பக்கங்கள்

திங்கள், 9 டிசம்பர், 2019

இனிய வாழ்வுக்கு என்ன தேவை?

வாழ்க்கையில் வெற்றியும், நிம்மதியும், மகிழ்ச் சியும் பெறுவதற்கு அடிப்படையான பழக்கங் களில் ஒன்றாக நம்மைப் பக்குவப்படுத்தும் - வரவுக்குட்பட்டு செலவு செய்து, சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுவோம்.

தந்தை பெரியார் கூறிய "சுயமரியாதை வாழ்வு சுக வாழ்வு" என்பதன் தத்துவத்தில், வரவுக்குட்பட்டுச் செலவழிப்பது என்பது மிக மிக முக்கியம். அது தானாகவே சுகவாழ்வாக அமையச் செய்யும்.

ஒரு சிறு பகுதியாவது சேமிப்பானால் - செலவு போக மிச்சமானால், அது மேலும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும்.

கடன் வாங்கி வாழுபவன் வாழ்வில் சுயமரியாதைக்கு ஏது இடம்? கடன் சுமை - வட்டி பெரிதும் வாட்டி வதைக்குமே!

திட்டமிடல் என்பதன் மூலம் வரவை யொட்டிய செலவிடுதல் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு வருவதே இல்லை; அதனால்தான் சிக்கலே.

சிக்கனமும், ஆடம்பரத்தை அகற்றிய எளிய வாழ்வும் என்றென்றும் நம்மை தலைகுனியச் செய்யாது.

வருவாய் எதுவானாலும் செலவுகளை அதற் கேற்ப கண்காணித்தல் மிகவும் துணைபுரியக் கூடும்.

பொருளாதாரத்தில் பலர் நெருக்கடிக்கு ஆளாகி திண்டாடுவதற்கு மூலகாரணம் என்ன?

சற்று யோசித்துப் பாருங்கள். வரவு எட்டணா; செலவு பத்தணா என்றால், கடனில் தானே வாழ்வு அமையும்.

திட்டமிட்டால் - நம் தேவைகளை - செலவுகளைச் சிக்கனப்படுத்தினால் - நிச்சயம் நம் வாழ்வு அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்க் கடலாக ஒருபோதும் மாறாது!

வாழ்விணையர்கள் இருவரும் சம்பாதிப்ப வர்களாக இருக்கும் பல குடும்பங்களில்கூட - திட்டமிட்டு செலவழிக்காத பழக்கத்தின் காரண மாக வறுமையும், துன்பமும் அவர்களை வாட்டி வதைக்கின்றன.

சம்பளம் பெற்றதும் என்னென்ன செலவுகள் மிகவும் முக்கியம் என்பதை வரிசைப்படுத்துங்கள்.

அத்தியாவசியமான குடும்பச் செலவுகள், பிள்ளைகளுக்குக் கல்விச் செலவு (உண்மையில் இது செலவு அல்ல - வருங்கால முதலீடுகள்தான் என்றாலும்) மருத்துவச் செலவு, எதிர்பாராதச் செலவுகள் - ஏற்கெனவே கடன் வாங்கி இருந் தால் அதன் தவணைகளைச் செலுத்தும் செலவு - இத்தியாதி வகைகளைப் பட்டியலிடுங்கள்.

வாழ்விணையர்கள் அடுத்தவர்களை காப்பி அடித்து, அவர் உடுத்தும் உடை, அவர் பயணம் செல்லும் வாகனம், அவர்கள் போட்டுள்ள நகை இவை போன்ற மோகத்திற்குப் பலியாகிவிடக் கூடாது.

நமது நிலை நாம் அறிவோம். பிறர் ஒப்புமை நமக்கெதற்கு? (அது பல நேரங்களில் போலியாகக் கூட - கவரிங் நகை போலக் கூட இருக்கலாமே) என்று அந்த சபலத்திற்கு ஆளாகாமல் புறந் தள்ளுங்கள்.

நலக் காப்புறுதியை உறுதி செய்யுங்கள்.

திடீர் செலவுகளுக்கும்   உங்கள் பட்ஜெட்டில் கொஞ்சம் நிதி ஒதுக்கீடு செய்யத் தவறாதீர்கள் (Unexpected Contigencies).

வரவு கூடுதலாகும்போது செலவைப் பெருக்க லாம் என்று தயவு செய்து எண்ணாதீர்கள்; அதனைச் சேமிப்பாக ஒதுக்கீடு செய்யுங்கள்.

நேர்வழியில் பொருளை ஈட்டி, நேர்வழியில் செலவிட்டு, நேர்வழியில் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். அதன் பிறகு உங்கள் குடும்பம் ஒரு சுதந்திரக் குடும்பம்; சுகமுள்ள குடும்பம்.

எப்படியும் வாழ எண்ணாதீர்!

இப்படித்தான் வாழுவேன் என்பதில் உறுதி யுடன் நில்லுங்கள்!

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

என்பதை ஆழமாகப் புரிந்து கொள்வீர்! பிறகு வாழ்க்கை இனிக்கவே செய்யும்!

 - விடுதலை நாளேடு 30 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக