அன்பார்ந்த பெற்றோர்களே, வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது அகத்திலிருந்து - நம் உள்ளிருந்து - பெற வேண்டிய ஒன்று. வெளியிலிருந்து - கடைகளில் பொருள்கள் வாங்கி வருவது போன்றதல்ல - பெறுவது முடியாத ஒன்று!
கஷ்டம், சோதனை வந்தால் "மகிழ்ச்சி" போய் விடுகிறது என்பது சாதாரண, சராசரி மனிதர்களுக்கு மட்டுமே; சற்று தெளிந்தவர்களானால் நம் வாழ்க்கைக்கு குறிக்கோள் உண்டு; இலட்சிய இலக்கு - கொள்கைகள் உண்டு என்று நினைக்கும் அளவுக்கு சராசரி மனிதர்களைவிட சற்று 'உயரமாக' இருப்பவர்களுக்கு கஷ்ட, நஷ்டங்கள், கடும் சோதனைகள் துன்பத்தைத் தராது. மாறாக, நெருப்பில் போட்ட பொன்னைப் போல தகத்தகாய ஒளியாகவே மிளிரும்!
'சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' - இல்லையா?
ஜாதி வெறி, மத வெறி மற்றும் மூடநம்பிக்கைகளும், சடங்கு சம்பிரதாயம் என்ற செல்லரித்த பழக்க வழக்கங் களும் மூளையில் சேர்ந்த குப்பைகளாக இருப்பதால் மனதில் தூய்மை இருக்க முடியாத நிலையே ஏற்படும்!
எடுத்துக்காட்டாக,
"ஆஸ்திக்கு ஒரு ஆண்; ஆசைக்கு ஒரு பெண்" என்பது பத்தாம் பசலித்தனமானது அல்லவா? ஆசைக்கு மட்டும் தான் பெண் மகளா? ஆஸ்தி - சொத் தில் அவருக்குப் பங்கு கிடையாதா? இன்றுள்ள சட்டத் திருத்தப்படி (தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், கலைஞர் அரசு - காரணமாக) இன்று பெண்களுக்கு மகனைப் போல மகளுக்கும் பெற்றோர் 'ஆஸ்தி"யில் பங்குண்டே, சட்டப்படி!
இன்று அப்பழமொழி அர்த்தமற்றதாகி விட வில்லையா? 'புத்' என்ற நரகத்திற்குத் தகப்பன் போகாமல் இருக்கவே ஆண் பிள்ளை பிறக்க வேண்டும்; 'புத்திரி' ஆனாலும் அவரால் தடுக்க முடியாது என்பது காலாவதியான கருத்தல்லவா?
காலத்திற்கேற்ப பெற்றோர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டாமா?
குழந்தையாக இருந்த அந்தப் பெண் குழந்தையை - மகளிரை - பெற்றோர்களான தாய் - தந்தையர்களே எப்படியெல்லாம் பாசத்தைக் கொட்டிக் கொட்டி வளர்க்கிறீர்கள்; (பெண்) அவர் கேட்ட பொம்மை, அது கேட்கும் நகை 'நட்டுக்கள்'! துணிமணிகள்! அதிலும் புடவை அணிந்தவர்களைவிட சுரிதார், கால்சட்டை, சட்டை அணியும் உடைமாற்றத்தைக்கூட! பூப்பெய்தி, பெண்களை வீட்டிலா இப்போது பூட்டி வைக்கிறீர்கள்? - இல்லையே! நீங்கள் ஒப்புக் கொண்டுதானே வாங்கித் தருகிறீர்கள்?
அதுபோல உணவு வகையாறாக்களும்கூட அப் பெண் விரும்புவது போலத்தானே வாங்கித் தருகிறீர்கள். படிப்புக்கூட விருப்பம் அறிந்துதானே படிக்க கல்விக் கான பள்ளி, கல்லூரிகள்கூட அழைத்துச் சென்று சேர்க்கிறீர்கள்! 18 வயது வந்துள்ளதால் வாக்குரிமை உள்ளதால் பிள்ளைகள் - மகன் - மகள் - யாருக்கு, எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியுமா? இன்றைய சூழ்நிலையில் முடியாதே!
