பக்கங்கள்

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

யாம் பெற்ற பெரும் பேறுகள் (2)

தந்தை பெரியார் அவர்கள்  எனது பேச்சை முடிக்கும் படியான அவரது கட்டளை மற்றபடி எப்போதும் ஏற்பட்டதே இல்லை.
மற்றொரு வேடிக்கையான அனுபவம்! சென்னை மயிலாப்பூர் வீரப் பெருமாள் கோயில் தெருவில் சென்னை மாவட்டச் செயலாளர் மறைந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எம்.கே. காளத்தி, வாழும் தோழர் இராமமூர்த்தி போன்ற தோழர்கள் ஏற்பாட்டில் ஒரு மாபெரும் திராவிடர் கழகப் பொதுக் கூட்டம்.
அய்யாவுடன் சென்றேன். அய்யா பேசுமுன் என்னைப் பேச அழைத்தார்கள். பேச்சைத் துவங்கி ஒரு பத்து மணித்துளிகள் பேசிய நிலையில் அய்யா தனது கைத்தடியைத் தட்டுவது போன்ற ஓசை கேட்டவுடன், 'டப்' என்று மேலே அதிகம் பேசாமல் பேச்சை முடித்து விட்டேன். கூட்டத்தினருக்கும், மேடையிலிருந்த நமது முக்கியப் பொறுப்பாளர்களுக்கும் கூட ஒரு சிறு மனக் குழப்பம். ஏன் இவர் உடனடியாகப் பேச்சை முடித்து விட்டார்; ஒரு வேளை அவருக்கு உடல் நலக் குறைவோ என்ன காரணம் என்று ஊகித்தபடியே இருந்தனர்.
அய்யா இராமாயணப் புரட்டுபற்றி விரிவாக சுமார் 2 மணி நேரம் பேசி முடித்து விட்டு, வேனில் அனைவரும் புறப்பட்டோம். வேன் புறப்பட்ட சிறிது நேரத்தில் அய்யாவிடம் தோழர்கள் புத்தக விற்பனைத் தொகைபற்றிக் கூறினார்கள்; மகிழ்ந்தார்! பார்ப்பனர்களும், பல கட்சி நண்பர்களும்கூட புத்தகம் வாங்கிச் சென்றனர் என்பதை அறிய மேலும் மகிழ்ந்தார்.
அடுத்து என்னை பார்த்து, "ஏம்பா நீங்க பேச்சை உடனே அவசரமாக முடித்தீர்கள்?" என்று கரிசனத்துடன் கேட்டார்.
நான் "அய்யா தடியைத் தட்டியதைப் பார்த்தேன். பட்டென்று முடித்து விட்டேன்" என்றவுடன், அய்யா கலகலவென்று சிரித்து விட்டு "அட பைத்தியக்காரா, நான் சீட்டா நாயை மேடைக்குக் கீழே போகச் சொல்லி ஜாடை காட்டிடவே தடியைத் தட்டினேன். அதை நீ உனக்காக என்று எடுத்துக் கொண்டாயோ" என்றார்! எல்லோரும் சிரித்தார்கள்!!
தலைமையின் கட்டளைக்காக காத்திருந்து குறிப்பறிந்தே நடந்து கொள்ளுபவர்களே முதன்மைத் தொண்டர்கள் ஆவார்கள்; இல்லையா?
எனக்கு வியப்புடன் கூடிய கொள்ளை மகிழ்ச்சியும், அதே நேரத்தில் பொறுப்புடன் பேச, எழுத நாம் எவ்வளவு கவனமாக உள்ள பெரியார் மாணவனாக, தொண்டர்க்குத் தொண்டனாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்திய - "யான் பெற்ற பேறு" என்று வாழ்நாள் முழுவதும் அசை போட்டு மகிழ வைத்த வாய்ப்பை அறிவு ஆசான் ஒரு முறை அல்ல இரண்டு முறை தந்தார்கள்.
ஆச்சாரியார் (ராஜாஜி) சுதந்திரா கட்சி ஆரம்பித்து சில மாதங்கள் ஆன நிலையில் அது பணக்கார ருக்காகவும், பார்ப்பன வர்ண தர்ம பாதுகாப்பு நலன் இவற்றை உத்தேசித்தே துவக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்ற ஒரு அரசியல் கட்சி; மேலும் பச்சைத் தமிழர் காமராசரிடம் தனக்குள்ள காழ்ப்புணர்வு காரணமாக அவரை எதிர்க்க மட்டுமல்லாமல், அவரை கவர்னர், மத்திய அமைச்சர், கவர்னர் - ஜெனரலாக்கிய காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்டும் வேலையையும் தொடங்கி வஞ்சினத்தோடு நடத்தி வருகிறார்; முன்பு 'அபேத வாதம்' (சோஷலிசம்) பற்றி எழுதியவர் இப்போது முதலாளிகளுக்கு ஆகப் பேசத் துவங்கி விட்டார் என்பதை பல ஆதாரங்களோடு அடுக்கடுக்காகப் பேசிக் கொண்டே இருந்து, "அடுத்து அய்யா பேச விருப்பதால் எனது உரையை மேலும் தொடர விரும்பவில்லை" என்று கூறியபோது, அய்யா இடைமறித்து, "பேசுங்கள், பேசுங்கள் - எல்லா தகவல்களையும் சொல்லுங்கள்" என்று மகிழ்ச்சியுடன் தலையாட்டி கூறினார். மேடையில் ஒலி பெருக்கியில் கேட்ட அவ்வளவு கூட்டத்தினரும் கைதட்டினர். மேலும் அரை மணி நேரம் பல புள்ளி விவரங்கள், முன்பு அவர் எழுதியதற்கு நேர் முரணானப் போக்கு என்று விளக்கி முடித்தேன். ஏறத்தாழ ஒரு மணி நேரம்.
இந்தக் கூட்டம் பெருங்கூட்டம். சேலம் செவ்வாய் பேட்டை அல்லது அரிசிபாளையத்தில்... இறுதியாக அய்யா அவர்கள் பேசத் துவங்கி,
"நண்பர் ஆசிரியர் வீரமணி, மிகவும் விளக்கமாக, தெளிவாகவும், ஆதாரங்களைக் காட்டியும், மிக விரிவாகப் பேசி, உங்களையெல்லாம் வெகுவாக சிந்திக்கும்படி ஒரு உரையை நிகழ்த்தியுள்ளார். அவர் உங்கள் அனைவர் மனதில் வரைந்த ஓவியத்தை நான் கலைத்து விடக் கூடாதே என்பதால் இதோடு இக்கூட்டம் முடிந்தால் நல்லது; நீங்கள் அனைவரும் அதே சிந்தனையோடும், ஒரு நல்ல முடிவோடும் வீட்டிற்குப் போவீர்கள். என் பேச்சு அதிலிருந்து உங்களை திசை மாற்றிடுமோ என்று அஞ்சுகிறேன். என்றாலும் நீங்கள் என் பேச்சைக் கேட்பதற்காகவே வந்திருப்பதால், ஏமாற்றம் அடையக் கூடாது என்பதால், அவரைத் தொடர்ந்து நான் மேலும் சில வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன்" என்ற பீடிகையுடன் தொடர மேலும் ஒன்றரை மணி நேரம் ஆழமான உரை யாற்றினார்!
நண்பர் பேராசிரியர் சி.வெள்ளையன் போன்றோர் மெத்த பூரிப்புடன் (அவர் அக்கூட்டத்தில் இருந்தார்) "அய்யா இப்படி யாருக்கும் சொன்னதாகத் தெரியவில்லை; உங்களுக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு" என்றார்.
தன்னடக்கத்துடன் மகிழ்ந்தேன். இதுபோல் சென் னையிலும் மற்றொரு வாய்ப்பு ஏற்பட்டது!
(வளரும்)
- விடுதலை நாளேடு, 2.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக