேலும் அது தரும் பலன்கள்:

1. நம்முடைய நோய் எதிர்ப்பு வன்மையைக் கூட்டுகிறது.

2. புற்றுநோய் வருவதைத் தடுக்க உதவுகிறது.

3. 'இன்சுலின்‘ இயல்பாகவே அதிகம் உடலில் உற்பத்தியாக உதவுகிறது!

4. “அல்ஷைமர்ஸ்‘ என்ற மறதி நோயைத் தடுப்பதற்கு உருவாகும் நிலையிலேயே அதை முளையில் கிள்ளி எறிதல் போன்ற வேலையைச் செய்கிறது!

5. உடலில் எலும்புகள் பலவீனமாவதையும் தடுத்து உடலில் இதய நோய் குறிப்பாக மார டைப்பு ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

எனவே போதிய மருந்து, போதிய ஓய்வு, போதிய ஊட்டச்சத்து உணவு என்ற வரிசையில் போதிய தூக்கம் என்பதையும் இணைத்து நண் பர்களே, நல் வாழ்க்கையை ஆக்கிக் கொள்ளத் தவறாதீர்!

(தொடரும்)

- விடுதலை நாளேடு 25 12 19