ஆனால் அவர்கள் படித்துப் பட்டம் பெற்று, வேலையும் தேடி சம்பாதித்து தனி வாழ்க்கை நடத்தும் அளவுக்கு முதிர்ந்து முற்றிய நிலையில் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி காதலித்துப் பழகி மண மக்களாக வாழ விரும்பும் நிலையில், ஜாதி, மத, மூடப் பழக்க வழக்கங்கள் என்பது மூளைக் குப்பைகளாக ஏற்றப்பட்ட ஒரே காரணத்திற்காக, நமது பெண்களை கொலைக்கோ, தற்கொலைக்கோ ஆளாக்கலாமா?
அதிலும் கொடுமை, கூலிப்படைகளை ஏவி நாம் கண்ணும் கருத்துமாய் வளர்த்த நமது செல்வங்களை கொன்று விடவோ, எரித்து விடவோ, விஷங் கொடுத்து சதி வலை பின்னிக் கொல்லத் துணியலாமா?
நம் இரத்தத்தின் இரத்தம்; சதையின் சதை - "உன்கண்ணில் நீர் வழிந்தால் எம் நெஞ்சில் உதிரம் கொட்டுதம்மா!" என்று வளர்த்து, ஆளாக்கிய அருஞ்செல்வங்களை ஜாதி வெறி, மதவெறி, பண வெறி காரணமாக சாகடிக்க எப்படித்தான் முடிகிறது?
நாம் ஆறறிவு படைத்த மனிதர்கள் அல்லவா? மனிதத்தை மரணப் படுகுழியில் தள்ள எப்படித்தான் மனம் வரும்? அருமை பெற்றோர்களே, ஒரு கணம் சிந்தியுங்கள்; கொன்ற பின் வாழ்நாள் முழுவதும் குற்றமுள்ள நெஞ்சத்தோடு உங்களால் எப்படி வாழ முடியும்?
கண்தானம், இரத்த தானம், உடல் உறுப்புக் கொடைகளை தரும்போது என் ஜாதியனுக்கு, என் மதத் தவருக்கும் மட்டும்தான் அதைப் பொருத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்க முடியுமா உங்களால்?
இப்போது புரிகிறதா? ஜாதிக்கு, மதத்திற்கு எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லாத, இடையில் வந்த சதியாளர்களது சூழ்ச்சி அது என்று!
டாக்டர்களிடம் போகிறீர்கள். சொந்த ஜாதி பார்த்தா போகிறீர்கள்? என் ஜாதிக்காரன் தான் என் நோய் தீர்க்க அனுமதிப்பேன் என்று கூற முடியுமா உங்களால்?
பின் ஏன் 18 வயது தாண்டி, 21 வயது தாண்டி - நம் காலத்தை விட உலக அறிவு இணையதளம், டிவிட்டர், பேஸ்புக், கூகுள் என்ற காலத்தில் அவர்கள் நம்மை விட அறிவாளிகள் - முடிவு செய்து கொள்ளும் திறன் படைத்தவர்கள் என்று ஏன் ஒப்புக் கொள்ள மறுக் கிறீர்கள்?
திருமண வாழ்க்கை சரியாக அமைய வேண்டுமே என்ற கவலை தான் என்று ஒரு பொய்யான - போலிக் காரணத்தைக் கூறுகிறீர்கள் - மனச்சாட்சியை மறைத்து விட்டு!
பெற்றோர்கள் பார்த்து நடத்திய திருமணங்கள் எல்லாம் தோல்வியே அடைவதில்லையா? எல்லாம் வெற்றியா?
தவறானால் அதைத் திருத்தி மாற்றுவழி கண்டறிய அச்செல்வங்களுக்கு உரிமையும் தருவதும் உண்டே; அதை ஏன் மறந்து விடுகிறீர்கள்?
தாராள மனதுடன் மனிதாபிமானத்தைக் கொன்ற 'மிருக அவதாரம்' எடுத்து விடாதீர்! மனிதர்களாக வாழ்ந்து, பிள்ளைத் தோளுக்கு மேல் வளர்ந்த பிறகு தோழர்களாக நடத்தி மகிழ்ச்சியை அறுவடை செய்யுங்கள்!
(அச்சிட்டும் வழங்கலாம்)
- விடுதலை நாளேடு, 13.12.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக