பக்கங்கள்

திங்கள், 17 டிசம்பர், 2018

மனிதர்கள் மரணத்தைத் தழுவும் வேளையில்....!



இவ்வார 'சங்கொலி' (வைகோவின்) வார ஏட்டில் ஒரு பெட்டிச் செய்தி - அது பல ஏடுகளில் வருவதைப் போன்ற 'வெட்டிச் செய்தி' அல்ல. பயனுறு வாழ்வியல் சிந்தனைக்கான அனுபவ பாடம்!

கரூர் - பவித்திரத்தைச் சார்ந்த நண்பர் 'விஜய்' அவர்களால் தமிழாக்கம் செய்து தரப்பட்ட செய்தி1

"என் வாழ்க்கை எனக்கு அளவிட முடியாத அரசியல் மரியாதையை கொடுத்துள்ளது. என் பெயருடன் இணைந்த அடையாளமாகிப் போனது. கூர்ந்து யோசித்தால், நான் செய்யும் பணியை விட வேறு மகிழ்ச்சியான தருணங்களை, நான் அனுபவிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இன்று உடல் நலிவுற்று, படுக்கையில் நான் வீழ்ந்த நிலையில், நான் இதுவரை வாழ்ந்த வாழ்வினை சுயபரிசோதனை செய்து பார்க்கிறேன். புகழ், பணம் (சொத்து), கண்டிப்பு இவையே, வாழ்வில் நாம் அடைய வேண்டிய மைல்கல் என்று நினைத்தேன், ஆனால் மரணத்தின் வாயிலில் நிற்கும் எனக்கு இப்போதெல்லாம் அர்த்தமற்றதாகவே தெரிகிறது.

மரணத்தை நான் நெருங்கும் ஒவ்வொரு நொடியும், மருத்துவமனையில் என் படுக்கையை சுற்றி ஒளி, ஒலியிடும் உயிர் காக்கும் கருவிகள் நான் மரணத்தின் அருகாமையில் இருப்பதை உணர்த்துகின்றன. இந்த சிக்கலான தருணத்தில் நான் உணர்ந்தது என்னவென்றால் வாழ்க்கையில், பணத்தையும், புகழையும் குவிப்பதை விட இன்னும் அடைய வேண்டியது நிறைய உண்டு. சமூக சேவையும், நமக்குப் பிடித்தமான நபர்களோடு சரியான உறவு முறை பேணுதலும் மிக அவசியம். அரசியலில் எவ்வளவோ வெற்றி பெற்று இருந்தாலும், போகும் போது எதையும் எடுத்துப் போகப் போவதில்லை என்பதை நன்கு உணர்கிறேன்.

மரணப்படுக்கை மிகவும் தனித்துவம் வாய்ந்தது. காரணம் அந்த படுக்கையை பிறரோடு பகிர முடியாது. உங்கள் ஏவலுக்கு கட்டுப்பட, எத்தனை வேலைக் காரர்கள், டிரைவர்கள், பணியா ளர்கள் என்று இருந்தாலும் உங்கள் வியாதியை யாரோடும் பகிர முடியாது. எதை தொலைத்தாலும் தேடி கண்டுபிடித்துவிடலாம், ஆனால் தொலைத்த வாழ்நாளை மீட்டெடுக்க முடியாது. எனவே அர்த்தமுள்ள வாழ்வை வாழுங்கள்.

வாழ்நாள் முழுவதையும், வெற்றியைத் துரத்துவ திலேயே கழிக்காதீர்கள். வாழ்க்கை என்னும் நாடகத்தில், மரணம் என்னும் கிளைமேக்ஸ் காட்சி வந்தே தீரும்.  எனவே நண்பர்களே, உங்கள் மீது அக்கறை செலுத் துங்கள். உங்கள் பணத்தை அர்த்தமுள்ள முறையில் செலவு செய்ய பழகிக் கொள்ளுங்கள். உங்களை சுற்றி இருப்பவரிடம் பாசத்தைப் பொழிய பழகி கொள் ளுங்கள். பிறக்கும் போது நாம் அழுகிறோம், இறக்கும் போது நம்மை சுற்றி உள்ளவர்கள் அழுவார்கள். எனவே இந்த இரண்டு அழுகைக்கும் உட்பட்ட காலத்தை, மரணத்தை நாம் தொடும் முன்பு மகிழ்ச்சி யாகவும், அர்த்தமுள்ளதாகவும் வாழ்வோம்."

- இந்தியாவின் இராணுவ அமைச்சராக இருந்த வரின், தற்போதும் (கோவாவின்) முதலமைச்சராகவும் உள்ள  - பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் தான் மனோகர் பாரிக்கர் என் றாலும், மரணம் அனைவரையும் அழைத்துக் கொள்வதே - சம பார்வையுடன் அணைத்துக் கொள் ளும் ஒரு இயற்கையின் தொழில் நுட்பம் அல்லவா? அதனால் கட்சிக் கண்ணோட்டமின்றி 'விடுதலை'யில் அவரது கருத்து வெளி வருகிறது. மனிதம் எங்கே தெரிந்தாலும் வரவேற்க வேண் டியதுதானே மனிதர்களின் நேயம்! - அதன் அடிப்படையில்

இந்த மரண ஓலையின் கடைசி முத்தாய்ப்பான வரிகளை, ஓடி ஓடி - குறுக்கு வழிகளையும் கூடப் பயன்படுத்தி, உங்கள் உடல் நலத்தைக் கூடத் துறந்து விட்டு பணத்தைத் தேடி அலையும் மானிடர்களே - இதைப் படிப்பதோடு, மனதில் செதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்!

"எனவே நண்பர்களே, உங்கள்மீது அக்கறை செலுத்துங்கள்; பணத்தை அர்த்தமுள்ள முறையில் செலவு செய்யப் பழகிக் கொள்ளுங்கள்; உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் பாசத்தை பொழிய பழகிக் கொள்ளுங்கள்!

திரண்ட அல்லது திரட்டப்பட்ட செல்வத்தைப் பொதுத் தொண்டறத்திற்கே பயன்படுத்துங்கள்.

பிள்ளைகள் உட்பட உங்கள் இரத்த உறவுகளுக்குக் கல்வி அறிவை - எளிய வாழ்வின் தேவைக்கு மட்டுமே தந்து, அவர்களை உழைத்து முன்னேற - பொது நலப் பணியாளர்களாக, சமுதாயத்திற்கு நாம் ஒவ்வொருவரும் பட்ட கடனைத் தீர்க்க அவர்களது வருவாயையும் செலவழித்து மகிழக் கற்றுக் கொள்ளுங்கள்!

- விடுதலை நாளேடு, 17.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக