அண்மையில் சிங்கப்பூரில் கிடைத்த அருமையான இளைப்பாறுதலில், முக்கிய புத்தகக் கடையில் கண்டெடுத்த ஒரு அறிவு விளக்குதான் IKIGAI - 'இக்கிகை' என்ற ஜப்பானிய முதியவர்களின் வாழ்க்கை முறை பற்றிய அரிய விளக்கம் தரும் ஓர் அருமையான நூல்!
முதியவர்கள் மட்டுமல்ல - இளைஞர்களும், நடுத்தர வயதுக்காரர்களும்கூட படித்துப் பயன் பெற்று வாழ்க்கையின் இறுதிக் காலத்தை வளப்படுத்திக் கொள்ளப் பெரிதும் உதவக் கூடிய கையேடு இந்நூல் என்று சொல்லுவது மிகை அல்ல...!
ஹெக்டர் கார்சியா (Hector Garcia) அவர்களும், பிரான்சிஸ்க் மிராலஸ்(Francesc Miralles) என்பவரும் - ஆக இந்த இருவரும் மிகச் சிறப்பாக ஜப்பானிய முதியவர்களின் வாழ்க்கையை ஆய்வு செய்து இந்நூலை - பலரையும் பேட்டி கண்டும் - பல்வேறு நிகழ்வுகள்பற்றியும் தொகுத்து சுவைபடத் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளனர்.
(இதுபற்றி முதியவர்களுக்குப் பெரிதும் பயன்படும் வகையில் ஒரு சிறப்புச் சொற் பொழிவினை நிகழ்த்திடவும் திட்டமிட் டுள்ளேன்).
நீண்டகாலம் மகிழ்ச்சியுடன் வாழுவது எப்படி என்பதைப்பற்றிய ஜப்பானிய "ரகசியம்" பற்றி விளக்குகிறது. இந்நூல்!
ஆங்கில மொழியாக்கத்தை ஹீத்தர் கிளரி (Heather Cleary) அவர்கள் செய்துள்ளார்கள்.
"எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பதுதான் உங்களை நூற்றாண்டுகளுக்குமேல் வாழ வைக்கும் அரு மருந்து" என்பது ஓர் ஜப்பானிய பழமொழியாகும்!
நமது வாழ்க்கையின் பொருள் என்ன? வாழ்வின் குறிக்கோள்தான் என்ன? - இப்படிக் கேட்டு விடை கண்டு வாழுவதே ஜப்பானிய முதுகுடி மக்களின் "இக்கிகை" ஆகும்!
ஜப்பானில் ஒக்கினவா(OKinawa) என்ற ஒரு தீவு உள்ளது; அதில் வாழுபவர்கள் பெரிதும் 100 வயதைத் தாண்டிய முதியவர்களே!
அங்கு வாழும் 1,00,000 குடி மக்களில் 24.55 (சதவிகிதம்) மக்கள் (100ல்) 100 வயது தாண்டிய - உலகத்தின் சராசரி முதுமையைத் தாண்டிய வர்களே!
எப்படி மகிழ்ச்சியுடன் முதுமையில் சுறு சுறுப்புடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்பதற்கு சில முக்கிய அம்சங்களாக அளவான - மிதமான உணவு - சத்துணவு - எளிய வாழ்க்கை ஆகியன அடிப்படையாக அமைந்துள்ளன.
கிரீன் டீ (Green Tea) உட்பட எளிய உணவு முறை, எளிய உடற்பயிற்சி முதலியன அந்த வாழ்வின் திறவுகோல்! இவற்றால் அயர்வின்றி சமூக வாழ்க்கையை கலகலப்புடன், சுறுசுறுப்புடன், சோம்பலின்றி அன்றாட வாழ்க்கையினை அமைத்துக் கொள்கின்றனர்.
'ஒகிமி'(Ogikmi) என்ற கிராமப்புற நகர் ஒன்று பற்றியும் இவர்கள் விளக்குவதோடு, அங்குள்ள பலரும் அதற்கு ஒரு புனைப் பெயரும் தந்துள்ளனர். 'நீண்ட ஆயுள்தரும் கிராமம்' என்றே அதற்குப் பெயர்.
இந்த முதியவர்கள் உண்ணும் உணவோடு 'ஷீக்கு வாசா' "ShikuWasa" என்ற எலும்மிச்சை பழம் போன்றது - மிகப் பெரிய அளவில் உடல் நலத்திற்கு உதவக் கூடிய பழம் இது! இதன் சாற்றைக் கூட - மிகவும் புளிப்பும் கலந்து இருக்குமாமாம்! அதில் தண்ணீர் கலந்தும் சாப்பிடுகிறார்களாம்!
அடுத்து நாளை பல தகவல்கள்.
(சந்திப்போம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக