பக்கங்கள்

திங்கள், 3 டிசம்பர், 2018

யாம் பெற்ற பெரும் பேறுகள் (3)



சேலத்தில் எனது உரையைப் பாராட்டி என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது பற்றி நேற்று குறிப்பிட்டேன்.

அதுபோல அய்யா தந்தை பெரியார் அவர்கள் நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் அய்யா அவர்கள் உரைக்கு முன்னால் முற்பகல் சுமார் 12 மணிக்கு மேல் (1973 டிசம்பர் 8,9) பேசினேன். அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி அதன்மூலம் ஒரு சமத்துவத்தை ஏற்படுத்த அறிவித்துள்ள அறப் போரின் ஆழமான கருத்து, ஒரு மனித உரிமைப் போரின் மறுவடிவமே, ஒரு மீட்டெடுப்பு இயக்கமே! கொள்கை வேறு; உரிமை வேறு என்பதையெல்லாம் விளக்கி சட்ட சூழல் - அறப்போரின் தேவை பற்றி அய்யாவின் அறிக்கைக்கான விளக்கம் பற்றி விரிவாகப் பேசினேன். அய்யா கேட்டுக் கொண்டிருந்து, அடுத்து பேச்சைத் துவக்கும்போது, "வீரமணியின் இந்தப் பேச்சோடு இந்த மாநாட்டின் முற்பகுதி முடிந்திருந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்; காரணம் அவ்வளவு விளக்கமாகவும், தெளிவாகவும், ஆதாரப் பூர்வமாகவும் அவர் பேசி விட்டார். சுவையுள்ள விருந்துக்குப் பிறகு நான் பரிமாற என்ன மிச்சமிருக்கிறது? என்றாலும் நானும் அதைப் பின்பற்றியே சில கருத்துக்களை உங்கள் முன்கூறிட ஆசைப்படுகிறேன்" என்றார். (இந்த உரை பதிவாகி நம்மிடம் உள்ளது). இந்த அய்யாவின் நம்பிக்கை பொய்த்துப் போய் விடக் கூடாதல்லவா? அதற்காகவே கூடுதல் கவனத்தோடு மேடைகளையும் சரி, எழுத்துக் களத்தையும் சரி இன்றுவரை அக்கறையுடன் பயன்படுத்துகின்றேன்.

பழைய ஆசிரியர், ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர் குத்தூசி கா. குருசாமி அவர்கள் சிற்சில நேரங்களில் சில கருத்துக்களை அய்யாவின் எண்ணம், அணுகு முறைக்கு விரோதமாக இருக்கும்படி தலையங்கங்களில் எழுதி விடுவதுண்டு.

தந்தை பெரியார், 'விடுதலை' தலையங்கத்தின் கருத்து தன் கருத்து அல்ல; அதற்கு மாறாக வெளிவந்துள்ளது என்று குறித்து, வாசகர்கள் பெரியார் கருத்து அல்ல - தலையங்கக் கருத்து என்று புரிந்து வைக்கவே அப்படி ஒரு அறிக்கை, அறிவிப்பு! இது 3,4 தடவை  வந்து விட்டது.

தலையங்கம் எழுதும்போது தத்துவங்களையும், கொள்கைகளையும் தான் கருத்தில் கொண்டு எழுத வேண்டுமே தவிர, தன்னை உயர்த்திக் கொள்ளவோ, தனது எதிரிகளை அல்லது மாஜி நண்பர்களைத் தாக்குவதற்கான தளமாக அதைக் கருதிவிடக் கூடாது. பிரச்சினைதான் நம் பேனாவுக்குத் தெரிய வேண்டுமே தவிர, மற்றபடி எதிரிகளைத் தாக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்ற அடிமன வெறுப்பு காழ்ப்பு வெளியாகும் வகையில் அமைந்து விடக் கூடாது என்ற பாடம்தான் அய்யாவின் மறுப்பு அறிக்கையின் தத்துவம் ஆகும். "ஒரு முறை விழுந்தவன் அதே இடத்தில் மீண்டும் மீண்டும் விழக் கூடாது" என்பார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.

அதுமட்டுமல்ல; அப்பாடத்தை அடுத்து வருபவர்களும் கற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? அதனை நான் திடப்படுத்திக் கொண்டுதான் பொறுப்பில் அமர்ந்தேன் - இல்லை இல்லை அமர்த்தப்பட்டேன்.

இறுதிவரை எனது தலையங்கத்திற்கு அய்யா அவர்கள் மாறுபட்டோ அல்லது அவரது மறுப் பறிக்கையோ வரவில்லை; வராமல் கவனத்துடன் எழுத, முன் எச்சரிக்கை மணியாக அவை - தக்க வழிகாட்டும் பாடங்களாகவே அமைந்ததால் நான் "பிழைத்தேன்"

அய்யாவை சென்னை மற்றும் வெளியூருக்குச் சென்று பயணத்தில் சந்திக்கின்ற பல நேரங்களில் "நான் இந்தப் பிரச்சினை குறித்து எழுதுங்கள் என்று கூற நினைத்தேன். 'விடுதலை'யில் அதுவே தலையங்கமாக வந்து விட்டது. நேற்றுகூட உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அது சேரும் முன் இன்று அதே கருத்துள்ள தலையங்கம் வந்துள்ளது" என்பார்; இதைவிட எனக்குப் "பெரு ஊதியம்" வேறு எது? - இப்படிப் பல இனிய நினைவுகள், நிகழ்வுகள்!

(பிறகும் தொடரலாம்)

- விடுதலை நாளேடு, 3.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக